நாடார் சங்கங்களை எல்லாம் ஒரே அணிக்குக் கொண்டு வந்ததன் மூலம் புதிய பலம் பெற்றுள்ள சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி , அதிமுகவுடன் இணைந்து இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது.
சரத்குமாரின் கட்சிக்கு அதிமுகவில் 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளார் ஜெயலலிதா.
இன்று மாலை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சரத்குமார் சந்தித்துப் பேசியபோது இந்த உடன்பாடு ஏற்பட்டது. இந்த 2 தொகுதிகள் எவை எவை என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று சரத்குமார் அறிவித்துள்ளார்.
வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக, மதிமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி, நாடாளும் மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
தற்போது சமத்துவ மக்கள் கட்சியும், அதிமுக கூட்டணியில் இடம்பெறுகிறது. இந்தக் கட்சியின் கீழ், அனைத்து நாடார் சங்கங்களும் ஒருங்கிணைந்துள்ளன. இதற்காக அதிமுக தொகுதி பங்கீட்டுக் குழுவினருடன் சமத்துவ மக்கள் கட்சி தொகுதி பங்கீட்டு குழுவினர் நடத்தினர்.
அப்போது தங்களுக்கு 7 தொகுதிகள் வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி கோரியது. ஆனால், 2 தொகுதிகளை மட்டும் அதிமுக ஒதுக்கியுள்ளது.
முன்னதாக சரத்குமார் நேற்று கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் மாநில நிர்வாகிகள் அனைவரும் 4 அல்லது 5 தொகுதிகளை பெற்றுக் கொண்டு அதிமுக கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இதன் அடிப்படையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை இன்று மாலை போயஸ் கார்டனில் சந்தித்தார் சரத்குமார். அப்போது 2 தொகுதிகள் என்று முடிவானது. அவை எந்தெந்தத் தொகுதிகள் என்பது விரைவில் முடிவு செய்யப்படும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment