யோகா குரு பாபா ராம்தேவ், ஊழல் மற்றும் கறுப்புப் பணத்துக்கு எதிராகவும், வலுவான லோக்பால் மசோதா கோரியும், டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் 3 நாள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார்.
நேற்று மாலையுடன் இந்த போராட்டம் முடிவடைவதாக இருந்தது. கறுப்புப்பணம் பிரச்சினையில், மத்திய அரசு மேற்கொள்ளும் கொள்கை திட்டம் குறித்து போராட்டம் முடிவடைவதற்கு முன்பு அறிவிக்க வேண்டும் என்று, ராம்தேவ் கெடு விதித்து இருந்தார். அதற்கான திட்டத்தை மத்திய அரசு அறிவிக்காவிட்டால், மிகப்பெரிய போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும் என்று, அவர் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
இந்த போராட்டத்தை தொடர்ந்து, கறுப்பு பணத்தை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை மட்டுமே மத்திய அரசு பட்டியலிட்டு அறிவிப்பு வெளியிட்டது.
கறுப்பு பணத்தை முழுமையாக மீட்பதற்கான திட்டம் எதையும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில் போராட்டத்தின் 3-வது நாளான நேற்று ராம்தேவ் தனது முக்கிய உதவியாளர்களுடன் அடுத்த கட்ட போராட்டம் குறித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.
அதன்பின் ராம்லீலா மைதானத்தில் கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசிய ராம்தேவ், தன்னுடைய போராட்ட அறிவிப்பை ஒரு நாள் தள்ளி வைப்பதாக அறிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-
நாடு முழுவதும் நடத்தப்பட இருக்கும் பெரிய புரட்சி பற்றிய அறிவிப்பு நாளை (அதாவது இன்று) வெளியிடப்படும். அரசின் முடிவுக்கு இன்று மாலை வரை காத்திருப்போம். அதன்பின் இந்த ராம்லீலா மைதானத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற உள்ளன. எங்கள் இயக்கத்தில் சேர்ந்து வரும் இளைஞர்கள் மூலம் போராட்டம் புதிய கோணத்தில் நடைபெறும்.
இவ்வாறு ராம்தேவ் கூறினார்.
இன்று (ஞாயிறு) வரை அவருடைய உண்ணாவிரதம் நீடிக்குமா? என்பது குறித்து எந்த தகவலையும் ராம்தேவ் தெரிவிக்கவில்லை.
தலைமை ராணுவ தளபதி பதவியில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற வி.கே.சிங் நேற்று மாலை உண்ணாவிரத மேடையில் பேசினார். இன்று நடைபெற இருக்கும் போராட்டத்தில் ராம்தேவுடன் இணைந்து பங்கேற்க இருப்பதாக அப்போது அவர் அறிவித்தார்.
ராம்தேவின் உண்ணாவிரத போராட்டத்தின் முதல் நாளில் 20 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அடுத்த இரண்டு நாட்களில் கூட்டம் சற்று குறைந்து காணப்பட்டது. நேற்று ஏறத்தாழ 10 ஆயிரம் பேர் பங்கேற்றனர். முன்னதாக நேற்று மத்தியானம் பேசிய ராம்தேவ், ஊழலுக்கு எதிரான தனது போராட்டம் மேலும் தீவிரம் அடையும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
எனது கெடு முடிந்ததும், இந்த மைதானத்தில் இருந்து கர்ஜனை எழும் என்று குறிப்பிட்ட அவர், இனி இந்த நாட்டை கொள்ளையடித்த கறுப்புப்பண முதலைகளின் பட்டியலை கையில் எடுத்து போராடுவோம் என்றும் அறிவித்தார்.
நாடு முழுவதும் 225 எம்.பி.க்கள் மற்றும் 1.25 லட்சம் கிராம சபாக்களில் இருந்து பெற்ற ஆதரவு கடிதங்களுடன் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து கறுப்பு பணப்பிரச்சினையில் மனு கொடுக்க இருப்பதாகவும் ராம்தேவ் அறிவித்து இருந்தார்.
சுதந்திர தினவிழாவின் போது நேர்மையான ஒருவர் மூவர்ணக் கொடியை ஏற்றினால்தான் இந்தியாவின் கவுரவம் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், நேற்று மாலையில் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் போராட்டம் பற்றி சரியாக செய்தி வெளியிடவில்லை என்று கூறி, சில பத்திரிகையாளர்களை ராம்தேவ் ஆதரவாளர்கள் கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளினார்கள். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக நேற்று மத்தியானம் பெய்த மழையினால், மைதானத்தில் பெண்கள் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த கூடாரம் சரிந்து விழுந்தது. அந்த பகுதியில் இருந்தவர்கள், மைதானத்தின் அடுத்த பகுதிக்கு சென்று அமர்ந்தனர்.

No comments:
Post a Comment