ராமநாதபுரம் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கட்சி தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி வறுமை ஒழிப்பு தினவிழா, நலத்திட்ட உதவி வழங்கும் விழா பொதுக்கூட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா தலைமை தாங்கினார். நகர் செயலாளர் முத்தீஸ்வரன் வரவேற்று பேசினார்.
விழாவில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 500 மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கும், ஆயிரம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் ரூ.22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி கட்சி தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:-
எனது பிறந்தநாளையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் ரூ.20 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை உதவிகள் வழங்கப்படுவது மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற தூண்டுதலை ஏற்படுத்தத்தான். அரசு வரிப்பணத்தை வைத்துக்கொண்டு ஆட்சியாளர்கள் இதை செய்யாமல் மக்களை ஏமாற்றி வருகின்றனர். எந்த காரியத்துக்காகவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் குறுகிப்போக முடியாது.
விஜயகாந்த் கோபக்காரன் என்று கூறுகின்றனர். கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும். தவறு செய்தால் யாராக இருந்தாலும் மனதில் வைத்திருக்காமல் கண்டிப்பேன். ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் இன்றுவரை தாக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக கடிதம் எழுவதுதான் தொடர்கிறதே தவிர வேறு எதுவும் நடக்க வில்லை. இதை நான் சொன்னால் என் மீது வழக்கு தொடர்கின்றனர். நான் பயப்படமாட்டேன்.
ஒரு நாட்டில் உண்மையான ஜனநாயகம் இருக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக எதிர்க்கட்சி இருக்க வேண்டும் என்று மத்திய அரசை பற்றி முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறுகிறார். ஆனால் தமிழகத்தில் எதிர்க்கட்சியே இருக்கக்கூடாது என்று நினைக்கிறார்.
தமிழகத்தில் மணல் கொள்ளை அதிகளவில் நடக்கிறது. தே.மு.தி.கவால் தான் தமிழகத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. 2016 சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வின் பலம் அ.தி.மு.க.வுக்கு தெரியும். அதன் முன்னோட்டம் 2014 பாராளுமன்ற தேர்தலில் தெரியும். மக்கள் பிரச்சினைக்காக போராடும் நான் சிறை செல்ல தயாராக உள்ளேன். சுட்டுப் போட்டாலும் யாருடனும் இனிமேல் கூட்டணி சேர மாட்டேன்.
தமிழகத்தில் புதிதாக உதயமாகும் கட்சிகள் சுயநலமாக இருந்தால் மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள். 2001-ம் ஆண்டில் இருந்தே கிரானைட் ஊழல் நடந்துவருகிறது. இதேபோல் மணல் கொள்ளையால் விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டு விட்டது. நீதிபதிகள் தமிழகத்தில் மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்தவேண்டும். கிரானைட் ஊழலில் ரூ.16 ஆயிரம் கோடி கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. இந்த பணத்தை பெற்று மக்களிடம் வழங்க வேண்டும். மின்கட்டணம், பஸ் கட்டணம், பால் விலை உயர்வை தொடர்ந்து புதிய மின் இணைப்புக்கு கட்டணம் உயர்ந்துள்ளது.
ராமநாதபுரம் வழுதூர் மின்திட்டம் செயல்படாமல் உள்ளது. உடன் குடியில் மின்உற்பத்தி நிலையத்துக்காக ஒருசெங்கல் கூட வைக்கப்படவில்லை. கடந்த 1991-ம் ஆண்டு முதல் புதிய மின்திட்டங்கள் எதுவும் தீட்டப்படவில்லை. இதனால் தான் தற்போது 5 மணி நேரத்துக்கும் அதிகமாக மின்தடை ஏற்படுகிறது. தி.மு.க.,அ.தி.மு.க. கட்சிகள் நதிகளை இணைக்க எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. கட்சி தொடங்கிய முதல் தேர்தலிலேயே 8 சதவீத ஓட்டுவாங்கி முரசு சின்னத்தை தன்வசம் வைத்துக்கொண்ட ஒரே கட்சி தே.மு.தி.க.தான்.
போலீசார் அரசியல்வாதிகளுக்கு அடி பணியாமல் மக்களுக்கு பணியாற்ற வேண்டும். கச்சத்தீவு நமக்குதான் சொந்தம். மீனவர்கள் அனைவரும் ஒன்று திரண்டால் கச்சத்தீவை மீட்க கடலுக்குள் இறங்கி கட்டுமரத்தில் ஏறி போராட தயாராக உள்ளேன். மீனவர்களுக்கு மட்டும் அல்லாமல் இலங்கை தமிழர்களுக்காகவும் எந்த நேரமும் நான் போராடு வேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் கிரீன் இப்ராகிம், சிங்கம் பசீர், துணை செயலாளர் கதிர்வேலன், நயினார்கோவில் ஒன்றிய செயலாளர் கருணாநிதி, பரமக்குடி ஒன்றிய செயலாளர் முருகன், வக்கீல் நாகராஜன், இருளாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் திலீப்காந்த் நன்றி கூறினார்.

அவனுங்களுக்கு நான் சொல்லுற பதில்....போங்கடா போங்கடா புண்ணாக்குகளா.........அவ்வளவுதான்....
ReplyDelete