தமிழகத்தில் அதிமுக அரசு அறிவித்துள்ள தாலிக்கு தங்கம் திட்டம் என்பது ஏமாற்று அறிவிப்பு என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,
சமச்சீர் கல்வி இந்த ஆண்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது நீதிமன்ற தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சமச்சீர் கல்வியை ரத்து செய்யும் தமிழக அரசின் புதிய சட்டதிருத்தம் மசோதாவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்ததன் மூலம், சமச்சீர் கல்வி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம்.
4 கிராம் தங்கம் தாலிக்கு என்று அறிவித்து அதற்கு ஏராளமான நிபந்தனைகளை அரசு விதித்திருக்கிறது. அதில் குறிப்பாக ஆண்டு வருமானம் 24 ஆயிரம் ரூபாய் குறைவாக உள்ளவர்களுக்குத்தான் என்ற ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு உதவாது.
சாதாரணமாக கணவன் மனைவியும் கூலி வேலைக்கு போனால்கூட ஒரு மாதத்திற்கு குறைந்தது 5 ஆயிரம் ரூபாய் சம்பாத்தால்தான் குடும்பம் நடத்த முடியும். இரண்டு பேருக்கும் சேர்த்து தமிழக அரசு விதித்திருக்கும் நிபந்தனை 2 ஆயிரம் ரூபாய்க்கும் மேலாக போகக்கூடாது என்பது. ஆக தாலிக்கு தங்கம் இல்லை என்று அறிவிப்பதற்கு பதிலாக, 24 ஆயிரம் ரூபாய் ஆண்டு வருமானம் என்று நிபந்தனை விதித்திருப்பது ஒரு ஏமாற்று நடவடிக்கை. மக்களை ஏமாற்றுகின்ற ஒரு அறிவிப்பு. எனவே தாலிக்கு தங்கம் திட்டத்திற்கான ஆண்டு வருமானத்தை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றார்.

No comments:
Post a Comment