டெல்லியில்
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 23 வயது மாணவி,
சிகிச்சை பலனின்றி சிங்கப்பூர் மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது உடல் இந்தியாவுக்கு
கொண்டு வரப்பட உள்ளது.
சிங்கப்பூர்
மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த மாணவியின் மூளை
மற்றும் நுரையீரல் ஆகியவை மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தன.
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்ட அந்த இளம் பெண்
உயிருக்குப் போராடிய நிலையில், இந்திய
நேரப்படி நள்ளிரவு 2.15 மணிக்கு அவரது உயிர்
பிரிந்தது. அவர் மரணமடைந்த சமயத்தில்,
அவரது பெற்றோரும், இந்திய தூதரக அதிகாரிகளும்
அருகில் இருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
சிங்கப்பூர்
மருத்துவமனையில் ஐசியு பிரிவில் தொடர்ந்து
செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை
அளிக்கப்பட்டு வந்த மாணவியை காப்பாற்ற,
மருத்துவர்கள் குழு அருகில் இருந்தே
கவனித்து வந்தும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம்
ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. மரணமடைந்த
மாணவியின் உடலை இந்தியாவுக்கு கொண்டு
செல்ல வேண்டும் என்று அவரது பெற்றோர்கள்
வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில்,
மாணவியின் மரணத்தால் டெல்லியில் போராட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளதால், அதிகளவு
பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த
16ம் தேதி, டெல்லியில் ஓடும்
பேருந்தில் ஆறு பேர் கும்பலால்
கடுமையாக தாக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட
அந்த மாணவி டெல்லியில் சப்தர்ஜங்
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்துக்கு எதிராக
நாடு முழுவதும் பெரிய அளவிலான போராட்டங்கள்
நடைபெற்றதை அடுத்து, மேல் சிகிச்சை அளிப்பதற்காக,
கடந்த 26-ம் தேதி, சிங்கப்பூர்
கொண்டு செல்லப்பட்டார்.