Saturday, April 30, 2011

படமாகிறது சாய்பாபா வரலாறு


உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை கொண்டவர் சத்ய சாய்பாபா. இவர், கடந்த 24ம் தேதி புட்டபர்த்தியில் மறைந்தார். சிறுவயதிலேயே ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட பாபா, பிரசாந்தி நிலையம் என்ற ஆசிரமம் நடத்தினார். ஆன்மிகத்துடன் சமூக சேவைகளிலும் ஈடுபடத் தொடங்கினார். பின்தங்கிய கிராமமாக இருந்த புட்டபர்த்தி உலகத்தினரின் கவனத்தை ஈர்ப்பதற்கு காரணமாக இருந்தது பாபாவின் ஆன்மிகப்பணி. இதை மையமாக வைத்து அவரது வாழ்க்கை வரலாறை சிசி மோஷன் பிக்சர்ஸ் என்ற கார்பரேட் நிறுவனம் படமாகத் தயாரிக்கிறது. இதில் நடிப்பவர்கள் உள்ளிட்ட விஷயங்கள் பற்றி பேச்சு நடக்கிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும்என்று பட நிறுவனம் தெரிவித்துள்ளது.


சின்ன சின்ன சினிமா செய்திகள் : பிகினி அணிய தைரியம் இல்லை!


 பிகினி அணிய தைரியம் இல்லை! 

பிகினி உடை அணிந்து நடிக்க தைரியமில்லை என்று பூர்ணா கூறினார். அவர் மேலும் கூறியதாவது: தமிழில் நந்தாவுடன் நடித்த வேலூர் மாவட்டம்ஷூட்டிங் முடிந்து விட்டது. பார்த்திபனுடன் வித்தகன்பாடல் காட்சி பாக்கி இருக்கிறது. தெலுங்கில் அல்லரி நரேஷுடன் சீம டப்பாகாய் படத்தில் நடித்துள்ளேன். அடுத்த மாதம் ரிலீஸ். இதில் நான் கிளாமராக நடித்துள்ளதாகச் சொல்கிறார்கள். அதில் உண்மை இல்லை. இந்த ஷூட்டிங்கில் நான் அணிந்து நடிக்க வேண்டிய உடைகள் சம்பந்தமாக சிலரிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது உண்மை. தெலுங்கில், குறிப்பாக பாடல் காட்சியில் கவர்ச்சியாக நடிக்கச் சொல்வார்கள். நானும் ஒரு வரையறைக்குள் நடித்திருக்கிறேன். பிகினி உடையில் நடிப்பீர்களா என்கிறார்கள். அதற்கு துணிச்சல் வேண்டும். அது எனக்கு இல்லை.

வில்லியாக நடிக்க பியா ஓ.கே

பொய் சொல்லப்போறோம்’, ‘கோவா’, ‘கோபடங்களில் நடித்துள்ள பியா கூறியதாவது: கோவில் கிளாமராக நடித்ததை கண்டு அதிர்ச்சி தெரிவிக்கிறார்கள். கிளாமர் என்பது சினிமாவில் ஒரு பகுதி. சிறுவன் ஒருவன் எனது உடைகள் நழுவி இருப்பதை பார்த்து ஜொள்ளுவிடுவதுபோல் வரும் காட்சியில் நடித்தது தவறு என்கிறார்கள். அதில் என்ன தவறு? இதை ஜாலியான காட்சியாக ரசிகர்கள் எடுத்துக்கொண்டு தியேட்டரில் சிரிக்கிறார்கள். முத்தக்காட்சியில் நடிப்பதிலும் எனக்கு பிரச்னை இல்லை. பிகினி டிரஸ் அணியவும் தயக்கமில்லை. ஹீரோயின் வேடம்தான் வேண்டும் என்று காத்திருக்காமல் நல்ல கேரக்டர் கிடைத்தாலும் நடிப்பேன். வில்லி வேடம் என்றாலும் மறுக்க மாட்டேன்.

தமிழில் பின்னணி டாப்ஸி ஆசை!

ஜீவாவுடன் வந்தான் வென்றான்படத்தில் நடித்து வரும் டாப்ஸி கூறியதாவது: ஆடுகளம்படத்துக்குப் பிறகு என் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. கண்ணன் இயக்கும் வந்தான் வென்றான்படம் எனக்கு வேறொரு அடையாளத்தை கொடுக்கும். நான் அதிக சம்பளம் கேட்பதாக வரும் தகவல்களில் உண்மை இல்லை. என் தகுதிக்கு என்ன தேவையோ அதைதான் கேட்கிறேன். தெலுங்கில் நான் நடித்துள்ள மிஸ்டர் பெர்பக்ட்சமீபத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது. பிரபாஸ், காஜலுடன் என் நடிப்பும் இதில் பேசப்படுகிறது. இந்தப் படத்துக்கு நானே டப்பிங் பேசியுள்ளேன். இதே போல தமிழிலும் பின்னணி பேச ஆசை இருக்கிறது. அதற்காக தமிழ் கற்று வருகிறேன். இப்போது யாராவது பேசினால் புரிந்துகொள்ள முடிகிறது. விரைவில் தமிழில் பேசுவேன். தெலுங்கில் ரவிதேஜாவுடன் வீராபடத்தில் இப்போது நடித்துவருகிறேன். தமிழில் ஒரு படத்தில் நடிக்க பேச்சு நடந்து வருகிறது. இவ்வாறு டாப்ஸி கூறினார்.
கமலின் முத்தத்திற்கு ரூ.1.25கோடி கேட்ட தமன்னா!


கமலை வைத்து அவ்வைசண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், தசாவதாரம் போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் அடுத்து கமலை வைத்து ஒரு ‌காமெடி படம் ‌ஒன்றை இயக்க போகிறார். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக தமன்ன‌ாவை நடிக்க வைக்க எண்ணினார் கே.எஸ்.ரவிக்குமார். இதுதொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்தது. தமன்னாவும் நடிக்க ஓ.கே., சொல்லிவிட்டாராம்.

இப்போது பிரச்சனை என்னவென்றால் கமல் படம் என்றால் முத்தக்காட்சி இல்லாமல் இருக்காது. இந்தபடத்தில் அதுபோன்ற காட்சிகள் ஏதும் உள்ளதாக என்று தமன்னா கேட்க, அது இல்லாமலா என்று பதில் வர, சற்று தயங்கிய தமன்னா பிறகு ஓ.கே., சொன்னாராம். கூடவே ஒரு கண்டிஷனும் போட்டாராம். படத்தில் முத்தக்காட்சி இருப்பதால் தன்னுடைய சம்பளத்தை ரூ.1.25கோடியாக கேட்டாராம். தமன்னாவின் இந்த கண்டிசனை கேட்டதும் அதிர்ந்து போய் இருக்கிறது தயாரிப்பாளர் தரப்பும், இயக்குநர் தரப்பும்.


விஜய்க்கு ஆப்பு ஆரம்பம் ; 'பொன்னியின் செல்வன் கைவிடப்பட்டது?


"ராவணன்" படத்தை தொடர்ந்து டைரக்டர் மணிரத்னம் அடுத்து இயக்க போகும் படம் "பொன்னியின் செல்வன்". கல்கியின் நாவலை மையமாக கொண்டு மிகுந்த பொருட்ச்செலவில் பிரமாண்டமாக இப்படம் எடுக்கப்பட இருக்கிறது. இப்படத்தில் நடி‌கர், நடிகைகளாக விஜய், ஆர்யா, மகேஷ்பாபு, அனுஷ்கா உள்ளிட்டவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், இப்படம் தொடங்கப்படுவது சந்தேகமே என்ற தகவல்கள் வதந்திகளாக ஆரம்பித்து, செய்தியாகும் நிலையில் உள்ளதாக கோடம்பாக்கத்தில் இருக்கும் முக்கிய புள்ளிகள் கூறுகிறார்கள்.இதற்கான காரணம் குறித்து ஏதும் தெரியவில்லை.

ஏற்கனவே இந்தகதையை மறைந்த மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., எடுக்க முயன்றார். ஆனால் அவரின் அரசியல் பிரவேசத்தால் இப்படம் நின்றுபோனது. பிறகு நமது உலகநாயகன் கமல் முயற்சித்தார், அவராலும் முடியவில்லை. கடைசியாக மணிரத்னம் இப்படத்தை இயக்க முன்வந்து, திரைக்‌கதை எல்லாம் அமைக்க தொடங்கி, சூட்டிங் லோகேசன் எல்லாம் பார்த்து வைத்திருந்த நிலையில், திடீரென இப்படம் கைவிடப்படுவதாக தகவல் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


அருணாச்சல பிரதேச முதல்வர் நிலை என்ன? மாறுபட்ட கருத்துகளால் பரபரப்புஅருணாச்சலப் பிரதேச முதல் அமைச்சர் பயணம் செய்த ஹெலிகாப்டர் பாதுகாப்பாக தரையிறங்கியது. அருணாசலப் பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு மற்றும் அவருடன் சென்ற 4 பேரும் பாதுகாப்பாக உள்ளனர். இதனை அம்மாநில கவர்னர் ஜே.ஜே.சிங் உறுதிப்படுத்தியுள்ளார்.

அருணாசலபிரதேச மாநில காங்கிரஸ் முதல் அமைச்சர் டோர்ஜி காண்டு உள்பட அனைவரும் பத்திரமாக உள்ளதாக அம்மாநில கவர்னர் ஜே.ஜே.சிங் தெரிவித்துள்ளார்.


அருணாசலப் பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு (56) பயணம் செய்த ஹெலிகாப்டர் 30.04.2011 அன்று காலை காணாமல் போனது. தவாங் நகரில் இருந்து தலைநகர் இடாநகர் நோக்கி புறப்பட்ட அந்த ஹெலிகாப்டரில் முதல்வரின் தனிச்செயலர்கள் இருவர் மற்றும் பைலட்டுகள் இருவர் உடன் பயணம் செய்தனர்.


காலை 10 மணியளவில் தவாங்கில் புறப்பட்ட ஹெலிகாப்டரின் நிலை என்னவென்று தெரியவில்லை. ஹெலிகாப்டர் தவாங்கில் இருந்து புறப்பட்ட 20 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பில் இருந்து விலகியது. கடைசியாக தவாங் அடுத்த செலா பாஸ் பகுதியில் வந்த ஹெலிகாப்டர் ராடரில் தெரிந்தது. அதன் பிறகு ஹெலிகாப்டர் இருக்கும் இடம் தெரியவில்லை.


ஹெலிகாப்டர் மாயமானது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் அருணாசலப் பிரதேசத்தில் மக்களிடையே பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில் முதல்வர் டோர்ஜி காண்டு பயணம் செய்த ஹெலிகாப்டர் பாதுகாப்பாக தரையிறங்கியதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து ஹெலிகாப்டர் மாயமானதால் உருவான பதற்றம் தணிந்தது.

தவாங் நகரில் இருந்து இட்டா நகர் சென்ற போது முதல்வர் ஹெலிகாப்டர் மாயமானது. காணாமல் போன ஹெலிகாப்டர் தார்போ ஜியோ என்ற இடத்தில் இறங்கியது தெரியவந்தது. இதையடுத்து முதல்வரை அழைத்துவர  இந்திய விமானப்படை விமானம் விரைந்தது.

இந்நிலையில், தங்களது நாட்டு பகுதியில் ஹெலிகாப்டர் ஏதும் தரையிறங்கவில்லை என பூடான் அதிகாரிகள் மறுத்துள்ளதால், முதல்வர் டோர்ஜி காண்டு என்னவானார் என்பது கேள்விக்குறியாகவுள்ளது.


காஸ்டியூம் டிசைனராக மாறினார் அமலா பால்!


வீரசேகரன் படத்தின் மூலம் அறிமுகமாகி, சிந்து சமவெளி படத்தில் மாமனாருடன் சல்லாப காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி, மைனா படத்தின் மூலம் உச்சத்திற்கு போன நடிகை அமலாபால், இப்போது முன்னணி நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் டைரக்டர்களின் விருப்ப நாயகியாக மாறியுள்ளார். விரைவில் இவர் நடிப்பில் விக்ரமுடன் இணைந்து நடித்திருக்கும் தெய்வத்திருமகன் படம் ரிலீசாக இருக்கிறது. இதுதவிர லிங்குசாமியுடன் வேட்டை, மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வாவுடன் முப்பொழுதும் உன் கற்பனைகள் என்று வரிசையாக தொடர்ந்து கைநிறைய படங்கள் வைத்துள்ளார்.

கைநிறைய படங்கள் இருந்தும், இப்போது புதிதாக காஸ்டியூம் டிசைனராகவும் மாறி, அதிலும் கல்லா காட்ட முடிவெடுத்து இருக்கிறார். சமீபத்தில் தன்னுடைய படத்திற்காக அவரே ஒரு சேலையை டிசைன் பண்ணி, அதை மும்பையில் உள்ள பிரபல காஸ்டியூமர் ஒருவருக்கு அனுப்பினாராம். அமலா பாலின் இந்த காஸ்டியூம் டிசைனை பார்த்து அங்கிருக்கும் பாலிவுட் நடிகைகளே வியந்துபோய், யார் இதை தயாரித்தது என்று கேட்டார்களாம். இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் அமலா பால், இனி வரப்போகும் தன்னுடைய படங்களுக்கு, தானே காஸ்டியூம் டிசைனராக பணியாற்ற இருப்பதாகவும், இதற்காக தன்னுடைய சம்பளத்துடன் எக்ஸ்ட்ரா சம்பளம் கேட்ட அவர் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


மீண்டும் மாற்றப்படுகிறது விக்ரம் பட தலைப்பு!


தேவரின அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பால் விக்ரமின் தெய்வ திருமகன் என்ற படத்தின் தலைப்பு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிதா, தெய்வமகன், தெய்வ குழந்தை உள்ளிட்ட ஒரு டஜன் தலைப்புகளுக்கு பிறகு விக்ரமின் புதிய படத்திற்கு தெய்வ திருமகன் என்ற பெயரை சூட்டினார் அதன் இயக்குனர் விஜய். படத்தில் நடிகர் விக்ரம், மனதை உருக்கும் படியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனுஷ்கா, அமலா பால் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்த படத்தின் பெயருக்கு தேவர் இன மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு தேவர்குல கூட்டமைப்பு தலைவர் சண்முகையா பாண்டியன், அளித்த பேட்டியில், தெய்வத் திருமகன் என்று மறைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை மட்டுமே நாங்கள் அழைத்து வருகிறோம். இந்த நிலையில் அந்த பெயரில் திரைப்படம் வருவதை எங்கள் சமுதாய மக்களால் ஏற்க முடியாது.  எனவே அந்த படத்தின் பெயரை மாற்றி வெளியிட வேண்டும். அவ்வாறு படத்தின் பெயரை மாற்றி வெளியிடா விட்டால் தமிழகம் முழுவதும் அந்த படம் திரையிடப்படும் திரையரங்கங்களை முற்றுகையிடுவோம். திரைப்பட பிரதிகளையும் கைப்பற்றுவோம். கோர்ட்டுக்கும் போவோம், என்று கூறியிருந்தார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் தெய்வ திருமகன் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை மனுவும் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று பார்வேர்டு பிளாக் கட்சியை சேர்ந்த 100 பேர் சென்னையில் உள்ள நடிகர் விக்ரம் வீட்டை முற்றுகையிட முயன்றனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து அசம்பாவிதம் ஏற்படாமல் தடுத்தனர்.

தெய்வ திருமகன் தலைப்பு விவகாரத்தில் நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருவதால் படத்தின் பெயரை மாற்ற அதன் தயாரிப்பாளர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் டைரக்டர் விஜய், நாயகன் விக்ரம் ஆகியோரிடம் கலந்து ஆலோசித்த தயாரிப்பு தரப்பு தெய்வ திருமகன் படத்தின் தலைப்பை மாற்றி விரைவில் அதிகாரப்பூர்வ புதிய தலைப்பை அறிவிக்கும் என்று தெரிகிறது.


நண்பன் க்ளைமாக்ஸ்


நண்பன் படத்தை பற்றி தினம் ஒரு தகவல் வந்து கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் சென்னையில் சூட்டி‌ங்கை முடிந்த நண்பன் குழு, இப்போது படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை அந்தமான் தீவில் படமாக்கி வருகிறது.

இந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட்டான "3-இடியட்ஸ்" படம் தமிழில் "நண்பன்" என்ற பெயரில் உருவாகி வருகிறது. ஜெமினி பிலிம்ஸ் தயாரிக்க, பிரமாண்ட டைரக்டர் ஷங்கர் இயக்கி வருகிறார். விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். பொதுவாக ஷங்கர் தன்னுடைய படங்களை குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது எடுப்பார். ஆனால் நண்பன் படத்தை விரைவில் முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சூட்டிங்கை விறுவிறுப்பாக நடத்தி கொண்டு இருக்கிறார். படத்தின் பாதி காட்சிகளை படமாக்கிவிட்ட ஷங்கர், இப்போது க்ளைமாக்ஸ் காட்சிக்காக அந்தமானில் முகாமிட்டுள்ளார். தற்போது அந்தமானில் உள்ள ரம்மியமான பகுதியில் நண்பன் சூட்டிங் நடந்து வருகிறது. தீபாவளிக்கு நண்பன் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பொன்னர் - சங்கருக்கும் காவலன் நிலைமைதானாம்!


முதல்வர் கருணாநிதி கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படம் பொன்னர் -  சங்கர். நடிகர் பிரசாந்த் இரட்டை வேடங்களில் நடித்து, அவரது தந்தை தியாகராஜன் இயக்கியுள்ள இப்படம் குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் வேதனை தெரிவித்துள்ளார்.  அதில், தயாரிக்கப்பட்ட திரைப்படங்களை வெளியிட தியேட்டர்களே கிடைக்கவில்லையென்று சினிமா வட்டாரங்களில் விமர்சிக்கிறார்கள். என்ன செய்வது? படம் எடுப்பதற்கு ஆள் இல்லாமல், ஸ்டுடியோக்களையும், திரையரங்குகளையும் மூடிவிட்டு அந்த இடங்களை திருமண மண்டபங்களாகவும், ஓட்டல்களாகவும், கிடங்குகளாகவும் மாற்றிடும் நிலைமை ஏற்பட்டது ஒரு காலம். இப்போது படங்களை வெளியிட தியேட்டர் கிடைக்கவில்லை என்று அலைகின்ற ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது. நான் எழுதி வெளிவந்துள்ள "பொன்னர் சங்கர் திரைப்படத்துக்கும் எங்கும் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. அலையாய் அலைந்துதான் தியேட்டர்களைப் பிடிக்க முடிந்தது என்று அதன் தயாரிப்பாளர்கள் கண்ணீர்விட்ட நிகழ்ச்சிகள் எனக்குத் தெரியும். கடலூரில் ஒரு தியேட்டரில் "பொன்னர் சங்கர் திரைப்படம் திரையிடப்பட்டு அரங்கம் நிறைந்த காட்சிகளாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இரண்டாம் நாளே அந்தத் திரைப்படத்தை கட்டாயப்படுத்தி எடுத்து விட்டார்கள், என்று கூறியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி.

பொன்னர் சங்கருக்கு சில வாரங்கள் முன்பு நடிகர் விஜய் நடித்த காவலன் படம் ரீலிஸ் ஆனது. அந்த படத்தை ரீலிஸ் செய்ய தியேட்டர்கள் கிடைக்காமல் படத்தின் தயாரிப்பாளர் ரொம்பவே திணறினார். அப்படியே கிடைத்த தியேட்டர்களிலும் படம் ரீலீஸ் ஆகி ஓரிரு நாட்களில் படத்தை தூக்கச் சொல்லி சிலர் நிர்பந்தித்தார்கள். இதேநிலைதால் விஜய்யின் தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவான சட்டப்படி குற்றம் படத்திற்கும் ஏற்பட்டது. அப்போதெல்லாம் ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டனர் என்று விஜய்யும், எஸ்.ஏ.சந்திரசேகரும் நேரடியாகவே புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில் தன்னுடைய கதை, வசனத்தில் உருவான பொன்னர் - சங்கருக்கும் தியேட்டர் கிடைக்காத நிலைமையும், தியேட்டரில் இருந்து கட்டாயப்படுத்தி தூக்கி விட்ட நிலையும் ஏற்பட்டது என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதை என்னவென்று சொல்வது?


சோனா நமீதாக்களுக்கு சூப்! - வந்தார் ஒரு கேரள அழகி


நம்ம ஊர் சோனா, நமீதாக்களுக்கெல்லாம் முள்ளம்பன்றி சூப் கொடுப்பார் போலிருக்கிறது ஸ்வேதா மேனன். இவரது விதவிதமான ஸ்டில்களை பார்த்து கிரங்கிப் போகும் ரசிகர்கள் பாப்பா எங்கயிருக்கு என்று போஸ்ட் ஆபிஸ்களை முற்றுகையிடாத குறைதான். கோடம்பாக்கத்தை சுற்றிலும் ஒட்டப்பட்டிருக்கும் தாரம் என்ற பட போஸ்டரில் ஸ்வேதாவின் 'டாப்' மோஸ்ட் அழகு வெளிப்பட்டு பலரையும் கதிகலங்க அடித்துக் கொண்டிருக்கிறது.

இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு அழைக்காமலே கூடிய ரசிகர்களை அலசி ஆராய்ந்து வடிகட்டி வெளியே அனுப்பிக் கொண்டிருந்தனர். சோதனைக்கு தப்பி உள்ளே வந்த விருந்தினர்களுக்கு தீனியாக திரையிடப்பட்டது இரண்டே இரண்டு பாடல்கள். அதில் ஒரு பாடலில் குளித்து எழுந்து நீந்தி நிமிர்ந்து சந்தோஷத்தை பால் வார்த்துக் கொண்டிருந்த ஸ்வேதா மேனன், அந்த விழாவுக்கு வராமல் போனதுதான் துரதிருஷ்டம்.

சரி... தாரம் படத்தின் கதை என்ன? ஒரு ஊர் பண்ணையாரிடம் சிக்கி தவிக்கும் பெண்ணை மீட்டு அவளுக்கு அடைக்கலம் கொடுக்கிறான் ஒருவன். அன்போடு வாழும் அந்த காதலை சிதைக்கும் விதத்தில் அவனை கொன்றுவிடுகிறது ஒரு கும்பல். அதற்காக கவலைப்பட்டு கண்ணீர் வடிக்கும் ஸ்வேதா சிறிது நாட்களிலேயே அவனது தம்பி மீது காதல் கொள்கிறாள். கல்யாணமும் செய்து கொள்கிறாள். விடுவார்களா? பேச்சுக்கு பேச்சு நாட்டாமை.

உங்க மனைவி செத்தா அவளோட தங்கச்சியை கட்டிக்கிறீங்க. நாங்க மட்டும் கணவரோட தம்பிய கட்டிக்க கூடாதா என்கிறாள் அவள். இப்படி போகிற புரட்சி கதையில், எது எது து£க்கலாக இருக்க வேண்டுமோ, அதெல்லாம் து£க்கலாக இருப்பதால் படத்தை வாங்க இப்பவே அடிதடியாம்!

இப்படம் கேரளாவில் 100 நாட்கள் ஓடிய கயம் என்ற படத்தின் தமிழாக்கம்!


காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியில் விரிசலா? : ஜெயந்தி நடராஜன் பதில்


காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியில் விரிசல் ஏற்பட வாய்ப்பில்லை என, ஜெயந்தி நடராஜன் எம்.பி. கூறியுள்ளார்.

முதல் அமைச்சர் கலைஞரை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் எம்.பி. மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் காயத்ரி தேவி ஆகியோர் கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயந்தி நடராஜன்,

இன்றைய தினம் முதல் அமைச்சர் கலைஞரை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினேன். தமிழக தேர்தலை பொறுத்தவரையில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணி அமோக வெற்றி பெற்று, கலைஞர் ஆறாவது முறையாக முதல் அமைச்சராக பொறுப்பேற்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

கேள்வி: காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியில் 2ஜி விவகாரத்தால் விரிசல் ஏற்பட்டுள்ளதா?

பதில்: காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியில் எந்த விரிசலும் கிடையாது. 2ஜி பிரச்சினையை பொறுத்தவரையில், அது உச்ச நீதிமன்றத்திலே தொடங்கி பல்வேறு அமைப்புகளால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் காரணமாக, காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியில் விரிசல் ஏற்பட வாய்ப்பில்லை.

கேள்வி: தமிழக இளைஞர் காங்கிரசிலே பிரச்சினைகள் தங்கபாலு நீக்கம் போன்றவை குறித்து உங்களுடைய கருத்து?

பதில்: தமிழக இளைஞர் காங்கிரசார் பிரச்சினையை பொறுத்த வரையில், தற்போது விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிவடைந்ததும், அது குறித்த அறிக்கை ராகுல்காந்தியிடம் அளிக்கப்பட்டு, அவர்தான் இறுதி முடிவு எடுப்பார். அதே போன்று, தங்கபாலு பிரச்சினையை பொறுத்த வரையில், கட்சி மேலிடம் தான் இதுகுறித்து முடிவு செய்யும் என்றார்.


ரஜினி, அஜீத், பாலசந்தர், கட்டபுள்ள... கோலிவுட்டை சுற்றிவிட்ட ஒரு நாள்!


ஒரே நாளில் எத்தனை பரபரப்பைதான் தாங்கிக் கொள்வார்கள் மக்கள். அதிலும் சினிமா ரசிகர்கள் பாடு நேற்று ரொம்பவே டென்ஷன். ஒரு புறம் ரஜினி மருத்துவமனையில் அனுமதி. இன்னொரு பக்கம் அஜீத் தன்னுடைய ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டதாக விடப்பட்ட அறிக்கை. என்னய்யா இது அதிர்ச்சி மேல் அதிர்ச்சியா இருக்கே என்று அலுத்துப்போய் உட்கார்ந்தால் இந்தா பூஸ்ட் என்பது மாதிரி ஒரு மகிழ்ச்சியான செய்தி, இயக்குனர் பாலசந்தருக்கு தாதா பால்கே சாகேப் விருது கொடுப்பதாக அறிவித்து தமிழ்சினிமாவை கவுரவித்தது மத்திய அரசு. இந்த அவசர அரைச்சலில், கட்டபுள்ள வடிவேலு ஒரு பக்கம் நின்று கொண்டு ராணாவாவது, காணாவாவது என்று பேட்டி கொடுக்க எந்த சேனலை திறந்தாலும் இந்த செய்திகள்தான்.

மருத்துவமனையில் ரஜினி அனுமதி என்றதுமே மயிலாப்பூரில் இருக்கும் இசபெல்லா மருத்துவமனையில் கூடிவிட்டார்கள் பத்திரிகையாளர்கள். அவரை பார்க்கணும். உள்ளே விடுங்க என்று அவர்கள் படுத்திய பாட்டில் மருத்துவமனை நிர்வாகத்திற்கே மூச்சு திணறியிருக்கும்.

அந்தளவுக்கு ரஜினியின் நாடியை பிடித்தாவது செக் பண்ணி விடும் அவசரத்தில் இருந்தது மீடியா. இவர்கள் தொல்லை பொறுக்க முடியாமல்தான் அவுட் பேஷன்ட்டாக இருக்க வேண்டிய ரஜினி, ஐசியூ வுக்குள் புகுந்து கொண்டார் என்றும் வதந்திகள் பரவியது. நல்லவேளையாக இரண்டு கேட் உண்டு இசபெல்லாவுக்கு. அதில் ஒரு கேட் வழியாக வீட்டுக்கு பறந்தார் ரஜினி.

அவ்வளவு பரபரப்புக்கு நடுவிலும் தமிழக முதல்வர் கலைஞர் மருத்துவமனைக்கு விரைந்தார். அவரை சந்தித்துவிட்டு வெளியே வந்தவர் ரஜினிக்கு அஜீரண கோளாறு. அவர் நலமுடன் இருக்கிறார் என்று கூறியதும்தான் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள் மீடியாவும் ரசிகர்களும்!கருணாநிதி குடும்பத்தினர் அனைவர் பெயரையும் குற்றப்பத்திரிகையில் சேர்க்க வேண்டும்: ஜெயலலிதா


2ஜி ஊழலில் நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்றால், அதில் தொடர்புடைய கருணாநிதி குடும்பத்தினர் அனைவரின் பெயர்களும் சிபிஐயின் குற்றப் பத்திரிகையில் இடம் பெற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரியுள்ளார்.

கொடநாட்டில் தோழி சசிகலாவுடன் ஓய்வெடுத்து வரும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை முன்னின்று விசாரித்து வரும் சிபிஐயின் இரண்டாவது குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றுள்ள தனது மகள் கனிமொழியை காக்கும் வகையில், தனக்கே உரிய பாணியில் குழப்பமூட்டும் கதைகளை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார் கருணாநிதி.

இந்த ஊழலையே மறுத்துள்ளதோடு மட்டுமல்லாமல், இந்த ஊழல் இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் கற்பனையில் உருவான கட்டுக் கதை என்றும் குறை கூறியிருக்கிறார் கருணாநிதி. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நடைபெற்றுக் கொண்டிருக்கும் விசாரணை நடவடிக்கைகளை, திராவிட அரசியலுக்கு எதிரான மேலாதிக்க சக்திகளின் சதி என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார் கருணாநிதி.

கருணாநிதியின் மகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் மோசமான செயல்பாட்டினை வெட்ட வெளிச்சமாக்கிக் கொண்டிருக்கும் ஊடகங்களை கடுமையாக சாடியிருக்கிறார் கருணாநிதி.

தப்ப முடியாதபடி கடினமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் தருணத்தில், அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, மற்றவர்கள் மீது சேற்றை வாரி இறைப்பது கருணாநிதியின் வாடிக்கை!.

குறிப்பிட்ட எந்தப் பெயரும் சுட்டிக் காட்டப்படவில்லை. தனி மனிதர், தனிப்பட்ட கட்சி அல்லது அமைப்பின் பெயர்கள் குறி வைக்கப்படவில்லை. வெறும் பொதுவான தூற்றுதல் தான்.

ஆனால், 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது மிகப் பெரிய ஊழல். கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த ஊழலில் முழுவதுமாக மூழ்கி இருப்பதால், இந்த ஊழலில் இருந்து ஒதுங்கி இருப்பது என்பது கருணாநிதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இயலாத காரியம் ஆகும்.

இந்த ஊழலில் அடங்கியுள்ள அப்பட்டமான உண்மைகளில் சிலவற்றை நாம் காண்போம்.

1. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றிய முதல் செய்திகள் மற்றும் இந்த ஊழலில் கருணாநிதியின் நம்பிக்கைக்குரிய தளபதி ஆ. ராசாவிற்கு உள்ள பங்கு பற்றிய தகவல்கள் ஆகியவை எந்த எதிர் தரப்பு ஊடகங்களிலும் முதன் முதலாக வரவில்லை. மாறாக, கருணாநிதியின் பேரன்களுக்கு சொந்தமான தொலைக்காட்சியான சன் டி.வியில் தான் முதன் முதலில் ஒளிபரப்பப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், கருணாநிதியின் பேரன்களில் ஒருவர், 28.4.2011 அன்று நடைபெற்ற திமுகவின் உயர் மட்டக் குழுகூட்டத்தில் ஊடகங்களை பொதுவாக கருணாநிதி தாக்கிய சமயத்தில் உடனிருந்தார் என்பது தான்.

2. ராசா மற்றும் இதர நபர்களுக்கு எதிரான வழக்குகள் எதிர்க்கட்சியினர் கூறும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிபிஐயினால் தாக்கல் செய்யப்படவில்லை. மாறாக, இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை தலைவரால் இந்திய நாடாளுமன்றத்தில் தகுந்த ஆவணங்களுடனும், வலுவான வாதங்களுடனும் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

3. அரசியல்ரீதியாக பழிவாங்கும் நோக்கத்துடன், திமுகவிற்கு எதிரான கட்சி, ஆட்சி புரியும் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மத்திய புலனாய்வு துறை 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை தாக்கல் செய்யவில்லை. மாறாக, கருணாநிதி தலைமையிலான தி.மு.க. முக்கிய பங்காற்றுகின்ற, கருணாநிதியின் மகனும், பேரனும் மத்திய அமைச்சர்களாக அங்கம் வகிக்கின்ற மத்திய அரசின் அறிவுரையின் பேரில் தான் சிபிஐ இந்த வழக்கினை தாக்கல் செய்திருக்கிறது.

4. ஒரு வருடத்திற்கும் மேலாக தூங்கிக் கொண்டிருந்த இந்த ஊழல் வழக்கு தீங்கிழைக்கும் கும்பல் கூரை மேல் ஏறி நின்று கூக்குரலிட்டதன் காரணமாக முக்கியத்துவம் பெறவில்லை; உலகின் மிகப் பெரிய ஊழலுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில், மத்திய புலனாய்வுத் துறையால் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்த விசாரணையை உச்ச நீதிமன்றமே முடுக்கி விட்டதன் காரணமாகத் தான் இந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றது.

5. இந்த வழக்கில், சி.பி.ஐ. இதுவரை இரண்டு குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது. இன்னும் நிறைய குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்ய இருப்பதாகவும் உறுதி அளித்துள்ளது. இவையெல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவோ, செவி வழிச் செய்தி அல்லது நாகரிகமற்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலோ நடைபெறவில்லை. மாறாக 80,000 பக்கங்கள் கொண்ட வலுவான ஆதாரங்களின், ஆவணங்களின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

6. இந்த வழக்கில் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்பட்டவர்கள் ஆ. ராசா மற்றும் கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் சிலர் மட்டுமல்ல. இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் செல்வாக்கு படைத்த தொழில் குழுமத்தைச் சேர்ந்த மேலாண்மை இயக்குநர்களும், தலைமை செயல் இயக்குநர்களும் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்கள்.

உண்மை நிலை இவ்வாறு இருக்கையில், இந்த ஊழலை மூடி மறைக்கும் விதமாக, “செல்வாக்கு படைத்த ஒரு குழுவினரின் அரசியல் சதுரங்க விளையாட்டு இதுஎன்று அபத்தமாக குற்றம் சுமத்துகிறார் கருணாநிதி!.

நான் இப்பொழுது ஒரு சில கேள்விகளை கருணாநிதியிடம் கேட்க விரும்புகிறேன். கருணாநிதி அனுமதி அளித்திருந்தால், வாய்ப்பு கொடுத்திருந்தால், இந்தக் கேள்விகளை ஊடகங்களே அவரிடம் கேட்டிருக்கும் என்றும் நான் நம்புகிறேன்.

1. கம்பெனிகள் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள ஆவணங்களின்படி, கலைஞர் டி.வி. நிறுவனத்தில் தயாளு அம்மாளுக்கு 60 விழுக்காடு பங்குகள் உள்ளன என்பது தெரிகிறது. இந்த அளவு பங்கினை வைத்துக் கொள்வதற்கான நிதி ஆதாரம் குறித்த விவரங்கள் என்ன? இந்த டி.வியில் எவ்வளவு பணத்தை தயாளு அம்மாள் முதலீடு செய்தார்?. இந்த டி.வி. சேனலில் இந்த அளவிற்கு முதலீடு செய்யும் அளவுக்கு தயாளு அம்மாளுக்கு நிதி எங்கிருந்து கிடைத்தது?.

2. தனிப்பட்ட முறையில் தயாளு அம்மாள் இதில் பங்குதாரராக இருக்கிறாரா?, அல்லது கருணாநிதி குடும்பத்தின் தன்னுடைய கிளையின் பிரதிநிதியாக செயல்படுகிறாரா?.

3. 20 விழுக்காடு பங்குகளை வைத்திருக்கும் கனிமொழி இந்த டி.வியில் எவ்வளவு முதலீடு செய்தார்?, இந்த அளவுக்கு முதலீடு செய்வதற்கு கனிமொழிக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது?, தனிப்பட்ட முறையில் கனிமொழி இதில் பங்குதாரராக இருக்கிறாரா?, அல்லது கருணாநிதி குடும்பத்தின் இரண்டாவது கிளையின் பிரதிநிதியாக செயல்படுகிறாரா?.

4. கலைஞர் டி.வியில் இயக்குநராக இருக்க மத்திய உள்துறை அமைச்சரகம் அனுமதி தராததையடுத்தே, கனிமொழியால் அதில் இயக்குநராக நீடிக்க முடியவில்லை. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனியார் நிறுவனத்தில் இயக்குநராக இருப்பதற்கு எந்த சட்டமும் தடை விதிக்கவில்லை. இந்த சூழ்நிலையில், தொலைத் தொடர்பு நிறுவனத்துடன் கனிமொழி தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியதற்கான காரணங்கள் என்ன?.

5. சர்ச்சைக்குரிய 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டின் பயனாளியான டி.பி. ரியால்டி குழுமத்திடம் இருந்து கலைஞர் டி.வி. 214 கோடி ரூபாயை பெற்றிருக்கிறது. இந்தப் பணப் பரிமாற்றம் ஒரு தடவை நடைபெறவில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் பல முறை நடைபெற்று இருக்கிறது. இந்தப் பணம் ஏன் வாங்கப்பட்டது?. ராசாவால் விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணாக 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கப்பட்டதற்கு பிரதிபலனாகத் தான் இந்தப் பணம் கலைஞர் டி.விக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இல்லையெனில், சமீபத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் டி.வியில் இவ்வளவு பெரிய தொகையை மும்பையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் ஏன் முதலீடு செய்தது?.

6. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிபிஐ வழக்கு பதிவு செய்தவுடன், ராசாவை சிபிஐ விசாரிக்கத் தொடங்கியவுடன், டி.பி. ரியால்டிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை 'உத்திரவாதமற்ற கடனாக' மாற்றி அதனை உடனடியாக ஒப்படைப்பு செய்ய கலைஞர் டி.வி. ஏன் திடீர் முடிவு எடுத்தது?.

7. திடீரென்று இந்தக் 'கடனை' வட்டியுடன் திருப்பிக் கொடுக்கும் அளவுக்கு கலைஞர் டி.விக்கு பணம் எங்கிருந்து கிடைத்தது?.

8. ஜெனிக்ஸ் எக்சிம் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற போர்வையில், தன்னுடன் நெருங்கி பழகியவர்களின் நிறுவனமான துபாயைச் சேர்ந்த குழுமம், டி.பி. ரியால்டி நிறுவனத்தால் ஊக்குவிக்கப்பட்ட ஸ்வான் டெலிகாம் குழுமத்தில் இடம் பெற்றதற்கு கருணாநிதியின் விளக்கம் என்ன?.

9. கருணாநிதி குடும்ப உறுப்பினர்களுக்கும், கருணாநிதிக்கு நெருக்கமாக உள்ளவர்களுக்கும் இடையே நடைபெற்ற பணப் பரிமாற்றத்தில், ஊடகங்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட பரிமாணங்கள் எல்லாம் எங்கு இருக்கின்றன?.

10. "கனிமொழி என் மகள் என்பதற்காக நான் ஆதரவளிக்கவில்லை; கனிமொழி தி.மு.கவின் விசுவாசமிக்க உண்மையான தொண்டர் என்ற முறையில்" ஆதரவளிப்பதாகத் தெரிவித்து, கட்சியை இழிவுபடுத்த தனக்கு விருப்பம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார் கருணாநிதி!. இறுதி மூச்சுவரை கட்சிக்காக உழைக்கக் கூடியவர்கள், கட்சிக்காக தங்கள் உயிரைக்கூட கொடுக்கத் தயாராக இருக்கும் தொண்டர்கள் இது போன்ற பிதற்றலை நம்புவார்கள் என்று கருணாநிதி எதிர்பார்க்கிறாரா?.

1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்பது உண்மையாக நடந்த ஒன்று. ராசாவுக்கு இதில் நிச்சயம் தொடர்பு இருக்கிறது. கலைஞர் டி.வி. மற்றும் கருணாநிதி உட்பட, கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இதன் மூலம் பயனடைந்துள்ளனர். இங்கு மட்டுமல்லாமல், வரி ஏய்ப்பின் புகலிடமாக விளங்கும் வெளிநாட்டு வங்கிகளிலும் கருணாநிதி குடும்பத்தினர் பணத்தை குவித்து வைத்திருக்கின்றனர்.

கனிமொழியை மட்டும் குற்றப்பத்திரிகையில் சேர்த்ததன் மூலம் சி.பி.ஐ. தன்னுடைய பணியை சரிவர செய்யவில்லை என்று நான் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். இந்த ஊழலில் கருணாநிதி குடும்பத்தினர் அனைவருக்கும் தொடர்பு உண்டு. அனைவரும் பயனடைந்துள்ளனர். நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்றால், 2ஜி ஊழலில் தொடர்புடைய கருணாநிதி குடும்பத்தினர் அனைவரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற வேண்டும்.


ராஜபக்சேவை தூக்கிலிடக் கோரி ஆர்ப்பாட்டம்


ராஜபக்சேவையும், அவரது கூட்டாளிகளையும் தூக்கிலிட வலியுறுத்தி மதுரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை அரசை கண்டித்தும், ராஜபக்சேவுக்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் அகவன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,


இனப்படுகொலையில் ஈடுபட்ட ராஜபக்சே மற்றும் அவரது கூட்டாளிகளை ஐ.நா. சபை விசாரித்து சர்வதேச நீதிமன்றத்தில் தக்க தண்டனையை வாங்கிக் கொடுக்க வேண்டும். இலங்கை அரசுடன் உள்ள அனைத்து உறவுகளையும் இந்திய அரசு முறித்துக்கொள்ள வேண்டும் என்றார்.


வடிவேலுக்கெல்லாம் பதில் சொல்வதா? கே.எஸ்.ரவிகுமார் எரிச்சல்!


ராணா படப்பிடிப்பு துவங்கிய முதல் நாளன்றே பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. இன்றைக்கு உங்களையெல்லாம் சந்திக்கணும் என்று ரஜினி சார் ஆசைப்பட்டார். அதற்காகதான் படப்பிடிப்பு முடிந்ததும் பிரஸ்மீட் வைங்க என்றார். பட் அன்ஃபார்ட்சுநேட்லி அவருக்கு உடம்பு சரியில்லாமல் போயிருச்சு என்று சம்பிரதாயமாக பேச ஆரம்பித்தார் கே.எஸ்.ரவிகுமார்.

ரஜினி பிரஸ்சை மீட் பண்ணி இருபது வருஷமாச்சு. இன்னைக்கும் மீட் பண்ண வேணாம் என்பதால்தான் இப்படி ஒரு ஸ்கீரின் பிளேயை பண்ணியிருக்கீங்களா என்று ஒரு மூத்த நிருபர் முதல் கேள்வியை வீசசற்றே அதிர்ந்துதான் போனார் கே.எஸ்.ரவிகுமார். இல்லண்ணே... ஸ்கிரின் பிளேயெல்லாம் இல்ல. யாராவது இதுக்கு போய் ஸ்கிரீன் பிளே பண்ணுவாங்களாகடந்த சில நாட்களாகவே அவருக்கு சரியான உறக்கம் இல்ல. நேற்று கூட தனக்கு நெருக்கமான நண்பர்களுக்கு அவரே போன் செய்து இந்த விழாவுக்கு வரச்சொல்லி நள்ளிரவு வரை பேசிக் கொண்டு இருந்தார். காலையில் ஷூட்டிங் ஸ்பாட்ல அவருக்கு தரப்பட்ட கூல் ட்ரிங்ஸ் ஒத்துக்கல. அவ்வளவுதான். அஜீரண கோளாறுக்காக செக்கப் பண்ணிட்டு அப்பவே வீட்டுக்கு போயிடாரு என்று நீண்ட பதிலளித்த கேஎஸ்.ரவிகுமார் படம் குறித்த அடுத்தடுத்த தகவல்களுக்கு தாவினார்.

நூறு கோடி பட்ஜெட், 220 நாட்களுக்கு குறையாமல் ஷூட்டிங். படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். ரஹ்மான் ஒரு பாடலை முடித்துக் கொடுத்துவிட்டார். அதைதான் இன்று படம் பிடித்தோம். இந்த பாடலின் பாதியில் இருந்துதான் ரஜினியின் பகுதி வருகிறது. எனவே அவர் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றெல்லாம் உருப்படியான விஷயங்களை கூறிவந்த கே.எஸ்.ரவிகுமாரிடம் பலரும் எதிர்பார்த்த அந்த கேள்வி எழுப்பப்பட்டது.

காலையில் ஒரு பேட்டியில் ராணாவாவதுகாணாவாவது என்று கூறியிருக்கிறாரே வடிவேலு. அது பற்றி என்ன நினைக்கிறீங்கஇதுதான் கேள்வி. சட்டென்று உஷாரானார் ரவிகுமார். அப்படியா சொல்லியிருக்கார். எனக்கு தெரியலையே. சமீபகாலமாக அவரது வாய்மொழிதான் பரபரப்பா இருக்கு. வடிவேலு சொன்னார் என்பதற்காக கே.எஸ்.ரவிகுமார் பதில் சொல்லிகிட்டு இருக்க முடியுமாநான் வேணும்னா அப்புறமா போன் பண்ணி கேட்கிறேன். என்ன பதில் சொன்னார்னு பிறகு உங்களுக்கு சொல்றேன் என்று அந்த கேள்விக்கு அத்துடன் முற்றுப் புள்ளி வைத்தார்.


சைக்கோ வில்லன் ஆனார் விவேக்


சைக்கோ வில்லன் வேடத்தில் காமெடி நடிகர் விவேக் நடிக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 25 வருடங்களில் தமிழ், மலையாளத்தில் 450 படங்களில் நடித்து விட்டேன். இப்போது பெயரிடப்படாத படம் ஒன்றில் சைக்கோ வில்லன் வேடத்தில் நடிக்கிறேன். காமெடி பாணியிலிருந்து விலகி, வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் இந்த கேரக்டரை தேர்வு செய்தேன். மிதுன் ஹீரோ. அன்புச்செழியன் இயக்குகிறார். மலைப்பகுதிகளில் ஷூட்டிங் நடக்க உள்ளது. இதற்காக எனது கெட்டப்பை மாற்றுகிறேன். இதற்குமுன் நடித்த எந்த நடிகரின் சாயலும் இல்லாமல், வில்லன் வேடம் ஏற்றுள்ளேன். எனக்குள் எப்படி சைக்கோத்தனம் புகுந்தது, ஏன் வில்லன் ஆனேன் என்பதற்கான காட்சி புதுமையாக இருக்கும்.


கமல் - ஸ்ரீதேவி மீண்டும் ஜோடி..?


'மன்மதன் அம்பு' படத்தை அடுத்து கமல் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கும் படம் 'விஸ்வரூபம்'. இப்படத்தை செல்வராகவன் இயக்க இருக்கிறார்.

படத்தின் முதல் நாயகியாக ஒப்பந்தம் ஆனார் சோனாக்ஷி சின்கா. படப்பிடிப்பு தொடங்க இருந்த நேரத்தில் அமெரிக்கன் விசா மறுக்கப்படவே படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்னொரு நாயகிக்கு ஸ்ரீதேவியிடன் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கமலும்  ஸ்ரீதேவியும் ஏற்கனவே 1970 - 1980 காலகட்டங்களில் பல்வேறு திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அப்படங்கள் பெரிய வெற்றி பெற்று, ராசியான ஜோடி என தயாரிப்பாளர்களால் பல படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

பின்னர் ஸ்ரீதேவி ஹிந்தி படங்களில் நடிக்கத் தொடங்கினார். அங்கு அவருக்கு கிடைத்த வரவேற்பால், தமிழ் படங்களில் நடிப்பதை குறைந்துக் கொண்டார். ஸ்ரீதேவி கடைசியாக ரஜினிகாந்துடன் 1986-ல்  'நான் அடிமை இல்லை' படத்தில் நடித்தார்.


 இந்தி திரையுலகில் பல வருடங்கள் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரீதேவி, அனில் கபூரின் அண்ணன், தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  திருமணத்திற்குப் பின்  பெரிய திரையில் நடிப்பதை தவிர்த்து வந்தார் ஸ்ரீதேவி.

மாப்பிள்ளை படத்தில் மனிஷா கொய்ராலா நடித்த மாமியார் வேடத்தில் நடிக்க முதலில் ஸ்ரீதேவியை தான் அணுகினார்கள். ஆனால் அப்படத்தில் நடிக்க விரும்பவில்லை என்று மறுத்துவிட்டார்.

இந்நிலையில் கமலுக்கு ஜோடியாக நடிக்க அவரை அணுகி இருக்கிறார்கள்.  மீண்டும் நிகழுமா கமல்-ஸ்ரீதேவி மேஜிக்..?உடல் நலக்குறைவு; “ராணா” படப்பிடிப்பு ரத்து ; மீண்டு'ம் ரானா' எப்போது


ரஜினிக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். காலையில் ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நடந்த ராணாபடப்பிடிப்பில் பங்கேற்று நடித்தார்.

வீட்டுக்கு சென்றதும் தொடர்ந்து வாந்தி எடுத்ததால் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவசர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ரஜினிக்கு ஜீரண கோளாறு ஏற்பட்டுள்ளது என்றும் அதன் காரணமாகவே அவர் வாந்தி எடுத்துள்ளார் என்றும் சிகிச்சை அளித்த டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

சிகிச்சைக்கு பின் நலமாக இருப்பதாகவும் நாடி துடிப்பு ரத்த அழுத்தம், சுவாசம் போன்றவை சீராக உள்ளதென்றும் அவர் கூறினார். பின்னர் மாலை ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ரஜினியிடம் ஓய்வெடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து ஒரு வாரம் வீட்டில் ஓய்வு எடுக்கிறார்.

இதனால் ராணா படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு உள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட பாடல் காட்சியொன்று நேற்று படமானது. ஏ.வி.எம். ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடத்த பிரமாண்ட அரங்குகள் அமைத்து இருந்தனர்.

ரஜினி ஓய்வு எடுப்பதால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. முன்னதாக ரஜினி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தகவல் பரவியதும் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. ரசிகர்கள் கவலையோடு ஆஸ்பத்திரி முன் திரண்டனர். டிஸ்சார்ஜ் ஆன பிறகு நிம்மதியானார்கள்.

ரஜினிக்கு உடல் நலக்குறை ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ராணா பட இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் கூறும் போது ராணா படத்தின் கதை விவாதம் தொடர்ந்து பல நாட்கள் நடந்தது. அதில் ரஜினியும் பங்கேற்றார். பட பூஜைக்கு முந்தைய நாள் அவரே ஒவ்வொருத்தருக்கும் போன் போட்டு அழைப்பு விடுத்தார்.

இரவு 12 மணி வரை ஒவ்வொருவராக கூப்பிட்டார். பல நாட்கள் ஓய்வு இல்லாமல் இருந்ததால் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்றார். படப்பிடிப்புக்காக விரைவில் லண்டன் செல்வதாகவும் கூறினார். ரஜினி ஓய்வு முடிந்த பிறகு படப்பிடிப்பை விறு விறுப்பாக நடத்த திட்டமிட்டு உள்ளனர்.


நடிகர் விக்ரம் வீடு முன்பு ஆர்ப்பாட்டம்: 100 பேர் கைது


நடிகர் விக்ரம் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய 100 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


சென்னையில் திருவான்மியூரில் உள்ள நடிகர் விக்ரம் வீட்டு முன்பு ஃபார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்நதவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விக்ரம் நடித்துள்ள தெய்வத் திருமகன் படத்தின் பெயரை மாற்றக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஃபார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்நத 100 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


நடிகர் கார்த்தி நிச்சயதார்த்தம்! கிராமமே விழாக்கோலம் பூண்டது!!


 கார்த்தி -  ரஞ்சனி திருமண நிச்சயதார்த்தம் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே குமாரசாமி கவுண்டம்பாளையம் என்ற கிராமத்தில் கோலாகலமாக நடந்தது. இந்த மங்களகரமான நிகழ்ச்சி‌யையொட்டி அந்த கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. பருத்தி வீரன் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகர் கார்த்திக்கும்,  ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள குமாரசாமி கவுண்டம்பாளையம் விவசாய குடும்பத்தை சேர்ந்த சின்னசாமி - ஜோதி மீனாட்சி தம்பதியின் மகள் ரஞ்சனிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மணப்பெண்  ரஞ்சனி எம்ஏ ஆங்கில இலக்கியம் படித்து முடித்துள்ளார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் மணமகளின் சொந்த ஊரான குமாரசாமி கவுண்டம்பாளையத்தில் நேற்று (29-04-11) நடந்தது.  இதில் இரு தரப்பிலும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

முன்னதாக நடிகர் கார்த்தி வருவதையறிந்த கிராம மக்களும், ரசிகர்களும் அந்த‌ கிராமத்தில் குவிந்திருந்தனர். கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. நடிகர் கார்த்தி மணக்கப்போகும் பெண், தங்கள் கிராமத்தை சேர்ந்தவர் என்பதால் மகிழ்ச்சி அடைவதாக அந்த கிராம மக்கள் தெரிவித்தனர்.  கார்த்தி - ரஞ்சனி திருமணம் வரும் ஜூலை 8ம்தேதி கோவை கொடீசியா வளாகத்தில் நடைபெறுகிறது. திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என மணமக்கள் வீட்டார் தெரிவித்தனர். 


என் குடும்பத்தினர் திரைப்படத் துறையில் ஈடுபட்டால் ஏன் தான் இந்த நெஞ்செரிச்சலோ? கருணாநிதி அறிக்கை


என் குடும்பத்தினர் திரைப்படத்துறையில் ஈடுபட்டால் ஏன் தான் இந்த நெஞ்செரிச்சலோ? என்று முதல்வர் கருணாநிதி  கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

முதுபெரும் எழுத்தாளர்களில் ஒருவரும் எனது மனம் கவர்ந்த கருத்தாளர்களில் ஒருவருமான "சோலை'' எதை எழுதினாலும் அதை விருப்பு வெறுப்பின்றி ஒரே சீரான மனநிலையில் நான் படிப்பது வழக்கம். பாலும் நீரும் கலந்த கலவையில், தனக்கு வேண்டியதை மாத்திரம் எடுத்துக் கொள்ளும் அன்னப் பறவை போன்ற நிலையினின்று என்றைக்கும் தடுமாறாதவன் நான்.

ஆதலால், தமிழகத் திரைப்படத் துறை குறித்து அவர் எழுதியுள்ள ஒரு கட்டுரையை வார இதழ் ஒன்றில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொண்டாற்றியும் தொடர்ந்து தியாகங்கள் செய்தும் இயக்கத்தின் தருக்களாக வளர்ந்துள்ள என் பிள்ளைகள் அழகிரி, ஸ்டாலின், தமிழரசு ஆகியோரும், அவர்களுடைய பிள்ளைகளும் திரையுலகிலும் பொருளீட்டி புகழ் ஈட்டுவதை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் எனக்கு நண்பர்களாக இருந்து கொண்டே நச்சுக்கணைகள் பாய்ச்சுவதை நாட்டுக்கு உணர்த்தி பகுத்தாய்ந்து; தெளிந்திடுக எனும் வேண்டுகோளோடு இந்த விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன்.

எனது அருமை நண்பர்கள்

1945-ம் ஆண்டு முதல் இதுவரையில் 75-க்கு மேற்பட்ட திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறேன். நான் திரைக்கதை வசனம் எழுதிய முதல் படங்களான அபிமன்யூ, ராஜகுமாரி ஆகியவற்றில் எனது அருமை நண்பர் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக தோன்றி இருக்கிறார்.

அவரை அடுத்து எனது அன்பு நண்பர் சிவாஜி "பராசக்தி'' படத்தில் கதாநாயகனாக நடித்து பெரும் புகழ் பெற்றார். இப்படி எனக்கும் திரைப்படக் கலைஞர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசைவாணர்கள், கவிஞர்கள், தொழிலாளர்கள் ஆகியோருக்கும் இருந்த தொடர்புகளையும், இருக்கின்ற தொடர்புகளையும் திரையுலகை தெளிவாக புரிந்தவர்கள் மறந்திருக்க முடியாது.

சினிமா துறைக்கு விடிவு காலம்

எழுத்து நடையின் வேகத்தில் சோலை, யாரோ ஒருவர், பெரியதோர் தயாரிப்பாளர் கோபத்தின் உச்சத்தில், இந்த ஆட்சி மாறினால்தான் சினிமா துறைக்கு விடிவு காலம் என்று ஆதங்கப்படுவதாகக் குறிப்பிட்டு, அவர் பெயரையும் வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறார். தயாரிக்கப்பட்ட திரைப்படங்களை வெளியிட தியேட்டர்களே கிடைக்கவில்லை என்று சினிமா வட்டாரத்தில் விமர்சிக்கிறார்கள் என்று சொல்லவும் சோலை தவறவில்லை.

என்ன செய்வது? படம் எடுப்பதற்கு ஆள் இல்லாமல், ஸ்டுடியோக்களையும், திரையரங்குகளையும் மூடிவிட்டு, அந்த இடங்களை திருமண மண்டபங்களாகவும், ஓட்டல்களாகவும், கிடங்குகளாகவும் மாற்றிடும் நிலைமை ஏற்பட்டது ஒரு காலம். தற்போது படங்களை வெளியிட தியேட்டர்களே கிடைக்கவில்லை என்று அலைகின்ற ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

தியேட்டர் கிடைக்கவில்லை

நான் எழுதி வெளி வந்துள்ள "பொன்னர்-சங்கர்'' திரைப்படத்துக்கும் எங்கும் தியேட்டர்கள் கிடைக்கவில்லை அலையாய் அலைந்துதான் தியேட்டர்களை பிடிக்க முடிந்தது என்று அதன் தயாரிப்பாளர்கள் கண்ணீர் விட்ட நிகழ்ச்சி எல்லாம் எனக்குத் தெரியும்.

கடலூரில் ஒரு தியேட்டரில் "பொன்னர் சங்கர்'' திரைப்படம் திரையிடப்பட்டு அரங்கம் நிறைந்த காட்சிகளாக நடைபெற்றுக் கொண்டிருந்த போதே 2-ம் நாளே அந்த படத்தை கட்டாயப்படுத்தி எடுத்து விட்ட செய்திகள் எல்லாம் சோலைக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரம் ஒன்றியத்தில் ஒரு மூதாட்டி "கருணாநிதியின் பேரன் பேத்திகள் எல்லாம் சினிமா படம் எடுக்கிறார்களே, எப்படி?'' என்று கேட்டதாக சோலை எழுதி இருக்கிறார்.

மற்றவர்களையும் பாருங்கள்

பாவம்; அந்தப் பாட்டிக்கு ஏ.வி.மெய்யப்ப செட்டியார் திரைப்படம் எடுத்து பின்னர் அவருடைய மகன்கள் ஏ.வி.எம்.முருகன், ஏ.வி.எம். குமரன், ஏ.வி.எம்.பாலசுப்ரமணியம், ஏ.வி.எம். சரவணன், அவருடைய மகன் குகன், மருமகள் நித்யா போன்றவர்கள் எல்லாம் திரைப்படத் துறையிலே இருப்பதும், சிவாஜிக்குப் பிறகு அவருடைய மகன்கள் ராம்குமார், பிரபு, அவருடைய மகன் துஷ்யந்த் போன்றவர்கள் திரைப்படத் துறையில் ஈடுபட்டதும்,

ரஜினி, அவரது மகள் ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ் ஆகியோர் திரைப்படத் துறையில் இருப்பதும் கமல், அவரது சகோதரர் சாருஹாசன், மகள் ஸ்ருதி, மற்றும் சுகாசினி, மணிரத்னம், அனுஹாசன் போன்றவர்கள் எல்லாம் இந்தத் துறையிலே ஈடுபட்டிருப்பதும் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மற்றும் அவரது பிள்ளைகள் ஜீவா, ஜித்தன் ரமேஷ் போன்றவர்கள் இருப்பதும், நடிகர் சிவகுமார், அவரது பிள்ளைகள் சூர்யா, கார்த்தி போன்றவர்கள் திரைப்படத் துறையில் ஈடுபட்டிருப்பதும் ரெட்டியார் சத்திரம் மூதாட்டிக்குத் தெரியாமல் போனதுதான் வேடிக்கை.

ஓட்டாண்டிகள்

அது மாத்திரம் அல்ல, கடந்த காலத்தில் எத்தனை படத் தயாரிப்பாளர்கள் படங்களைத் தயாரித்து அதை முடிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்கள், எத்தனை பேர் படம் எடுத்த காரணத்தினாலேயே ஓட்டாண்டியாக ஆகி தெருவிலே நின்றார்கள் என்பதை எல்லாம் என் நண்பர் கவிஞர் கண்ணதாசன் எழுதி புத்தகமாக வெளியிட்டார்.

என் குடும்பத்திலே என்னுடைய பிள்ளைகளோ, பெண்களோ, பேரர்களோ அரசியலிலே ஈடுபட்டால் வாரிசு அரசியல் என்பதற்கும் திரைப்படத் துறையிலே ஈடுபட்டால் அதற்கு அர்த்தம் கற்பிப்பதற்கும் என்னதான் காரணமோ? ஏன்தான் இந்த நெஞ்செரிச்சலோ? ஆட்சி மாற வேண்டுமென்று துர்வாச முனிவரை போல கோபப்பட்ட தயாரிப்பாளருக்கு நான் நினைவூட்ட விரும்புவது, ஏன் அவரே பல முறை கொஞ்ச காலத்திற்கு முன்பு வரையில் பல மேடைகளில் சொல்லியதுதான். அவை வருமாறு:

சினிமா துறைக்கு அளித்த சலுகைகள்

குறைந்த செலவில் தயாரிக்கப்படும் தமிழ்ப் படங்களை ஊக்குவிக்கும் நோக்குடன் தகுதி வாய்ந்த தமிழ்த் திரைப்படங்களுக்கு அவை வெளியிடப்பட்டது முதல் 4 வாரங்கள் வரை கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளிக்கும் திட்டம் முதன் முதலாக 12.12.1996 அன்று தி.மு.க. அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கு முன்பு இருந்த ஆட்சியில் கேளிக்கை வரி வசூலிக்கப்பட்டுத்தான் வந்தது.

புதிய படங்களுக்குக் கேளிக்கை வரியை 54 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக 1989-ம் ஆண்டில் குறைத்த தி.மு.க. அரசு, 1.8.1998 முதல் அதை 30 சதவீதமாகவும், 2000-ல் 25 சதவீதமாகவும் குறைத்தது. 10 ஆண்டுகளுக்கு முன்வந்த திரைப்படங்களுக்குக் கேளிக்கை வரியை 40 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக 1.8.1998 அன்று குறைத்ததுடன்; மொழி மாற்றுப் படங்களுக்கான கேளிக்கை வரியையும் பிற தமிழ்ப்படங்களுக்குக் குறைக்கப்பட்டது போல் குறைத்தது தி.மு.க. அரசு. இதே போல, இணக்க வரி விதிப்புகளும் அதற்கேற்றாற்போல் குறைக்கப்பட்டன.

கேளிக்கை வரி ரத்து

இந்த வரிக்குறைப்புகளின் மூலம் ஆண்டிற்கு ரூ.60 கோடி அளவிற்கான வரிச் சலுகைகளை தமிழ்த் திரைப்பட வரலாற்றில் இல்லாத அளவில் 1998-ம் ஆண்டிலேயே தி.மு.க. அரசு வழங்கியது. விற்பனை வரிச் சட்டத்தின்படி, திரைப்படங்களுக்கான உரிமை மாற்றம் மீது 1.4.1986 முதல் 11.11.1999 வரை செலுத்த வேண்டிய வரியை தள்ளுபடி செய்தது.

அத்துடன் உரிமை மாற்றத்திற்கான விற்பனை வரியை 12.11.1999 முதல் 11 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது. 1.4.2000 முதல் திரைப்படங்கள் குத்தகை மீதான 4 சதவீத விற்பனை வரி அறவே நீக்கப்பட்டது. திரைப்படங்களுக்கு தமிழ்ப் பெயர்கள் வைக்கப்படுமானால், அதற்கு முழு கேளிக்கை வரி முழுமையும் ரத்து செய்யப்பட்டிருப்பதும் இந்த ஆட்சியிலேதான்.

படப்பிடிப்புக் கட்டணம் குறைப்பு

தொல்பொருள் ஆய்வுத் துறையின்கீழ் உள்ள மற்றும் கலைச்சின்னங்கள் உள்ள இடங்களுக்குச் செலுத்தி வந்த படப்பிடிப்புக் கட்டணம் ஓரிடத்திற்கு ஒரு நாளைக்கு ரூ.5,000 என்பதை ஆயிரம் ரூபாய் எனவும், ஏனைய இடங்களுக்கு ரூ.2,500 என்பதை ரூ.500 எனவும் 1996-ல் குறைத்தது தி.மு.க. அரசு. ராஜாஜி மண்டப படப்பிடிப்பு வாடகை தி.மு.க. ஆட்சியில் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் என்று இருந்ததை 2003-ல் ஒரு லட்சமாக உயர்த்தியது ஜெயலலிதா  அரசு.

2004 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்விக்குப்பின் அது ரூ.25 ஆயிரமாக குறைக்கப்பட்டது. அது, 25.6.2006 அன்று தி.மு.க. அரசினால் ரூ.10 ஆயிரமாக மேலும் குறைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு நடத்தப்படும் இடங்களில் வகை-1 என்ற பிரிவில் குறிப்பிடப்பட்ட இடங்களுக்கு ஜெயலலிதா ஆட்சியில் ரூ.10 ஆயிரம் என்று விதிக்கப்பட்ட கட்டணம் ரூ.5 ஆயிரமாகவும், வகை-2-ன் கீழ்வரும் இடங்களுக்கு முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் ரூ.5 ஆயிரம் என்று விதிக்கப்பட்ட கட்டணம் ரூ.3,000 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

திரைப்பட தொழிலாளர்களுக்கு குடியிருப்பு

சின்னத் திரைக்கான படப்பிடிப்புக் கட்டணங்கள் பெரிய திரைக்கான கட்டணங்களில் 50 சதவீதம் மட்டுமே செலுத்தினால் போதும் எனவும் 25.6.2006 அன்று ஆணையிட்டது தி.மு.க. அரசு. தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கும் சண்டைப் பயிற்சியாளர்கள் சண்டைக் காட்சியின்போது உயிரிழக்க நேர்ந்தால் அவர்களின் குடும்பத்திற்கு ஒரு லட்ச ரூபாயும், செயல்பட முடியாத அளவிற்குக் காயம்பட்டு ஊனமடைய நேர்ந்தால் ரூ.50 ஆயிரமும் நிவாரண உதவி வழங்கும் திட்டம் 1996-ல் அறிமுகப்படுத்தி தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

திரைப்படக் கலைத்துறை, சின்னத்திரை சார்ந்த தயாரிப்பாளர்கள், கலைஞர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், தொழிலாளர்கள் அனைவருக்கும் வீடுகள் கட்டுவதற்காக காஞ்சீபுரம் மாவட்டம் சிறுதாவூருக்கு அருகில் பையனூரில் 96 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது.

திரைப்படத்துறையின் உழைப்பாளிகள் நலன்களைக் காத்திட திரைப்படத் துறையினர் நல வாரியம் அமைக்கப்பட்டு இருக்கிறது. 9.7.2008 அன்று "உளியின் ஓசை'' படத்தின் மூலம் எனக்குக் கிடைத்த கதை வசனத்துக்கான ஊதியம் ரூ.25 லட்சத்தில் வருமானவரி போக ரூ.18 லட்சம் திரைத்துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றும் மூத்த கலைஞர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டது.

போர்க் கருவிகள்

நண்பர் சோலை, திரைப்படத் துறையிலே உள்ள ஒரு சிலரின் எண்ணத்தை, தன் கட்டுரையின் வாயிலாக தெரிவித்திருப்பதையொட்டி இந்த விளக்கத்தை அவர்களுக்கு தெரிவித்திட உதவியதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டு திரையுலகத்திற்கு தி.மு.க. ஆட்சியிலே செய்யப்பட்ட ஒரு சில சாதனைகளை இங்கே சொல்லியிருக்கிறேன்.

இதை எல்லாம் செய்த குற்றத்திற்காகத்தான் இந்த ஆட்சி மாற வேண்டு மென்று திரைப்படத் துறையிலே உள்ள ஒரு சிலர் எண்ணுவார்களானால், அவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்பு நண்பர் சோலைக்குத்தான் உண்டு.

கலைத் துறை, இலக்கியத் துறை இரண்டையும் என் அரசியல் இலட்சியப் போராட்டத்திற்குத் தேவையான போர்க்கருவிகளாக நான் கருதுகிறேன். சில பேர் லட்சிய போரின் பக்கம் அடியெடுத்து வைக்காமல், தலைவைத்துப் படுக்காமல் கலைத்துறை, இலக்கியத் துறைகளால் மட்டுமே ஈர்க்கப்பட்டு செயல்படுகிறார்கள். காரணமின்றி அவர்களில் சிலருக்கு என் மீது அழுக்காறும், அசூயையும் ஏற்படுவது இயல்புதான். அதற்காக நான் என்னுடைய லட்சியத்தை புதைத்து விட்டு, லட்சங்களைத் தேடி அலைய மாட்டேன்.

-இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.