Saturday, February 28, 2015

சிறையில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தை கொலை செய்ய முயற்சி - அதிர்ச்சி தகவல்

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தை சூதாட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது கொலை செய்ய முயற்சித்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வந்துள்ளது.
 
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கடந்த 2013ஆம் ஆண்டு கிரிக்கெட் சூதாட்ட புகாரின் பேரில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது, கொலை குற்றச்சாட்டின் பேரில் அதே சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல தாதா ஒருவன் ஸ்ரீசாந்தை கொல்ல முயன்றதாக அவரது மைத்துனரும் பிரபல மலையாள பின்னணி பாடகருமான பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பாடகர் பாலகிருஷ்ணன், “ஸ்ரீசாந்துக்கும் கிரிக்கெட் சூதாட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என எங்கள் குடும்பம் முழுமையாக நம்புகிறது. ஏதோ காரணத்தால் பின்னப்பட்ட சதி வலையில் அவர் தள்ளப்பட்டார். இவ்விவகாரத்தின் பின்னணி என்ன என்பதை கண்டறிய வேண்டும்.
 
திகார் சிறையில் அவர் இருந்தபோது, கொலை வழக்கு கைதியாக அதே சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல தாதா ஒருவன் கதவின் தாழ்ப்பாளை கூர் தீட்டி, கத்தி போல் தயாரித்தான். அதை கொண்டு ஸ்ரீசாந்தை அவன் குத்திக்கொல்ல முயன்றான்.
 
ஸ்ரீசாந்த் அந்த மன அதிர்ச்சியில் இருந்து இன்னும் அவர் மீளவில்லை. இந்த சம்பவம் சிறைக்குள் நடந்தது என்பதால் இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்படவில்லை” என்று கூறியுள்ளார்.


Wednesday, February 18, 2015

ஓமைகாட்!: பாடகர் கிஷோர் குமாரின் மனைவிக்கு லிப் டூ லிப் கொடுத்த ராம்ஜெத்மலானி ( வீடியோ)

மும்பையில் நடந்த விருது விழாவில் பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி பிரபல பாடகர் கிஷோர் குமாரின் மனைவி லீனாவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஹம் லோக் விருதுகள் வழங்கும் விழா திங்கட்கிழமை இரவு மும்பையில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்ட பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி பிரபல இந்தி பாடகர் கிஷோர் குமாரின் மனைவி லீனா சந்தாவர்கரை பார்த்தும் அவரை கட்டிப்பிடித்து லிப் டூ லிப் முத்தம் கொடுத்தார்.

 நடிகையான லீனா திருமணமான சில நாட்களிலேயே கணவரை இழந்தார். அதன் பிறகு அவர் ஏற்கனவே 3 முறை திருமணமான பாடகர் கிஷோர் குமாரை திருமணம் செய்து சுமித் கங்குலி என்ற ஆண் குழந்தைக்கு தாயானார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றான் மனைவிக்கு ராம் ஜெத்மலானி முத்தம் கொடுத்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

முன்னதாக ராம்ஜெத்மலானி கடந்த ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திராவுக்கு லிப் டூ லிப் கொடுத்தார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இன்டர்நெட்டில் தீயாக பரவியது.

இந்நிலையில் தற்போது மீண்டும் முத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார் ராம் ஜெத்மலானி.





பீகாரில் 90 சதவீத ஆண்கள் அடுத்தவர் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளனர்: முதல் மந்திரி மான்ஜி

பீகார் முதல் மந்திரியாக உள்ள மான்ஜி அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான், கடந்த சில தினங்களுக்கு முன் அரசு திட்டங்களுக்கு கமிஷன் பெற்றேன் என்று பரபரப்பு கூட்டினார்.

இந்நிலையில் 70 வயதான இந்த இளைஞர் கூறியுள்ள கருத்து பீகாருக்கும், இந்திய நாட்டிற்கும் எந்த வகையிலும் பெருமை சேர்க்காது. இந்தியா டுடே இதழுக்கு இந்த அறிவு ஜீவி அளித்த பேட்டியில், பீகாரில் உள்ள ஆண்களில் 2 முதல் 5 சதவீதம் பேர் மட்டுமே தங்களது மனைவியுடன் அவுட்டிங் செல்கின்றனர். மாறாக 90 சதவீத ஆண்கள் அடுத்தவர் மனைவியுடன்தான் அவுட்டிங் செல்கின்றனர் என்று கூறியுள்ளார்.

இதுபோல் பெண் நண்பர்களை வைத்துக்கொள்வதில் தவறில்லை. பாட்னாவில் உள்ள எக்கோ பூங்காவுக்கு சென்று பார்த்தால்,  திருமணமாகாதவர்கள் மட்டும் அங்கு ஜோடியாக அமர்ந்திருப்பதில்லை. திருமணமானவர்களும் ஜோடி, ஜோடியாக அமர்ந்திருப்பதை அங்கு காணலாம். பருவ வயதை எட்டிய ஆண்களும், பெண்களும் பரஸ்பர சம்மதத்தின் பேரில் இணைகின்றனர். ஆகையால் அதில் தவறேதும் இல்லை. அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்று மான்ஜி உளறியுள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு மான்ஜியின் மகன் திருமணமான போலீஸ் அதிகாரியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தது வெட்ட வெளிச்சமானது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற முதல்வர் கிடைத்தால் மாநிலம் விளங்கிடும். சரி தானே..

Saturday, February 14, 2015

தேர்வில் ஃபெயிலாக்கிவிடுவதாக மிரட்டி ஆபாச படம் காட்டிய ஆசிரியர் கைது

தனியார் பள்ளியில் தேர்வில் ஃபெயிலாக்கிவிடுவதாக மிரட்டி மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டியதாக ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த ஒரு தனியார் பள்ளியில் வகுப்பில் மாணவிகளிடம் ஆபாச படம் காட்டியதாகவும், அதை பார்க்காதவர்களை தேர்வில் ஃபெயிலாக்கி விடுவதாகவும் ஆசிரியர் ஒருவர் மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி ஒருவர், நடந்தவற்றை தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேள்விப்பட்ட அவருடைய தந்தை, உடனே உள்ளூர் அரசியல் பிரமுகர் உதவியுடன் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இதன் அடிப்படையில், 35 வயதான அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த ஆசிரியரிடம் தற்போது காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Friday, February 13, 2015

ஓசூரில் ரெயில் தடம் புரண்டு விபத்து: 12 பயணிகள் பலி - 50–க்கும் மேற்பட்டவர்கள் காயம்

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து ஓசூர், சேலம், ஈரோடு, கோவை வழியாக தினமும் கேரளா மாநிலம் எர்ணாகுளத்துக்கு இண்டர்சிட்டி விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை 6.15 மணிக்கு இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் பெங்களூரில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டு இருந்தது. இன்று காலை 7.40 மணி அளவில் இண்டர்சிட்டி விரைவு ரெயில் ஓசூரில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆனைக்கல் என்ற இடத்தில் வந்த போது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 

பெங்களூரில் இருந்து வந்து கொண்டு இருந்த அந்த ரெயில் ஆனைக்கல் பகுதியினை கடக்கும் போது திடீரென்று டி–8, டி–9 உள்பட 10 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் 2 பொது பெட்டிகளும், 2 ஏ.சி. பெட்டிகளும் அடங்கும். காலை நேரம் என்பதால் பயணிகள் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். திடீரென ரெயில் பெட்டி கவிழ்ந்ததால் இந்த பெட்டிகளில் பயணம் செய்தவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் உதவி கேட்டு சத்தம் போட்டனர். 

தடம் புரண்ட பெட்டிகளில் பயணம் செய்த 12 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். 17 பயணிகள் படுகாயம் அடைந்தனர். பலியான 12 பேரின் பெயர், விபரம் உடனடியாக தெரியவில்லை. அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. 

சம்பவ இடத்துக்கு மத்திய மந்திரி சதானந்த கவுடா நேரில் வந்து பார்வையிட்டார். தமிழக மற்றும் கர்நாடக ரெயில்வே அதிகாரிகள் விரைந்து உள்ளனர். மேலும் இரு மாநிலங்களில் இருந்தும் 20–க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகளும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. விபத்தில் டி–9 பெட்டி தான் அதிகளவில் பாதிப்படைந்து உள்ளது. பயணிகள் தடம் புரண்ட பெட்டிகளுக்குள் மாட்டி கொண்டு உள்ளதால் உயிரிழப்பு அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 

இதுவரை 12 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கவிழ்ந்த ரெயில் பெட்டிகளின் இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ரெயில் பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி நொறுங்கி கிடப்பதால் மீட்பு படையினர் வெல்டிங் எந்திரம் மூலம் பெட்டியை உடைத்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்து பற்றி அறிந்ததும் ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனால் மீட்பு பணியில் இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு மீட்பு பணியை தொடர்ந்தனர். 

ரெயில் தடம் புரண்டதற்கு பாறை உருண்டு விழுந்ததே காரணம் என்று மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ்பிரபு கூறினார். என்றாலும் இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் விசாரணை முடிந்த பிறகே விபத்துக்கான காரணம் முழுமையாக தெரியவரும் என்றும் அவர் கூறினார். 

பெங்களூரில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் இந்த விசாரணையை நடத்துவார் என்றும் மத்திய மந்திரி கூறினார். விபத்து நடந்த இடத்திற்கு அவர் விரைந்துள்ளார். இந்த விபத்துக்கு சதி செயல் காரணமா? என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரெயிலில் பயணித்த சில பயணிகள் கூறும் போது ‘டமார்’ என்ற சத்தம் கேட்டதாக தெரிவித்தனர். எனவே ரெயில் விபத்துக்கு சதி காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. 

விபத்து நடந்த இடத்துக்கு தென்மேற்கு ரெயில்வேக்கு உட்பட்ட அதிகாரிகள், பெங்களூர் ரெயில்வே கோட்ட மேலாளர் மற்றும் அதிகாரிகள் விரைந்தனர். மேலும் ஈரோட்டில் இருந்து நவீன கிரேன் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடந்து வருகிறது. விபத்து நடந்த ரெயிலின் மற்ற பெட்டிகளில் பயணித்த பொதுமக்கள் அங்கிருந்து வீடு திரும்ப முடியாமல் அவதியடைந்தனர். 

இந்த விபத்தின் காரணமாக பெங்களூரில் இருந்து தமிழகத்துக்கு இயக்கப்படும் ரெயில்கள் மாற்றுப் பாதையில் (அதாவது கிருஷ்ணராஜாபுரம், குப்பம், திருப்பத்தூர் வழியாக) இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. விபத்தில் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஓசூர் மற்றும் பெங்களூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியானவர்களின் உடல்கள் ஆனைக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டது. விபத்து பற்றி கேள்விப்பட்டதும் ரெயிலில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்கள் ஆனைக்கல் விரைந்துள்ளனர்.


Thursday, February 12, 2015

ஆங்கில மொழி தெரியாததால் இந்தியருக்கு அமெரிக்காவில் நேர்ந்த கதி

அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில், ஹண்ட்ஸ்வில்லே என்ற இடத்தில் தங்கி என்ஜினீயர் வேலை பார்த்து வருகிற தனது மகனை பார்ப்பதற்காக இந்தியரான சுரேஷ் பாய் படேல் (வயது 57) சென்றுள்ளார்.

கடந்த 6–ந் தேதி அந்த பகுதியில் சுரேஷ் பாய் படேல் சுற்றி திரிந்துள்ளார். இதைக்கண்ட ஒருவர் சந்தேகத்துக்கு இடம் அளிக்கிற வகையில் ஒரு நபர் நடமாடுகிறார் என போலீசில் புகார் செய்து விட்டார்.

இதையடுத்து அவரை சுற்றி வளைத்த அமெரிக்க போலீசார், ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்டனர். அவருக்கோ ஆங்கிலம் தெரியாததால் பதில் அளிக்க முடியாமல், ‘நோ இங்கிலிஷ்’ என்று மட்டும் கூறி உள்ளார். உடனே ஒரு போலீஸ்காரர் அவரை பிடித்து தரையில் தள்ளிவிட்டார். இதில் அவர் முடங்கிப்போகிற அளவுக்கு காயம் அடைந்தார். இப்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்.

இது தொடர்பான புகாரில், அவரை தள்ளிவிட்ட போலீஸ்காரர் விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.

இதுபற்றி சுரேஷ் பாய் படேலின் மகன் சிராக் கூறுகையில், ‘‘எனது அப்பா ஓய்வில் இருக்கும் போது அந்த பகுதியை நடந்து சென்று பார்த்திருக்கிறார். இது வழக்கமான செயல்தான். என் அப்பாவுக்கு இந்தியும், குஜராத்தியும் தான் தெரியும். ஆங்கில மொழி தெரியாததால் போலீசார் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது’’ என்றார். இப்போது சுரேஷ் பாய் படேலை இந்த நிலைக்கு தள்ளிய மேடிசன் போலீஸ் மீது வழக்கு தொடர சிராக் திட்டமிட்டுள்ளார்


டெல்லி: 70 எம்.எல்.ஏ.க்ககளின் அதிர்ச்சி பின்னணி! ஒரு சிறப்பு பார்வை !!

டெல்லியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 70 எம்.எல்.ஏ.க்களில் 44 பேர் கோடீசுவரர்கள்; 24 பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
குற்றப்பின்னணி எம்.எல்.ஏ.க்கள்

டெல்லி சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 70 எம்.எல்.ஏ.க்களின் கல்வித்தகுதி, நிதி நிலைமை, குற்ற வழக்குகள் பற்றிய பரபரப்பு தகவல்கள் வருமாறு:-

* 70 எம்.எல்.ஏ.க்களில் 24 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களில் 23 பேர் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்கள். ஒரே ஒரு எம்.எல்.ஏ. பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவர்.

(முந்தைய சட்டசபையில் 25 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருந்தன. ஆக, புதிய சட்டசபையில் குற்றப்பின்னணி உடைய எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை சற்றே குறைந்துள்ளது.)

கோடீசுவர எம்.எல்.ஏ.க்கள்

* புதிய எம்.எல்.ஏ.க்களில் 44 பேர் கோடீசுவரர்கள் ஆவார்கள். இவர்களில் 11 பேர் ரூ.10 கோடிக்கு அதிகமான சொத்துக்களை உடையவர்கள். எம்.எல்.ஏ.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.6.29 கோடி ஆகும். (முந்தைய சட்டசபையில் 51 எம்.எல்.ஏ.க்கள் கோடீசுவரர்கள். ஆக இந்த முறை கோடீசுவர எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. எம்.எல்.ஏ.க்களின் சராசரி சொத்து மதிப்பும் ரூ.10.83 கோடியிலிருந்து ரூ.6.29 கோடியாக சரிவு கண்டுள்ளது.)

கல்வித்தகுதி

* புதிய எம்.எல்.ஏ.க்களில் 12-ம் வகுப்பும், அதற்கு கீழும் படித்து தேறியவர்கள் 24 பேர். பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் 43 பேர்.

(முந்தைய சட்டசபையில் 12-ம் வகுப்பும், அதற்கு கீழும் படித்து தேறியவர்கள் 33 பேர், பட்டதாரிகள் 36 பேர். ஆக இந்த முறை பட்டதாரி, முதுநிலை பட்டதாரி எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை மட்டும் குறைந்துள்ளது.)

வயது-பாலினம்

* புதிய எம்.எல்.ஏ.க்களில் 25-50 வயது பிரிவினர் 49 பேர். 50-70 வயது பிரிவில் உள்ளவர்கள் 20 பேர். (முந்தைய சட்டசபையில் 25-50 வயது பிரிவினர் 40 பேர். 50-70 வயது பிரிவினர் 28 பேர். ஆக இந்த முறை 50-70 வயது பிரிவினர் எண்ணிக்கை மட்டும் குறைந்துள்ளது.)

* புதிய எம்.எல்.ஏ.க்களில் 6 பேர் மட்டுமே பெண்கள். (முந்தைய சட்டசபையில் 3 பேர் பெண்கள். ஆக பெண் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை இப்போது இரு மடங்காக உயர்ந்துள்ளது.)

Wednesday, February 11, 2015

"காஜல் அகர்வாலு"க்கு 'ஆழ்ந்த நன்றி' சொன்னாரா கேப்டன்?

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைக் கைப்பற்றி பாரதிய ஜனதா, காங்கிரஸை மண்ணை கவ்வியது போதும்.. சமூக வலை தளங்களில் கமெண்டுகள் படுபரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றன. 

ஃபேஸ்புக் பக்கத்தில் பிரதமர் மோடி, பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா, தமிழகத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நடிகை குஷ்பு என பலரையும் கலாய்த்து எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.. 

இந்த வகையில் தே.மு.க. தலைவர் விஜயகாந்தையும் விட்டு வைக்கவில்லை இந்த குசும்பர்கள்.. இப்படி யாரோ குசும்பர் பார்த்த போட்டோஷாப் வேலைதான் இது.. 

அண்மையில் ஒபாமா இந்திய வருகையை விஜயகாந்திடம் அவரது மனைவி பிரேமலதா கூறுவதாகவும் அதற்கு உங்க அப்பா வருகிறாங்கன்னு சொன்னியே என கேப்டன் கேட்பதாகவும் வலைதள குசும்பர்கள் விளையாடினர். 

இப்போது கேப்டன் அரவிந்த் கேஜ்ரிவாலை உச்சரித்தால் 'காஜல் அகர்வால்' என்றுதான் சொல்வார் என குசும்பாக சித்தரித்திருக்கின்றனர். 

மொபைலில் இலவச இணைய வசதி: ஃபேஸ்புக் வழங்குகிறது

ஃபேஸ்புக் நிறுவனம் இந்திய மொபைல் ஃபோன் வாடிக்கையாளர்களுக்கு இலவச இணையதள வசதியை அளிக்க உள்ளது. 

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இச்சேவை வழங்கப்பட உள்ளது. இதன்படி தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் உள்ள ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் இலவச இணையதள வசதியை பெற முடியும். 

இத்திட்டத்தின் மூலம் ஆரம்பத்தில் 33 வலைத்தளங்களை இலவசமாக பயன்படுத்தலாம் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. 

இதே போன்ற இலவச சேவையை ஏர்டெல், வோடஃபோன் போன்ற நிறுவன வாடிக்கையாளர்களுக்குத் தருவது குறித்தும் பேசி வருவதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. 

உலகில் 500 கோடி வாடிக்கையாளர்களை பெற இன்டர்நெட் டாட் ஓஆர்ஜி என்ற பிரமாண்ட திட்டத்தை ஃபேஸ்புக் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே இலவச இணைய வசதி அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தை ஏற்கனவே ஆஃப்ரிக்க நாடுகளில் ஃபேஸ்புக் செயல்படுத்த தொடங்கிவிட்டது.


பா.ஜ, காங்கிரசுக்கு அதிர்ச்சி தோல்வி ஏன்?

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜ ஆட்சி அமைந்த பிறகு நடைபெற்ற மகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் அடுத்தடுத்து பாஜ வெற்றி பெற்றது. இந்த சூழலில் டெல்லியில் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தலைநகரமான டெல்லியில் எப்படியும் ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்று பாஜ தீவிரம் காட்டியது. 

அதே நேரத்தில் கடந்த முறை பெரும்பான்மை பலம் இல்லாமல் தவற விட்ட ஆட்சியை தற்போது எப்படியும் பிடித்து விடுவது என்ற நோக்கத்துடன் ஆம் ஆத்மியும் களம் இறங்கியது. இம்முறை வெளிப்படையாக பாஜவுக்கும் ஆம் ஆத்மிக்கு இடையே தான் கடும் போட்டி நிலவியது. டெல்லியில் ஏற்படும் தோல்வி பாஜவுக்கு மிகவும் கசப்பான மருந்து. அது மோடி அரசு மீதான விமர்சனமாக எதிர்க்கட்சிகளால் திசை திருப்பி விட வாய்ப்புள்ளது என்று பாஜ மிகவும் கலக்கத்துடனேயே தேர்தலை எதிர்கொண்டது. 
உடைந்தது இமேஜ்:

வெற்றி நாயகன் என்று கடந்த மக்களவை தேர்தல் முதல் கடந்த 3 மாநில சட்டமன்ற தேர்தல் வரை பேசப்பட்ட அமித்ஷா தலைமையிலும், பாஜவின் அலையை நாடு முழுவதும் வீச செய்த அக்கட்சியின் நட்சத்திர தலைவர் பிரதமர் மோடியின் பிரசாரத்தின் மீதும் உறுதியான நம்பிக்கை வைத்து பாஜ தேர்தல் வியூகங்களை வகுத்தது. இதற்காக ஆம் ஆத்மியின் பக்கம் இருந்த அதிருப்தி தலைவர்கள் பாஜ பக்கம் ஈர்க்கப்பட்டனர். குறிப்பாக அதிருப்தி எம்எல்ஏ வினோத் குமார் பின்னி, முன்னாள் தலைவர் ஷாஜியா இல்மி மற்றும் அன்னா ஹசாரேயுடன் இணைந்து ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் பணியாற்றிய கிரண் பேடி பாஜ பக்கம் சாய்ந்தனர். மேலும் இரும்பு நங்கை, சுத்தமான கைகளுக்கு சொந்தக்காரர் என்ற இமேஜூடன் கெஜ்ரிவாலுக்கு போட்டியாக கிரண் பேடி பாஜவின் முதல்வர் வேட்பாளராகவும் களம் இறக்கப்பட்டார். கட்சியில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் உள்ளூர் தலைவர்களுக்கு முக்கியத்துவம் தராமல் தேர்தல் நேரத்தில் கட்சியில் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்தது பா.ஜ. கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், கட்சியினரே தலைமைக்கு தகுந்த பாடத்தை கற்றுக் கொடுத்துவிட்டனர்.

மேலும் பாஜவின் வெற்றிக்காக மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், டெல்லியின் முன்னாள் எம்எல்ஏக்கள் ஆகியோர் தேர்தல் தொடங்குவதற்கு முன்பிருந்தே அல்லும் பகலும் அயராது பாடுபட்டனர். மேலும் பாஜ ஆளும் மாநில முதல்வர்களும் பிரசாரத்தில் களம் இறக்கப்பட்டனர். ஆனால், ஆம் ஆத்மி எத்தகைய விமர்சனத்திற்கும் களங்காமல் தெளிவாக பாஜவின் அத்தனை வியூகங்களையும் உடைத்து நொறுக்கியபடி மக்கள் முன்பாக தன்னை காட்டியபடி முன்னேறியது. மேலும் ஆம் ஆத்மி வெளிப்படையான கோஷங்களையோ, மக்களுக்கு புரியாத கொள்கைகளையோ அறிவிக்காமல் நேரடியாக டெல்லி வாசிகளின் பிரச்னைகளின் மீது கவனம் செலுத்தியது. குறிப்பாக மின் கட்டண மானியம், குடிநீர் பிரச்னை, முறைப்படுத்தப்படாத குடிசை பகுதிகள், மற்றும் காலனிகள் விவகாரம், வெளிப்படையான நிர்வாகம் ஆகியவற்றை முன்வைத்து மக்கள் மத்தியில் பேசியது. தலைநகரில் அரசியல் வாதிகளின் விஐபி கலாசாரத்தால் வெறுத்து போயிருந்த டெல்லி வாசிகளுக்கு ஆம் ஆத்மி வருகை மிகவும் பெரிய நம்பிக்கையை கொடுத்தது. எனவே ஆம் ஆத்மி மீதான நம்பிக்கை மேலும் அதிகரித்தது.

அதே நேரத்தில் ஆள் பலம், படை பலம்,  பண பலம் என பிரமாண்டமாக பாஜ களம் இறங்கியது. பிரதமர் மோடி 4 இடங்களில் தனது வழக்கமான பாணியில் வளர்ச்சி மற்றும் நிலையான ஆட்சி என்று பிரசாரம் செய்தார். கெஜ்ரிவால் அரசியல் முதிர்ச்சியற்றவர் என்றும், டெல்லியை ஆட்சி செய்ய அரசியலில்  போதிய அனுபவம் இல்லாதவர் என்றும் பேசினார். ஆனால், கடந்த 100 நாட்களாக மத்தியில் ஆட்சியில் இருந்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு மக்களவை தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்பதை டெல்லிவாசிகள் அருகில் இருந்து கவனித்து வருகின்றனர். கருப்பு பணத்தை மீட்பது, விஐபி கலாசாரம், மதவாத சக்திகளை கட்டுக்குள் வைப்பது உள்ளிட்டவை குறித்து மத்திய அரசின் மீது அதிருப்தி காணப்பட்டது. 

பிரதமர் மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மத்திய அமைச்சர் பிரக்யா சாத்வி நிரஞ்சன் ஜோதி உள்ளிட்டவர்கள் மக்களை பிளவுபடுத்தும் வகையில் பேசியது, இந்துத்துவா அமைப்புகள் சிறுபான்மையினரை மீண்டும் மதம் மாற்றியது, தேர்தல் நேரத்தில் தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உள்ளிட்டவையும் பாஜவின் தோல்விக்கு வழி வகுத்தது.  மேலும் கடந்த ஆட்சியில் வட மாநிலத்தவர் மீது தாக்குதல், பெண்கள் மீதான பலாத்காரம் உள்ளிட்டவற்றால் டெல்லி மக்கள் அவதிப்பட்ட போது, அதற்கு புதிய பாஜ அரசு எதுவும் செய்யவில்லை. இந்த உணர்வுகளை ஆம் ஆத்மி மிகவும் சாதுர்யமாக தன்வசம் ஈர்த்தது. 


* மத்தியில் பா.ஜ. ஆட்சிக்கு வந்தபின்னர் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள் என்று நினைத்தார்கள். ஆனால், பிரதமர் மோடியின் பேச்சு மட்டும் எங்கும் ஒலித்தது. செயல்பாடு என்று குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு எதுவும் இல்லை.

* பா.ஜ.வில் ஆர்எஸ்எஸ், விஎச்பி ஆதரவு அமைச்சர்கள், எம்.பி.க்களின் சர்ச்சைக்குரிய பேச்சுகள், செயல்பாடுகள் மதச்சார்பின்மையை அசைத்து பார்த்தது. எந்த ஒரு சூழ்நிலையிலும் அவர்களை கட்டுப்படுத்த பிரதமர் மோடி தவறிவிட்டார். இதுவே கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது என்ற கருத்தும் நிலவுகிறது. 
  
* மக்களவையில் பெரும்பான்மை பெற்றுவிட்டோம், மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் அரசு நினைத்ததை தன்னிச்சையாக செயல்படுத்த முடியவில்லையே என்ற எண்ணத்தில் மாநிலங்களவையில் கட்சியின் பலத்தை அதிகரிக்க பா.ஜ. முயற்சி செய்தது.

* இதனால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை குறிவைத்து கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தி தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிவீசி சில மாநிலங்களில் வெற்றியையும் பெற்றது. எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டது.

* சிபிஐ அமைப்பை தவறாக பயன்படுத்தி எதிர்க்கட்சி தலைவர்களை அச்சுறுத்தியும் அதிகார துஷ்பிரயோகத்திலும் ஈடுபடுத்தியதை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்தன. ஆனால், பா.ஜ.வின் போக்கில் மாற்றம் இல்லாததால் டெல்லி வாக்காளர்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர். 

* நாட்டில் அன்றாட மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்தாமல் வாய் பேச்சால் எல்லாரையும் எப்போதும் ஏமாற்றிவிடலாம் என்று நினைத்தார் மோடி. ஆனால், டெல்லியில் அவரது மோடி வித்தையை வாக்காளர்கள் நிராகரித்துவிட்டனர்.



பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் ஷூ பெல்ட் அணிய கூடாது: தேர்வு துறை

 பிளஸ் 2 வகுப்பு தேர்வு நடைபெறும் மையங்களுக்கு மாணவ, மாணவிகள் ஷூ மற்றும் பெல்ட் அணிந்து வர தடைவிதிப்பது குறித்து தேர்வு துறை  பரிசீலனை செய்து வருகிறது. பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் 5ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடக்கிறது. தமிழகம் புதுச்சேரியில் 5,600  பள்ளிகளை சேர்ந்த 10 லட்சம் மாணவ, மாணவியர் இத் தேர்வை எழுதுகின்றனர். இந்த ஆண்டு விடைத்தாளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. முதல்  பக்கத்தில் மாணவர்கள் தங்களின் பதிவு எண்களையோ, பாடங்களையோ எழுத வேண்டியதில்லை. அனைத்தும் விடைத்தாளில் அச்சிட்டே வழங்கப்படுகிறது.

தேர்வு எழுத வரும் மாணவர்கள் தங்களின் கையெழுத்தை மட்டும் முதல் பக்கத்தில் பதிவு செய்தால் போதும். 

மேலும், விடைத்தாள்கள் அனைத்தும் ஒவ்வொரு பாடத்துக்கு ஏற்ப பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்படு கிறது. கேள்வித்தாளில் இடம் பெறும் பயிற்சிக்கான  படங்கள், விடைத்தாளில் இணைக்கப்பட்டே வழங்கப்பட உள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு நேரத்தில் கடை பிடிக்க வேண்டியவை குறித்து  விடைத்தாளின் இரண்டாம் பக்கத்தில் அச்சிடப்பட்டுள் ளது. அதன்படி மாணவர்கள் தேர்வு அறைக்குள் செல்போன் எடுத்து வரக்கூடாது.  தேர்வு எழுதும்  மாணவர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு அறையில் ஷூ மற்றும் பெல்ட் அணிந்து வருவதை தடை செய்யவும் தேர்வுத்துறை ஆலோசித்து வருகிறது. கடந்த  ஆண்டு ஷூ, பெல்ட், டை அணிந்து வர அனுமதிக்கப்பட்டனர். 

ஆனால் இந்த ஆண்டு ஷூவை  தேர்வு அறைக்கு வெளியில் கழற்றி வைத்து விட்டுத்தான் வர வேண்டும் என்று அறிவிக்க உள்ளதாக தெரிகிறது. அறிவியல்,  கணக்கு, வணிக கணிதம், கணக்குப் பதிவியல் உள்ளிட்ட தேர்வு எழுதும் மாணவர்கள் விடைத்தாளில் முக்கிய விடைகள் மற்றும் வரைபடங்களை ஸ்கெட்ச்  பேனா, கலர் பென்சில் ஆகியவற்றை பயன்படுத்தி போடுவது வழக்கம். 

ஆனால் இந்த ஆண்டு அவற்றுக்கும் தடை வருகிறது. விடைத்தாளில் எழுதப்படும் விடைகளின் கீழ் அடிக்கோடு இடக்கூடாது. குறிப்பாக ஸ்கெட்ச் பேனா, கலர்  பென்சில் ஆகியவற்றால் அடிக்கோடு இடுவது, சிவப்பு மையால் அடிக்கோடு இடுவது ஆகியவற்றுக்கும் தடை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. விடைத்தாளில்  மொத்தமாக ஒதுக்கப்பட்ட பக்கங்களுக்கு உள்ளாகவே விடைகளை எழுத வேண்டும். 


Tuesday, February 10, 2015

தோல்வி எனக்கல்ல...பா.ஜனதாவுக்குதான்: ஒரே நாளில் கிரண் பேடி பல்டி!

டெல்லி சட்டசபை தேர்தலில் தனக்கு தோல்வி ஏற்படவில்லை என்றும், தோல்வியடைந்தது பா.ஜனதாதான் என்றும் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் கிரண் பேடி கூறியுள்ளார். 

டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதா படுதோல்வியடைந்துள்ளது. மொத்தமுள்ள 70 இடங்களில் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் பா.ஜனதா 32 தொகுதிகளில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது.

இந்நிலையில் இந்த தேர்தல் தோல்விக்கு பா.ஜனதாவின் முதல்வர் வேட்பாளராக கிரண் பேடியை நிறுத்தியதும் ஒரு முக்கிய காரணம் என அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. 

இதனிடையே தேர்தல் முடிவு இன்று காலை வெளியாக தொடங்கிய சிறிது நேரத்திலேயே பா.ஜனதாவின் தோல்வி உறுதியானது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கிரண் பேடி, தேர்தல் தோல்விக்கு தாம் பொறுப்பேற்பதாக கூறினார். 

இது குறித்து அவர் கூறுகையில்:

 "கட்சி வெற்றி பெற்றால் இது கூட்டு வெற்றியாகும். கட்சி தோல்வி அடைந்தால் அது தனிநபர் பொறுப்பு. நான் பொறுப்பு ஏற்றுக் கொள்வேன். நான் போலீஸ் அதிகாரியாக இருந்தபோதும் தோல்வியை சந்தித்து இருக்கிறேன், பொறுப்பை நானே ஏற்றுக் கொள்வேன்" என்றார்.

இவ்வாறு கூறிய சில மணி நேரத்திலேயே, முதலில் கூறிய கருத்துக்கு மாறாக, டெல்லி சட்டசபை தேர்தலில் தனக்கு தோல்வி ஏற்படவில்லை என்றும், தோல்வியடைந்தது பா.ஜனதாதான் என்றும் மாற்றிக் கூறினார்.  

"என்னால் முடிந்த அளவு சிறப்பாக செயல்பட்டேன். பா.ஜனதா ஒரு தேசிய கட்சி. அது தன்னை சுய பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்" என கிரண் பேடி மேலும் கூறினார்.

பா.ஜ.வை டெல்லி மக்கள் விளக்குமாற்றால் விரட்டியுள்ளனர்: வைகோ கருத்து!

டெல்லி சட்டசபை தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள வைகோ, பாரதிய ஜனதா கட்சியை மக்கள் விளக்குமாற்றால் விரட்டி, படுதோல்வி எனும் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார்கள் எனக் கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 

"உலகின் தலைசிறந்த ஜனநாயக நாடு இந்தியா என்பது 1977க்குப் பின்னர் மீண்டும் இப்போது டெல்லி மாநில வாக்காளர்களால் நிரூபிக்கப்பட்டுவிட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி இமாலய வெற்றி பெற்றுள்ளது. டெல்லி மாநில வாக்காளர்கள் பாசிச இந்துத்துவ வெறிபிடித்த நரேந்திர மோடி அரசுக்குப் பாடம் புகட்டுகின்ற வகையில், பாரதிய ஜனதா கட்சியை விளக்குமாற்றால் விரட்டி, படுதோல்வி எனும் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார்கள்.

உலக உத்தமர் காந்தியாரை பிரார்த்தனைக் கூட்டத்தில் சுட்டுக் கொன்ற கொலைகாரப் பாவி நாதுராம் விநாயக் கோட்சே எனும் நச்சுப்பாம்பைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடி, சிலையும் எழுப்ப முற்பட்ட இந்துத்துவ சக்திகளுக்கும், அதற்கு வெண்சாமரம் வீசிய நரேந்திர மோடி அரசுக்கும் வாக்காளர்கள் மிகச்சரியான பாடம் கற்பித்துள்ளார்கள்.

சாமானியனுக்கும், சாதாரண மனிதனுக்கும் ஜனநாயகம் ஆட்சி மகுடத்தைச் சூட்டும் என்பதுதான் ஆம் ஆத்மி கட்சியின் விண்முட்டப் புகழ் படைக்கும் வெற்றியாகும். பன்னாட்டுப் பகாசூரக் கம்பெனிகளுக்கும், உள்நாட்டுக் கொள்ளைக்கார கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஏஜென்ட் வேலை பார்த்த நரேந்திர மோடி அரசை, எண்ணி எட்டே மாதங்களில் மக்கள் முற்றாக நிராகரித்து விட்டார்கள்.

நடந்து இருப்பது ஜனநாயகப் புரட்சி. மக்களின் மவுனப்புரட்சி. டெல்லி மாநிலத்தில் மட்டும் அல்ல, காஷ்மீரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை மதச்சார்பற்ற தன்மைக்கு உலைவைக்க முற்பட்டுவிட்ட நரேந்திர மோடி அரசுக்கு எதிரான மவுனப்புரட்சி அலை மக்கள் மனங்களில் எழுந்து விட்டது. 

இந்தியாவிலேயே பல ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சி மிகுந்த பலம் பெற்று இருந்த டெல்லி மாநிலத்திலேயே அந்தக் கட்சியின் அடித்தளம் நொறுங்கிப் போய்விட்டது; நாடெங்கும் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக மக்கள் மனதிலே எழுந்துள்ள கொந்தளிப்பை டெல்லித் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டி இருக்கின்றன.

மக்கள் ஆதரவை இழந்துவிட்ட நரேந்திர மோடியின் மத்திய அரசு பதவி விலக வேண்டும். இந்திய ஜனநாயகத்தின் பெருமையை மேலும் உயர்த்த, நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு புதிதாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்த வேண்டும். 

5 ஆண்டுகளுக்கு ஆட்சி நடத்த ஜனநாயகம் அனுமதிக்கிறதே என சிலர் கேட்கலாம். ஆனால் சுதந்திர இந்திய வரலாற்றில் நெருக்கடி நிலை காலத்திற்கு பிறகு ஒரு அசாதாரணமான நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையைத் தகர்த்து, ஆணிவேரை அறுக்கும் வேலையில் மோடி அரசின் முழு ஆதரவுடன் இந்துத்துவ சக்திகள் பாசிசத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. இந்தியாவின் ஜனநாயகத்தையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாத்து வரும் அனைத்து அரண்களையும், குறிப்பாக மதச்சார்பற்ற தன்மையையும் நிர்மூலமாக்க பாரதிய ஜனதா கட்சியின் சங் பரிவாரங்கள் மூர்க்கத்தனமாகக் கொக்கரிக்கின்றன. இதற்கு மேல் மத்திய அரசாக நரேந்திர மோடியின்  பாரதிய ஜனதா அரசு நீடிப்பது ஜனநாயகத்தை நசுக்கும் பாசிச அடக்குமுறை நாட்களாகவே ஒவ்வொரு நாளும் கடக்கும்.

எனவே நரேந்திர மோடி அரசு தானாக விலகாவிட்டால் அந்த அரசுக்கு எதிராக மக்களின் மவுனப்புரட்சியை முன்னெடுக்க ஜனநாயக முற்போக்கு சக்திகள் அறவழியில் போராட்டங்களை விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், வணிகர்கள் என அனைத்துக் களங்களிலும் தொடர வேண்டும்" என்று கூறியுள்ளார்.

சாதித்துக் காட்டிய கெஜ்ரிவால்!


துடைப்பம்தான் எங்கள் கட்சியின் சின்னம். அரசியலில் நிறைந்துள்ள ஊழலை இந்த துடைப்பத்தை கொண்டு சுத்தம் செய்ய முடியும் என நம்புகிறேன்!' -2012ம் ஆண்டு இறுதியில் கட்சியை துவங்கி, 2013ம் ஆண்டு முதன் முதலாக டெல்லி சட்டமன்ற தேர்தலை சந்தித்த ஆம் ஆத்மியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இப்படி அறிவித்த போது, பலரும் இதை கிண்டலடித்தனர்.
துடைப்பத்தை கூட கெஜ்ரிவால் விடவில்லையா? என தற்போதைய பிரதமர் நரேந்திரமோடி வெளிப்படையாகவே கிண்டல் அடித்தார். ஆனால் அந்த தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில், வெற்றி பெற்று, டெல்லியின் முதல்வரானார் கெஜ்ரிவால். இப்போது மீண்டும் கெஜ்ரிவாலின் எழுச்சியும், துடைப்பத்தின் வெற்றியும் விஸ்வரூபம் எடுத்து தொடர.. இரண்டாவது முறை முதல்வராக இருக்கிறார் கெஜ்ரிவால். 

அரியானா மாநிலம், பிவானி மாவட்டத்தில் உள்ள சிவானி எனும் ஊரில் பிறந்த அரவிந்த் கெஜ்ரிவால், காரக்பூர் ஐ.ஐ.டி.யில் இயந்திரவியல் பொறியியல் பட்டதாரி. இந்திய குடியுரிமை பணிகளில் ஒன்றான ஐ.ஆர்.எஸ். எனும் இந்திய வருவாய்துறை பணியில் சேர்ந்து, டெல்லியில் வருமான வரி ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றினார். அந்த பணியின் போதே ஊழலுக்கு எதிரான போராட்டங்களை அவர் மேற்கொண்டதாக சொல்கின்றனர். 

அரசு பணியில் இருந்து கொண்டே போராடுவதில் உள்ள சிக்கலால், 2000ம் ஆண்டில் தனது பணியில் இருந்து தற்காலிகமாக விலகிய கெஜ்ரிவால், டெல்லியில் குடிமக்கள் இயக்கம் எனும் அமைப்பை துவக்கினார். நியாயமான, ஒளிவுமறைவற்ற அரசு அமைய வேண்டும் என போராடிய அவர், 2006ம் ஆண்டு தனது பணியில் இருந்து முழுமையாக விலகினார். அதன் பின்னர் தகவல் பெறும் உரிமைக்கான போராட்டத்திலும் பங்கேற்ற இவர், அந்த சட்டத்தை பற்றிய விழிப்புணர்வு பிரசாரங்களிலும் தன்னை ஈடுபடுத்தி வந்தார். இது போன்ற நடவடிக்கைகளால் பிரபல தனியார் தொலைக்காட்சியான சி என் என் -ஐபிஎன் தொலைக்காட்சி இவருக்கு 2006ம் ஆண்டு சிறந்த இந்தியருக்கான பட்டத்தை வழங்கியது.

இந்த சூழலில்தான் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தலைமையில், ஊழல் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டார் கெஜ்ரிவால். பின்னர் அவரிடம் இருந்து பிரிந்து, 2012ம் ஆண்டு இறுதியில் ஆம் ஆத்மி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். தேர்தல் அரசியலுக்கு வந்த பின்னர் இவரது நடவடிக்கைகள் எல்லாம் மக்களை திரும்பி பார்க்க வைத்தது. 2013ம் ஆண்டு நடந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில், அரசியல் பின்னணி இல்லாதவர்களை வேட்பாளர்களாக போட்டியிடச் செய்தது அதில் மிக முக்கியமான ஒன்று.

தேர்தலில் போட்டி என அறிவித்த போது அரசியல் கட்சிகள், ஆம் ஆத்மியை அலட்சியமாகத்தான் பார்த்தது. டெல்லி தேர்தலில் அப்போதைய ஆளுங்கட்சியான காங்கிரசுக்கும், பி.ஜே.பி.க்குமிடையேதான் போட்டி இருக்கும் என்ற கருத்து நிலவியது. இந்த சூழலில் வெளியான கருத்து கணிப்புகள் எப்படியும் 15 முதல் 20 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெல்லும் என சொல்ல அதிர்ந்து போனது காங்கிரசும், பி.ஜே.பி.யும். ஆனால் அதை விட அதிக இடத்தில், அதாவது மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 28 தொகுதிகளில் வென்றது ஆம் ஆத்மி. 15 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தை பல ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார் கெஜ்ரிவால். பி.ஜே.பி. 31 தொகுதியில் வென்ற போதும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைக்க முடியவில்லை. ஆம் ஆத்மிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தர காங்கிரஸ் முன்வர, அதையேற்று டெல்லியில் ஆட்சி அமைத்தது ஆம் ஆத்மி. முதல்வராக பதவியேற்றார் கெஜ்ரிவால்.

பதவியேற்ற முதல் நாளிலேயே நிதி, மின்சாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய கெஜ்ரிவால், அதிரடி மின்கட்டண குறைப்பு, இலவச குடிநீர் திட்டம், வீடு இல்லாதவர்கள் பயன்படுத்த பழுதடைந்த பஸ்கள், ஊழலை ஒழிக்க கடுமையான நடவடிக்கை என இவரது நடவடிக்கைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டெல்லி காவல்துறையை கண்டித்து, கெஜ்ரிவால் போராட்டம் நடத்த அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸை கோபப்படுத்தியது.

இந்த சூழலில் டெல்லி சட்டமன்றத்தில் ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முயன்றார் கெஜ்ரிவால். மொத்தமுள்ளா 60 பேரில், 47 பேர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, போதிய ஆதரவு கிடைக்காமல், தீர்மானம் தோல்வியை தழுவியது. இதையடுத்து ஜன்லோக்பால் மசோதாவை காரணம் காட்டியே, ஆட்சி அமைத்து 49 நாட்களில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால். தொடர்ந்து, 2014ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், வாரணாசி தொகுதியில், பி.ஜே.பி.யின் பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட்ட கெஜ்ரிவால் அங்கு தோல்வியை தழுவினார்.

டெல்லியில் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததையடுத்து, யாரும் ஆட்சி அமைக்க முன்வரவில்லை. இதையடுத்து ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. டெல்லியில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க மறுக்கவே, சட்டசபையை கலைத்து விட்டு மீண்டும் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆம் ஆத்மியின் சார்பில் இந்த தேர்தலில் மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் அரவிந்த் கெஜ்ரிவால். நாடாளுமன்ற தேர்தல், சில மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களில் வென்ற தன்னம்பிக்கையில், மோடி அலை, மோடி மேஜிக் என களமிறங்கிய பி.ஜே.பி, முதல்வர் வேட்பாளராக ஆம் ஆத்மியில் இருந்து விலகிய, முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண் பேடியை அறிவித்தது.

தேர்தலில் ஆம் ஆத்மி - பி.ஜே.பி.யிடையே கடும் போட்டி நிலவும் என்பன போன்ற கருத்துகள்தான் கருத்து கணிப்பில் வெளியானது. இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், மோடி... மோடி... என வாய் வலிக்க வலிக்கப் பேசிய பி.ஜே.பி.யினருக்கு சரியான அடி கொடுத்துள்ளனர் டெல்லி மக்கள். காங்கிரஸ், பி.ஜே.பி.யின் முதல்வர் வேட்பாளர்கள் உட்பட அனைவரும் தோற்க, போட்டியிட்ட 70 இடங்களில், 67 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. கிரண்பேடி உட்பட முக்கிய நிர்வாகிகள் பலரும் தோல்வியை தழுவ, வெறும் 3 பேர் மட்டுமே பி.ஜே.பியின் தரப்பில் வெற்றி பெற்றுள்ளனர். மறுபுறம் காங்கிரசை முழுமையாக துடைத்தெறிந்து விட்டனர் டெல்லி மக்கள்.

95 சதவீத இடங்களில், வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகிறார் கெஜ்ரிவால். நிச்சயம் இது வரலாறு காணாத தேர்தல் வெற்றிதான். 49 நாட்களில் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தபோது, அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தனக்கு வாக்களித்த மக்களைப்பற்றி கவலைப்படாமல் இருப்பதா? என பெரும் கேள்வியும் எழுந்தது. ஆனால் இவற்றை எல்லாம் மீறி 95 சதவீத இடங்களை ஆம் ஆத்மிக்கு வழங்கி, கெஜ்ரிவாலை மீண்டும் முதல்வராக்கியுள்ளனர் டெல்லி மக்கள். அதுவும் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு அனுப்பியுள்ளது என்பது மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

இளம் முதல்வர் என அடையாளத்துடனும், பெருமையுடனும் இரண்டாவது முறை டெல்லியின் முதல்வராக பதவியேற்கும் கெஜ்ரிவால், தேர்தலுக்கு பின்னால் பல முக்கிய சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. மக்களை பற்றி கவலைப்படாமல் ராஜினாமா செய்தவர் என்ற இமேஜை உடைக்க 5 ஆண்டுகள் அவர் எந்த சிக்கலும் இல்லாமல் பதவியை தொடர வேண்டியது அவசியம். "மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை மக்கள் ஏற்படுத்தித் தந்தால், தொடர்ந்து 5 ஆண்டுகள் பதவியில் இருப்பேன், இடையில் ஓட மாட்டேன்' என சத்தியம் செய்யாத குறையாக அரவிந்த் கெஜ்ரிவால் சொன்னதை, அப்படியே நடத்தி காட்ட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

அடுத்து ஜன்லோக்பால் சட்டத்தை நிறைவேற்றுவது, மின் கட்டணத்தை குறைப்பது, இலவச தண்ணீர் போன்ற ஏற்கனவே கொடுக்கப்பட்ட உறுதிமொழிகளை செயல்படுத்த வேண்டிய கட்டாயமும், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர வேண்டிய கட்டாயமும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உள்ளது. மக்கள் கெஜ்ரிவாலிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள் என்பது 95 சதவீத இடங்களில் வெற்றி பெற வைத்ததன் மூலம் மக்கள் உணர்த்தி விட்டார்கள். 

இனி மக்களின் ஆதரவை நிலை நிறுத்திக்கொள்ள அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய மிகப்பெரிய சவால் கெஜ்ரிவாலின் முன் இருக்கிறது.




டெல்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை: மண்ணை கவ்வும் பாஜக ! : ஆம் ஆத்மி -42; பா.ஜ.க- 10; காங். 5-ல் முன்னிலை!!

டெல்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே ஆம் ஆத்மி முன்னணியில் இருந்து வருகிறது. அக்கட்சி 40; பா.ஜ.க. 10; காங்கிரஸ் 5 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. 

டெல்லியில் கடந்த 2013 இறுதியில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் 28 இடங்களை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி 8 இடங்களை பிடித்த காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. 

ஜன்லோக்பால் மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்ய முடியாமல் போனதற்காக முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கேஜ்ரிவால் விலகினார். இதன் பின்னர் டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 

அத்துடன் புதிய அரசு அமைவதற்கான வாய்ப்புகள் இல்லாத நிலையில் சட்டசபை கலைக்கப்பட்டு கடந்த 7-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இம்முறை ஆட்சியை பெரும்பான்மை பலத்துடன் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆம் ஆத்மி கட்சியினர் வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டினர். 

மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து டெல்லியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் பாரதிய ஜனதாவும் தீவிரம் காட்டியது. 

இருப்பினும் தொடர்ந்து வந்த கருத்து கணிப்புகள் பலவும் இம்முறை ஆம் ஆத்மி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றும் என்று தெரிவித்தன. 

டெல்லியில் மொத்தம் 673 வேட்பாளர்கள் களத்தில் குதித்தனர். டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள புராரி தொகுதியில் அதிகபட்சமாக 18 பேர் போட்டியிட்டனர். தெற்கு டெல்லியில் அம்பேத்கர் நகர் தொகுதியில் குறைந்தபட்சமாக 4 பேர் போட்டியிட்டனர். 

பாரதிய ஜனதாவின் முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி கிருஷ்ணா நகர், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் களம் கண்டனர். அதே போல் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அஜய்மக்கான சதார் பஜார் தொகுதியில் போட்டியிட்டார். 

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகள் ஷர்மிஸ்டா முகர்ஜி கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் போட்டியிட்டார். டெல்லியில் இம்முறை வரலாறு காணாத வகையில் 67% வாக்குகள் பதிவாகின. 

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளிலும் ஆம் ஆத்மிக்கு சாதகமாகவே இருந்தது. இதனால் டெல்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 

டெல்லி முழுவதும் உள்ள 14 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. பிற்பகல் ஒரு மணிக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விடுதியில் படிக்கும் 6ஆம் வகுப்பு மாணவிக்கு குழந்தையா!!!

ஓடிசா மாநிலத்தில் உள்ள கோராபுட்டில் தாழ்ந்தப்பட்டவர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்காக ஆசிரம பள்ளிக்கூடம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் 150 மாணவிகள் அங்குள்ள விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.

இந்த விடுதியில் பயின்று வந்த 6ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்து உள்ளது. இதனால் விடுதி நிர்வாகிகள் மாணவியையும் குழந்தையையும் மாணவியின் இல்லத்தில் சேர்த்து உள்ளனர்.

இது குறித்து துணை - மண்டல காவல்துறை அதிகாரி கூறுகையில், “பணியில் அலட்சியமாக இருந்த ஆசிரமத்தின் தலைமை ஆசிரியர் கைலாஷ் சரண் பர்மா, விடுதி கண்காணிப்பாளர் சபிதா குரு ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இரண்டு பேரும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்” என்று கூறியுள்ளார்.

இது போல் கந்தாமால் மாவட்டத்தில் இயஙிவரும் இதே அமுரி ஆசிரம பள்ளி கூடத்தை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் விடுதியில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான சுகந்தா பரதன் என்கிற துனா காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த மாணவி கடந்த ஆண்டு மே மாதம் அவரது உறவினர் வீட்டுக்கு செல்லும் போது துனாவால் பாலியல் பலாத்காரம் செய்யபட்டு உள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து சஷ்மிதா பரிதா, நமிதா பர்தான் ஆகிய இரண்டு ஒப்பந்த ஆசிரியர்கள் நீக்கப்பட்டனர்.

பள்ளியின் தலைமை ஆசிரியை ஆஷா லதா பதி இடைநீக்கம் செய்யபட்டுள்ளார். மாணவர்கள் உடல் நலக் கண்காணிப்பாளர் இடைநீக்கம் செய்யபட்டுள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சாரங்கி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசுகள், மெத்தனப் போக்கை கைவிட்டுவிட்டு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவது எப்போது என தெரியவில்லை?.

Monday, February 9, 2015

"மோடி அலை" சந்திக்கப் போகும் முதல் அடி...!

டெல்லி சட்டசபைத் தேர்தல் தொடர்பான வாக்குப் பதிவிக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளைப் பார்க்கும்போது மோடி அலைக்கு கிடைக்கப் போகும் முதல் அடியாக டெல்லி அமையுமோ என்ற அச்சம் பாஜகவினர் மத்தியில் எழுந்துள்ளது. 

பாஜக ஆட்சிக்கு வந்து, மோடி பிரதமரான பின்னர் நடந்த சட்டசபைத் தேர்தல்களில் பாஜக பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. மகாராஷ்டிரா போன்ற முக்கிய மாநிலங்களை அந்த கட்சி கைப்பற்றியுள்ளது. 

ஆனால் தற்போது டெல்லியில் மோடி அலைக்கு முதல் முறையாக பெரும் அடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மெஜாரிட்டி பெற்று ஆட்சியமைக்கும் என்று வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன. 

கிட்டத்தட்ட அனைத்துக் கருத்துக் கணிப்புகளுமே இதைக் கூறியுள்ளதால் பாஜக வட்டாரம் அதிர்ச்சியடைந்துள்ளது. அனைத்துக் கருத்துக் கணிப்புகளையும் பார்க்கும்போது மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 42 இடங்களைக் கைப்பற்றலாம் என்று தெரிகிறது. 

ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையுடன் டெல்லியில் ஆட்சியைப் பிடித்தால் அது மோடி அலைக்குக் கிடைக்கும் முதல் பெரும் அடியாக கருதப்படும். எனவே இப்போதே பாஜக தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் பாதுகாப்பாக பேச ஆரம்பித்து விட்டனர். 

டெல்லி தேர்தல் முடிவை வைத்து பிரதமர் மீதான மக்களின் கருத்தாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அவர்கள் கூற ஆரம்பித்துள்ளனர். ஆனால் உண்மையில் இந்தத் தேர்தலில் மோடியே விழுந்து விழுந்து பிரசாரம் செய்தார். தீவிர கவனம் காட்டினார். 

கூட்டங்கள் பலவற்றில் பேசினார். கெஜ்ரிவாலை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். முதுகில் குத்திய துரோகி என்றும் கெஜ்ரிவாலை கடுமையாக சாடினார். பாஜக தலைவர் அமீத் ஷாவோ, பாஜகவினரை ஒன்று திரட்டி பிரசாரத்தை வலிமைப்படுத்தினார். 

பிற மாநிலங்களில் காட்டிய வேகத்தை விட இங்கு கூடுதலாகவே பாஜக காட்டியது. கிரண் பேடியை பாஜகவுக்குள் இழுத்து வந்தனர். அவரை முதல்வர் வேட்பாளராக்கினர். பாஜக தலைவர்களின் முனுமுனுப்புகளைப் பொருட்படுத்தாமல் பேடிக்கு முழு ஆதரவு காட்டினர். 

இதன் மூலம் ஆம் ஆத்மியின் வாக்கு வங்கியை உடைக்கலாம் என்று பாஜக நினைத்தது. ஆனால் கெஜ்ரிவால் வாக்கு வங்கி உடையவில்லை என்பதையே இந்த கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. 

கடந்த தேர்தலில் பாஜக டெல்லியில் 31 இடங்களை வென்றது. இத்தனைக்கும் அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. ஆனால் தற்போதைய தேர்தலில் பாஜக அதிகபட்சம் 26 இடங்களையே வெல்ல முடியும் என்று கூறப்படுகிறது. 

கடந்த மே மாதம் மத்தியில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. மோடி பிரதமரானார். அதன் பிறகு நடந்த சட்டசபைத் தேர்தல்களில் ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக பெரும் வெற்றியைப் பெற்றது. ஜம்மு காஷ்மீரிலும் கூட அது முத்திரையைப் பதித்தது. இந்த நிலையில் டெல்லியில் மோடி அலைக்கு முதல் வேட்டு வருகிறது. 


வீட்டில் இருந்தபடியே பள்ளியில் உள்ள உங்கள் குழந்தையை கண்காணிக்கலாம்: புதிய கருவி விரைவில் அறிமுகம்

பெங்களூருவில் குழந்தைகளின் பாதுகாப்பை கண்காணிப்பதற்காக புதிய கருவி விரைவில் அறிமுகமாக உள்ளது. இதன் மூலம் குழந்தைகளுக்கு  ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், அதை முன்கூட்டியே பெற்றோர் தெரிந்து கொள்ளலாம். இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்து  வருகின்றன. இதுதவிர பஸ் விபத்தில் பள்ளி குழந்தைகள் பலியாவது, மர்ம நபர்கள் குழந்தைகளை கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டும் சம்பவங்கள்  அவ்வப்போது நடந்து வருகின்றன. இதில் இருந்து பெற்றோர் தங்களது குழந்தைகளை காப்பாற்றுவதற்கு, எளிதில் அவர்கள் இருக்கும் இடத்தை அடையாளம்  கண்டு கொள்வதற்கு, அவர்களின் நடவடிக்கையை கண்காணிக்கவும் புதிய கருவி வந்துள்ளது. 

இந்த கருவி குழந்தைகளின் பள்ளி ஐ.டி கார்டுகளில் எளிதில் பொருத்தி கொள்ளும் வசதிகளுடன் கூடியது. இதை ரித்தீஸ் பாண்டியா என்பவர் அறிமுகம்  செய்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர். இதற்கு முன்பு வெளிநாட்டில் பணியாற்றியுள்ளார். குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் அசம்பாவிதங்களில்  இருந்து அவர்களை மீட்பதற்காக இந்த கருவியை கண்டு பிடித்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்த கருவி, ஒரு ஜிப் போன்றது. இதில் 2 அவசர உதவி  எண்களை பதிவு செய்து கொள்ளலாம். ஒன்று பெற்றோர், மற்றொன்று வேறு யாருடைய தொலைபேசி எண்களையாவது பதிவு செய்து வைக்கலாம். படத்தில்  வருவது போன்று குழந்தை எங்கு இருக்கிறது. என்ன செய்து கொண்டிருக்கிறது. 

அவளை சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை இந்த கருவி மூலம் பெற்றோர் தெரிந்து கொள்ளலாம். இதற்கு கம்ப்யூட்டரின் உதவியும் மிகவும்  முக்கியமான ஒன்று. இது குறித்து கருவியை கண்டுபிடித்த ரித்திஸ் பாண்டியா கூறியதாவது; நானும் ஒரு பெண் குழந்தையின் தந்தை. குழந்தைகளின்  நடவடிக்கையை கண்காணிப்பது எப்படி என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். அப்போது எனது எண்ணத்தில் தோன்றியதுதான் இந்த கருவி. இது குறித்து 400க்கும்  அதிகமான பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். அவர்கள் இதன் மூலம் எப்படி எங்கள் குழந்தைகளை பாதுகாக்க முடியும் என்று கேள்வி எழுப்பினர்.

அப்போதுதான் நான் அவர்களிடம் இந்த கருவி பற்றிய பயன்பாட்டை எடுத்து கூறினேன். அதன் பின்னர் அவர்களிடம் தெளிவு காணப்பட்டது.
இது ஐ.டி கார்டு வடிவம் கொண்டது. குழந்தைகள் கழுத்தில் அணியும், ஐ.டிகார்டுகளில் இந்தக் கருவியை பொருத்தலாம். இதில் குழந்தையின் பெயர், பள்ளி  பெயர், முகவரி, பெற்றோர் பெயர் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அவசர தேவைக்கான பட்டனும் இதில் இடம்  பெற்றிருக்கும். ஆபத்து நேரத்தில் இந்த பட்டனை குழந்தை அழுத்தினால் போதும், அதில் பதிவு செய்யப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு தகவல்  கிடைத்துவிடும்.

இத்தகைய வசதிகள் கொண்ட இந்த கருவி சிம் கார்டு இணைப்புகளுடன் கூடியது. தினமும் சார்ஜ் ஏற்ற வேண்டும். 48 மணி நேரம் இதை பயன்படுத்தலாம்.  அதன் பின்னர் மீண்டும் சார்ஜ் ஏற்றி கொள்ளலாம். தேவை இல்லாத நேரத்தில் அணைத்து வைத்து கொள்ளலாம். இந்த கருவி மூலம் குழந்தைகள் ஆபத்தான  நிலையில் இருந்தால் எளிதில் கண்டுபிடித்து விடலாம். கூட்ட நெரிசல்களில் சிக்கியிருந்தால் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம்.

பாலியல் வன்கொடுமைகளில் இருந்தும், இந்த கருவி குழந்தையை தற்காத்து கொள்ளும் வசதி கொண்டது. வரும் கல்வி ஆண்டுகளில் இருந்து இந்த கருவியை  அறிமுகம் செய்ய உள்ளோம். இது வியாபாரம் நோக்கம் அல்ல. குழந்தை பாதுகாப்பிற்காக தயாரிக்கப்பட்ட கவசம். இது குறித்து நகரில் உள்ள பள்ளி  நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. வரும் ஏப்ரல் மாதம் இந்த கருவி சந்தைகளில் விற்பனைக்கு வரும் என்றார். 

Sunday, February 8, 2015

திமுக முன்னாள் அமைச்சரின் மகன் தூக்கிட்டு தற்கொலை


திமுக முன்னாள் மீன்வளத்துறை அமமைச்சர் கே.பி.பி.சாமியின் மகன் இனியவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திமுக ஆட்சிக்காலத்தில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தவர் திருவொற்றியூரைச் சேர்ந்த கே.பி.பி.சாமி. இவருடைய மகன் 28 வயதுடைய இனியவன். இவருக்கு பிரசன்யா என்ற மனைவியும், ஆறு மாத பெண் குழந்தையும் உள்ளனர்.
தந்தையுடன் திருவொற்றியூர் கே.வி.கே. குப்பம் பகுதியில் கே.பி.பி. சாமி வீட்டிலேயே கூட்டுக் குடும்பமாக வசித்து வந்துள்ளனர்.
இனியவனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவர் இரவில் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் வீட்டின் மொட்டை மாடியில் உள்ள தனி அறைக்குச் சென்றுள்ளார். அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினர் கீழே உள்ள அறையில் படுத்து தூங்கியுள்ளனர்.
பின்னர், காலை நீண்ட நேரம் ஆகியும் இனியவன் எழுந்து வராததால் அவருடைய மனைவி மாடியில் உள்ள அறைக்குச் சென்று கதவை தட்டியுள்ளார். கதவை திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அவர் ஜன்னலை திறந்து பார்த்த போது, இனியவன் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். 
இது குறித்து அறிந்த திருவொற்றியூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதைத் தொடரந்து கே.பி.பி.சாமி குடும்பத்தினரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
முன்னாள் அமைச்சரின் மகன், சொந்த வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Friday, February 6, 2015

குளியல் கூடத்தில் பேத்தியை அடகு வைத்து விட்டுச் சென்ற தாத்தா

சீனாவில் ‘பாத் ஹவுஸ்’ எனப்படும் குளியல் கூடங்கள் மிகவும் பிரபலமானது. வீட்டில் நீரை சூடேற்றும் வசதி இல்லாத பல குடும்பத்தினர்கள் இந்த பாத் ஹவுஸுக்கு வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

இது போன்ற ஒரு பாத் ஹவுஸூக்கு தன் பேத்தியுடன் வந்த முதியவர் ஒருவர் தான் வெந்நீர் குளியல் எடுக்க வேண்டுமென்றும் அதற்கு பிறகு தனக்கு மசாஜ் செய்ய வேண்டும் என்றும் அங்குள்ள பணிப்பெண்ணை கேட்டுக்கொண்டுள்ளார். அவர் சொன்னபடி சிறப்பாக சேவை செய்யப்பட்டு, அதற்காக பணம் கொடுக்கும் நேரம் வரும் போது திடீரென தன் மணிபர்ஸை வீட்டிலேயே மறந்து வைத்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனால் அந்த பாத் ஹவுஸ் மேனேஜர் மீ வாங், அவரது பேத்தியை நம்பிக்கைக்காக விட்டு போகச்சொன்னார். அதற்கு சம்மதித்த முதியவர் தன் பேத்தியை பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறு சொல்லி விட்டுக்கிளம்பியுள்ளார். போனவர் அன்று இரவு நிறுவனம் மூடும் நேரம் வரை வராததால் அதிர்ச்சியடைந்த மேனேஜர் அந்த சிறுமியை அங்கேயே தங்க வைத்துள்ளார்.

இவ்வாறு பல இரவுகள் கடந்தன. சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆகியும் குழந்தையை மீட்க தாத்தா வரவில்லை. இதற்குள் அவர் விட்டுச்சென்ற சியாவோ என்ற அந்த 6 வயதுச்சிறுமி அங்கிருப்பவர்களுக்கு செல்லக்குழந்தையாகவே மாறிவிட்டாள். 

அவளுக்கென்று ஒரு சின்ன பெட்டை பணியாளர்கள் ஏற்படுத்தித்தந்துள்ளனர். அது மட்டுமின்றி அவளுக்கு போர் அடிக்கக்கூடாதென்று ஒரு டி.வி.யும் தந்துள்ளனர். இவ்வளவு கொடுத்தவர்கள் உணவு கொடுக்கமாட்டார்களா என்ன? இதனால் தினமும் அங்கேயே குளித்து, சாப்பிட்டு, டி.வி பார்த்து சியாவோ வாழ்ந்து வருகிறாள். 

இந்த செய்தி பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது. மேலும் சில தன்னார்வலர்களும் அவளது தாத்தாவை தேடி வருகின்றனர். ஆனால், அவர்தான் இதுவரை கிடைத்தபாடில்லை.