ஊழல், கறுப்புப் பணத்துக்கு எதிராக ஹரித்துவாரில் உண்ணாவிரதம் இருந்து வந்த யோகா குரு பாபா ராம்தேவின் உடல்நிலை நேற்று மோசமானது. அவரது உடல் நிலையை பரிசோதித்த டாக்டர்கள், ராம்தேவ் இதயத்துடிப்பு குறைந்து வருவதாக எச்சரித்தனர்.
உத்தரகாண்ட் முதல்-மந்திரி ரமேஷ் பொக்ரியால் நேற்று ராம்தேவ் உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். பிறகு ராம் தேவை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் ஹரித்துவார் ஆசிரமத்துக்கு சென்று ராம்தேவை அழைத்து செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.
அப்போது ராம்தேவ் சீடர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. என்றாலும் சீடர்களை விரட்டி விட்டு, ராம்தேவை போலீசார் கொண்டு சென்றனர். டோராடூனில் உள்ள இமாலயன் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். பாபா ராம்தேவுக்கு முதல் கட்டமாக குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. ரத்த அழுத்தம், நாடித் துடிப்பை சீராக்க சிகிச்சை கொடுக்கப்பட்டது.
ராம்தேவின் சிறுநீரில் நோய் தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதை குணப்படுத்த ராம் தேவுக்கு டாக்டர்கள் தீவிரசிகிச்சை அளித்து வருகிறார்கள். ராம்தேவை நேற்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீரவிசங்கர் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.உண்ணாவிரதத்தை கைவிட கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையே உத்தர காண்ட் முதல்-மந்திரி ரமேஷ் பொக்ரியாலும் உண்ணாவிரதத்தை கைவிடும்படி ராம்தேவுக்கு கோரிக்கை விடுத்தார். ஆனால் உண்ணாவிரதத்தை கைவிட ராம்தேவ் மறுத்து விட்டார். டேராடூன் மருத்துவமனையில் அவர் உண்ணாவிரதத்தை தொடர்வதாக அறிவித்துள்ளார். என்றாலும் அவருக்கு டாக்டர்கள் தெம் பூட்டும் திரவ மருந்துகளை ஏற்றி சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

No comments:
Post a Comment