தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு 63 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய ஒப்புக் கொள்ளப்பட்டதை அடுத்து, திமுக கூட்டணியில் கடந்த நில நாட்களாக நிலவி வந்த 'சிக்கல்'கள் செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்தது.
பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சிக்கு எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 60 இடங்களை தி.மு.க. ஒப்புக் கொண்டது. ஆனால், அக்கட்சி 63 இடங்கள் கேட்டதுடன், போட்டியிடும் தொகுதிகளைத் தாங்களே தீர்மானிப்போம் என்று நிபந்தனை விதித்தது.
இதன் தொடர்ச்சியாக, சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள முடிவு செய்து, மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுவில் சனிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேவேளையில், மன்மோகன் அரசுக்கு பிரச்னையில் அடிப்படையில் ஆதரவு அளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து 24 மணி நேரம் திமுகவை எவ்வித தொடர்பும் கொள்ளாதிருந்த தமது கருத்தைக் கூட அவர்களிடம் வெளியிடாமல் இருந்து வந்தனர்.
பின்னர், ஏற்கெனவே திட்டமிட்டபடி திமுக அமைச்சர்கள் 6 பேர் திங்கட்கிழமை பிரதமரைச் சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதத்தை அளிப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், பிரதமர் நேரம் ஒதுக்காததால் ராஜினாமா அளிப்பது திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டது.
பிரணாப்பின் முக்கிய 'ரோல்'!
இதனிடையே, காங்கிரஸ் - திமுக இடையே சமரசம் ஏற்படுவதற்கு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி முயற்சி மேற்கொண்டார்.
முதலில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மூலமாக முதல்வர் கருணாநிதிக்கு தகவல் அனுப்பிய அவர், திமுகவின் முடிவை மறுபரிசீலனைச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
அந்தச் சூழலில், திமுக அமைச்சர்கள் மு.க.அழகிரி (மத்திய ரசாயனம் மற்றும் உர அமைச்சர்), தயாநிதி மாறன் ( மத்திய ஜவுளித்துறை அமைச்சர்), எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (நிதித்துறை இணையமைச்சர்), டி.நெப்போலியன் (சமூக நீதி அமலாக்கம் இணையமைச்சர்), எஸ்.ஜெகத்ரட்சகன் (தகவல், ஒலிபரப்புத் துறை இணையமைச்சர்) மற்றும் காந்தி செல்வன் (சுகாதாரம், குடும்பநலத்துறை இணையமைச்சர்) ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதற்காக டெல்லியில் முகாம் இட்டனர்.
பின்னர், முதல்வர் கருணாநிதியுடன் வெள்ளிக்கிழமை இரண்டு முறை தொலைபேசியில் பேச்சு நடத்தினார், பிரணாப்.
இதன் தொடர்ச்சியாக, தற்போது பிரணாப் முகர்ஜி கேட்டுக் கொண்டதற்கிணங்க, திமுக மத்திய அமைச்சர்களின் ராஜினாமா ஒருநாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று துணை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
கூட்டணிப் பேச்சில் முன்னேற்றம் ஏற்படும் அம்சமாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அமைச்சர்கள் அழகிரியும் தயாநிதியும் சந்திப்புப் பேசினர்.
நீடித்த இழுபறி..
அதன் தொடர்ச்சியாக, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் திமுக மத்திய அமைச்சர்கள் இன்று பேச்சு நடத்திய நிலையிலும், திமுக - காங்கிரஸ் இடையில் கூட்டணி தொடருமா என்ற குழப்பம் நீடித்தது.
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை, திமுக அமைச்சர்கள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன் மற்றும் பழனி மாணிக்கம் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
எனினும், இப்பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என இரு கட்சிகளின் வட்டாரங்களும் தெரிவித்தன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில், அமைச்சரவையில் இருந்து விலகுவதாக திமுக தீர்மானம் நிறைவேற்றதில் தனது கடுமையான அதிருப்தியை திமுக தலைமையிடம் சோனியா காந்தி வெளிப்படுத்தியுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறின.
கனிமொழி கொண்டு சென்ற செய்தி...
இந்த நிலையில், திமுக மாநிலங்களை உறுப்பினர் கனிமொழி இன்று டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டார்.
முதல்வர் கருணாநிதியிடம் இருந்து தாம் பெற்றுச் சென்ற தகவலை, காங்கிரஸ் தலைமையிடம் கனிமொழி கொண்டு சேர்த்ததாக தெரிகிறது.
டெல்லிக்கு கனிமொழி வந்த பிறகு, பிரணாப் முகர்ஜியை தயாநிதி மாறன் மீண்டும் சந்தித்துப் பேசினார். அப்போது, சோனியா காந்தியின் அரசியல் செயலர் அகமது படேலும் அருகில் இருந்தார்.
பின்னர், காங்கிரஸ் கோரியபடியே 63 தொகுதிகள் ஒதுக்குவதாக, திமுக ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, தொகுதிப் பங்கீட்டுச் சிக்கல் அனைத்தும் முடிவுக்கு வந்தது.

No comments:
Post a Comment