Tuesday, February 10, 2015

தோல்வி எனக்கல்ல...பா.ஜனதாவுக்குதான்: ஒரே நாளில் கிரண் பேடி பல்டி!

டெல்லி சட்டசபை தேர்தலில் தனக்கு தோல்வி ஏற்படவில்லை என்றும், தோல்வியடைந்தது பா.ஜனதாதான் என்றும் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் கிரண் பேடி கூறியுள்ளார். 

டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதா படுதோல்வியடைந்துள்ளது. மொத்தமுள்ள 70 இடங்களில் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் பா.ஜனதா 32 தொகுதிகளில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது.

இந்நிலையில் இந்த தேர்தல் தோல்விக்கு பா.ஜனதாவின் முதல்வர் வேட்பாளராக கிரண் பேடியை நிறுத்தியதும் ஒரு முக்கிய காரணம் என அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. 

இதனிடையே தேர்தல் முடிவு இன்று காலை வெளியாக தொடங்கிய சிறிது நேரத்திலேயே பா.ஜனதாவின் தோல்வி உறுதியானது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கிரண் பேடி, தேர்தல் தோல்விக்கு தாம் பொறுப்பேற்பதாக கூறினார். 

இது குறித்து அவர் கூறுகையில்:

 "கட்சி வெற்றி பெற்றால் இது கூட்டு வெற்றியாகும். கட்சி தோல்வி அடைந்தால் அது தனிநபர் பொறுப்பு. நான் பொறுப்பு ஏற்றுக் கொள்வேன். நான் போலீஸ் அதிகாரியாக இருந்தபோதும் தோல்வியை சந்தித்து இருக்கிறேன், பொறுப்பை நானே ஏற்றுக் கொள்வேன்" என்றார்.

இவ்வாறு கூறிய சில மணி நேரத்திலேயே, முதலில் கூறிய கருத்துக்கு மாறாக, டெல்லி சட்டசபை தேர்தலில் தனக்கு தோல்வி ஏற்படவில்லை என்றும், தோல்வியடைந்தது பா.ஜனதாதான் என்றும் மாற்றிக் கூறினார்.  

"என்னால் முடிந்த அளவு சிறப்பாக செயல்பட்டேன். பா.ஜனதா ஒரு தேசிய கட்சி. அது தன்னை சுய பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்" என கிரண் பேடி மேலும் கூறினார்.

பா.ஜ.வை டெல்லி மக்கள் விளக்குமாற்றால் விரட்டியுள்ளனர்: வைகோ கருத்து!

டெல்லி சட்டசபை தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள வைகோ, பாரதிய ஜனதா கட்சியை மக்கள் விளக்குமாற்றால் விரட்டி, படுதோல்வி எனும் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார்கள் எனக் கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 

"உலகின் தலைசிறந்த ஜனநாயக நாடு இந்தியா என்பது 1977க்குப் பின்னர் மீண்டும் இப்போது டெல்லி மாநில வாக்காளர்களால் நிரூபிக்கப்பட்டுவிட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி இமாலய வெற்றி பெற்றுள்ளது. டெல்லி மாநில வாக்காளர்கள் பாசிச இந்துத்துவ வெறிபிடித்த நரேந்திர மோடி அரசுக்குப் பாடம் புகட்டுகின்ற வகையில், பாரதிய ஜனதா கட்சியை விளக்குமாற்றால் விரட்டி, படுதோல்வி எனும் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார்கள்.

உலக உத்தமர் காந்தியாரை பிரார்த்தனைக் கூட்டத்தில் சுட்டுக் கொன்ற கொலைகாரப் பாவி நாதுராம் விநாயக் கோட்சே எனும் நச்சுப்பாம்பைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடி, சிலையும் எழுப்ப முற்பட்ட இந்துத்துவ சக்திகளுக்கும், அதற்கு வெண்சாமரம் வீசிய நரேந்திர மோடி அரசுக்கும் வாக்காளர்கள் மிகச்சரியான பாடம் கற்பித்துள்ளார்கள்.

சாமானியனுக்கும், சாதாரண மனிதனுக்கும் ஜனநாயகம் ஆட்சி மகுடத்தைச் சூட்டும் என்பதுதான் ஆம் ஆத்மி கட்சியின் விண்முட்டப் புகழ் படைக்கும் வெற்றியாகும். பன்னாட்டுப் பகாசூரக் கம்பெனிகளுக்கும், உள்நாட்டுக் கொள்ளைக்கார கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஏஜென்ட் வேலை பார்த்த நரேந்திர மோடி அரசை, எண்ணி எட்டே மாதங்களில் மக்கள் முற்றாக நிராகரித்து விட்டார்கள்.

நடந்து இருப்பது ஜனநாயகப் புரட்சி. மக்களின் மவுனப்புரட்சி. டெல்லி மாநிலத்தில் மட்டும் அல்ல, காஷ்மீரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை மதச்சார்பற்ற தன்மைக்கு உலைவைக்க முற்பட்டுவிட்ட நரேந்திர மோடி அரசுக்கு எதிரான மவுனப்புரட்சி அலை மக்கள் மனங்களில் எழுந்து விட்டது. 

இந்தியாவிலேயே பல ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சி மிகுந்த பலம் பெற்று இருந்த டெல்லி மாநிலத்திலேயே அந்தக் கட்சியின் அடித்தளம் நொறுங்கிப் போய்விட்டது; நாடெங்கும் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக மக்கள் மனதிலே எழுந்துள்ள கொந்தளிப்பை டெல்லித் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டி இருக்கின்றன.

மக்கள் ஆதரவை இழந்துவிட்ட நரேந்திர மோடியின் மத்திய அரசு பதவி விலக வேண்டும். இந்திய ஜனநாயகத்தின் பெருமையை மேலும் உயர்த்த, நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு புதிதாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்த வேண்டும். 

5 ஆண்டுகளுக்கு ஆட்சி நடத்த ஜனநாயகம் அனுமதிக்கிறதே என சிலர் கேட்கலாம். ஆனால் சுதந்திர இந்திய வரலாற்றில் நெருக்கடி நிலை காலத்திற்கு பிறகு ஒரு அசாதாரணமான நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையைத் தகர்த்து, ஆணிவேரை அறுக்கும் வேலையில் மோடி அரசின் முழு ஆதரவுடன் இந்துத்துவ சக்திகள் பாசிசத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. இந்தியாவின் ஜனநாயகத்தையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாத்து வரும் அனைத்து அரண்களையும், குறிப்பாக மதச்சார்பற்ற தன்மையையும் நிர்மூலமாக்க பாரதிய ஜனதா கட்சியின் சங் பரிவாரங்கள் மூர்க்கத்தனமாகக் கொக்கரிக்கின்றன. இதற்கு மேல் மத்திய அரசாக நரேந்திர மோடியின்  பாரதிய ஜனதா அரசு நீடிப்பது ஜனநாயகத்தை நசுக்கும் பாசிச அடக்குமுறை நாட்களாகவே ஒவ்வொரு நாளும் கடக்கும்.

எனவே நரேந்திர மோடி அரசு தானாக விலகாவிட்டால் அந்த அரசுக்கு எதிராக மக்களின் மவுனப்புரட்சியை முன்னெடுக்க ஜனநாயக முற்போக்கு சக்திகள் அறவழியில் போராட்டங்களை விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், வணிகர்கள் என அனைத்துக் களங்களிலும் தொடர வேண்டும்" என்று கூறியுள்ளார்.

பிகே தமிழ் ரீமேக்கில் கமல்?

அமீர் கான் நடிப்பில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் ’பிகே’. இந்தியில் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று எல்லா பகுதிகளிலும் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் அடித்தது. இந்தப் படத்தினை தமிழில் ரீமேக் செய்து கமல் ஹாசனை நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் வெளிவந்த ’முன்னாபாய் M.B.B.S’. மற்றும்  ‘3 இடியட்’ போன்ற படங்களை முறையே ‘வசூல் ராஜா M.B.B.S’ மற்றும் ‘நண்பன்’ என்று தமிழில் ரீமேக் செய்து ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.  இதைத் தொடர்ந்து ஜெமினி ஃபிலிம் நிறுவனமே பிகே படத்தினையும் ரீமேக் செய்வதற்கான பேச்சுவார்த்தையில் இருக்கின்றனர்.

கமல்ஹாசன் தான் அமீர்கான் நடித்த வேடத்திற்கு சரியான பொருத்தம் என்று ஜெமினி ஃபிலிம் நிறுவனம் அவரை படத்திற்கு கேட்டு வருகிறது. கமல்ஹாசன் இன்னும் உறுதியாக நடிப்பதாக தெரிவிக்கவில்லை. படத்தின் மற்ற வேடத்திற்கான தேர்வுகள் நடைபெற்றுவருகின்றனர்.

அமீர் கான் நடிப்பில் வெளிவந்த ‘பிகே’, இந்தியாவிலேயே வசூல் மற்றும் விமர்சனம் என  வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படம் மூடநம்பிக்கைகளை கிண்டலடித்து சிந்திக்கவும் செய்துள்ளது. இதற்கு எதிர்ப்புகளும் வலுத்தது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன் தற்பொழுது ‘உத்தமவில்லன்’ மற்றும் ‘பாபநாசம்’ படங்களில் வெளியீட்டில் பரபரப்பாக இயங்கி வருகிறார். ’பிகே’ படத்தில் இவர் நடிக்கிறாரா என்பது குறித்த செய்தி விரைவில் வெளிவரும். 


சாதித்துக் காட்டிய கெஜ்ரிவால்!


துடைப்பம்தான் எங்கள் கட்சியின் சின்னம். அரசியலில் நிறைந்துள்ள ஊழலை இந்த துடைப்பத்தை கொண்டு சுத்தம் செய்ய முடியும் என நம்புகிறேன்!' -2012ம் ஆண்டு இறுதியில் கட்சியை துவங்கி, 2013ம் ஆண்டு முதன் முதலாக டெல்லி சட்டமன்ற தேர்தலை சந்தித்த ஆம் ஆத்மியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இப்படி அறிவித்த போது, பலரும் இதை கிண்டலடித்தனர்.
துடைப்பத்தை கூட கெஜ்ரிவால் விடவில்லையா? என தற்போதைய பிரதமர் நரேந்திரமோடி வெளிப்படையாகவே கிண்டல் அடித்தார். ஆனால் அந்த தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில், வெற்றி பெற்று, டெல்லியின் முதல்வரானார் கெஜ்ரிவால். இப்போது மீண்டும் கெஜ்ரிவாலின் எழுச்சியும், துடைப்பத்தின் வெற்றியும் விஸ்வரூபம் எடுத்து தொடர.. இரண்டாவது முறை முதல்வராக இருக்கிறார் கெஜ்ரிவால். 

அரியானா மாநிலம், பிவானி மாவட்டத்தில் உள்ள சிவானி எனும் ஊரில் பிறந்த அரவிந்த் கெஜ்ரிவால், காரக்பூர் ஐ.ஐ.டி.யில் இயந்திரவியல் பொறியியல் பட்டதாரி. இந்திய குடியுரிமை பணிகளில் ஒன்றான ஐ.ஆர்.எஸ். எனும் இந்திய வருவாய்துறை பணியில் சேர்ந்து, டெல்லியில் வருமான வரி ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றினார். அந்த பணியின் போதே ஊழலுக்கு எதிரான போராட்டங்களை அவர் மேற்கொண்டதாக சொல்கின்றனர். 

அரசு பணியில் இருந்து கொண்டே போராடுவதில் உள்ள சிக்கலால், 2000ம் ஆண்டில் தனது பணியில் இருந்து தற்காலிகமாக விலகிய கெஜ்ரிவால், டெல்லியில் குடிமக்கள் இயக்கம் எனும் அமைப்பை துவக்கினார். நியாயமான, ஒளிவுமறைவற்ற அரசு அமைய வேண்டும் என போராடிய அவர், 2006ம் ஆண்டு தனது பணியில் இருந்து முழுமையாக விலகினார். அதன் பின்னர் தகவல் பெறும் உரிமைக்கான போராட்டத்திலும் பங்கேற்ற இவர், அந்த சட்டத்தை பற்றிய விழிப்புணர்வு பிரசாரங்களிலும் தன்னை ஈடுபடுத்தி வந்தார். இது போன்ற நடவடிக்கைகளால் பிரபல தனியார் தொலைக்காட்சியான சி என் என் -ஐபிஎன் தொலைக்காட்சி இவருக்கு 2006ம் ஆண்டு சிறந்த இந்தியருக்கான பட்டத்தை வழங்கியது.

இந்த சூழலில்தான் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தலைமையில், ஊழல் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டார் கெஜ்ரிவால். பின்னர் அவரிடம் இருந்து பிரிந்து, 2012ம் ஆண்டு இறுதியில் ஆம் ஆத்மி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். தேர்தல் அரசியலுக்கு வந்த பின்னர் இவரது நடவடிக்கைகள் எல்லாம் மக்களை திரும்பி பார்க்க வைத்தது. 2013ம் ஆண்டு நடந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில், அரசியல் பின்னணி இல்லாதவர்களை வேட்பாளர்களாக போட்டியிடச் செய்தது அதில் மிக முக்கியமான ஒன்று.

தேர்தலில் போட்டி என அறிவித்த போது அரசியல் கட்சிகள், ஆம் ஆத்மியை அலட்சியமாகத்தான் பார்த்தது. டெல்லி தேர்தலில் அப்போதைய ஆளுங்கட்சியான காங்கிரசுக்கும், பி.ஜே.பி.க்குமிடையேதான் போட்டி இருக்கும் என்ற கருத்து நிலவியது. இந்த சூழலில் வெளியான கருத்து கணிப்புகள் எப்படியும் 15 முதல் 20 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெல்லும் என சொல்ல அதிர்ந்து போனது காங்கிரசும், பி.ஜே.பி.யும். ஆனால் அதை விட அதிக இடத்தில், அதாவது மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 28 தொகுதிகளில் வென்றது ஆம் ஆத்மி. 15 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தை பல ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார் கெஜ்ரிவால். பி.ஜே.பி. 31 தொகுதியில் வென்ற போதும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைக்க முடியவில்லை. ஆம் ஆத்மிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தர காங்கிரஸ் முன்வர, அதையேற்று டெல்லியில் ஆட்சி அமைத்தது ஆம் ஆத்மி. முதல்வராக பதவியேற்றார் கெஜ்ரிவால்.

பதவியேற்ற முதல் நாளிலேயே நிதி, மின்சாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய கெஜ்ரிவால், அதிரடி மின்கட்டண குறைப்பு, இலவச குடிநீர் திட்டம், வீடு இல்லாதவர்கள் பயன்படுத்த பழுதடைந்த பஸ்கள், ஊழலை ஒழிக்க கடுமையான நடவடிக்கை என இவரது நடவடிக்கைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டெல்லி காவல்துறையை கண்டித்து, கெஜ்ரிவால் போராட்டம் நடத்த அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸை கோபப்படுத்தியது.

இந்த சூழலில் டெல்லி சட்டமன்றத்தில் ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முயன்றார் கெஜ்ரிவால். மொத்தமுள்ளா 60 பேரில், 47 பேர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, போதிய ஆதரவு கிடைக்காமல், தீர்மானம் தோல்வியை தழுவியது. இதையடுத்து ஜன்லோக்பால் மசோதாவை காரணம் காட்டியே, ஆட்சி அமைத்து 49 நாட்களில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால். தொடர்ந்து, 2014ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், வாரணாசி தொகுதியில், பி.ஜே.பி.யின் பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட்ட கெஜ்ரிவால் அங்கு தோல்வியை தழுவினார்.

டெல்லியில் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததையடுத்து, யாரும் ஆட்சி அமைக்க முன்வரவில்லை. இதையடுத்து ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. டெல்லியில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க மறுக்கவே, சட்டசபையை கலைத்து விட்டு மீண்டும் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆம் ஆத்மியின் சார்பில் இந்த தேர்தலில் மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் அரவிந்த் கெஜ்ரிவால். நாடாளுமன்ற தேர்தல், சில மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களில் வென்ற தன்னம்பிக்கையில், மோடி அலை, மோடி மேஜிக் என களமிறங்கிய பி.ஜே.பி, முதல்வர் வேட்பாளராக ஆம் ஆத்மியில் இருந்து விலகிய, முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண் பேடியை அறிவித்தது.

தேர்தலில் ஆம் ஆத்மி - பி.ஜே.பி.யிடையே கடும் போட்டி நிலவும் என்பன போன்ற கருத்துகள்தான் கருத்து கணிப்பில் வெளியானது. இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், மோடி... மோடி... என வாய் வலிக்க வலிக்கப் பேசிய பி.ஜே.பி.யினருக்கு சரியான அடி கொடுத்துள்ளனர் டெல்லி மக்கள். காங்கிரஸ், பி.ஜே.பி.யின் முதல்வர் வேட்பாளர்கள் உட்பட அனைவரும் தோற்க, போட்டியிட்ட 70 இடங்களில், 67 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. கிரண்பேடி உட்பட முக்கிய நிர்வாகிகள் பலரும் தோல்வியை தழுவ, வெறும் 3 பேர் மட்டுமே பி.ஜே.பியின் தரப்பில் வெற்றி பெற்றுள்ளனர். மறுபுறம் காங்கிரசை முழுமையாக துடைத்தெறிந்து விட்டனர் டெல்லி மக்கள்.

95 சதவீத இடங்களில், வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகிறார் கெஜ்ரிவால். நிச்சயம் இது வரலாறு காணாத தேர்தல் வெற்றிதான். 49 நாட்களில் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தபோது, அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தனக்கு வாக்களித்த மக்களைப்பற்றி கவலைப்படாமல் இருப்பதா? என பெரும் கேள்வியும் எழுந்தது. ஆனால் இவற்றை எல்லாம் மீறி 95 சதவீத இடங்களை ஆம் ஆத்மிக்கு வழங்கி, கெஜ்ரிவாலை மீண்டும் முதல்வராக்கியுள்ளனர் டெல்லி மக்கள். அதுவும் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு அனுப்பியுள்ளது என்பது மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

இளம் முதல்வர் என அடையாளத்துடனும், பெருமையுடனும் இரண்டாவது முறை டெல்லியின் முதல்வராக பதவியேற்கும் கெஜ்ரிவால், தேர்தலுக்கு பின்னால் பல முக்கிய சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. மக்களை பற்றி கவலைப்படாமல் ராஜினாமா செய்தவர் என்ற இமேஜை உடைக்க 5 ஆண்டுகள் அவர் எந்த சிக்கலும் இல்லாமல் பதவியை தொடர வேண்டியது அவசியம். "மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை மக்கள் ஏற்படுத்தித் தந்தால், தொடர்ந்து 5 ஆண்டுகள் பதவியில் இருப்பேன், இடையில் ஓட மாட்டேன்' என சத்தியம் செய்யாத குறையாக அரவிந்த் கெஜ்ரிவால் சொன்னதை, அப்படியே நடத்தி காட்ட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

அடுத்து ஜன்லோக்பால் சட்டத்தை நிறைவேற்றுவது, மின் கட்டணத்தை குறைப்பது, இலவச தண்ணீர் போன்ற ஏற்கனவே கொடுக்கப்பட்ட உறுதிமொழிகளை செயல்படுத்த வேண்டிய கட்டாயமும், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர வேண்டிய கட்டாயமும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உள்ளது. மக்கள் கெஜ்ரிவாலிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள் என்பது 95 சதவீத இடங்களில் வெற்றி பெற வைத்ததன் மூலம் மக்கள் உணர்த்தி விட்டார்கள். 

இனி மக்களின் ஆதரவை நிலை நிறுத்திக்கொள்ள அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய மிகப்பெரிய சவால் கெஜ்ரிவாலின் முன் இருக்கிறது.