ஈரோடு மாவட்ட கலெக்டராக கடந்த சில தினங்களுக்கு முன் பொறுப்பேற்றவர் அனந்தகுமார். இதற்கு முன் அவர் தர்மபுரி மாவட்ட கலெக்டராக பணிபுரிந்தார். ஈரோடு மாவட்ட கலெக்டருக்கு ஸ்ரீவித்யா என்ற மனைவியும், கோபிகா, தீபிகா என்ற 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
ஸ்ரீவித்யா தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிகிறார். மூத்த மகள் கோபிகா தர்மபுரியில் ஒரு மெட்ரிக் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்தாள். தற்போது அவளை ஈரோடு பள்ளியில் கலெக்டர் அனந்குமார் சேர்த்துள்ளார். பணக்காரர்களின் குழந்தைகள் படிக்கும் பெரிய தனியார் பள்ளிகளில் சேர்க்கவில்லை.
ஈரோடு குமலன்குட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் இன்று தனது மகளை 1-ம் வகுப்பில் கலெக்டர் சேர்த்தார். இன்று (புதன்கிழமை) காலை அவர் குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மகளுடன் சென்றார். கலெக்டர் பள்ளிக்கு வந்ததை கண்டு அப்பள்ளி தலைமை ஆசிரியர் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தார்.
மற்ற ஆசிரியர்-ஆசிரியைகளும் அங்கு வந்தனர். அவர்கள் கலெக்டரை வரவேற்றனர். என் மகளை இந்த பள்ளியில் 1-ம் வகுப்பில் சேர்க்கிறேன் என்று கலெக்டர் அனந்தகுமார் கூறியதும் ஒரு கனம் தலைமை ஆசிரியரால் எதுவும் பேச முடியவில்லை. பிறகு அவர் கலெக்டரை தான் அமரும் இருக்கையில் அமரச் சொன்னார். ஆனால் அதில் உட்கார மறுத்த கலெக்டர், பெற்றோர் அமரும் இருக்கையில் அமர்ந்து தனது மகள் கோபிகாவை 1-ம் வகுப்பில் சேர்த்தார்.
பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். சாதாரண கூலி தொழிலாளி கூட தங்களது குழந்தைகளை ஆங்கில அறிவு கிடைக்க மெட்ரிக் பள்ளிகளிலும் பெரும் பணக்காரர்களின் குழந்தைகள் படிக்கும் பிரபலமான தனியார் பள்ளிகளிலும் சேர்க்கும் இந்த காலத்தில் மாவட்ட கலெக்டர் ஒருவர் தனது மகளை ஏழை குழந்தைகள் படிக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்த்ததை மக்கள் ஆச்சரியத்துடன் பேசிக் கொண்டனர்

No comments:
Post a Comment