சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்வதற்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்த்தப்படவில்லை. இதன் காரணமாக இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.450 கோடி இழப்பு ஏற்படுகிறது.
பெட்ரோலியம் பொருட்களில் பெட்ரோல் விலையை மட்டும் நிர்ணயித்து கொள்ளும் உரிமையை எண்ணை நிறுவனங்கள் பெற்றுள்ளன. கடந்த மாதம் பெட்ரோல் விலையை எண்ணை நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.5 வீதம் உயர்த்தி அறிவித்தன.
அடுத்த வாரம் முதல் பெட்ரோல் விலையில் மேலும் 50 பைசா உயர்த்தப் போவதாக எண்ணை நிறுவனங்கள் கூறி உள்ளன. என்றாலும் இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை கட்டுப் படுத்த இயலவில்லை.எனவே, டீசல், சமையல் கியாஸ், மண்எண்ணை ஆகியவற்றின் விலையையும் உயர்த்த வேண்டும் என்று எண்ணை நிறுவனங்கள் வலியுறுத்தியபடி உள்ளன.
டீசல், சமையல் கியாஸ் விலையை நிர்ணயிக்கும் உரிமை மத்திய அரசிடமே உள்ளது. கடந்த ஆண்டு ஜுன் மாதத்துக்கு பிறகு டீசல், சமையல் கியாஸ் விலைகள் உயர்த்தப்படவில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை கடந்த ஓராண்டு காலத்தில் 50 சதவீத அளவுக்கு உயர்ந்து விட்டது.எனவே டீசல், கியாஸ் விலை உயர்வு தவிர்க்க முடியாதது ஆகி விட்டது.
இது தொடர்பாக மத்திய மந்திரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 வரை அதிகரிக்கும் என்று தெரியவந்துள்ளது. அது போல சமையல் கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ.25 உயரும் என்று கூறப்பட்டது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 11-ந் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க் கப்பட்டது.கடைசி நிமிடத்தில் அது ஒத்தி வைக்கப்பட்டது.
கடந்த வாரம் இதில் உரிய முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் ஸ்பெக்ட்ரம் விவகாரம், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை காரணம் காட்டி டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் மத்திய பெட்ரோலியம் மந்திரி ஜெய்பால் ரெட்டி நேற்று மாலை நிதி மந்திரி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்பட்டு வரும் தொடர் இழப்பை விளக்கி கூறி கவலை தெரிவித்தார். தினமும் ரூ.450 கோடி இழப்பு ஏற்படுவதால் டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை தாமதமின்றி உடனே முடிவு செய்து அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
எனவே டீசல், கியாஸ் விலை உயர்வு விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இதற்கான முடிவை எடுக்கும் பிரணாப்முகர்ஜி தலைமையிலான மத்திய மந்திரிகள் குழு கூட்டம் மீண்டும் எப்போது கூடும் என்று இன்னும் தீர்மானிக் கப்படவில்லை. அது உறுதியானதும் டீசல், கியாஸ் விலை உயர்வு எப்போது அமலுக்கு வரும் என்பது தெரிந்து விடும்.

No comments:
Post a Comment