Saturday, November 26, 2011

நான் வாயை திறந்தால் பலர் ஜெயிலுக்கு போவார்கள்; ஆ.ராசா பரபரப்பு பேட்டி


2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 1.76 லட்சம் கோடி முறைகேடு நடந்திருப்பதாக, மத்திய கணக்கு தணிக்கை குழு குற்றம் சாட்டியது. இதையடுத்து தொலைத் தொடர்பு துறையின் அமைச்சராக இருந்த ஆ.ராசா கைது  செய்யப்பட்டார். ஓராண்டாக அவர் திகார் ஜெயிலில்  அடைக்கப்பட்டு உள்ள அவர் ஜாமீன் கேட்டு எந்த கோர்ட்டிலும் மனுதாக்கல் செய்ய வில்லை.

இந்நிலையில்  ஆ.ராசா கோர்ட்டு   அறையில் பத்திரிகையாளர்களுக்கு நேற்று பரபரப்பு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

திகார் ஜெயில் வாழ்க்கை, தொழில்  ரீதியாகவும், தனிப்பட்ட  வகையிலும் என்னை மேலும் செம்மையாக்கி உள்ளது. எனது வாழ்க்கையில் 12 ஆண்டுகள் எம்.பி.யாக இருந்து விட்டேன். சிறையில் இந்த புதிய வாழ்க்கையை கிட்டத்தட்ட 12 மாதங்கள் அனுபவித்து விட்டேன். இந்த  இரண்டிலும் கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன.

நான் தற்காலிக  விடுதலையை விரும்பவில்லை. இந்த வழக்கில் இருந்து முழுமையாக விடுதலை பெற வேண்டும் என்பது தான் எனது நோக்கம். ஆகவே நான் ஜாமீன் கேட்டு எந்த கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்யவில்லை. நான் வாயை திறக்கும் போது, பலர் ஜெயிலுக்கு போக வேண்டி இருக்கும்.

ஒவ்வொரு விஷயத்தையும் நான் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன். நான்  நிரந்தரமாகவே ஜெயிலில் இருந்து விடுவேன் என்று நீங்கள் கருதி விடக்கூடாது. கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்கட்டும் முதலில்  கனிமொழி  ஜெயிலில் இருந்து விடுதலை ஆகட்டும். அதன் பிறகு நான் ஜாமீன் மனுதாக்கல் செய்வது பற்றி யோசிக்கிறேன்.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் தாக்கல்     செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையையும், சாட்சிகளின் வாக்குமூலங்களையும் திரும்ப திரும்ப படித்து வருகிறேன். நன்கு புரிந்து கொண்டால் தான் என்னால்  மேற்கொண்டு கோர்ட்டில்   வாதிட முடியும். ஜெயிலில் நிறைய புத்தகங்களை படித்து முடித்து விட்டேன். ஏராளமான விஷயங்களை தெரிந்து கொண்டேன். நான் விடுதலையானதும்  ஆச்சரியமான விஷயங்கள் பல நடக்கலாம். நிச்சயமாக புத்தகம் எழுதுவேன். இந்த புத்தகம் சிலரின் வழக்கிற்கு வழிகாட்டியாக இருக்கும்.

இவ்வாறு ஆ.ராசா கூறினார்.


No comments:

Post a Comment