சினிமாக்காரர்களை தூண்டி விட்டு போராட்டம் நடத்தச் சொல்லி ஆட்சிக்கு அவப்பெயர் உண்டாக்க சிலர் திட்டமிட்டுள்ளனர், என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதும், திரையுலக ஜால்ராக்கள் சிலர், புதிய முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்து, முதல்வர் ஜெயலலிதாவிடம் தேதி கேட்டனர். ஆனால் அவரோ..., மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கிறது; பாராட்டு விழா மட்டுமல்ல எந்தவொரு சினிமா விழாவுக்கும் வர முடியாது, என்று திட்டவட்டமாக கூறி மறுத்து விட்டார்.
இந்நிலையில் திரையுலகில் அடுத்தடுத்து குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. புதிய அரசை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்தினால் கண்டிப்பாக பலன் கிடைக்கும் என எதிர்பார்த்த பெப்ஸி சினிமா தொழிலாளர்கள் ஸ்டிரைக்கை அறிவித்துள்ளனர். ஆனால் முதல்வர் ஜெயலலிதாதான எதிலும் வித்தியாசமானவராயிற்றே...! வேறு மாதிரி ரீயாக்ஷன் காட்டியிருக்கிறார். சமீபத்தில் திரையுலகின் முக்கிய தயாரிப்பாளர்கள் சிலரை அழைத்துப் பேசிய ஜெயலலிதா, "யார் சொல்லிக் கொடுத்து இந்த மாதிரி போராட்டங்களை சினிமா தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ளனர்? இது புதிதாக அமைந்துள்ள எனது ஆட்சிக்கு அவப்பெயரை உண்டாக்குவதற்காகவே செய்யப்படுவதுபோல தெரிகிறது. இத்தனை நாள் ரூ 500 வாங்கிக் கொண்டிருந்தவர்கள் திடீரென்று ரூ 2000 கேட்டால் என்ன அர்த்தம். இதே சினிமாக்காரர்களுக்கு சென்னையின் மையப் பகுதியில் பிலிம் சிட்டி கட்டிக் கொடுத்தேன். அது பின்னாளில் வந்த ஆட்சியாளர்களால் சிதைக்கப்பட்ட போது ஒரு சிறு எதிர்ப்பை கூட காட்டவில்லை நீங்கள் யாரும். இப்போது எதற்கு அரசின் தலையீட்டைக் கோருகிறீர்கள்?. நீங்களே முன் நின்று உங்கள் பிரச்சனையை பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். அதைவிட்டு விட்டு வீண் பரபரப்பு கிளப்புவது நல்லதல்ல," என எச்சரித்து அனுப்பியுள்ளார்.
முதல்வரின் இந்த அதிரடி ரீயாக்ஷனை சற்றும் எதிர்பாராத திரையுலகம் இப்போது அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் அமைதி காத்துக் கொண்டிருக்கிறது.

No comments:
Post a Comment