Tuesday, July 26, 2011

ராஜபக்சேக்கு எதிராக விஜய் ஏன் கையெழுத்து போட மறுக்கிறார் (போட்டோக்கள்)


இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சே கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகளின் மாபெரும் கெயொப்ப இயக்கம் தொடங்கும் நிகழ்ச்சி 12.07.2011 அன்று சென்னையில் தொடங்கியது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தொடங்கி வைத்தார்.



தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் இப்பணியின் ஒருபகுதியாக 25.07.2011 அன்று திரைப்பட கலைஞர்கள் இயக்குனர் மணிவண்ணன், செல்வமணி, ரோஜா, நடிகர் சத்தியராஜ் ஆகியோரிடம் கையொப்பங்கள் பெறப்பட்டன.

இப்படி பல பிரபலங்கள் கையெழுத்து போட்டிருக்கும் போது, 'நான் தமிழன் என்றும் தமிழனுக்காக உயிரையும் கொடுப்பார்கள் என் ரசிகர்கள்' ( அவரு கொடுக்க மாடார் உயிரை, ரசிகர்கள் தான் கொடுப்பாங்க எவ்ளோ கவனமா பேசுறார் பாருங்க...). என்றும். ராமேஸ்வரத்தில் இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதையும், ராமேஸ்வர தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் அநியாயமாக கொல்லப்படுவதையும் (எப்பா... காங்கிரஸ்காரங்க கொபபடாதீங்கப்பா உங்க பார்வையில இந்த கொலைகள் நியாயம் தான். உங்க தலைவனை கொன்னுட்டாங்கல்ல அப்போ நாம என்ன சும்மா விடுவோமா ....?) கண்டித்து "இன்னும் ஒரு உயிர் போனால் இங்கிருக்கும் தமிழன் படைதிரட்டி வருவான்" என்றெல்லாம் தனது திரைப்பட வசனங்களையே மிஞ்சும் அளவுக்கு வீரவசனம் பேசிய விஜய் இப்போது மட்டும் ஏன் ராஜபக்சேவை கூண்டில் நிறுத்த கையெழுத்து போட மறுத்தார். ஒரு கையெழுத்து தானே போட வேண்டியது தானே என்ன வசனமா பேச சொன்னாங்க எழுதி கொண்டு வந்தது மறந்து போச்சுன்னு சொல்ல! ஒரு கையெழுத்து தானே ரோஜா என்ன தமிழ் பொண்ணா அவங்க போடுறாங்க. அவங்களுக்கு இருக்க தைரியம் கூட விஜய் கு இல்லாம போச்சா!?. உங்கள் வீரம் எல்லாம் கேமரா முன் தானா?

ஏன் இப்போ கையெழுத்து போட மறுக்கிறார் விஜய்

அன்று ராமேஸ்வரத்தில் ராஜபக்சேவை எதிர்த்து வீர வசனம் பேசபோய் (எழுதி கொண்டு வந்த வசனம் மறந்து போய் திரும்ப ரூமுக்கு போய் படிச்சிட்டு திரும்ப மேடையில பேசினது எல்லாம் வேற கதை) ராஜபக்சேவின் கோபத்துக்கு ஆளாகி இன்னும் விஜய் படங்களை இலங்கையில் திரையிட அனுமதி இல்லை என்றும் கவலனில் எங்காளு அசின் கண்ணு நடிசிருகதால இத மட்டும் விடுரோம்னு சொன்னதெல்லாம் விஜய் மறக்கல்ல. அதான் இன்னும் சில வாரங்களில் வெளிவர போகும் தனது திரைப்படத்துக்கு எங்கேய் இலங்கையில் அனுமதி கிடைக்குமா இல்லையா நு குழப்பத்தில் இருக்கிறப்போ இவங்க வேற கையெழுத்து கேட்டு அதில நம்ம இந்திய ராணுவத்தின் இளையத்தளபதி விஜய் கையெழுத்து போட்டா அது உலகத்தலைவர் ராஜபக்சேவின் கோபத்தை கிளருற மாதிரி இருக்கும்ல அதான் இந்த அந்தர்பல்டி.

உலகே ராஜபக்சேக்கு அடிமையா இருக்கும் போது விஜய் மட்டும் விதிவிலக்கா என்ன.........?





- சிந்து 



Friday, June 10, 2011

வந்தார் சிவசங்கரமேனன் மாறுமா ஜெயலலிதா மனநிலை !?


சென்னையில் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரமேனன் சந்தித்து பேசினார். மேலும் இவ் சந்திப்பின் போது இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு குறித்து விவாதித்தாக தகவல் வெளியாகி உள்ளது.

 ஆனால் உண்மையில் என்ன நடந்து இருக்கும், எதற்காக இந்த சிவசங்கரமேனன் வந்திருப்பார்.

இந்த சிவசங்கரமேனன் தான் சோனியாவின் 'முந்தானை'. இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட இனப்படுகொலையை இந்தியா வழிநடத்தியதற்கு இந்த சிவசங்கர மேனனின் பங்கு தான் அதிகம் என்பது உலகறிந்த உண்மை. போரை பலவேளைகளில் திசைத்திருப்பி பல தமிழனின் உயிர்களை காவு வாங்கிய பெருமையில் இவரது பங்கு அதிகம்.

அப்படிப்பட்ட சிவசங்கரமேனன் இன்று சென்னை வந்து முதல்வரை சந்தித்திருப்பது எதற்காக. தமிழர்களின் மறுவாழ்வு குறித்து பேசுவதற்காக வந்ததாக கூறுவது எல்லாம் சும்மா மாக்களாகிய நம்மை ஏமாற்றுவதற்கு தான்.

இதுவரை இலங்கை தமிழர் பிரச்சனையில் ஜெயலலிதா எப்படி நடந்து இருக்கிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இப்போது புதிய பிறவி எடுத்தது போல ஆட்சிக்கு வந்ததும் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்க துவங்கி இருக்கிறார். மத்திய அரசிடம் இருந்து தனக்கு தேவையானவற்றை பெறவும், மத்திய அரசை தன் வழிக்கு கொண்டு வரவும், மத்தியில் ஆளும் காங்கிரஸ் உடன் வரும் காலங்களில் கூட்டணி வைப்பதற்காக அதை தன் பக்கமாக இழுக்கவும் ஜெயலலிதா கையில் எடுத்திருக்கும் ஆயுதம் தான் இந்த இலங்கை பிரச்சனையாக இல்லாமல், இது உண்மையில் இதயபூர்வமாக எடுக்கப்படும் முடிவாக இருந்தால், உலகின் அனைத்து தமிழனும் ஜெயலலிதாவை வணங்குவான்.

இப்போது வந்திருக்கும் இந்த சிவசங்கரமேனன் தனது தந்திரமான பேச்சாலும் சூழ்ச்சியாலும் ஜெயலலிதாவை தன் பக்கமாக இழுக்கும் வேலையை செய்வார். இந்த தந்திர வலையில் ஜெயலலிதாவை விழ வைக்கும் பட்சத்தில் தமிழகத்தில் ராஜபக்சேக்கு எதிராக தற்போது ஏற்ப்பட்டிருக்கும் கொந்தளிப்பான நிலையை அடக்கி விடலாம். இதன் மூலம் உலகின் ஒரே அசைக்க முடியாத வல்லரசாம் இலங்கையின் அதிபர் ராஜபக்சேவை  சந்தோஷ மழையில் நனையவைக்க முடியும் என்பது தான் இந்த நயவஞ்சககாரனின் திட்டம்.

 இந்நிலையில் நாளை இலங்கை பயணம் செல்ல உள்ள நிருபாமா ராவ் குழுவுடன்  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரமேனனும் செல்ல உள்ளார். அப்போது இவர் இன்று ஜெயலலிதா எடுக்கும் முடிவை (மனமாற்றத்தை) ராஜபக்சேவிடம் தெரிவித்து ராஜபக்சேவால் கொடுக்கப்படும் 'அந்தப்புற' உபசரிப்பில் களிப்புறலாம் என்ற நினைப்பில் தான் இந்த நல்லவர் இன்று ஜெயலலிதாவை சந்தித்து இருப்பார். பொறுத்திருந்து பார்ப்போம் ஜெயலலிதா உருவில் தமிழனுக்கு தொலைவில் தெரிந்த வெளிச்சம் உண்மையானதா அல்லது மின்னல் கீற்றா என்று ....

- சிந்து 



Monday, May 16, 2011

பேரவையின் வரலாறு


மிழக சட்டப் பேரவைக் கட்டடமான செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் வரலாறு, அங்குள்ள மிக உயரமான கொடிமரத்தைப் போலவே கம்பீரமானது.

 கிழக்கிந்திய கம்பெனியின் அலுவலராக இருந்தவர் பிரான்சிஸ் டே. இவர் விஜயநகர அரசின் நிர்வாகிகளிடமிருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடத்தை வாங்கி தலைமைச் செயலகத்தில் உள்ள அணிவகுப்பு மைதானம் இருக்கும் இடத்தில் போர்ட் ஹவுஸ் என்ற கட்டடத்ததைக் கட்டினார்.

 இந்தக் கட்டடம் செயின்ட் ஜார்ஜ் நினைவு தினமான 23.4.1640 அன்று பயன்பாட்டுக்கு வந்தபோது, "செயின்ட் ஜார்ஜ் கோட்டை' என்று பெயரிடப்பட்டது.

கோட்டை வளாகத்தில் தொன்மையான புனித மேரி ஆலயம் ஒன்று உள்ளது. 1678ம் ஆண்டு இது கட்டப்பட்டது. இந்த ஆலயத்தில்தான் 1753 ஆம் ஆண்டு கவர்னல் ஜெனரல் ராபர்ட் கிளைவின் திருமணம் விமரிசையாக நடைபெற்றது.
 1687 முதல் 1692 வரை ஆளுநராக இருந்த யேல் என்பவர் காலத்தில்தான் ஆசியாவிலேயே மிக உயரமான கொடிமரம் இங்கு அமைக்கப்பட்டது. 150 அடி உயரம் கொண்ட கொடிமரம் இது.

 கோட்டைக்குள் சட்டப்பேரவை கூட்ட மண்டபம் 1910-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இப்போது நூற்றாண்டு கண்ட புராதான கட்டமாக இது இருக்கிறது.
 சென்னை மாகாண சட்டப்பேரவைக்கு முதல் தேர்தல் 1920-ல் நடைபெற்றது. இதில் நீதிக் கட்சி வெற்றிபெற்று ஏ.சுப்பராயலு ரெட்டியார் முதல் பிரிமியர் என்ற அழைக்கப்பட்ட முதல்வர் பதவியை ஏற்றார்.

 12.1.1921-ல் இருந்து 1937 வரை நடைபெற்ற நீதிக் கட்சி ஆட்சியில் பேரவைக் கூட்டங்கள் கோட்டையிலேயே நடைபெற்றன. இதற்கிடையில், சென்னை மாகாண ஆளுநராக இருந்த வெலிங்டன் பிரபு 6.3.1922-ல் சட்டப்பேரவைக்கு வந்துள்ளார். அப்போது தேக்கு மரத்தால் செய்யப்பட்ட நுட்பமான வேலைப்பாடுகளுடன் கூடிய பேரவைத் தலைவர் இருக்கையைப் பரிசளித்தார். அந்த இருக்கையே இன்றும் பேரவைத் தலைவரின் இருக்கையாக இருந்து வருகிறது.

14.7.1937ஆம் ஆண்டு ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது சேப்பாக்கத்தில் உள்ள செனட் மண்டபத்துக்கு பேரவை மாற்றப்பட்டது. 21.12.1937 வரை சுமார் 5 மாதங்கள் இங்குதான் பேரவை நடைபெற்றுள்ளது.
 இதன் பின் 27.1.1938 முதல் 26.10.1939 வரை சென்னை சேப்பாக்கம் அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி மண்டத்தில் பேரவை இயங்கியது.

30.10.1939-ல் இரண்டாம் உலகப் போரில் இந்தியர்களும் ஈடுபட பிரிட்டிஷ் அரசு நிர்ப்பந்தித்ததைக் கண்டித்து ராஜாஜி தலைமையிலான அமைச்சரவை ராஜிநாமா செய்தது. இதன்பின் 30.4.1946 வரை தேர்தலே நடைபெறாமல் ஆளுநர் ஆட்சியே தொடர்ந்தது. பிறகு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வென்று ஆந்திரகேசரி டி.பிரகாசம் 24.5.1946-ல் முதல்வராகப் பொறுப்பேற்றதிலிருந்து, 27.3.1952 வரை மீண்டும் கோட்டையிலேயே பேரவை திரும்பிச் செயல்பட்டது.

1952-ம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிபெற்று, மேலவை உறுப்பினராக இருந்த ராஜாஜி தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. அப்போது மேலவை உறுப்பினர்களையும் சேர்த்து பேரவை உறுப்பினர் எண்ணிக்கை 375 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கைக்கு கோட்டை மண்டப இடம் போதாது என்பதால் சென்னை அரசினர் தோட்டத்தில் புதிய சட்டமன்றம் கட்டப்பட்டு அங்கு பேரவை செயல்பட்டது. பேரவை கட்டுவதற்காக 10 லட்சம் ரூபாய் வரை அப்போது செலவிடப்பட்டுள்ளது.
 (இந்தப் பேரவை கட்டடம்தான் பின்னர் பாலர் அரங்கமாகவும், கலைவாணர் அரங்கமாகவும் இருந்தது. பின்னர் திமுக ஆட்சியில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக இடிக்கப்பட்டது.)

 1957-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு பேரவை மீண்டும் கோட்டைக்கே திரும்பி 30.3.1959 அங்கு நடைபெற்றது.

20.4.1959-ல் தொடங்கி 30.4.1959 வரையிலும், 4.5.1959 முதல் 9.5.1959 வரையிலும் உதகையிலுள்ள அரண்மூர் மாளிகையிலும் பேரவைக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.
 இதன்பின் 31.8.1959-ல் இருந்து 13.1.2010 வரை கோட்டையிலேயே பேரவைக் கூட்டங்கள் நடைபெற்று வந்தன.
 ஓமந்தூரார், பி.எஸ். குமாரசாமிராஜா, ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் முதல்வராக இருந்துள்ளனர்.

 இதற்கிடையில் 2001-ல் அதிமுக ஆட்சி நடைபெற்றபோது புதிய தலைமைச் செயலகம் கட்டு முயற்சி நடைபெற்றது. ராணி மேரி கல்லூரியை இடித்துவிட்டு கட்டத் திட்டமிடப்பட்டு, எதிர்ப்பால் கைவிடப்பட்டது. இதைப்போல அண்ணா பல்கலைக்கலைக்கழகத்தின் இடத்திலும் புதிய தலைமை செயலகம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் அதுவும் கைவிடப்பட்டது.

÷2006 திமுக ஆட்சி வந்துபோது அரசின் தோட்டத்தில் 1,000 கோடி ரூபாயில் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது. இதனை பிரதமர் மன்மோகன் சிங் 13.3.2010-ல் திறந்து வைத்தார்.

இங்கு 19.10.2010 பேரவைக் கூட்டம் தொடங்கப்பட்டு இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.
 செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வந்த பேரவை மண்டபம் பாவேந்தர் செம்மொழி தமிழாய்வு நூலகமாக மாற்றப்பட்டது.

இந்நிலையில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று ஜெயலலிதா திங்கள்கிழமை ஆட்சிப் பொறுப்பை ஏற்கிறார். பேரவைத் தேர்தலுக்கு முன்பே ஜெயலலிதா தெரிவித்தவாறு மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே பேரவை செயல்பட உள்ளது.


Wednesday, April 13, 2011

நல்ல உள்ளமும், ஞாபக மறதியும் படைத்த பொதுமக்களே!


உங்களை நாங்கள் வணங்குகிறோம். தெய்வம் வரம் கொடுப்பது போல், எங்களுக்கு நீங்கள் பதவி கொடுப்பதால்...!உங்களை நாங்கள் மதிக்கிறோம். உங்களை வாழவைக்க வந்த எங்களை வாழ வைக்கிறீர்கள் என்பதால்...!நாங்கள் அரசியல்வாதிகள். நாங்கள் அன்று எப்படி இருந்தோம். இன்று எப்படி இருக்கிறோம் என்று ஆராயக் கூடாது. அன்று பட்டுக்கோட்டைக்கும், தஞ்சாவூருக்கும் போய்க்கொண்டிருந்தோம்; இன்று பாரீசுக்கும், நியூயார்க்குக்கும் போய்க்கொண்டிருக்கிறோம்.
இந்த முன்னேற்றத்தை நீங்கள் விஞ்ஞான ரீதியாக கணக்கிட வேண்டுமே தவிர, வேறு காரணங்களை ஆராயக் கூடாது. நாங்கள் சிரிப்பதை உண்மையான சிரிப்பென்றும், நாங்கள் அழுவதை உண்மையான அழுகையென்றும் நீங்கள் நம்புகிறீர்கள்; நன்றி!அந்த நம்பிக்கை மேலும் தொடர வேண்டுமே தவிர, இடையில் தளரக் கூடாது. நாங்கள் மேடையில் பேசும்போது, நீங்கள் ஆரவாரம் செய்கிறீர்கள்; உண்மையில் நீங்கள் ஆரவாரம் செய்வீர்கள் என்று நம்பித் தான் நாங்கள் பேசுகிறோம்; உங்களது புத்திக்கூர்மையில் எங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை.நாங்கள் சில நேரங்களில் உண்மையும் பேசுவதுண்டு! எப்போது உண்மை பேசுகிறோம் என்பது எங்களுக்கு மட்டுமே தெரியும். எதிர்க்க முடியாத சூழ்நிலையில், தப்பித் தவறிப் பேசுகிற அந்த உண்மையைப் போலத் தான், நாங்கள் பேசும் எல்லாப் பேச்சும் இருப்பதாக நீங்கள் நம்ப வேண்டும்.
நாங்கள் மேலே போட்டிருக்கும் துண்டின் நீளத்தை விட, எங்கள் நாக்கின் நீளம் அதிகம். அந்த துண்டு வெள்ளை வெளேரென்றிருக்கிறது. அந்தத் துண்டின் வெண்மையைப் போல், எங்கள் உள்ளமும் இருக்க வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்ப்பது நியாயமே.அப்படித் தான் இருக்கிறது என்று நம்பிவிடுவது மிகவும் நல்லதல்லவா! எங்களை நீங்கள் எந்த நேரமும் கைவிட்டு விடக் கூடாது. எங்களுக்கு வேறு தொழில் தெரியாததால் தான், இந்தத் தொழிலுக்கு வந்தோம். நாட்டிலுள்ள வேலையில்லா திண்டாட்டத்தை எங்களால் ஒழிக்க முடிகிறதோ இல்லையோ, எங்களுடைய வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிந்து விட்டது.நமது அரசியல் சட்டத்தின் அடிப்படை மிக பரவலானது. ஓர் அரசியல்வாதிக்கோ, அவன் பதவி வகிப்பதற்கோ இன்னின்ன தகுதிகள் வேண்டுமென்று அது கட்டாயப்படுத்தவில்லை. "அப்படி இருந்தவனா, இப்படி இருக்கிறான்' என்று நீங்கள் ஆச்சரியப்படக் கூடாது. நதிமூலம், ரிஷிமூலம், அரசியல்வாதி மூலம் இந்த மூன்றும், ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை.
பதவிக்கு தகுதி எப்படி நிர்ணயமில்லையோ, அப்படியே பணம் சேர்வதற்கும் தகுதி நிர்ணயமில்லை. ஆகவே, எங்களுக்கு பதவியும் வருகிறது; பணமும் வருகிறது. அந்தப் பணத்தையும் நாங்கள் பொதுமக்களுக்காகவே சேர்க்கிறோமேயல்லாமல், எங்களுக்காக அல்ல.நாங்கள் உங்களையும், நீங்கள் எங்களையும் காப்பாற்றுவதற்காக உருவானதே ஜனநாயகம். ஜனநாயகம் பற்றி யார், எந்த விளக்கம் சொன்னாலும் நம்பாதீர்கள். எங்களை நம்பிய பிறகு, நீங்கள் மற்றவர்களை நம்புவதே மடத்தனம்.ஊழல், ஊழல் என்று மற்றவர்கள் கூறுவர்; நீங்கள் கவலைப் படக் கூடாது.
எந்த நாட்டில், எந்த ஆண்டில் ஊழல் இல்லை. 17ம் நூற்றாண்டில் இல்லையா? 18ம் நூற்றாண்டில் இல்லையா? 19ம் நூற்றாண்டில் இல்லையா? சீசர் காலத்தில் இல்லையா? ஜார்ஜ் மன்னன் காலத்தில் இல்லையா? சர்ச்சில் காலத்தில் இல்லையா?நீங்கள் தலையால் இடும் வேலையை காலால் உதைக்க... மன்னிக்க வேண்டும் - நாக்கு குழறிவிட்டது! நீங்கள் காலால் இடும் வேலையை, தலையால் முடிக்க நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். ஆகவே, இந்த தேர்தலிலும் நீங்கள் எங்களுக்கு ஓட்டளிக்க வேண்டும்.
மறவாதீர்கள்; எங்கள் நரிக்குட்டி சின்னத்தை மறவாதீர்கள்!நரிக்குட்டி; ஏழைகளின் பணப்பெட்டி!வாழ்க நரிக்குட்டி! வாழ்க நாங்கள்!இப்படிக்கு,ஜனநாயகம் மறவா அரசியல்வாதிகள்.(கவியரசு கண்ணதாசன், தனது, "எண்ணங்கள் ஆயிரம்' என்ற நூலில், "நாங்கள் அரசியல்வாதிகள்' என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரை.)


Saturday, April 9, 2011

யார் இந்த அன்னா ஹசாரே! ஒரு சின்ன பார்வை



கிசான் பாபட் பாபுராவ் அசாரே
பிறப்பு
சனவரி 15 1940(அகவை 71)
பிங்கார், மகாராட்டிரம்,இந்தியா
அறியப்படுவது
நீர்ப்பிடிப்பு மேம்பாட்டுத் திட்டங்கள்; தகவல் அறியும் உரிமைச் சட்டம்; ஊழல் எதிர்ப்பு இயக்கம்
சமயம்
இந்து
பெற்றோர்
லட்சுமிபாய் அசாரே (தாய்)
பாபுராவ் அசாரே (தந்தை)
இணையத்தளம்




பரவலாக அண்ணா அசாரே என்று அறியப்படும் கிசான் பாபுராவ் அசாரே (Kisan Baburao Hazare) (பிறப்பு: சூன் 15, 1938), ஓர் இந்திய சமூக சேவகர். மகாராட்டிரத்தின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள, ஓர் மாதிரி சிற்றூராக திகழ்ந்த,ராலேகாவ் சித்தி என்ற சிற்றூரின் மேம்பாட்டிற்காக இவராற்றிய பணிக்காக அறியப்பட்டார். இவரது பணிகளுக்கு அங்கீகாரமாக 1992ஆம் ஆண்டு இந்திய அரசு பத்ம பூசன் விருது வழங்கியுள்ளது. நீர்பிடிப்பு மேம்பாட்டுத் திட்டம், தகவல் பெறும் உரிமைச் சட்டமாக்கலுக்கான போராட்டங்களில் பங்கு கொண்டு சிறப்புற பணியாற்றினார். தற்போது ஊழலுக்கு எதிராகப் போராடிவருகிறார். இவர் ஜன் லோக்பால் சட்டமாக்கலுக்காக தில்லியில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் துவங்கியுள்ளார்.

லோக்பால் சட்டமாக்கலுக்கான போராட்டம்

2011ஆம் ஆண்டு அன்னா அசாரே வலுவான ஊழலெதிர்ப்புக்கான லோக்பால் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் இயற்றப்பட வேண்டும் என்று போராடி வருகிறார். இது தொடர்பாக, முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் சந்தோஷ் ஹெக்டே, உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசண் இவர்களுடன் ஊழலுக்கெதிரான இந்தியா என்ற அமைப்பின் உறுப்பினர்கள் ஜன் லோக்பால் மசோதா என்ற சட்டவரைவினைத் தயாரித்துள்ளனர். இது அரசு பிரேரித்துள்ள லோக்பால் சட்டவரைவினை விட வலுமிக்கதாகவும் அம்புட்ஸ்மன் எனப்படும் நீதிபதிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வகை செய்தும் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டவரைவை இந்தியப் பிரதமர் ஏற்க மறுத்துள்ளநிலையில், ஊழல் புரிந்தவர்களுக்கு கடுமையான தண்டனைகளும் நடுவண் "லோக்பால்" மற்றும் மாநில "லோக் ஆயுக்த்" நீதிபதிகளுக்கு கூடுதல் அதிகாரங்களும் வழங்கும் வகையில் வலுவான லோக்பால் சட்டவரைவினை இயற்ற அரசு பிரதிநிதிகளும் குடிமக்கள் பிரதிநிதிகளும் இணைந்த கூட்டுக்குழு ஒன்றினை அமைக்கக் கோரி ஏப்ரல் 5, 2011 அன்று தில்லியிலுள்ள ஜந்தர் மந்தர் என்ற இடத்தில் சாகும்வரை உண்ணாவிரப் போராட்டம் நடத்துகிறார்.


Saturday, March 5, 2011

தமிழக தேர்தல்: நடப்பதும் என்ன... நடக்க போவது என்ன....?

அதிமுக கூட்டணியில் விஜய்காந்த் நுழைந்து 41 தொகுதிகளைப் பெற்றுவிட்ட நிலையில் மதிமுகவுக்கு 17 தொகுதிகள் தான் கிடைக்கும் என்று தெரிகிறது.

அதிமுக கூட்டணியி்ல் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 35 இடங்களில் வைகோவின் மதிமுக போட்டியி்ட்டது. அந்தக் கூட்டணி அமைவதற்கு முதல் நாள் வரை திமுக கூட்டணியில் மதிமுக இருந்தது. மதிமுகவுக்கு 27 இடங்கள் கொடுப்பதாக திமுக கூற, அதை ஏற்க மறுத்து திடீரென அதிமுக கூட்டணிக்கு மாறினார் வைகோ.

இதையடுத்து அவருக்கு 35 இடங்கள் தந்தார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. ஆனால், அதில் 4ல் மட்டுமே வென்று ஜெயலலிதா கூட்டணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார் வைகோ.

இந் நிலையில் அடுத்து வந்த மக்களவைத் தேர்தல், இப்போது நடக்கும் சட்டசபைத் தேர்தலில் காங்கிரசுக்கு வலை விரித்துப் பார்த்தார் ஜெயலலிதா. காங்கிரசுடன் கூட்டணி அமையப் போகிறது என்று ஜெயலலிதா ஆதரவு பத்திரிக்கைகளிலும் செய்திகள் போட்டனர். ஆனால், அப்படி ஒன்று நடக்கவி்ல்லை.

இதையடுத்து யாரை குடிகாரர் என்று சொன்னாரோ அதே விஜய்காந்துடன் கூட்டணிக்கு ஜெயலலிதா முயன்றார். இரு தரப்பிலும் கடும் இழுபறிக்குப் பின்னர் யாரை ஊத்திக் கொடுத்தவர் என்று சொன்னாரோ அவருடனே கூட்டணி அமைத்தார் விஜய்காந்த். இதற்கு ஒரு பத்திரிக்கையாளர் தான் மிகவும் முயற்சி எடுத்தார்.

இப்போது விஜய்காந்த்தின் தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் தரப்பட்டுவிட்ட நிலையில் எல்லோராலும் மிகவும் பாவமாகப் பார்க்கப்படுகிறார் வைகோ. தன்னை பொடாவில் கைது செய்தவர் என்றாலும், புலிகளின் தீவிரமான எதிர்ப்பாளர் என்றாலும் கூட திமுகவின் நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க வேறு வழியில்லாமல் அதிமுக கூட்டணியிலேயே வைகோ தொடர வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார்.

மதிமுகவை ஒழித்துக் கட்ட திமுக தீவிரமாக உள்ள நிலையில் வைகோவுக்கு ஜெயலலிதாவை விட்டால் வேறு வழியும் இல்லை.

இப்போது அதிமுக கூட்டணியில் 15 கட்சிகள் உள்ளன. இதில் மனித நேய மக்கள் கட்சிக்கு 3, புதிய தமிழகம் கட்சிக்கு 2, சேதுராமனின் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்துக்கு 1 என சின்ன சின்ன கட்சிகள் சிலவற்றுக்கும் தேமுதிகவுக்கும் ஒதுக்கப்பட்டது தவிர முக்கிய கட்சிகளான மதிமுக, இடதுசாரிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

ஜெயலலிதாவுக்கு ஏற்ற கூட்டுத் தொகையான 9 வரும் வகையில் அதிமுக 144 இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. மிச்சமுள்ள இடங்களி்ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 இடங்கள் மட்டுமே தர அதிமுக முடிவு செய்துள்ளது. நாளை மதிமுக, இடதுசாரிகளுடன் அதிமுக தொகுதி உடன்பாட்டை இறுதி செய்யலாம் என்று தெரிகிறது. இது தவிர பார்வர்டு ப்ளாக் 1, சரத்குமார் கட்சி, கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, கொங்கு கட்சியின் ஒரு பிரிவுக்கு என சில இடங்கள் ஒதுக்க வேண்டியுள்ளது.

இதனால் மதிமுகவுக்கு அதிகபட்சமே 17 இடங்கள் தான் கிடைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதில் சரத்குமாரும் கார்த்திக்கும் ஓரிரு இடங்களுக்கு எல்லாம் நாங்கள் ஒப்புக் கொள்ள மாட்டோம் என்று கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது. இடங்கள் போதவில்லை வைகோவோ, கார்த்திக்கோ, சரத்குமாரோ, இடதுசாரிகளோ முரண்டு பிடித்தால் விஜய்காந்த் உள்ள தைரியத்தில் அவர்களை வெட்டிவிடவும் அதிமுக தயங்காது என்கிறார்கள்.

இதனால் கொடுப்பதை வாங்கிக் கொண்டு போக வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் தான் சமீபத்தில் நடந்த தனது கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் பேசிய வைகோ, நிலைமை மாறிவிட்டது. நாமும் அதற்கேற்ப மாறிக் கொள்ள வேண்டும் என்று கட்சியினருக்கு பொடி வைத்தார்.

கடந்த ஒரு மாதமாக அதிமுகவுடன் நடத்திய தொகுதி்ப் பங்கீடு பேச்சுவார்த்தைகளில் மதிமுக 36 இடங்கள் கோரி வந்தது. அதாவது கடந்த தேர்தலில் போட்டியிட்டதை விட ஒரு சீட் அதிகம் வேண்டும் என்று கோரியது.

மதிமுகவுக்கு ஒற்றை இலக்கத்தில் தான் சீட் தர முடியும் என்று ஆரம்பித்த அதிமுக கொஞ்சம் கொஞ்சமாக 17க்கு வந்துள்ளது. ஆனால், 36 இல்லாவிட்டாலும் பரவாயில்லை 27 இடங்களாவது வேண்டும் என்று வைகோ கோரி வருகிறார். ஆனால், கடந்த தேர்தலில் தரப்பட்டதில் பாதியைத் தான் இம்முறை அதிமுக தரவுள்ளது. மிக அதிகபட்சம் என்றால் 20 சீட் தான் என்கிறார்கள்.

உண்மையிலேயே பாவம் நம்ம வைகோ!

இப்போது அதிமுகவில் குறைந்த தொகுதிகள் தர முன்வருவதால் மதிமுக , மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளிவந்து திமுகவுடன் கைகோர்த்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. 

இதை தவிர ஜெயலலிதா காங்கிரசை தனது கூட்டணியில் இணைத்துகொண்டால்! காங்கிரஸ் அதிமுகவோடு போய் சேரும் என்று வைத்துகொண்டால்! இழத்தமிழர் பிரச்சனையில் காங்கிரச்சை எதிர்க்கும் மதிமுக வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். இடதுசாரிகளும் வெளியேற வேண்டியது தான்! அப்படி வெளியேறுபவர்களுக்கு திமுக கூட்டணியில் இணைவதை தவிர வேறு வழியில்லை. தொண்டர்களே இல்லாத காங்கிரச்சை விட இவர்களை இணைத்து கொள்வது திமுகவிற்கு பலமே! அதுமட்டுமின்றி இவர்களோடு காங்கிரஸ் எதிர்ப்பாளர்களான சீமான் போன்றவர்களையும் தங்கள் பக்கம் இழுத்து கொள்ளலாம்! அதுவும் ஒரு திமுகவிற்கு கூடுதல் பலமே ! 


அதேநேரம் நட்டாற்றில் தவிக்க விடப்பட்டிருக்கும் காங்கிரஸ் கட்சியினர் அதிக தொகுதிகளையும், கரன்சிகளையும் காட்டி விஜயகாந்தை தங்கள் பக்கம் இழுத்து மூன்றாவது அணி அமைத்து தேர்தலை சந்திக்கும் சாத்தியகூறுகளும் உள்ளது. அப்படி சந்திக்கும் பட்சத்தில் அதன் பலன் திமுகவிற்கு சாதகமாகவே இருக்கும். அதிமுகவின் பலம் குறைந்துவிடும் வாய்ப்பே உள்ளது.

இப்போது கதிகலங்கி இருக்கும் காங்கிரசார் இன்று இரவே சோனியாவை வைத்து கலைஞரோடு தொலைப்பேசியில் பேசி சரி செய்து விடலாம் அது எப்படி தெரியுமா? 'கேட்கும் தொகுதிகள் வேண்டாம். ஆனால் 60 தொகுதிகள் என்று வாங்கினால் அது தாங்கள் இறங்கி வந்ததாக இருக்கும் அதனால் ஒரு 61 தொகுதிகள் கொடுங்கள்' என்று கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக பேசி வாங்கி கொண்டு இருவரும் சமாதானமாக போகவும் வாய்ப்புள்ளது . காரணம் இங்கு முரண்டு பிடித்தால் திமுக மத்தியரசுக்கு அளிக்கும் ஆதரவை விலக்கி கொள்ளும் பட்சத்தில் மேற்குவங்க சட்டசபை தேர்தலில் மம்தாவிடம் அதிகம் தொகுதிக்கு முரண்டு பிடிக்க முடியாமல் போகிவிடும் . மொத்தத்தில் இரண்டு பக்கமும் மண்டியிட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். 

ஆனால் , இவர்கள் இருவரும் தமிழினத்திற்கு செய்த துரோகத்திற்கு தண்டனை என்றால் இவர்களின் கூட்டணி பிரிவாகவே இருக்கும். ஆனால் கலைஞர் நிச்சயம் மனம்விட்டு அழுவார். எந்த பதவிக்கு ஆசைப்பட்டு காங்கிரசாரின் தமிழின அழிப்பை வேடிக்கை பார்த்துக்கொண்டு ஆதரவு அளித்தரோ அதே பதவிக்கு இப்போது அந்த காங்கிரசாரே ஆப்பு வைத்து விட்டதை எண்ணி எண்ணி அழுது புலம்ப வேண்டியது தான். 

மொத்தத்தில் இந்த தேர்தலில் தற்போது நடந்து கொண்டு இருப்பவை எதுவும் இறுதியானது இல்லை. இது ஒரு ஆரம்பமே முடிவு என்ன என்பது இன்னும் சிறுது நாட்களில் தெரிந்து விடும்.