Friday, August 31, 2012

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான அத்தனை வழக்குகளும் தள்ளுபடி!


கூடங்குளம் அணுஉலையை இயக்குவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், அணுஉலையை இயக்கி மின்சார உற்பத்தியை துவக்க அனுமதி அளித்துள்ளது.

கூடங்குளத்தில் அணுஉலையை இயக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட சில வழக்குகளும் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

அணு உலையை இயக்க அனுமதி....

இது தொடர்பாக 300 பக்கங்கள் கொண்ட உயர்நீதிமன்ற தீர்ப்பில் கூறியிருப்பதாவது,

கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படுகிறது. கூடங்குளம் அணுஉலையை தொடங்குவதற்கு எந்த தடையும் இல்லை. இதற்கு மாநில அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் அணுஉலை இயங்குவதற்கு தேவையான அனுமதிகளை வழங்கலாம்.

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் கூடங்குளம் பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார். அதன்படி மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த கூடிய திட்டங்கள், நிதியுதவி ஆகியவற்றை செய்ய வேண்டும். 1வது மற்றும் 2வது பிரிவு அணு உலைகளை இயக்க அனுமதி வழங்கப்படுகிறது என்று அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கூடங்குளம் அணுஉலையை இயக்க அனுமதி கிடைத்துள்ளதால், நாட்டில் நிலவி வரும் கடும் மின் தட்டுப்பாடு விரைவில் நீங்கும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை: மன்மோகன் சிங் திட்டவட்டம்

ஈரான் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மன்மோகன்சிங் இன்று நாடு திரும்பினார். விமானத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு தொடர்பாக பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை. பிரதமர் அலுவலகத்தின் மாண்பை தொடர்ந்து காப்பேன்.

சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் அலுவல்களை தடுத்து வருகின்றன. இதனால் அரசு நிர்வாகம் பாதிக்கப்படுகிறது. அதேசமயம் எதிர்க்கட்சிகளின் புகார்களுக்கு போட்டியாக எதுவும் பேசமாட்டேன். போட்டியாக பேசி எதையும் பெற முடியாது. எனவேதான் நான் முன்பு கூறியதுபோல் அமைதியாக இருக்கிறேன்.

உள்நாட்டு அரசியலில் ஒருங்கிணைப்பு இல்லாததால், 9 சதவீத பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கிற்கான அடித்தளத்தை நாம் அமைக்க முடியவில்லை.

இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்குவதில், பாகிஸ்தான் அரசு உண்மையான உணர்வுடன் செயல்படவேண்டியது அவசியம். குறிப்பாக மும்பைத் தாக்குதல் தீவிரவாதிகளிடம் விசாரணை நடத்துவது பாகிஸ்தானுக்கு முக்கியமான சோதனையாகும்.

இந்தியாவுடன் இணைந்து வர்த்தகம் செய்ய ஈரான் ஆர்வமாக உள்ளது. ஈரான் மீது பொருளாதார தடைகள் இருப்பதால் இது கடினமாகவே இருக்கும். இருப்பினும் ஈரானுடன் உறவுகளை மேம்படுத்தும் வழிமுறைகள் பற்றி ஆராயப்படும். அணி சேரா நாடுகள் மாநாடு எந்த நாட்டுக்கும் எதிராக நடத்தப்பட்டது அல்ல. 

இவ்வாறு அவர் கூறினார்.


தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வெட்டிக்கொலை: கொலையாளி அடித்து கொல்லப்பட்டார்


கமுதியில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. காதர் பாட்சா தனது வீட்டிலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்றவரை அக்கம்பக்கத்தினர் அடித்தே கொன்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதி முன்னாள் திமுக எம்.எல்.ஏ. காதர் பாட்சா(எ) வெள்ளைச்சாமி (70). அவர் கமுதியில் தனது குடும்ப்ததாருடன் வசித்து வந்தார். அவர் தினமும் அதிகாலையில் நடைபயிற்சி சென்று வரும் பழக்கம் உள்ளவர். இன்று அதிகாலை அவர் நடைபயிற்சி சென்று விட்டு வீடு திரும்பினார்.

அப்போது மேலராமநதியைச் சேர்ந்த தனசீலன் (42) என்பவர் காதர் பாட்சாவை சந்திக்க அவரது வீட்டிற்கு வந்தார். அப்போது தனசீலன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து காதர்பாட்சாவை சரமாரியாக வெட்டினார்.

இதில் படுகாயமடைந்த அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் தப்பிச் செல்ல முயன்ற தனசீலனை அக்கம்பக்கத்தினர் அடித்து உதைத்தனர். இதில் அவர் அதே இடத்தில் இறந்தார். காதர் பாட்சாவும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காதர் பாட்சா, தனசீலன் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காதர் பாட்சா கொல்லப்பட்ட சம்பவம் பற்றி அறிந்த திமுக தொண்டர்கள் அங்கு குவிந்துள்ளனர். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கொல்லபட்ட முன்னாள் எம்.எல்.ஏவுக்கு ருக்மணி என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் 5 மகள்கள் உள்ளனர்.

முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என்று கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

காதர் பாட்ஷா என்கிற வெள்ளைச்சாமி, இரண்டு முறை முதுகளத்தூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் ஆவார்.

தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 
கழக சொத்து பாதுகாப்பு குழு முன்னாள் உறுப்பினரும், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் கழக உறுப்பினருமான காதர் பாட்சா என்ற வெள்ளைச்சாமி இன்று (31-ந்தேதி) காலை மறைவெய்தினார். அவரது மறவையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கழக அமைப்புகள் அனைத்தும் கழக கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறும், கழகத்தின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்திவைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்திரா காந்தியிடம் மன்னிப்பு கேட்ட நீல் ஆம்ஸ்டிராங்


நிலவில் கால் வைத்த முதல் மனிதரான நீல் ஆம்ஸ்டிராங் இந்தியா வந்தபோது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

நீல் ஆம்ஸ்டிராங்கும், அவருடன் நிலவில் நடந்த எட்வின் ஆல்டரினும் பூமி திரும்பிய பிறகு உலக முழுவதும் சுற்றுப்பயணம் செய்தனர். அதன் ஒரு பகுதியாக அவர்கள் இந்தியா வந்தனர். அவர்கள் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை அவரது அலுவலகத்தில் வைத்து சந்தித்து பேசினர். அந்த சந்திப்பின்போது முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங்கும் அங்கிருந்தார்.

இந்நிலையில் அண்மையில் லண்டன் சென்ற நட்வர் சிங் ஆம்ஸ்டிராங்கின் மரண செய்தியைக் கேளிவிப்பட்டார். அப்போது அவர் ஆம்ஸ்டிராங் குறி்த்து கூறுகையில்,

நீல் ஆம்ஸ்டிராங் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை அவரது அலுவலகத்தில் வைத்து சந்தித்தார். அப்போது புகைப்படக்காரர்கள் அந்த இருவரையும் போட்டோ எடுத்துவிட்டுச் சென்ற பிறகு அங்கு அமைதி நிலவியது.

இதையடுத்து ஏதாவது பேசுமாறு பிரதமர் எனக்கு ஜாடை காட்டினார். உடனே நான் ஆம்ஸ்டிராங்கை பார்த்து, மிஸ்டர் ஆம்ஸ்ட்ராங் நீங்கள் நிலவில் நடப்பதைப் பார்க்க எங்கள் பிரதமர் அதிகாலை 4.30 மணி வரை தூங்காமல் விழித்திருந்தார் என்றேன்.

இதையடுத்துப் பேசிய ஆம்ஸ்டிராங் பிரதமரிடம், மேடம் பிரைம் மினிஸ்டர் உங்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தியதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அடுத்த முறை ஒழுங்கான நேரத்தில் நிலவில் இறங்குவது போன்று பார்த்துக் கொள்கிறோம் என்று கூற அந்த அறையே கலகலப்பானது என்று கூறியுள்ளார் நட்வர் சிங்.

ஆம்ஸ்டிராங் கடந்த 1969ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி நிலவில் கால் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தானத்தால் கேன்சலான ஷங்கரின் 'ஐ' ஷூட்டிங்


காமெடி நடிகர் சந்தானத்தால் ஷங்கரின் ஐ பட ஷூட்டிங் கேன்சல் செய்யப்ப்டடுள்ளது.

இன்றைய தேதிக்கு கோலிவிட்டில் மிகவும் பிசியாக இருக்கும் காமெடி நடிகர் யார் என்றால் அது சந்தானம் தான். மனிதன் ஓடி, ஓடி நடி்ததுக் கொண்டிருந்தார். அவர் டேட் இல்லை என்று கூறினால் கூட இயக்குனர்கள் அவரை விடுவதாக இல்லை. அவரிடம் டேட் இல்லை என்று தெரிந்தும் அவரை அணுகி ப்ளீஸ் சந்தானம் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து என் படத்திற்கு டேட் கொடுங்களேன் என்று ஒவ்வொரு இயக்குனரும் கோரிக்கை விடுக்கின்றனர்.

அட அவர்கள் இவ்வளவு இறங்கி வரும்போது பிஹ்ஹு பண்ண முடியாதல்லவா அதனால் சந்தானமும் எப்படியோ டேட் கொடுத்துவிடுகிறார். இப்படி அட்ஜெஸ்ட் பண்ணி டேட் கொடுத்தது இயக்குனர் ஷங்கரின் தலையில் வந்து விடிந்தது. ஆம், ஷங்கரின் ஐ படத்தில் சந்தானம் நடிக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தானம் நடிக்கும் காட்சிகளை படமாக்க படக்குழுவினர் ரெடியானார்கள்.

ஆனால் சந்தானத்தால் அன்றைய ஷூட்டிங்கிற்கு வர முடியாமல் போனது. இதனால் ஷூட்டிங் கேன்சல் ஆனது.


பெங்களூர் டெஸ்ட்: டெய்லர் சதத்தால் வலுவான நிலையில் நியூசிலாந்து அணி


ராஸ் டெய்லர் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 115 ரன்னில் வெற்றி பெற்றது.    
 
இந்நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பெங்களூரில் இன்று துவங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டெய்லர் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு, இந்திய பந்துவீச்சாளர் ஜாகீர் கான் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அளித்தார். நியூசிலாந்தின் துவக்க ஆட்டக்காரர் மெக்கல்லம் ரன் ஏதும் எடுக்காமல் ஜாகீர் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.        
 
அதன்பின்னர் வந்த கனே வில்லியம்சன் 17 ரன்களில் வெளியேறினார். ஓரளவு சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த மற்றொரு துவக்க ஆட்டக்காரர் கப்தில் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஓஜா பந்தில் ஆட்டமிழந்தார். உணவு இடைவேளையின் போது நியூசிலாந்து அணி  29 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்திருந்தது.    
 
 உணவு இடைவேளைக்குப் பின்னர் கேப்டன் டெய்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது அதிரடியால் நியூசிலாந்து அணி சரிவிலிருந்து மீள ஆரம்பித்தது. டெய்லருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய பிளைன் 33 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய டெய்லர் சதம் அடித்தார். சதம் அடிக்க அவர் வெறும் 99 பந்துகளே எடுத்துக்கொண்டார். சிறிது நேரத்தில் பிராங்க்ளின் 8 ரன்னில் அவுட்டானார்.  
 
அடுத்த சில நிமிடங்களில் டெய்லர் 113 ரன்னில் ஆட்டமிழந்தார்.   அதன்பின்னர் வான் விக்கும், பிரேஸ்வெல்லும் இணைந்து சிறப்பாக ஆடினர். இருவரும் ரன்குவிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நேரம் வெளிச்சமின்மை காரணமாக முதல்நாள் ஆட்டம் முன்னதாகவே முடித்துக் கொள்ளப்பட்டது.   அப்போது   நியூசிலாந்து அணி 81.3 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 328 ரன்கள் எடுத்திருந்தது. வான் விக் 63 ரன்னுடனும், பிரேஸ்வெல் 30 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய தரப்பில் ஓஜா 4 விக்கெட்டுகளும், ஜாகீர் கான், அஷ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.  
 
 ஒரு கட்டத்தில் சரிவிலிருந்த நியூசிலாந்து அணி டெய்லர் மற்றும் வான் விக்கின் சிறப்பான ஆட்டத்தால் இப்போது வலுவான நிலையை அடைந்துள்ளது. நாளை இரண்டாவது நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெற உள்ளது.


குஜராத் கலவர வழக்கில் அதிரடி தீர்ப்பு: முன்னாள் அமைச்சர் உள்பட 31 பேருக்கு ஆயுள் தண்டனை

குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002ம் ஆண்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தீ வைத்ததில் 58 கரசேவகர்கள் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் நடந்த கலவரங்களில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

அதன்பின்னர் மறுநாள் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் நடத்தப்பட்ட முழு அடைப்பு போராட்டத்திலும் வன்முறை வெடித்தது. இதில் நரோடா பாட்டியா என்ற இடத்தில் 97 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி, முன்னாள் பெண் அமைச்சரும், நரோடா தொகுதி பாரதீய எம்.எல்.ஏ.வுமான மாயா கோட்னானி, பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி உள்பட மொத்தம் 62 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்தது. இவர்களில் 32 பேர் குற்றவாளிகள் என்றும், மற்றவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றும் சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 32 பேரில் ஒருவர் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாகிவிட்டார்.

இந்நிலையில் நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் தீர்ப்பு இன்று கூறப்பட்டது. முக்கிய குற்றவாளியான மாயா கோட்னானிக்கு 2 வழக்குகளில் 28 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிப்பதாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜோத்சனா யஜ்னிக் தீர்ப்பு கூறினார்.

மேலும் பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கிக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாகவும், ஆயுள் முழுவதையும் அவர் சிறையில் கழிக்க வேண்டும் என்றும் நீதிபதி கூறினார். இதேபோல் மற்ற 29 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ராஜீவ் காந்தி கொலை வழக்கு: புயல் கிளப்ப தயாராகும் திருச்சி வேலுச்சாமி


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குறித்து பல திடுக்கிடும் தகவல்களுடன் ஒரு புத்தகத்தை எழுதி வருகின்றார் திருச்சி வேலுச்சாமி.

பதவியில் உள்ளவர்களும், அரசியலில் உள்ளவர்களும் ஓய்வு பெற்ற பின்பு யாருக்கும் தெரியாத, தாங்கள் அறிந்து வைத்த ரகசியங்களை புத்தகம் மூலம் வெளியிட்டு வருகின்றனர். தற்போது அந்த வரிசையில் ஒரு பிரபல தலைவரின் கொலை வழக்கு குறித்து அதிர்ச்சி, ஆச்சர்யம் கலந்த உண்மைகளை உலகிற்கு வெளி கொண்டு வரும் முயற்சியில் ஈடுப்டடுள்ளார் திருச்சியைச் சேர்ந்த வேலுச்சாமி.

காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவராகவும், ஜனதா கட்சி தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் சாமிக்கு உதவியாளராகவும் இருந்து வந்தவர் திருச்சி வேலுச்சாமி. மனதில் பட்டதை பட்டென்று சொல்லிவிடும் குணம் கொண்டவர். இது அவருக்கு அரசியலில் பெரும் பலம் சேர்த்தது. அதுவே பலவீனமாகவும் ஆகிப்போனது.

சிறந்த பேச்சாளர், சிறந்த எழுத்தாளர் என பண்முகம் கொண்ட அவர் விடுதலைப்புலிகள் மற்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சாமி, புதிய பார்வை ஆசிரியர் (சசிகலா) நடராஜன் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் ஆகியோருடன் நல்ல நெருக்கம் கொண்டவர்.

இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலையை விடுதலைப் புலிகள் தான் செய்தார்கள் என்று அப்போது தகவல் பரவியபோது, அதை மறுத்து மாற்றுக் கருத்து வெளியிட்டவர் திருச்சி வேலுச்சாமி. இதனால் அவரை பலரும் உற்று நோக்கத் தொடங்கினர்.

இந்த நிலையில் தற்போது ராஜீவ் காந்தி படுகொலையின் பின்னணி பற்றி முழு விவரப் புத்தகம் ஒன்றை எழுதி வருகிறார். இந்தப் புத்தகத்தின் மூலம் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் என்கிறார்கள்.


உலக கோப்பையை வென்ற ஜுனியர் கேப்டன் உன்முக் சந்த் தேர்வு எழுத அனுமதி மறுப்பு


சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த ஜுனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது. இந்திய ஜுனியர் கேப்டன் உன்முக் சந்த் 111 ரன்கள் விளாசி வெற்றிக்கு வழிவகுத்தார். டெல்லியை சேர்ந்த உன்முக் சந்த் அங்குள்ள செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் படித்து வருகிறார்.
 
விளையாட்டு 'கோட்டா'வில் கடந்த ஆண்டு இந்த கல்லூரியில் சேர்ந்த உன்முக் சந்த், தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியதால் கல்லூரியில் அவரது வருகை பதிவு குறைந்தது. இந்த கல்லூரி விதிப்படி விளையாட்டு `கோட்டா'வில் படிப்போருக்கு ஆண்டு வருகை பதிவு குறைந்தது 33.33 சதவீதம் இருக்க வேண்டுமாம். ஆனால் உன்முக் சந்த்தின் வருகை பதிவு அதற்கும் கீழாக இருந்ததால் இரண்டாம் செமஸ்டர் தேர்வு எழுத அவருக்கு கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. இந்த விவகாரம் இப்போது சர்ச்சையாக கிளம்பி இருக்கிறது.
 
மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அஜய்மக்கான் இது குறித்து கூறுகையில், 'இந்த நடவடிக்கை முற்றிலும் நியாயமற்றது. அவரை தேர்வு எழுதவிடாமல் தடுத்து நிறுத்துவதற்கு பதிலாக இது போன்ற விளையாட்டு வீரருக்கு பொருத்தமான மாற்றுவழியை கண்டுபிடிக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து டெல்லி பல்கலைக்கழகத்துடனும், சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்துடனும் பேசுவேன். இது போன்ற வீரர்களிடம் தேர்வு எழுத முடியாது என்று சொல்வதற்கு பதிலாக அவர்களை அழைத்து, இங்குள்ள பிரச்சினைகளை விரிவாக எடுத்து சொல்ல வேண்டும். அதன் பிறகு சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும். தேவைப்பட்டால் அவர்களுக்கு ஸ்பெஷல் தேர்வுகளையும் நடத்தலாம்' என்றார்
 
இந்திய கேப்டன் டோனியும், ஜுனியர் கேப்டன் உன்முக் சந்த்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார். இதுபற்றி, ‘இந்த பிரச்சினை, இந்தியாவில் விளையாட்டுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதை காட்டுகிறது. இந்த சம்பவம் வேதனை அளிக்கிறது’ என்று ட்விட்டர் இணையதளத்தில் டோனி குறிப்பிட்டுள்ளார்.


இந்தியாவில் முதன்முறையாக இயக்குநர் சங்க இணையதளம்!


தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க இணையதளம் தொடக்க விழாவும், இயக்குநர் பிரபுசாலமனின் தயாரிப்பில் உருவாகும் "சாட்டை" படத்தின் இசை வெளியீட்டு விழாவும் ஒருசேர சென்னை சத்யம் திரையரங்கில் எஸ்.பி.முத்துராமன், கே.பாக்யராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், லிங்குசாமி, எஸ்.பி.ஜனநாதன், அமீர், சமுத்திரகனி, கரு.பழனியப்பன், மாதேஷ், ஜெயம் ராஜா, சீனு ராமசாமி, கவுதமன், ஜீவன், சந்தானபாரதி, ஹோசிமின் உள்ளிட்ட இயக்குநர் சங்க பொறுப்பாளர்கள், பிரபலங்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்ட இவ்விழாவில் "சாட்டை" ஆடியோ சி.டி. வெளியீட்டிற்கு முன்பாக பேசிய இயக்குநர் சங்க செயலாளர் அமீர், சங்கத்தில் தாங்கள் பொறுப்பேற்ற‌து முதல் நடைபெற்ற வேதனையான விஷயங்களையும், சாதனையான விஷயங்களையும் பட்டியலிட்டு பேசினார். அதன் சாரம்சம் வருமாறு...,

ஒருவருடத்திற்கு முன் நான், பொருளாளர் எஸ்.பி.ஜனநாதன் உள்ளிட்டவர்கள் பொறுப்பிற்கு வந்தபோது சங்கத்தில் இருந்தவர்களே படம் எடுக்கறதை விட்டுவிட்டு சங்கம் அது, இதுவென்று இவர்களால் தாக்கு முடியுமா? எனக்கேட்டு போராட்டம் தர்ணா என்று எங்களுக்கு எதிராக எவ்வளவோ செய்தனர். அதில் மூன்று பேர் இன்று அடக்கியாயிற்று... இன்னும் ஒருவர் அடங்கியபாடில்லை... நான் ஆதிபகவன் ஷூட்டிங்கில் இருந்தபோது உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கூறினார். நான் கூட வாழ்த்துக்கள் என மெ‌ஸேஜ் அனுப்பினேன். அதை கூட அவர் மீடியாக்களிடம் பப்ளிசிட்டி பண்ணி பார்த்தார். அதுபற்றி எல்லாம் கவலைப்படாமல் இதோ சங்கத்திற்கு சொந்தமாக இடம், கட்டடம் கட்டியாயிற்று, அடுத்து இன்று புதிதாக www.tantis.org எனும் இணையதளமும் தொடங்கியாச்சு. அதில் இந்த சாட்டை ஆடியோ விழா உள்ளிட்ட சினிமா விழாக்களை லைவ்வாக ஒளிப்பரப்பும் வெப் டி.வி.யும் ஆரம்பித்தாயிற்று. இதற்கு அடுத்து ஒரு டி.வி.சேனல் ஆரம்பிக்க இருக்கிறோம். எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால் எல்லாமும் முடியும் என்பதே என் எண்ணம்!

இயக்குநர் சங்கதேர்தலில் அடுத்து நான் நிற்கப்போவதில்லை... ஆனாலும் சங்கம் சிறப்பாக செயல்பட 24-மணி நேரமும் தன்னை அர்பணித்து கொண்டிருக்கும் எஸ்.பி.ஜனநாதன் உள்ளிட்டவர்களை தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன். இந்தியாவிலேயே இயக்குநர் சங்கத்திற்கு என்று ஒரு வெப்சைட் இருப்பது இதுதான் முதல்முறை! அதுவே நமது சாதனை! சாதனைகள் தொடர எதை எடுத்தாலும் குறை கூறுபவர்கள் அடங்கினாலே போதுமென்று பேசினார் அமீர்.

விழாவில் கே.பாக்யராஜ், எஸ்.பி.ஜனநாதன், லிங்குசாமி, பிரபுசாலமன், கரு.பழனியப்பன் உள்ளிட்டவர்களும் சங்கம் பற்றியும், சாட்டை படம் பற்றியும், புதிதாக தொடங்கி இருக்கும் இணையதளம் பற்றியும் சூடாகவும், சுவாரஸ்யமாகவும் பேசினர்!


பாகிஸ்தான்- சீனாவுக்கு செக் வைக்கும் இந்தியா !


அணிசேரா நாடுகளின் மாநாட்டிற்காக பிரதமர் மன்மோகன்சிங் ஈரான் தலைநகர் டெஹ்ரான் சென்றிருந்தாலும் அந்நாட்டின் ஷா பஹார் (Chah Bahar) துறைமுக விரிவாக்க திட்டம் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கிறது இத்திட்டத்துக்காக இந்தியா ரூ400 கோடி அளவு முதலீடு செய்யக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

ஈரான் சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங், ஈரான் நாட்டு மதத் தலைவரான கொமேனியையும் அதிபர் அகமத் நிஜாத்தையும் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தத் தலைவர்களுடன் இந்திய பிரதமரின் சந்திப்பு சம்பிராதயமான இருநாட்டு தலைவர்களின் சந்திப்பைப் போல் இல்லை. அதுவும் கொமேனியுடன் இந்திய பிரதமர் ஒருவர் சந்தித்துப் பேசுவது என்பது கடந்த 10 ஆண்டுகளில் இதுவே முதல் முறையும்கூட. ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் மேற்காசிய நாடுகளின் விவகாரங்கள் தொடர்பாகவும் பயங்கரவாதம் தொடர்பாக இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஷா பஹார் துறைமுக விரிவாக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்கப்பட்டிருக்கிறது.

ஈரானின் துறைமுகத்தை இந்தியா விரிவாக்கம் செய்வது ஏன்?

ஈரானுடனான இந்திய வர்த்தக உறவானது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்த பின்னர் வீழ்ச்சியை சந்தித்தது. ஆனால் ஈரானை மிகவும் ஒரு முக்கிய நட்பு நாடாக வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு இருந்து வருகிறது.

தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவைச் சுற்றிய அனைத்து நாடுகளிலும் இந்தியாவுக்கு எதிராக தமது ராணுவத்தை நிலை நிறுத்தி வைத்திருக்கிறது சீனா. இதேபோல் மத்திய ஆசியாவிலிருந்து சீனாவுக்கு கடல்வழியே கொண்டு செல்லப்படுகிற எண்ணெய் போக்குவரத்துக்கு இடையூறு எதுவும் வந்துவிடாத வகையில் பாகிஸ்தானின் கத்வார், மாலத்தீவு மற்றும் இலங்கையின் அம்பந்தோட்டா ஆகியவற்றில் தமது கடற்படையை நிலை நிறுத்தி இருக்கிறது. மாலைத்தீவில் நீர்மூழ்கித் தளமே அமைத்திருக்கிறது. சீனாவுக்கும் இடையே மோதல் ஒன்று எதிர்காலத்தில் நிகழக் கூடுமெனில் சீனாவின் கடல்வழி எண்ணெய் போக்குவரத்துக்கு எங்கும் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு


இந்தியாவோ சுற்றியுள்ள நாடுகள் அனைத்தும் நட்பு நாடுகள் என்று நம்பிக் கொண்டே ஏமாந்து கொண்டிருக்கிறது. இதுதான் இலங்கையிலும் நடந்து கொண்டிருக்கிறது. இலங்கை இப்பொழுது சீனாவின் முழுமையான ஆதிக்கம் உள்ள நாடாகவே மாறிவிட்டது. சீனாவின் பாதுகாப்பு அமைச்சரே அந்நாட்டுக்கு சென்று ராணுவ முகாம்களைப் பார்வையிடுகிற அளவுக்கு சீனாவுக்கு நட்பு நாடாக இருந்து வருகிறது.

இந்நிலையில் சீனாவுக்கு செக் வைக்கக் கூடிய இரண்டு இடங்களாக இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புகள் ஆப்கானிஸ்தானும், ஈரானும்தான். இந்தியாவை சுற்றியுள்ள நாடுகள் அனைத்துமே இந்தியாவை கைவிட்டுவிட்ட நிலையில் இந்த நாடுகளையாவது தக்க வைத்துக் கொள்ளவே இந்தியா போராடி வருகிறது. இதற்காகவே ஆப்கானிஸ்தானில் பெருந்தொகையான நிதியை முதலீடு பல்வேறு கட்டமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அங்கிருந்து பெருமளவு தாதுப் பொருட்களை அகழாய்வு செய்து எடுத்தும் வருகிறது. இதனால் பாகிஸ்தான் நாட்டு எல்லைக்கு மிக அருகில் ஓமன் வளைகுடாவில் இருக்கக் கூடிய ஷா பஹார் துறைமுகத்தின் இரண்டாவது விரிவாக்கப் பணிகளில் இந்தியா ஈடுபடுத்திக் கொள்ள இருக்கிறது.

ஷா பஹார் துறைமுகத்தால் என்ன பயன்?

இந்த துறைமுகத்தை விரிவாக்கம் செய்வதன் மூலம் எண்ணெய்வளமிக்க மத்திய ஆசிய நாடுகளை இந்தியா நேரடியாக தொடர்பு கொள்ள முடியும். ஆப்கானிஸ்தானில் இந்தியா மேற்கொண்டு வரும் மேம்பாட்டு பணிகளுக்கும் உதவியாக இருக்கும். அத்துடன் பெரும்பாடுபட்டு பாகிஸ்தானில் சீனா விரிவாக்கம் செய்திருக்கும் கத்வார் துறைமுகமும் அருகேதான் இருக்கிறது. சீனாவுக்கு போகிற எண்ணெய் கப்பல்கள் ஷா பஹார் துறைமுகத்தை கடந்துதான் கத்வாருக்கு வந்து சேரும். அங்கிருந்து பலுசிஸ்தான் பகுதிகள் வழியே ரயில் மூலமாக எல்லையோர சீனாவின் மாகாணங்களுக்கு எண்ணெய் எடுத்துச் செல்லப்படுகிறது.

சீனாவுடன் மோதல் உருவானால் ஷா பஹார் துறைமுகத்தில் இருந்து சீனாவின் எண்ணெய் போக்குவரத்தை தடுப்பது அல்லது தாக்குவது என்பது இந்தியாவுக்கு எளிதாக இருக்கும். இதேபோல் தற்போது ஈரானுடனான கச்சா எண்ணெய் வர்த்தகம் மட்டுப்பட்ட நிலையில் இருந்தாலும் எதிர்காலத்தில் இந்தியாவின் கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு ஷா பஹார் துறைமுகம் உதவியாக இருக்கும்.

துறைமுகத்தை பார்வையிட்ட இந்திய அதிகாரிகள்


தற்போது ஈரான் சென்றிருக்கும் இந்திய அதிகாரிகள் ஷா பஹார் துறைமுகத்தைப் பார்வையிட்டுள்ளனர். இதுபற்றி கருத்து தெரிவித்த இந்திய அதிகாரிகள், ஷா பஹார் துறைமுகத்தின் முதல் கட்டப் பணிகளை ஈரான் செய்து முடித்துள்ளது. இரண்டாவது கட்ட விரிவாக்கப் பணியில் இந்தியா தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் என்று கூறியுள்ளனர்.

ஆப்கான் - ஈரான் ரயில் பாதை அமைக்கும் இந்தியா

இதேபோல் ஆப்கானிஸ்தான் நாட்டின் பாமியான் மாகாணத்திலிருந்து ஷா பஹார் துறைமுகத்துக்கு 900 கிலோ மீட்டர் நீளத்துக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டத்தையும் இந்தியா நிறைவேற்றித்தர இருக்கிறது. இதன்மூலம் ஆப்கானிஸ்தானின் பாமியான் மாகாணத்தில் இந்திய அரசு மேற்கொண்டு வரும் இரும்புத் தாதுக்களை எளிதாக இந்தியாவுக்கு கொண்டுவர முடியும் என்பதுதான் இந்தியாவின் திட்டம்.

பாகிஸ்தானை முழுமையாக கைவிடலாம்

ஷா பஹார் துறைமுகத்தை மேம்படுத்திவிட்டால் இனி ஆப்கானிஸ்தானில் இந்தியா மேற்கொண்டு வரும் பணிகளுக்காக பாகிஸ்தான் நாட்டு வழியே சென்று கொண்டிருக்கத் தேவையே இருக்காது. இந்தியாவிலிருந்து நேரடியாக ஈரானின் ஷா பஹார் துறைமுகம் மூலமாக எளிதாக ஆப்கானிஸ்தானை அடைய முடியும். பாகிஸ்தானை ஓரம்கட்டிவிடலாம்.

இந்த விவகாரங்கள் குறித்து நவம்பரில் நடைபெற உள்ள இந்தியா- ஈரான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டுக் கூட்டத்திலும் விவாதிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல் ஆப்கானிஸ்தான் - ஈரான் - இந்தியா என முத்தரப்பு பேச்சுகளை நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.


பாகன் படத்திற்காக குத்துப்பாட்டு எழுதிய பாரதியார் எள்ளு பேரன்!!


தமிழ் சினிமாவில் என்ன வேண்டுமானாலும் எப்ப வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கு பாகன் படமும் ஒரு உதாரணம். புதுமுக இயக்குநர் அஸ்லாம் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ஜனனி அய்யர் நடித்து விரைவில் வெளிவர உள்ள படம் பாகன். ஒரு யதார்த்தமான கதையை பொள்ளாச்சி பின்னணியில் ‌கதையாக்கி உள்ளார் இயக்குநர். முதன்முறையாக ஸ்ரீகாந்த் அம்மாவாக கோவை சரளா நடித்துள்ளார். படத்தில் ஸ்ரீகாந்த், கோவை சரளா, பரோட்டா சூரி ஆகியோர் ஆடி பாடுவதாக ஒரு பாடலை தயார் செய்துள்ளார் இயக்குநர். ‌ஜேம்ஸ் வசந்தன் இசையில் பாரதியாரின் எள்ளு பேரன் நிரஞ்சன் பாரதி ஒரு குத்து பாடலை மிக சரளமாக எழுதி உள்ளார் என்பது தான் ஆச்சர்யம். "சிம்பா சம்பா ரம்பா... ஏஞ்சலினா அவ லவ்வர்னா..." என்று ஏகத்துக்கும் வார்த்தைகளை கொட்டி எழுதி விட்டாராம். பாடல் வெளிவந்தால் ரசிகர்களிடம் பலத்த பாராட்டை பெரும் என்று இப்போதே படக்குழு உற்சாகமாகியுள்ளனர்.


சஹானாஸ் பேட்டி எதிரொலி சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சிக்குவாரா?


கேரளப் பெண் சஹானாஸ் இஸ்மாயில் உள்பட 25க்கும் மேற்பட்ட பெண்களை அவர்கள் உடை மாற்றும்போது ரகசியமாக கேமராவில் பதிவு செய்து பிளாக்மெயில் செய்ததாக கூறப்படும் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரைப் பிடித்து விசாரிக்க போலீஸார் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

கேரளாவைச் சேர்ந்த பெண் சஹானாஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 50க்கும் மேற்பட்ட ஆண்களை மோசடியாக திருமணம் செய்ததாக அவர் மீது, அவரது கணவர்கள் என்று கூறப்படும் சிலர் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து சஹானாஸ் தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் வாரப் பத்திரிக்கை ஒன்றுக்கு சஹானாஸ் அளித்த பேட்டியில் தன் மீதான புகார்களை திட்டவட்டமாக மறுத்தார். தனது இந்த நிலைக்குக் காரணம், தான் முன்பு வேலை பார்த்து வந்த சூப்பர் மார்க்கெட் ஒன்றின் உரிமையாளர்தான் காரணம் என்றும் கூறியுள்ளார்.

அந்த கடையில் தான் வேலை பார்த்தபோது உடை மாற்றும் அறைக்குள் ரகசிய கேமராவை வைத்து தன்னை நிர்வாணமாக அவர் பிடித்தார் என்றும், இதைக் காட்டி தனது காம இச்சையைத் தீர்த்துக் கொள்ள முயன்றார் என்றும், அதற்கு தான் உடன்படாததால் சிலரைத் தூண்டி விட்டு தனது கணவர்கள் என்று கூறிப் புகார் கொடுக்கத் தூண்டி விட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் சஹானாஸ்.

மேலும் தன்னைப் போல 25க்கும் மேற்பட்ட பெண்களை அந்த கடை உரிமையாளர் சீரழித்து வருவதாகவும் கூறியிருந்தார் சஹானாஸ். இதையடுத்து சம்பந்தப்பட்ட கடை உரிமையாளரைப் பிடித்து விசாரிக்க போலீஸார் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையே, சென்னைப் புறநகர் ஒன்றில்தான் சஹானாஸ் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அங்குள்ள அவரது தோழியின் வீட்டில் அவர் அடைக்கலம் புகுந்திருப்பதாகவும் தெரிகிறது. இதையடுத்து அந்தத் தோழி யார், அவரது வீடு எங்கு உள்ளது என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அவர் வேறு எங்காவது தப்பி விடாத வகையில் தீவிரக் கண்காணிப்பையும் முடுக்கி விட்டுள்ளதாக தெரிகிறது..?


திருட்டு டிவிடியில் முகமூடி படத்தை பாருங்கள் - மிஸ்கின்!


மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா,பூஜா ஹெக்டே நடித்திருக்கும் படமான முகமூடி ஆகஸ்டு 31-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.முகமூடி படத்தின் ரிலீஸைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த இயக்குனர் மிஸ்கின் முகமூடி படத்தில் எம்.ஜி.ஆர் பாணியைத் தான் பின்பற்றியிருக்கிறோம்.


எவ்வளவு அடி வாங்கினாலும் மறுபடியும் எழுந்துவந்து தர்மத்தை காப்பவர் தான் எம்.ஜி.ஆர். அதே போல் தான் முகமூடி படத்தின் கதாநாயகனும் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் அதைப் பொருட்படுத்தாது மக்களைக் காப்பாற்றுவதே குறிக்கோளாய் இருப்பார்.

இந்த படத்தை ரசிகர்கள் திருட்டு டிவிடியில் பார்த்தால் கூட எனக்கு கவலையில்லை. திருட்டு டிவிடியில் பார்த்தாலும் இப்படி ஒரு நல்ல படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் தியேட்டருக்கு தானாக வருவார்கள். 50 ரூபாயை வீணாக்க வேண்டாம் என நினைத்தால் முதலிலேயே தியேட்டருக்கு வந்து பாருங்கள்என்று கூறினார்.கல்யாண ராணி சஹானாஸ் பரபரப்பு பேட்டி ..!


50க்கும் மேற்பட்ட ஆண்களை மோசடியாக மணந்து பெரும் லீலை புரிந்து மோசடி செய்ததாக குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள கேரளப் பெண் சஹானாஸ் ஒரு பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் தான் அத்தனை பேரை மணந்து மோசடி செய்யவில்லை என்று அவர் விளக்கியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் 'நக்கீரனுக்கு' அளித்துள்ள பேட்டி...

சஹானாஸ் - உங்ககிட்ட இதைச் சொல்றதால என் கஷ்டம் கொஞ்ச மாயிட்டு கொறையுமில்லா... கேரளாவில பத்தனம்திட்டாவுல ரெண்டு அக்கா, ஒரு அண்ணாவோட பிறந்தேன். எனக்கு அம்பது பேரோட கல்யாணம் ஆச்சுன்னு சொல்றது சரியா இல்ல. லைஃப்ல நான் பண்ண ஒரே தப்பு போரூர் மணிகண்டனை டைவர்ஸ் பண்ணாம புளியந்தோப்பு பிரசன்னாவை மேரேஜ் செஞ்சதுதான்.

நீங்க இப்போ கர்ப்பிணின்னு சொல்லப்படற விஷயம்...?

சஹானாஸ்: யெஸ்... நான் "கன்சீவ்'வாத்தான் இருக்கேன். இது ஆறாவது மாசம். இந்த குழந்தையோட அப்பா பிரசன்னாதான்.

பிரசன்னா இதை மறுத்திருக்காரே?

சஹானாஸ்: "டி.என்.ஏ. டெஸ்ட்'டுல தெரிஞ்சுருமே. பிரசன்னா அக்ஸப்ட் பண்ணலேன்னாலும், பேபிக்கு இனிஷியல் "பி'யிலதான் ஆரம்பிக்கும். அத நான் பாத்துக்கிறேன். முதல்ல என்னைப் பத்தி ஏன் இவ்வளவு தப்பா நியூஸ் வருதுன்னு நீங்க தெரிஞ்சுக்கணும். பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் பாத்துட்டு 2006-ல மெட்ராஸ் வந்து ஒரு ஜாப்ல சேர்ந்தேன். அந்த சூப்பர் மார்க்கெட் ஓனர்தான் இவ்வளவு கதையும் "ப்ளே' பண்ற ஆளு. ஒரு போட்டோவை வாங்கறதுக்காகத்தான் நான் இவ்வளவு கஷ்டத்தையும் அனுபவிக்கிறேன்.

அது என்ன போட்டோ?

சஹானாஸ்: சூப்பர் மார்க்கெட்ல லேடிஸ் டிரஸ் சேஞ்ச் பண்ற ரூம்ல அந்தாளு கேமரா பிக்ஸ் பண்ணி வச்சிருக்கார். என்னோட "நியூட்' போட்டோ இப்படித்தான் அவர்கிட்ட மாட்டிகிச்சி. இந்தமாதிரி எல்லா பொண்ணுங்களையும் அவர் படமெடுத்து வச்சிருக்காரு. நான்தான் இதை கண்டுபிடிச்சேன். இதில்லாம அந்தாளு செய்ற இல்லீகல் பிஸினஸ் பத்தி ஃபுல் டீடெய்ல் எனக்கு மட்டும்தான் தெரியும். ஒருநாள் அந்தாளு "ரூட்' விட்டுப் பாத்தாரு. நான் சிக்கலே. கடைசியா இந்த போட்டோவைக் காட்டி மிரட்டினாரு. 26 வயது பெண் என்மேல அறுபது வயது ஆளுக்கு வந்த ஆசை இருக்கே...

தமிழ் நல்லா பேசறீங்க. கேரளா வாடை லேசாகத்தானே இருக்கு?

சஹானாஸ்: நீங்க என்ன கேக்கறீங்கன்னு தெரியுது. கேரளாவுல பத்தனம்திட்டாதான் என் நேட்டிவ். நான் உருது முஸ்லிம். ஸோ... உருதும், மலையாளமும் நல்லா வரும். இங்கிலீஷ், தமிழ் பேசுவேன். தமிழ் படிக்கத் தெரியாது. உங்க நியூஸையே ஃபிரண்ட்ஸுங்கதான் படிச்சுக் காட்டுனாங்க.

நீங்க "லா' முடிச்சிருக்கிறதாவும், ஐ.ஏ.எஸ். ஸ்டடி பண்ணிட்டு இருக்கறதாவும் பிரசன்னா சொல்லியிருக்காரே? எந்த வருஷம் லா முடிச்சீங்க?

சஹானாஸ்: நான் "லா' படிக்கல.

நீங்க சொல்றபடி உங்க முதல் கணவர் போரூர் மணிகண்டனும், பிரசன்னா சொன்னதைத்தானே சொல்றாரு?

சஹானாஸ்: இவங்க ரெண்டுபேருமே இப்போ அந்த சூப்பர் மார்க்கெட் ஓனரோட ஆளா மாறிட்டாங்க. அதனால அப்படித்தான் பேசுவாங்க. ஆக்ஷுவலா நான் படிச்சதே பி.ஏ. ஹிஸ்டரி மட்டும்தான்.

நீங்க அட்வகேட்டுக்கான டிரஸ்ல பலமுறை ஸ்கூட்டியில வந்ததை பிரசன்னா, மணிகண்டன் ரெண்டுபேருமே கன்ஃபார்ம் பண்றாங்களே...

சஹானாஸ்: அவங்களுக்கு அந்த அறுபது வயது ஆளு, மண்டையில நல்லா ஏத்தி விட்டிருக்காரு. அவ்வளவுதான் சொல்வேன்.

திருச்சி பஜார் ரோடு ராகுலுக்கும் உங்களுக்கும் சென்னை வடபழனியில கல்யாணம் நடந்ததை ராகுல் ஒப்புக் கொண்டிருக்கிறார். அதேபோல்தான் அடையார் சரவணனும்... உங்கள் மீது போலீசில் புகார் செய்த 7 பேரில் 4 பேர் இதுவரை நேரில் வந்துள்ளனர். நீங்களோ மணிகண்டன், பிரசன்னா இருவரை மட்டுமே கணக்கில் காட்டுகிறீர்கள்.

சஹானாஸ்: மணிகண்டன் கூட மே. 2011-ல மேரேஜ் பண்ணி 2 மாசம்தான் வாழ்ந்தேன். உள்ளே நுழைஞ்சி ஊர் பஞ்சாயத்து மாதிரி பண்ணி எங்களை பிரிச்சு என்னை அனாதையாக்கிட்டாரு சூப்பர் மார்க்கெட் முதலாளி. பிறகுதான் பிரசன்னாவை மேரேஜ் பண்ணினேன். ராகுல் விஷயம் (சற்று யோசனையுடன்) ஒரு சினிமா கனவு மாதிரி. அவர் சினிமா ஆர்ட் டைரக்டர். ரொம்ப நல்லவர். யெஸ்... மேரேஜ் நடந்தது உண்மைதான். இதுக்குமேல இதுல பேச விரும்பல. அந்த விஷயம் வேண்டாமே... பிரிஞ்சிட்ட பிறகு பேச என்ன இருக்கு?

சரி... விட்ருவோம். இதுவரைக்கும் மூணு... அடையார் சரவணன்...?

சஹானாஸ்: ஜஸ்ட் ஃப்ரெண்ட் அவ்வளவுதான். சொஸைட்டியில ஒரு பொண்ணு தனியா துணையில்லாம வாழ்ந்தா என் முதலாளி மாதிரி கிழட்டுப் பூனைங்க கிட்டயும் சில மண்டக்குச்சிங்க கிட்டயும் மாட்டி சீரழிய வேண்டியதுதான். மணிகண்டனோட வாழத் தொடங்குனதும் பிரிச்சாச்சு. அதுக்கு முன்னால ராகுலோட வாழ ஆரம்பிச்சு -அதுவும் அந்தாளு பிரிச்சாச்சு.

இப்போ பிரசன்னாவும் போயாச்சு. சரவணன், சீனிவாசன்னு என் ஹஸ்பெண்ட் லிஸ்ட்ஸ் பேப்பர்ல வருது. படிச்சுக் கேட்டா தலை சுத்துது. ஃப்ரண்ட் ஸுங்க கூட எடுத்துக்கிட்ட போட்டோவை யெல்லாம் கலெக்ட் பண்ணி, அந்தாளு என் ஹஸ்பெண்ட்கள்னு சொல்றாரு.

நான் வேலை பார்த்தப்போ தரவேண்டிய சம்பளத்தை பாங்க் அக்கவுண்ட்ஸ்ல ஏத்திடறேன்னு சொல்லி ஒரு வருஷம் ஏமாத்தியாச்சு. ஒருநாள் நான் சண்டை பிடிச்சதும் 1 லட்சத்து 88 ஆயிரம் ரூபாயை கையில குடுத்துட்டு இப்போ திருட்டுப் பட்டம் கட்றாரு. அவருக்கு நான் வேணும் அவ்வளவு தான்.

எனுக்கு அந்தாளுகிட்ட இருக்கிற போட்டோ காப்பி வேணும், அதுக்குதான் இவ்வளவு நாள் பொறுமையா இருந்தேன். நான் வெளில வந்து எல்லாத்தையும் போலீஸ்ல சொல்லத்தான் போறேன். விடமாட்டேன். என் உயிருக்கு ஆபத்து கண்டிப்பா வரும். இப்பவும் என்னை கொன்னுப்போட அந்தாளோட ஆளுங்க தேடிக்கிட்டுதான் இருக்கு. நாலு பிச்சைக்காரியோட ஒருத்தியா ரயில்வே ஸ்டேஷன்ல நைட்ல பசியோட படுத்துக்கிட்டு இந்த ஒரு வாரமா நான் செத்துக்கிட்டிருக்கேன்.

நீங்களாகவே இதுவரை மணிகண்டன், பிரசன்னா, ராகுல் ஆகியோரோடு கல்யாணம் நடந்ததா சொல்லியிருக்கீங்க. வேப்பேரி போலீஸ்ல நீங்க ஏமாத்துனதா சொல்லி 2010-லேயே ராஜேஷ்னு ஒருத்தரு புகார் கொடுத்திருப்பதா சொல்றாங்க. பிரசன்னாவோட புளியந்தோப்புல நீங்க வாழ்ந்தபோது சுரேஷ்னு ஒருத்தரு உங்களை என் மனைவின்னு சொல்லி புகார் கொடுத்திருக்காரு. ஆனா... நீங்களோ எல்லாத்துக்கும் உங்க முதலாளிதான் காரணம்ங்கிறீங்க?

சஹானாஸ்: ராஜேஷ்ங்கிற கேரக்டரே நீங்க சொல்லித்தான் தெரியுது. வேப்பேரியில குடுத்த கம்ப்ளைண்டே வேற... என்கூட வேலை பார்க்கிற பொண்ணோட செயினை வாங்கிப் போட்டுக்கிட்டு ஊருக்குப்போன இடத்துல கொஞ்சம் லேட்டாயிடுச்சு. என் சூப்பர் மார்க்கெட் ஓனர் சொல்லி அந்தப் பொண்ணு என்மேல கம்ப்ளைண்ட் குடுத்தா. போலீஸ் என்னைக் கூப்பிட்டாங்க. நேரில் போயி விளக்கம் சொல்லி செயினை குடுத்துட்டேன். மேட்டர் ஓவர்.

அதேபோல புளியந்தோப்பு சுரேஷும் என்மேல கொடுத்தது பொய்ப்புகார். அதையும் நீங்க இன்ஸ்பெக்டர் வசந்திகிட்டயே கேக்கலாம். இதுக்கும் காரணம் அந்தாளுதான். எக்மோர் கமிஷனர் ஆபீஸ்ல அந்தாளு 23-ந் தேதி ஒரு கம்ப்ளைண்ட் குடுத்திருக்காரு. என்னைப் பத்தி தான் புகாரே. 1 லட்சத்து 88 ஆயிரத்தோடு ஓடிட்டேன்னிருக்காரு. அன்னக்கி சாயந்திரமே என்னோட செல்போன் நம்பருக்குப் போன்பண்ணி "இப்ப கூட கம்ப்ளைண்ட்டை வித்ட்ரா பண்ணிக்கறேன். நீ, என்கூட வர்றேன்னு சொல்லு... பிரசன்னா, மணிகண்டன் எல்லாரையும் ஆஃப் பண்ணிடறேன்'னு சொல்றாரு.

சஹானா என்ன சாதாரணமான ஒரு பொண்ணுதானேன்னு என்னை வெச்சி "கேம்' ஆடிப் பாக்கறாரு அந்த பிஸினஸ்மேன். நான் வெளிய வந்து அவரோட முகத்திரையையும், போட்டோவுல இருக்கிற ஹஸ்பெண்ட்ஸுங்க கதையையும் கிழிக்கத்தான் போறேன்... பாக்கத் தானே போறீங்க...

யார் சொல்வது உண்மையோ...