இலங்கையில் ராஜபக்சே அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க தனக்கு 5 கோடி ரூபாய் லஞ்சம் தரப்பட்டதாக நடிகையும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுவர்ணமாலி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி மூலம் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சுவர்ணமாலி. பிரபல சிங்கள சினிமா நடிகையும், கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பபா என்றழைக்கப்படும் சுவர்ணமாலி, அண்மையில் காவல்துறையினருக்கு அளித்த வாக்குமூலத்தின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் என, இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
தன் கணவனால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையில் அவரிடம் வாக்குமூலம் பெறச் சென்றிருந்த பெண் காவலரிடம் அரசாங்கத்தால் தனக்கு லஞ்சம் வழங்கப்பட்ட விஷயத்தை அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மூலம் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தனது ஆதரவை ஆளுங்கட்சிக்குப் பெற்றுக் கொள்வதற்காக தனது கணவனுக்கு ஐந்து கோடி பணமும், விலைமதிப்புள்ள காரொன்றும் லஞ்சமாக வழங்கப்பட்டதாகவும், தனது கணவனின் நெருக்குதல் காரணமாகவே தான் ஆளுங்கட்சிக்கு ஆதரவளிக்க முன் வந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் என, இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

No comments:
Post a Comment