கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றி இருப்பதால் நாங்கள் தலை நிமிர்ந்து, நெஞ்சை நிமிர்த்தி மீண்டும் வாக்கு கேட்கிறோம் என, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.
ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் வேட்பாளர் யசோதாவை ஆதரித்து பேசிய ப.சிதம்பரம்,
கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றி இருப்பதால் நாஙகள் தலை நிமிர்ந்து, நெஞ்சை நிமிர்த்தி மீண்டும் வாக்கு கேட்கிறோம். அது மட்டும் அல்ல. தேர்தல் அறிக்கையில் இடம் பெறாத கலைஞர் காப்பீட்டு திட்டம், 108 ஆம்புலன்ஸ், ரூ.1க்கு ஒரு கிலோ அரிசி என பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கடந்த தேர்தலில் அறிக்கையை கிண்டல் செய்தவர்கள் இந்த முறை ஈ அடித்தான் காப்பி அடிப்பதைப் போல காப்பி அடித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள சில அரசியல் விமர்சகர்கள், தங்களை படித்த மேதாவிகளாக காட்டிக் கொள்ளும் ஒரு சிலர், 5 ஆண்டுகள் முதல்வராக இருந்த பின்பு தொடர்ந்து அடுத்து முறை முதல்வராக முடியாது என்கின்றனர்.
டெல்லியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷீலா தீட்சித், ஒரிசாவில் நவீன் பட்நாயக், அசாமில் தருங்கோகாய் ஆகியோர் எப்படி தொடர்ந்து முதல் அமைச்சராக ஆனார்களோ, அதேபோல் கலைஞர் மீண்டும் முதல் அமைச்சராக ஆவார்.
மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளில் 8.5 பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் தகவல் அறியும் உரிமை சட்டம், கல்வி பயிலும் உரிமை சட்டம், வேலை வாய்ப்பு அளிக்கும் உரிமை சட்டம் ஆகிய மூன்றையும் இயற்றி மாறாத சரித்திரம் படைத்த மத்திய அரசு, விவசாயிகளுக்கான கடன் ரூ.72 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்துள்ளது என்றார்.
No comments:
Post a Comment