Sunday, January 11, 2015

அமெரிக்க அழகியின் இந்திய கனவு

நினா தவுலரி, மிஸ் அமெரிக்கா பட்டம் பெற்ற முதல் இந்திய வம்சாவளி அழகி. ‘மிஸ் அமெரிக்கா–2014’ பட்டத்தை தலையில் சூடிய போது பாராட்டுகளை விட, இனவெறி வசைமாரிகளை அதிகமாக வாங்கியவர். ஆனால் அவற்றை புறந்தள்ளி விட்டு அடுத்தகட்ட பணிகளில் வேகமெடுத்து வருகிறார்.

பொதுவாக அழகி பட்டம் பெற்றவர்கள் தங்களின் அடுத்த தளமாக சினிமாவை பயன்படுத்துவார்கள். காரணம் அழகும், சினிமாவும் பிரிக்க முடியாத துறைகள். இந்தியாவின் ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென், பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் இதற்கு சிறந்த உதாரணங்கள்.

ஆனால் இந்த 25 வயது அழகுப்பதுமையின் கனவுகள் அனைத்தும் அரசியல் துறையை நோக்கியே வட்டமிடுகிறது. குறிப்பாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக வேண்டும் என்பதையே லட்சியமாக கொண்டு செயல்பட்டு வருகிறார். 

தற்போது தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்தி வரும் நடனப்போட்டி ஒன்றுக்கு நடுவராக செயல்பட்டு வரும் நினா, சமீபத்தில் மும்பை வந்திருந்தார். அவருடனான ஒரு மினி சந்திப்பு.......

நடனத்தில் நீங்கள் சிறந்த பயிற்சி பெற்றிருக்கிறீர்கள். உங்களைப்பற்றி...

நான் 12 ஆண்டுகளாக நடனம் பயின்றேன். பரதநாட்டியம் மற்றும் குச்சுப்புடியில் சிறந்த பயிற்சி பெற்றிருக்கிறேன். பின்னர் கல்லூரியில் இந்திய நடனக்குழுவில் இணைந்தும் பயிற்சி பெற்றேன்.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஒவ்வொரு கோடை விடுமுறையின் போதும் நான் விஜயவாடாவுக்கு வந்துவிடுவேன். எங்கள் பாட்டி, தாத்தா இங்கேதான் வசிக்கின்றனர். எனவே ஒவ்வொரு கோடையிலும் நாங்கள் நடனப்பயிற்சி பெறுவோம். எனது அடையாளமே நடனம்தான். அத்துடன் ஜாஸ் மற்றும் பாப் இசையிலும் சில காலம் பயிற்சி பெற்றிருக்கிறேன். 

ஏதாவது இந்தி நடிகர்களின் நடனத்தை பார்த்து வியந்திருக்கிறீர்களா?

மாதுரி தீட்சித்தை பார்த்து நான் எப்போதும் வியந்திருக்கிறேன். அவர் ஒரு அற்புதமான நடிகை. அவரைப்போல முகபாவனைகளை கொண்டு வருவது மிகவும் கஷ்டம்.

இந்த நடன நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முடிவெடுத்த காரணம் குறித்து...

எதற்காக இந்த நிகழ்ச்சியை ஒத்துக்கொண்டேன் என்றால், இதில் உள்ள சமூக சேவைக்காக. மிஸ் அமெரிக்கா கவர்ச்சிகரமான வாழ்வு வாழ்வதாக எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு. நான் இதற்காக நிறைய கஷ்டப்படுகிறேன். 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தாய்மார்கள், தங்கள் குழந்தைகளையும், கனவுகளையும் ஒதுக்கி வைத்து விட்டு பங்கேற்கிறார்கள். அவர்களை உற்சாகப்படுத்துவது உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கிறது.

மிஸ் அமெரிக்கா பட்டம் பெற்ற போது உங்களுக்கு எதிராக வந்த இனவெறி விமர்சனங்களை எவ்வாறு எடுத்துக்கொண்டீர்கள்?

நான் ஏற்கனவே ‘மிஸ் நியூயார்க்’ பட்டம் பெற்றபோதும், இதைப்போன்ற விமர்சனங்களை கொஞ்சம் எதிர்கொண்டிருந்தேன். எனவே மிஸ் அமெரிக்கா பட்டம் வெல்லும் போதும் இப்படிப்பட்ட விமர்சனங்கள் எழும் என எதிர்பார்த்ததுதான். அதனால் எனக்கு இது புதிதாக தெரியவில்லை.

எனினும் ஒவ்வொரு எதிர்மறையான விமர்சனத்துக்கும், ஆயிரம் பாராட்டுகள் மற்றும் ஆதரவான வார்த்தைகளை நான் பெற்றேன். இந்த விமர்சனமெல்லாம் இன்றும் தொடரத்தான் செய்கிறது. ஆனால் இவற்றையெல்லாம் நான் நேர்மறையாக எடுத்துக்கொண்டு எனது சேவைகளை தொடர்ந்து வருகிறேன். இது தொடர்பாக நான் ஒருவரின் மனதை மாற்றினாலும், அது மிகப்பெரிய மாற்றம் தான்.

உங்கள் எதிர்கால திட்டம் பற்றி....

எனது எம்.பி.ஏ. (சர்வதேச உறவுகள்) முதுகலை பட்டப்படிப்பை தொடர விண்ணப்பித்து இருக்கிறேன். இது மிகவும் சுவாரஸ்யமானது. ஏனெனில் மிஸ் அமெரிக்காவின் மனிதாபிமான குணம் மற்றும் அரசியல் கூறுகள் பலருக்கும் தெரியாது. 

அமெரிக்காவுக்கு சேவை செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் செய்தேன். தற்போது எம்.பி.ஏ. பட்டப்படிப்பை முடிப்பதே இலக்கு. ஆனால் வருங்காலத்தில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராவதே எனது 15 வருட லட்சியம் ஆகும்.

மகிழ்ச்சியுடன் முடித்தார் நினா தவுலரி.


No comments:

Post a Comment