தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் இன்னும் 10 நாட்களில் இடிக்கப்பட உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளை சேர்ந்த நடிகர் - நடிகைகளையும், நாடக நடிகர் - நடிகைகளையும் உறுப்பினர்களாக கொண்டது, தென்னிந்திய நடிகர் சங்கம். 1976ம் ஆண்டில், இந்த சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 1977ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். 18 கிரவுண்டு நிலத்தில் கட்டப்பட்ட நடிகர் சங்கத்தில், சுவாமி சங்கரதாஸ் பெயரில் ஒரு கலையரங்கமும், எம்.எம்.ஏ.சின்னப்ப தேவர் பெயரில் ஒரு தியேட்டரும் உள்ளன. இவை தவிர, டப்பிங் யூனியன், உடற்பயிற்சி கூடம், நடன பயிற்சி கூடம் ஆகியவையும் அந்த கட்டிடத்தில் செயல்பட்டு வந்தன.
இந்நிலையில் நடிகர் சங்கத்தின் வருவாயை பெருக்கும் நோக்கில் இப்போது உள்ள நடிகர் சங்க கட்டிடத்தை இடித்துவிட்டு, அதில் 7 மாடிகளை கொண்ட புதிய கட்டிடம் கட்ட நடிகர் சங்க நிர்வாகிகள் முடிவு செய்தனர். அதற்கான வேலைகள் நேற்று தொடங்கியது. நடிகர் சங்க அலுவலகம் தற்காலிகமாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. அதில் செயல்பட்டு வந்த டப்பிங் யூனியன், உடற்பயிற்சி கூடம் போன்றவை காலி செய்யப்பட்டன. இன்னும் 10 நாட்களில் கட்டிடத்தை இடித்து விட்டு, புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கவிருக்கின்றன. நடிகர் சங்க புதிய கட்டிடத்தில், நவீன வசதிகளுடன் கூடிய கலையரங்கம், கருத்தரங்கம், திரையரங்கம் போன்றவை அமையவுள்ளன.

No comments:
Post a Comment