வரும் சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதி திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒவ்வொன்றுக்கும் எத்தனை எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற விவரத்தை அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 13-ந்தேதி நடைபெற உள்ள நிலையில் தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. (31), விடுதலை சிறுத்தைகள் (10), கொங்குநாடு முன்னேற்றக்கழகம் (7), முஸ்லிம் லீக் (3), மூவேந்தர் முன்னேற்றக் கழகம் (1) ஆகிய கட்சிகளுக்கு 52 இடங்கள் கொடுக்கப்பட்டுவிட்டதால் மீதம் உள்ள 182 தொகுதிகளில் 60 இடங்களை மட்டுமே காங்கிரசுக் தரமுடியும் என்று தி.மு.க. உறுதியாக கூறிவிட்டது.
இதனால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் மேற்கொண்டு எதுவும் பேசாமல் இருந்தனர். தி.மு.க. காங்கிரஸ் தலைவர்கள் யாரும் தொகுதி பங்கீடு குறித்து உறுதியான தகவலைத் தெரிவிக்கவில்லை. எனவே தி.மு.க. காங்கிரஸ் பேச்சுவார்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.
இந்நிலையில் இரண்டாம் நாளாக இன்று டெல்லியில் சோனியாகாந்தி வீட்டில் பிற்பகல் பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில் தி-.மு.க. சார்பாக மு.க. அழகிரி மற்றும் தயாநிதிமாறனும் காங்கிரஸ் சார்பாக பிரணாப் முகர்ஜி, அகமது பட்டேல் மற்றும் குலாம் நபி ஆசாத் கலந்து கொண்டனர். இப்பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டதாகவும், காங்கிரசுக்கு 63 தொகுதிகள் ஒதுக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் ஆலோசனைக்குப்பிறகு டெல்லியில் குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
காங்கிரசுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகுதிகளை விட மூன்று தொகுதிகள் தி.மு.க. அதிகமாக ஒதுக்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. (1), முஸ்லீம் லீக் (1) தொகுதிகளை விட்டுத்தர விருப்பம் தெரிவித்தன.
இந்நிலையில் கருணாநிதி திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒவ்வொன்றுக்கும் எத்தனை எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற விவரத்தை அறிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு.
திமுக : 121தொகுதிகளிலும்
காங்கிரஸ் கட்சி : 63தொகுதிகளிலும்
பாட்டாளி மக்கள் கட்சி : 30தொகுதிகளிலும்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி : 10 தொகுதிகளிலும்
கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் : 7 தொகுதிகளிலும்
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் : 2 தொகுதிகளிலும்
மூவேந்தர் முன்னேற்றக் கழகம் : ஒரு தொகுதியிலும்
- போட்டியிடும் என திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

No comments:
Post a Comment