தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் முக ஸ்டாலின், ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களால் வாக்களிக்க முடியவில்லை.
திருவாரூரில் போட்டியிடும் தமிழக முதல்வர் கருணாநிதி கோபாலபுரம் சென்னை பள்ளியிலும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஸ்டெல்லா மேரி கல்லூரியிலும் புதன்கிழமை வாக்களிக்க உள்ளனர். கடந்த கால தேர்தல்களிலும் கூட இப்படித்தான் இவர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வாக்களிக்க முடியாத நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.
கொளத்தூரில் போட்டியிடும் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் கோபாலபுரம் சென்னை பள்ளியிலும், ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சாலிகிராமம் காவேரி மேல்நிலைப் பள்ளியிலும், ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அசோக் நகர் கன்னியப்பன் நகர் மாநகராட்சி பள்ளியிலும், மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு அடையாறு பாப்பன்சாவடி காமராஜர் அவென்யூ 2-வது தெருவில் உள்ள சென்னை பள்ளியிலும் வாக்களிக்கிறார்கள்.
இவர்கள் யாருக்கும் தாங்கள் போட்டியிடும் தொகுதியில் வாக்கு இல்லை.
மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள்: பா.ஜ.க. அகில இந்திய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் அசோக் நகர் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியிலும், மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் ஆழ்வார்பேட்டை பீமன்ன கார்டன் தெருவில் உள்ள சென்னை மேல் நிலைப் பள்ளியிலும், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அடையாறு பாப்பன்சாவடி காமராஜர் அவென்யூ 2-வது தெருவில் உள்ள சென்னை பள்ளியிலும் வாக்களிக்கின்றனர்.
கம்யூனிஸ்ட் தலைவர்கள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு, தேசிய செயலாளர் டி. ராஜா ஆகியோர் தியாகராயநகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள தக்கர்பாபா வித்யாலயாவிலும், மாநிலத் தலைவர் தா. பாண்டியன் அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் டி.வி.எஸ். காலனியில் உள்ள மீனாட்சி உயர்நிலைப் பள்ளியிலும் வாக்களிக்க உள்ளனர்.
மார்க்சிஸ்ட் கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் என். சங்கரய்யா குரோம்பேட்டை நியு காலனி, 5-வது பிரதான சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், மாநிலத் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் ஆதம்பாக்கம் கருணீகர் தெருவில் உள்ள ஆலந்தூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், மத்தியக்குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் தியாகராயநகர் ராமகிருஷ்ணா மிஷன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பச்சமுத்து வளசரவாக்கம் வேலன்நகர் குட் ஷெபர்டு மெட்ரிக் பள்ளியிலும் வாக்களிக்கின்றனர்.
ரஜினி, கமல், வடிவேலு...
நடிகர்கள் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரி கல்லூரியிலும், கமலஹாசன் எல்டாம்ஸ் சாலையில் உள்ள சென்னை பள்ளியிலும், விஜய் அடையாறு காமராஜர் அவென்யூ 2-வது தெருவில் உள்ள சென்னை பள்ளியிலும், அஜித்குமார் திருவான்மியூர் மாநகராட்சி பள்ளியிலும், வடிவேலு சாலிகிராமம் காவேரி மேல்நிலைப் பள்ளியிலும் வாக்களிக்கின்றனர்.

No comments:
Post a Comment