*
கங்கை நதி மாசுபடுவதில் இருந்து காப்பதற்காக காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கி, ஏறத்தாழ இரண்டரை மாதங்கள் போராட்டம் மேற்கொண்டிருந்த சுவாமி நிகாமானந்த் என்ற சாது, டேராடூனில் உள்ள ஹிமாலயன் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனிறி உயிரிழந்தார்.
இவருக்கு ஊடகங்கள் உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் இந்திய இணையவாசிகள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
*
தமிழகத்தில் ஒன்று மற்றும் ஆறாவது வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி தொடர உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
ஏனைய வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகளை அளிக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிபுணர் குழு, ஒன்று மற்றும் ஆறாவது வகுப்புகளைத் தவிர ஏனைய வகுப்புகளுக்கான சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை ஆராய்ந்து, 2 வாரங்களுக்குள் ஆய்வறிக்கையை தயாரித்து, அதனை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்.
சமச்சீர் கல்வி தொடர்பான ஆய்வறிக்கையை இந்த நிபுணர் குழு தாக்கல் செய்த ஒரு வாரத்தில், அதன் மீது சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், நிபுணர் குழு அறிக்கை மீது உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை 2,3,4,5,7,8,9,10 ஆகிய வகுப்புகளுக்கு பாடம் நடத்த வேண்டாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், ஒன்று மற்றும் ஆறாவது வகுப்பைத் தவிர ஏனைய வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படுமா என்பது தெரிய வர, இன்னும் மூன்று வாரங்கள் ஆகும் என்பது தெளிவாகியுள்ளது.
*
தமிழக முதல்வர் ஜெயலலிதா டெல்லியில் செவ்வாய்க்கிழமை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பு குறித்து நிருபர்களிடம் அவர் கூறுகையில், தமிழக அரசின் கோரிக்கைகளுக்கு உதவுவதாக பிரதமர் உறுதியளித்ததாகவும், தாம் கோரியபடி, மத்திய மின் தொகுதிப்பில் தமிழகத்துக்கு 1000 மெகாவாட் மின்சாரம் வழங்க அவர் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை என்ற அவர், நல்லுறவை பராமரிக்கவே விரும்புவதாக குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பின் போது, இலங்கை அரசு மீது இந்தியா பொருளாதரத் தடை விதிக்க வேண்டும் என்றும், இலங்கையின் போர்க்குற்றம் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பிரதமரிடம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.
2ஜி ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ள தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பதவி விலக வேண்டும் என்ற முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2009 மக்களவைத் தேர்தலில் முறைகேடுகளை அரங்கேற்றியதால் வெற்றி பெற்ற ப.சிதம்பரமும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தன்னைப் பற்றி தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறிய கருத்து, நீதிமன்ற அவமதிப்பு விஷயம் என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
*
டெராடூன் மருத்துவமனையில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை டிஸ்சார்ஜ் ஆன பாபா ராம்தேவ், கறுப்பு பணத்துக்கு எதிரான தமது போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளார்.
*
எம்.பி.பி.எஸ். படிப்புக்கான மருத்துவ கவுன்சிலிங், திட்டமிட்டபடி 30-ம் தேதி நடைபெறுகிறது என்றும், முன்னதாக, 21-ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தமிழக சுகாதார அமைச்சர் வி.எஸ்.விஜய் தெரிவித்துள்ளார்.
*
ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்றப் பொதுக் குழுவின் விசாரணை அறிக்கையை மக்களவைத் தலைவர் நிராகரித்துள்ளார்.
*
மும்பை பங்குச்சந்தையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் நிறைவடைந்தபோது, சென்செக்ஸ் 42 புள்ளிகள் ஏற்றம் கண்டிருந்தன. நிஃப்டி 17 புள்ளிகள் உயர்ந்திருந்தன.
*
சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2,098 ரூபாயாக இருந்தது.

No comments:
Post a Comment