தமிழக மீனவர்கள் சிலர் ஒப்பந்த அடிப்படையில் துபாய் கடல் பகுதியில் மீன்பிடிக்க அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். கடந்த மாதம் 16-ந்தேதி துபாயின் ஜபேல்அலி துறைமுகம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அந்த வழியாக அமெரிக்க கடற்படையின் 5-வது படை பிரிவுக்கு எரிபொருள் சப்ளை செய்வதற்காக யு.எஸ்.என்.எஸ். ரப்பாஹன்னோக் என்ற கப்பல் சென்று கொண்டிருந்தது.
அந்த கப்பலில் இருந்த வீரர்கள் திடீரென தமிழக மீனவர்களின் மீன்பிடி கப்பல் தங்களை நோக்கி வருவதாக எச்சரித்தனர். பிறகு படகை நோக்கி சுட்டனர். இதில் தமிழக மீனவர் சேகர் (வயது 27) குண்டு பாய்ந்து பலியானார்.
படகில் இருந்த முத்து கண்ணன், முருகன் மற்றும் முத்து முனிராஜ் ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்தது. உடனடியாக அவர்கள் துபாய் நாட்டு அரசுடன் தொடர்பு கொண்டு பேசினார்கள்.
துப்பாக்கி சூடு நடத்திய அமெரிக்க கப்பல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி கேட்டுக் கொண்டனர். துபாய் அரசு அதை ஏற்றுக் கொண்டது. தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக அமெரிக்காவுடனும் இந்திய அதிகாரிகள் தொடர்பு கொண்டு கண்டனம் தெரிவித்தனர். அதற்கு அமெரிக்க கடற்படை, எச்சரிக்கையை மீறி கப்பல் அருகே படகு நெருங்கி வந்ததால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில் சுடப்பட்டு இறந்தவர் குடும்பத்துக்கும் காயமடைந்தவர் குடும்பத்திற்கும் நிவாரணம் வழங்குவது குறித்து செய்தி வந்திருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் சையத் அக்பருதீன் கூறினார்.
இவ்விசாரணையில் அமெரிக்கா ஒரு தலைபட்சமாக செயல்படாது. மேலும் மனிதாபிமான முறையில் நடந்துகொள்ளும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மரணமடைந்த சேகர் குடும்பத்திற்கு ஐந்து லட்ச ரூபாயும், காயமடைந்த மூன்று பேருக்கும் தலா ஐம்பதாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க தமிழக அரசுடன் அமெரிக்க தூதரகத்தினர் விவாதித்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.

No comments:
Post a Comment