படத்தை எடுப்பது பெரிசல்ல, அதை தியேட்டருக்கு கொண்டு சேர்ப்பதற்குள் பஞ்சு பொதியை முதுகில் சுமந்த கழுதை தண்ணீருக்குள் தவறி விழுந்த நிலைக்கு ஆளாகிவிடுகிறார்கள் அநேக தயாரிப்பாளர்கள். அப்படிப்பட்ட இக்கட்டில் விக்ரம் நடிக்கும் படத்தை தயாரித்த மோகன் நடராஜனும் சிக்கிக் கொண்டதுதான் வேதனை. ஒருபுறம் இப்படத்தின் தலைப்பை குறிவைத்து பிரச்சனையை ஆரம்பித்தது ஒரு கும்பல். எப்படியோ தெய்வ திருமகள் என்று தலைப்பை மாற்றி ரிலீசுக்கு தயாரானார்.
அந்த நேரத்தில்தான் இன்னொரு சிக்கல். ஏகப்பட்ட கோடிகளை விழுங்கிய இப்படம், விக்ரம் நடித்த மனவளர்ச்சி குன்றிய இளைஞன் கேரக்டருக்காகவே வியாபார சுணக்கம் காட்டியது. அவருக்கு ஆக்ஷன் படங்கள்தான் எடுபடும். காசி மாதிரியோ, பிதாமகன் மாதிரியோ நடிச்சது போதும் என்றார்களாம் விநியோகஸ்தர்கள். இப்படிப்பட்ட கருத்து கந்தசாமிகளையும் மீறி இந்தப்படம் விக்ரமுக்கும் தயாரிப்பாளருக்கும் பெரிய புகழையும் பணத்தையும் வாரிக் கொட்டப் போகிறது என்றும் கணிக்கிறார்கள் இதே திரையுலகத்தில்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் படத்தின் வெளியீட்டு தேதியை சரிவர முடிவு செய்ய முடியாமல் தவித்த தயாரிப்பாளருக்கு லட்டு போல கிடைத்தது ஒரு முன்னணி நிறுவனம்.
பிரபல விநியோக நிறுவனமான யூ டிவியே இந்த படத்தை வெளியிட முன் வந்திருக்கிறதாம். இன்னும் சில வாரங்களில் தெய்வ திருமகள் தியேட்டருக்கு வந்துவிடுவாள் என்று உறுதியாக நம்பலாம் விக்ரமின் ரசிகர்கள்!

No comments:
Post a Comment