இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியின் மெகா ஸ்டார் பிரச்சாரகராகத் திகழ்ந்த வடிவேலு இன்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.
இந்தத் தேர்தலில் வேறு எந்தப் பேச்சாளரையும் விட மக்களை அதிகமாகக் கவர்ந்தவர் வடிவேலுதான். சில இடங்களில் அவர் வரம்பு மீறினாலும், மக்கள் அவர் பேச்சைக் கேட்க திரண்டு வந்தனர். முதல்வர் கருணாநிதிக்குப் பிறகு, வடிவேலுவுக்குத்தான் அதிகக் கூட்டம் என்றால் மிகையல்ல. துணை முதல்வர் முக ஸ்டாலினே, இந்தத் தேர்தலில் ஹீரோ வடிவேலு எனும் அளவுக்கு கலக்கினார் மனிதர்.
நடிகர் வடிவேலு சாலி கிராமத்தில் உள்ள காவேரி பள்ளியில் காலை 9.10 மணிக்கு ஓட்டு போட வந்தார். இதே பள்ளியில்தான் விஜயகாந்தும் ஓட்டு போட்டார். இருவரும் ஒரே வாக்கு சாவடியில் ஓட்டு போட்டதால் மோதல் ஏற்படாமல் இருப்பதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் விஜயகாந்தும், வடிவேலுவும் ஒரு மணி நேரம் இடைவெளியில் ஓட்டு போட வந்ததால் எந்த பிரச்சினையும் இல்லை.
வடிவேலு ஓட்டு போட்டு விட்டு திரும்பியதும் நிருபர்களிடம் அவருக்கே உரித்தான நகைச்சுவை பாணியில் பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது:-
தி.மு.க. கூட்டணி வெற்றி வாய்ப்பு அமோகமாக இருக்கிறது. நம்மது (தி.மு.க. கூட்டணி) வரும். அது (அ.தி.மு.க. கூட்டணி) வரும்... ஆனா... வராது. 15 நாட்களாக தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்து விட்டேன். விஜயகாந்த் தோலை உரித்து காட்டி விட்டேன். அவர்கள் கூட்டணி வெற்றி பெறும் என்று விஜயகாந்த் கனவு கண்டிருப்பார். ஆனால் அதெல்லாம் பலிக்காது.
கலைஞரின் நலத்திட்டங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. 6-வது முறையாக கலைஞர் முதல்வர் ஆவார். வீட்டுக்கு தலைவர் விஜயகாந்த் குடித்து விட்டு தள்ளாடுகிறார். அவர் எப்படி நாட்டுக்கு தலைவராக முடியும். கறுப்பு எம்.ஜி.ஆரை பார்த்து பார்த்து மக்கள் வெறுத்து விட்டார்கள்.
வியாபாரிக்கு தொழில் தெரியும்.. விவசாயிக்கு உழுவதற்கு தெரியும். மன்னனுக்குத்தான் ஆளாத் தெரியும். ஆளத் தெரிந்தவர் கலைஞர் அய்யா. மக்கள் எல்லோரும் சந்தோஷமாக ஆரவாரத்தடன் ஓட்டு போடவர்றாங்க. தி.மு.க. கூட்டணி வெற்றி கூட்டணி. அ.தி.மு.க. கூட்டணி வெற்று கூட்டணி. நாங்கள் வெற்றி பெறுவது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.
வடிவேலுவுடன் விருகம்பாக்கம் தி.மு.க. வேட்பாளர் தனசேகரனும் உடன் வந்திருந்தார்.

No comments:
Post a Comment