Thursday, October 4, 2012

வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் ஓட்டல் அறையில் இருந்த 3 பெண்கள் கைது

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ள வீரர்களுக்கு மைதானத்திலும், தங்கும் இடங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொழும்பில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தங்கிய அறையில் இருந்த இங்கிலாந்து பெண்கள் 3 பேரை இலங்கை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்கள் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களான கிறிஸ் கெய்ல், ஆந்த்ரே ரஸ்செல், எட்வர்ட்ஸ், வெய்ன் சுமித் ஆகியோரின் தோழிகள் என்று கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட இங்கிலாந்து பெண்களை, பாதுகாப்பு படையினர் மேல் விசாரணைக்காக அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ள இந்த சம்பவம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலோ அல்லது வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம் தரப்பிலோ உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. 'வீரர்களோ, அறையில் தங்கி இருந்த பெண்களோ எந்தவிதமான தவறான செயலிலும் ஈடுபடவில்லை. அப்படி இருக்கையில் பெண்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. வீரர்களுடன் விருந்தினர்கள் தங்குவது ஒன்றும் சட்டத்துக்கு புறம்பான விஷயம் அல்ல' என்று ஓட்டல் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
'அனுமதி இல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தங்கி இருந்த அறைக்கு வந்ததால் 3 இங்கிலாந்து பெண்களும் கைது செய்யப்பட்டனர்' என்று இலங்கை போலீஸ் செய்தி தொடர்பாளரும், சூப்பிரண்டுமான அஜித் ரோஹனா விளக்கம் அளித்துள்ளார்.  


No comments:

Post a Comment