பாரா கிளைடர்கள் மூலம் இந்திய நகரங்களை தாக்க லஷ்கர் இ தய்பா இயக்கம் திட்டமிட்டுள்ளதாக தீவிரவாதி அபு ஜிண்டால் கூறியுள்ளான். சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட தீவிரவாதி அபு ஜிண்டாலை, மும்பை போலீசார் காவலில் எடுத்து மும்பை தாக்குதல் பற்றி விசாரித்து வருகின்றனர். அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. மும்பை உட்பட நாட்டின் முக்கிய நகரங்களின் மீது பாரா கிளைடர்கள் மூலம் வான்வெளி தாக்குதல் நடத்த லஷ்கர் இ தய்பா தீவிரவாத இயக்கம் திட்டமிட்டு இருப்பதாக அவன் கூறியுள்ளான். மும்பையில் தாக்குதல் நடத்த கசாப் உட்பட 10 தீவிரவாதிகளுடன் சேர்த்து, பயாஸ் காஜி, மசூத் ஷேக், ரஹீல் ஷேக் என்ற 3 இந்தியர்களுக்கும் லஷ்கர் இயக்கம் பயிற்சி அளித்துள்ளது. இவர்களில் பயாஸ் காஜியும்யும், மசூத் ஷேக்கும் மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அவுரங்கபாத்தில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட வழக்கில் காஜியும், ஷேக்கும் சம்பந்தப்பட்டுள்ளனர்.
மும்பை தாக்குதலில் ஈடுபட்ட கசாப் உட்பட 10 தீவிரவாதிகளுக்கு காஜியும் இந்தி கற்று கொடுத்துள்ளான். மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, கராச்சியில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி லஷ்கர் தலைவர்கள் கட்டளைகளை பிறப்பித்தனர். அந்த அறையில் காஜியும் இருந்துள்ளான். சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ள அவனை, இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கசாப் உட்பட 10 தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாராபாத்தில் இருக்கும் பிரமாண்ட முகாமில் பயிற்சி அளிக்கப்பட்டது. லஷ்கர் இயக்கத்துக்கு கராச்சியிலும் பயிற்சி தளம் உள்ளது. காஷ்மீரில் தாக்குதல் நடத்துவதற்கான பயிற்சி இங்குதான் அளிக்கப்படுகிறது. இங்கு, சீல் வைக்கப்பட்ட பெட்டிகளில் 150 பாராசூட்கள் இருப்பதை ஜிண்டால் பார்த்துள்ளான். இதை பற்றி கேட்ட போது, இந்திய நகரங்களில் பாரா கிளைடர்கள் மூலம் தாக்குதல் நடத்துவதற்காக அவை பயன்படுத்தப்பட உள்ளதாக ஜிண்டாலிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்காக 150 பேருக்கு பயற்சி அளிக்கப்பட்டுள்ளது என விசாரணையில் ஜிண்டால் கூறியுள்ளான்.

No comments:
Post a Comment