தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டசபைத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு இன்றுகாலை 8 மணிக்குத் தொடங்கி படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பிற்பகல் 12 மணி நிலவரப்படி சராசரியாக 30 முதல் 35 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகம் முழுவதும் முதல் 2 மணி நேரத்தில் 13 சதவீத வாக்குகள் பதிவாகின. சென்னையில் முதல் ஒரு மணி நேரத்தில் மட்டும் 10 சதவீத வாக்குகள் பதிவாகின.
மக்கள் காலையிலேயே வாக்குச் சாவடிகளில் குவிந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
பல பகுதிகளில் காலை 7 மணிக்கே வாக்குச் சாவடிகளுக்கு மக்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்தைக் காண முடிந்தது.
முதல் முறையாக வாக்களிக்க வருவோர், பெண்கள், மாணவர்கள் ஆகியோர் மத்தியில் பெரும் ஆர்வம் காணப்பட்டது.
காலையிலேயே வெயில் கடுமையாக அடித்து வருகின்ற போதிலும் அதைப் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர்.
பிற்பகல் 12 மணி நிலவரப்படி சென்னையில் கிட்டத்தட்ட 30சதவீத அளவிலும், நாகையில் 29 சதவீதம், காஞ்சிபுரத்தில் 40 சதவீதம், கன்னியாகுமரியில் 28 சதவீதம், ஈரோட்டில் 25 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
மேட்டூர் தொகுதியில் 40 சதவீத வாக்குககள் பதிவாகியிருந்தன.
புதுவை மாநிலத்தில் 25 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
ஸ்ரீரங்கத்தில் 12 மணி வரை 36 சதவிதம் வாக்குப்பதிவு:
அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா போட்டியிடும் ஸ்ரீரங்கத்தில் 12 மணி நிலவரப்படி 36 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன.
மாலை 5 மணி வரை இடைவிடாமல் வாக்குப் பதிவு தொடர்ந்து நடைபெறும். தேர்தலுக்கான பாதுகாப்பு மற்றும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே. வாக்காளர்கள் பயமில்லாமல் வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றுமாறு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:
Post a Comment