புதுக்கோட்டை சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடுமா என்பது பற்றி தி.மு.க. தலைவர் கலைஞர் பேட்டி அளித்தார்.
தி.மு.க. தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கலைஞர் நேற்று காலை 11 மணிக்கு சட்டசபைக்கு வந்தார். அப்போது அவரை தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. உறுப்பினர்கள் வரவேற்று அழைத்துச்சென்றனர். அதற்கு 30 வினாடிக்கு முன்புதான் முதலமைச்சர் ஜெயலலிதா அவரது அறையில் இருந்து சட்டப்பேரவைக்கு காரில் சென்றார்.
சட்டசபையின் 2-வது நுழைவு வாயில் வழியாக சென்ற கலைஞர், சட்டப்பேரவையில் வைக்கப்பட்டிருந்த உறுப்பினர்கள் வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட்டார். பின்னர் வெளியே வந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு கலைஞர் அளித்த பதில்கள்:
இலங்கை அமைச்சர் ஒருவர் கூடங்குளம் அணு மின் நிலையம் அமைந்தால் இலங்கைக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாக இந்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாக செய்தி வந்துள்ளதே, அதைப்பற்றி உங்கள் கருத்து? இந்தியா, இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் காரணமாக வேண்டுமென்றே இவ்வாறு கூறுகிறதா?
கூடங்குளம் நேற்று ஆரம்பித்து இன்றைக்கு தொடங்குகின்ற ஒன்றல்ல.
பல ஆண்டு காலத்திற்கு முன்பே கூடங்குளம் திட்டமிடப்பட்டு,வேலை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இப்போது பிரச்சினையை திசை திருப்புவதற்கான முயற்சி நடைபெறுகிறது. அவ்வளவுதான்.
இந்த பிரச்சினையிலே இந்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
இந்திய அரசு என்ன செய்ய வேண்டுமோ அதைச்செய்யும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.
புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடுமா?
தேதியே இன்னும் அறிவிக்கப்படவில்லையே!
இந்த கூட்டத்தொடரில் நீங்கள் கலந்து கொள்வீர்களா?
என்னுடைய உடல்நிலை உள்ள நிலையில் பேரவையில் அதற்கேற்ப உட்கார இடம் ஒதுக்கப்படவில்லை.
தேவையான இருக்கையை ஏற்படுத்திக்கொடுத்தால், அப்போது கூட்டத்தொடரில் கலந்து கொள்வீர்களா?
ஏற்படுத்தி கொடுப்பார்கள் என்றால் அதற்குப்பிறகு அதைப்பற்றி யோசிக்கலாம்.
இந்த அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது?
15-ந் தேதியன்று தி.மு.க. சார்பில் கண்டன கூட்டங்களை நடத்தவிருக்கிறோம். அந்த கூட்டத்தில் உங்கள் கேள்விக்கான விளக்கங்களை சொல்வோம்.
அன்பான உறவுகளே,எமது ஈழத் தமிழ் உறவுகளுக்காக தமிழர்களுக்கான ஒபாமா அமைப்பு வாக்கெடுப்பு நடத்துகிறது. தமிழீழம் வேண்டுமா? தயை கூர்ந்து ஆம் என வாக்களியுங்கள்.
ReplyDeletehttp://www.tamilsforobama.com/Referendum2011/english.asp