அ.தி.மு.க.வின் தீவிர தொண்டர் வடிவேலு. இவரை சைக்கிள் வடிவேலு என்றால்தான் அ.தி.மு.க.வினருக்கு தெரியும். வடிவேலுவின் சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு. புரோட்டா கடையில் மாஸ்டராக வேலை பார்க்கிறார்.
கடந்த 20 வருடமாக ஒவ்வொரு தேர்தலிலும் வித்தியாசமான முறையில் பிரசாரம் செய்து வருகிறார். இந்த தேர்தலிலும் பிரசாரத்துக்கு தயாராகி விட்டார்.
இவரது ஏழ்மை நிலையை அறிந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவருக்கு ஆட்டோ வாங்கி கொடுத்தார். அந்த ஆட்டோவில் இப்போது தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெற்று விட்டு பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக ஆட்டோவுடன் தலைமைக்கழகம் வந்துள்ளார்.
இதுபற்றி சைக்கிள் வடிவேலு கூறியதாவது, நான் 7 வயதாக இருக்கும் போதே எம்.ஜி.ஆரால் ஈர்க்கப்பட்டேன். எனது தந்தை சின்னசாமியும் எம்.ஜி.ஆர். விசுவாசி. எம்.ஜி.ஆரின் பொதுக்கூட்டங்களுக்கு செல்லும்போது என்னையும் அழைத்துச் செல்வார். எம்.ஜி.ஆரை கூட்டத்தில் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்.
நாம் எப்போதும் எம்.ஜி.ஆருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று தந்தை சொன்னார். 18 வயது முதல் அ.தி.மு.க. வில் இருந்து வருகிறேன். கட்சிக்கு நம்மால் முடிந்த ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்து சைக்கிளில் பிரசாரம் செய்ய தொடங்கினேன். வீட்டில் உள்ள எம்.ஜி.ஆர். படத்துக்கு மாலை போட்டு விளக்கேற்றி வழிபட்ட பின்புதான் வெளியே கிளம்புவேன்.
தமிழ்நாடு முழுவதும் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சைக்கிளிலேயே சென்று பிரசாரம் செய்துள்ளேன். 2 முறைதான் என்னால் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய முடிந்தது. அதற்கு மேல் நேரம் இல்லை. தற்போது 20 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளேன். சென்னையில் பிரசாரம் செய்ய போலீஸ் கமிஷனரிடம் அனுமதி கேட்டு மனு கொடுத்துள்ளேன் என்றார்.

No comments:
Post a Comment