கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முரசு சின்னத்தில் போட்டியிட்ட தேமுதிக (தேசிய முற்போக்கு திராவிட கழகம்) வரும் சட்டமன்ற தேர்தலிலும் தங்களுக்கு அதே சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் இன்று பதில் அளித்த தேர்தல் ஆணையம், நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும், டெபாசிட் எனப்படும் வைப்புத்தொகையை இழந்த கட்சிக்கு தனி சின்னம் ஒதுக்க முடியாது என தெரிவித்துள்ளது.
சட்டமன்ற தேர்தலில் ஒரே ஒரு தொகுதியை மட்டுமே வென்றுள்ள தேமுதிக தனி சின்னத்திற்கு உரிமை கோர முடியாது என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
இதையடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.
கடந்த 2005ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தேமுதிக, 2006ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்டது. அதில் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் மட்டும் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் தேமுதிக தனித்து போட்டியிட்டது. அதில் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது.
நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக, அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment