Friday, April 1, 2011

அழகிரியின் மிரட்டலுக்கு பணிந்தது தேர்தல் ஆணையம்


மதுரை சத்யசாய் நகரில் மத்திய மந்திரி மு.க.அழகிரி வீடு உள்ளது. இவர் மத்திய மந்திரியாக இருப்பதால் 24 மணி நேரமும் 3 ஷிப்ட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று அவரது வீட்டிற்கு கொடுக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு திடீர் என வாபஸ் பெறப்பட்டது.

இதை அறிந்த மத்திய மந்திரி மு.க.அழகிரி ஆவேசம் அடைந்தார். இது குறித்து அவர் கூறியதாவது:-

எனது வீட்டிற்கு கொடுக்கப்பட்டு வந்த பாதுகாப்பு வேண்டும் என்றே ஏதோ சதி செய்து வாபஸ் பெறப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையால் சமூக விரோதிகள் குற்றச் செயல்புரிய காரணமாகி விடும்.

எனது உயிருக்கும், குடும்பத்துக்கும், உடமைக்கும் ஏதாவது ஆபத்து நேர்ந்தால் அதற்கு தேர்தல் ஆணையம், மதுரை கலெக்டர் சகாயம், போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் ஆகியோர் தான் பொறுப்பு. நான் தென்மாவட்டங்களில் தீவிர பிரசாரம் செய்து வருகிறேன்.

எனது பணியை முடக்குவதற்காக வேண்டுமென்றே நான் சுற்றுப்பயணத்தில் இருந்த போது என் வீட்டிற்கு கொடுத்த போலீஸ் பாதுகாப்பை வாபஸ் பெற்றுள்ளனர். இந்த நடவடிக்கை அராஜகமானது.எனது வீட்டிற்கு ஒரு டெம்போவேனை அனுப்பி பாதுகாப்பில் இருந்த அனைத்து போலீசார்களையும் அதில் ஏறி வர சொல்லி இருக்கிறார்.

அப்படி வராவிட்டால் சஸ்பெண்டு செய்ய போவதாகவும் போலீஸ் கமிஷனர் எச்சரித்து இருக்கிறார். தேர்தல் பிரசாரத்திற்கு சென்று விட்டு திரும்பி கொண்டு இருந்தபோது எனது காரை சோதனை நடத்தினர். மேலும் எனக்கு கொடுத்து வந்த போலீஸ் பாதுகாப்பையும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

ஆட்சி மாற்றம் வேண்டும் என கலெக்டர் சகாயம் பேசியதை நான் வெளியிட்டேன். இதை மனதில் வைத்து கொண்டு இந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இது குறித்து ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரி ஆகியோருக்கு தந்தி கொடுத்து உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் அவரது வீட்டிற்கு வழக்கமாக கொடுக்கப்பட்டு வந்த 20 போலீசார் மீண்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மத்திய மந்திரி அந்தஸ்தில் இருப்பதால் அவருக்கு கொடுக்க வேண்டிய பாதுகாப்பை தேர்தல் ஆணையம் மீண்டும் வழங்கி உள்ளது.

வழக்கமான பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். ஏற்கனவே இருந்த போலீசாரை மாற்றி விட்டு புதிய போலீசார் போடப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


இன்றைய பதிவுகள்...





No comments:

Post a Comment