அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், 10.03.2011 அன்று திருநெல்வேலி மாவட்டம், பாவூர் சத்திரம், வட்டார நாடார் சங்கத் தலைவர் ஆர்.கே. காளிதாசன் உள்ளிட்டோருடன் பிற்பகல் 3.30 மணியளவில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டுக்குச் சென்று தொகுதிப் பங்கீடு தொடர்பாக அவருடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிகழ்வின் போது, அதிமுக பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார் அதிமுக கூட்டணியில் தங்களுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் உயர்மட்டக் குழுவின் உறுப்பினர் நெல்லை நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பெருந்தலைவர் மக்கள் கட்சியின் உயர்மட்டக் குழுவின் கூட்டம் வியாழக்கிழமை (10.03.2011) அன்று மாலை 6 மணிக்கு சென்னையில் நடைபெற்றது. பெருந்தலைவர் மக்கள் கட்சின் தலைவராக இருந்த ஆர்.சரத்குமார் இரண்டு நாட்கள் எங்கள் கூட்டணியில் கலந்துகொண்டு கூடவே இருந்து இப்போது தன்னிச்சையாக உயர்மட்டக் குழுவின் அனுமதி இல்லாமல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் அவர் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கப்படுகிறார்.
இனி அவருக்கும் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கும் எந்தவித சம்பந்தமும் தொடர்பும் கிடையாது. பெருந்தலைவர் மக்கள் கட்சி தனது அரசியல் மற்றும் சமுதாய பணியை தொடர்ந்து செய்யும். உயர்மட்டக்குழுவும், தமிழகத்தில் உள்ள அனைத்து நாடார் சங்கங்கள், உறவின்முறை சங்கங்களும் ஒன்று சேர்ந்து இரண்டொரு நாளில் அரசியல் தொடர்பான முடிவுகளை அறிவிக்கும். இவ்வாறு உயர்மட்டக் குழு உறுப்பினர் நெல்லை நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment