புதுச்சேரியில் போலீஸ் வாகனம் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் ரவுடி கொல்லப்பட்டான். 3 போலீசார் காயமடைந்தனர்.
புதுச்சேரி முதலியார்பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜெயக்குமார் கடந்த 2002-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். முதலியார்பேட்டை காவல் நிலையத்திற்குள் நடந்த இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
காவல்துறைக்கு சவால் விடும் வகையில், காவல் நிலையத்திலேயே நடந்த இந்த கொலை தொடர்பாக பிரபல ரவுடி ஜெகன் கைது செய்யப்பட்டு புதுச்சேரி சிறையில் அடைத்தனர்.
ஆனால் ஜெயக்குமார் கொலைக்கு பழிவாங்கத் துடித்த அவனது ஆதரவாளர்கள், ஜெகனை கோர்ட்டு வாசலில் தீர்த்துக் கட்ட திட்டமிட்டனர். இதனால் போலீசார், பாதுகாப்பு கருதி ஜெகனை காரைக்கால் சிறைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்தாலும் ஜெகன் தனது ரவுடித் தொழிலை புதுச்சேரியில் தொடர்ந்து நடத்தி வந்தான். சமீபத்தில் கூட மாமூல் கேட்டு மிரட்டிய அவனது அடியாட்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இன்று ஒரு விசாரணைக்காக காரைக்கால் சிறையில் இருந்து ஜெகன் புதுவைக்கு அழைத்து வரப்பட்டான். பின்னர் உருளையன்பேட்டை காவல் நிலையத்திலிருந்து அவனை அரியாங்குப்பத்திற்கு விசாரணைக்காக தனி வேனில் போலீசார் அழைத்துச் சென்றனர். சுண்ணாம்பாறு பாலம் மீது சென்றபோது, போலீஸ் வேன் மீது மர்ம நபர்கள் சரமாரியாக வெடிகுண்டுகளை வீசி தாக்கினர்.
இதில் ரவுடி ஜெகன் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி இறந்தான். போலீஸ்காரர்கள் 3 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தால் புதுச்சேரியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

No comments:
Post a Comment