நடிகர் ரஜினிகாந்த் இன்று பகல் 10.45 மணிக்கு ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வாக்கு சாவடிக்கு காரில் வந்தார். அந்த கல்லூரி வளாகத்தில் வேறு, வேறு இடங்களில் 3 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 167, 168, 169 ஆகிய எண் கொண்ட அந்த மூன்று வாக்குச்சாவடிகளும் பொது வாக்குச்சாவடிகளாகும். நடிகர் ரஜினி வாக்களிக்க வேண்டிய ஓட்டுச்சாவடி 169-வது எண் ஓட்டுச்சாவடி யாகும். இது ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி போர்டிகோ பகுதியில் இருந்தது.
ரஜினியின் காரும் மிகச்சரியாக அந்த வாக்குச்சாவடி அருகில் வந்து நின்றது. கருப்பு பேண்ட், ப்ளு கலர் சட்டை, கூலிங் கிளாஸ் அணிந்து வந்திருந்த ரஜினி அந்த ஓட்டுச்சாவடிக்குள் செல்ல முயன்றபோது திடீரென அவரை, அவருடன் வந்தவர்கள் வேறு பகுதிக்கு அழைத்துச் சென்று விட்டனர்.
கல்லூரிக்குள் நுழைந்து விட்ட ரஜினி அங்கு ஓட்டுச் சாவடி இல்லாததால் திரும்பினார். இதையடுத்து அவரை 167-வது ஓட்டுச்சாவடிக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த தேர்தல் அதிகாரிகள், உங்கள் பெயர் 169-வது வாக்குச்சாவடியில் உள்ளது. அது எதிர்புறம் உள்ளது. அங்கு செல்லுங்கள் என்றனர்.
இதையடுத்து ரஜினி அங்கிருந்து நடந்தே 169-வது வாக்குச்சாவடிக்கு வந்தார். அலைக்கழிக்கப்பட்ட அவர் விறுவிறுவென உள்ளே சென்றார். ரஜினி ஓட்டுப்போடுவதை படம் பிடிக்க தொலைக் காட்சி, பத்திரிகை போட்டோ கிராபர்கள் நூற்றுக்கும் மேல் திரண்டிருந்தனர். இதனால் ரஜினி சற்று சிரமத்துக்குள்ளானார். மின்னல் வேகத்தில் வாக்களித்த அவர் அதே வேகத்தில் புறப்பட்டார். அவரிடம் தேர்தல் தொடர்பாக கருத்து கேட்க நிருபர்கள் பின் தொடர்ந்து சென்றனர். ஆனால் ரஜினி நிருபர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் வணக்கம் தெரிவித்து விட்டு புறப்பட்டுச் சென்றார்.
ரஜினி வீட்டுக்கு சென்று சேர்ந்ததும் ஒரு தொலைக் காட்சிக்கு பேட்டி அளித்தார். தேர்தலில் எதை மையமாக கருதுகிறீர்கள் என்று நிருபர் கேட்டதற்கு ரஜினி கூறியதாவது:-
தேர்தலில் விலைவாசி உயர்வு உள்பட பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. பொதுவாக நிலையான அரசும், மக்கள் நல அரசும் அமைய வேண்டும் என்று விரும்புகிறேன்.
இவ்வாறு ரஜினி கூறினார்.

No comments:
Post a Comment