Saturday, August 25, 2012

கல்யாண ராணி சஹானாசுடன் மோசடி கும்பலுக்கு தொடர்பா?


கல்யாண ராணியின் சாகசங்கள் குறித்து போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவருக்குப் பின்னால் ஒரு கும்பல் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிப்பதால் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவை சேர்ந்தவர் சஹானாஸ். இவர், சென்னையில் பல ஆண்களை மயக்கி, அவர்களை திருமணம் செய்து, ஒரு வாரம் முதல், 10 நாட்கள் வரை வாழ்ந்து விட்டு, நகை, பணத்துடன் தலைமறைவாகி விட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்த கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார்.

தனிப்படையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அது பற்றிய விவரம் வருமாறு: பத்து ஆண்டுகளுக்கு முன் சஹானாஸ் சென்னைக்கு வந்தார். மணிகண்டனை ஸ்ரீபெரும்புதூர் அருகே சந்தித்து பேசினார். கையில் ஒரு போட்டோவைக் காட்டி, இது தன்னுடைய உறவினர். தன்னை ஏமாற்றி விட்டு தப்பி விட்டார். அவரை தெரியுமா என்று கேட்டு வந்தார். தெரியாது என்று மணிகண்டன் சொன்னதும், அவருடைய செல்போன் நம்பரை வாங்கி, அடிக்கடி பேச ஆரம்பித்தார். சஹானாசின் கொஞ்சல் பேச்சில் மயங்கி அவரை திருமணம் செய்தார்.

 திருமணத்துக்கு பின் தான் வக்கீல் என்று கூறி தினமும் கோட் மாட்டி காலை 11 மணிக்கு செல்வார். மாலை 3 மணிக்கு வீட்டுக்கு வந்துவிடுவார். சில நாளில் தான் டெல்லியில் ஐஏஎஸ் படிக்கப் போவதாக கூறி பணத்தை வாங்கிக் கொண்டு சைதாப்பேட்டையில் தங்க ஆரம்பித்தார். அதன்பின் பிரசன்னா, சுரேஷ், ராஜேஷ், சம்சுதீன், சீனிவாசன், சரவணன், ராகுல், சந்திரபாபு என்று வரிசையாக ஏமாற்றத் தொடங்கினார்.

போலீசில் ஒவ்வொருவராக புகார் செய்ய ஆரம்பித்ததும் அவர் தலைமறைவாகிவிட்டார். அவர் சென்னையிலேயே பதுங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர் போலீஸ் அதிகாரிகளை தெரியும் என்று கூறி வாலிபர்களை மிரட்டியுள்ளார். இதனால் அவர் போலீஸ் அதிகாரிகளையும் தன்னுடைய வலையில் வீழ்த்தியிருக்கலாம் என்று தனிப்படை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

அதனால், புகார் கொடுத்தவர்களை சில ஆண்களை வைத்து மிரட்டியுள்ளார். மேலும் சிலரிடம் பெண்களை வைத்து பேச வைத்துள்ளார். இதனால் சஹனாஸுக்கு பின் பெரிய மோசடி கும்பல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் மோசடி கும்பல்களையும் சேர்த்து பிடிக்க தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர்.


No comments:

Post a Comment