அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அதன் தலைவர் நடிகர் கார்த்திக் சென்னையில் நேற்று வெளியிட்டார். அப்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
எங்கள் கட்சி சார்பில் 27 வேட்பாளர்களை அறிவித்தோம். இதில் 3 பேர் விலை போய்விட்டனர். 3 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இவர்கள் தவிர மீதமுள்ள 21 பேர் போட்டியிடுகின்றனர்.
எங்கள் கட்சியினர் 2 பேரை சென்னையில் அ.தி.மு.க.வினர் துப்பாக்கி முனையில் காரில் கடத்திச் சென்றுள்ளனர். எங்கள் கட்சியில் இருந்து விலகிவிட வேண்டும் என்று கடத்தல்காரர்கள் மிரட்டி இருக்கிறார்கள். பின்னர் அவர்களை விடுவித்துவிட்டனர்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் மற்றும் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுப்போம். நாகரீகமாக அரசியல் நடத்த நான் விரும்புகிறேன். மற்றவர்கள் அநாகரீக அரசியல் நடத்துகிறார்கள். எங்களை யாரும் மிரட்ட முடியாது. எங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் 21 தொகுதிகளில் நாளை (இன்று) முதல் பிரசாரம் செய்ய உள்ளேன்.
அம்பாசமுத்திரத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறேன். ஒரு நாளைக்கு 2 தொகுதிகள் வீதம் பிரசாரம் செய்வேன். எங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்போம். மற்ற தொகுதிகளில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியினர் அவரவர் விருப்பப்படியும் ஜனநாயகக் கடமை ஆற்றலாம்.
என்னைக் கேட்டார்கள் என்றால் தி.மு.க.வுக்கு ஓட்டுப் போடுங்கள் என்றுதான் சொல்லுவேன். கலைஞர் அமைதியானவர். மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கக்கூடியவர். அதனால்தான் கூட்டணியை சிறப்பாக நடத்துகிறார். அ.தி.மு.க.வுக்குப் போகாமல் தி.மு.க.வுக்குப் போயிருந்தால் எனக்கு தனி மரியாதை கிடைத்திருக்கும்.
தி.மு.க. ஆட்சி நன்றாக நடக்கிறது. அந்த ஆட்சி தொடர்ந்தால் மக்களுக்கு நல்லது. தன்மானமிக்க தலைவர் வைகோ, அ.தி.மு.க.விடம் சிக்காமல் தப்பிவிட்டார். நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் கூறியிருப்பது தவறு. இவ்வாறு நடிகர் கார்த்திக் கூறினார்.
No comments:
Post a Comment