Saturday, May 25, 2013

பிரபல பாடகர் டிஎம் சவுந்திரராஜன் வாழ்கை (வீடியோ)

பிரபல பாடகர் டிஎம் சவுந்திரராஜன் மரணம்!

இந்தியாவின் மிகச் சிறந்த பின்னணிப் பாடகரும் இசைக் கலைஞருமான டிஎம் சவுந்திரராஜன் இன்று பிற்பகல் சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 91.

உடல் நலக் குறைவு காரணமாக இன்று அவர் உயிர் பிரிந்தது. மூச்சுக் கோளாறு காரணமாக கடந்த 12-ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சில தினங்களுக்கு முன் வீடு திரும்பினார். பேரன் திருமணத்திலும் கலந்து கொண்டார்.

வீட்டில் இருந்தபடியே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று பிற்பகல் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

1923ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி மீனாட்சி அய்யங்காரின் மகனாக மதுரையில் பிறந்தார் டி.எம். சவுந்தரராஜன். அவரது இயற்பெயர் துகுலுவ மீனாட்சி அய்யங்கார் சவுந்திரராஜன்.

பிரபல இசை வித்துவான் பூச்சி ஸ்ரீனிவாச அய்யங்காரின் மருமகன் ராஜாமணி அய்யங்காரிடம் இசைப் பயிற்சி பெற்று பல ஆண்டுகளாக மேடை கச்சேரி செய்து வந்தார்.

1950-ம் ஆண்டு கிருஷ்ண விஜயம் படத்தில் 'ராதே உனக்கு கோபம் ஆகாதடி' என்ற பாடலைப் பாடி திரை இசைப்பாடகராக அறிமுகமானார் டி.எம். சவுந்தரராஜன்.

அதன் பிறகு பல்லாயிரம் பாடல்களை பாடி தனது கணீர் கம்பீர குரலால் இசை ரசிகர்களின் இதயங்களில் குடி கொண்டார்.

2003-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், ஏராளமான மாநில அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார்.

தமிழ் திரையுலக ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி மற்றும் ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ், ரஜினிகாந்த், கமல்ஹாஸன் என அனைத்து பிரபலங்களுக்கும் குரல் கொடுத்துள்ள டி.எம். சவுந்தரராஜன் ஆயிரக்கணக்கான பக்தி மற்றும் மெல்லிசை பாடல்களையும் பாடியுள்ளார்.


2012-ம் ஆண்டு .ஆர்.ரகுமான் இசையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக உருவானசெம்மொழியான தமிழ் மொழியாம்' என்ற பாடல்தான் டி.எம்.சவுந்தரராஜன் குரலில் பதிவான கடைசி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த டி.எம்.சவுந்தரராஜனின் உடல் மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

திரையுலகைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்களும், முக்கிய பிரமுகர்களும் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

டிஎம் சவுந்திரராஜன் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.


Friday, May 10, 2013

நாளை ஆர்யா - நயன்தாரா 'திருமணம்'!! (அழைப்பிதழ் இணைப்பு)


'ஆர்யா வெட்ஸ் நயன்தாரா...' தேதி - மே 11, நேரம் இரவு 9 மணி... -இப்படி வாசகங்கள் அடங்கிய ஒரு அழைப்பிதழ் பிரதியை இமெயிலில் அனுப்பி வைத்திருக்கிறார் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா.

கூடவே,

 'இந்த செய்தி பல நாட்களாக காற்றில் மிதந்து வரும் செய்திதான் ....

இதை பற்றி அறியாதவரோ தெரியாதவரோ யாரும் இல்லை ...

இது ஆச்சரியமூட்டினாலும் அதிர்ச்சி தரும் தகவல் இல்லை ...

நெஞ்சை அள்ளிய அரசன் அரசியை தன்னிலை மறக்க செய்யும் தருணம் ...

இந்த மாபெரும் தருணம் அரங்கேறும் நாள் நாளை ...'

- என்று குறிப்பிட்டுள்ளனர்.

 இந்த மின்னஞ்சல் வந்த கையோடு, பரபரவென செய்தி பரவ ஆரம்பித்துவிட்டது. இதுகுறித்து மின்னஞ்சலை அனுப்பிய பிஆர்ஓ கூறும் போது, 'இந்த அழைப்பிதழை எங்களுக்கு அனுப்பி அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பச் சொன்னார்கள். அனுப்பி விட்டோம். வேறு எதும் எங்களுக்குத் தெரியாது,' என்றார்.

சினிமா விளம்பரம்

ஆனால் நாம் விசாரித்த வகையில் இது ஆர்யா - நயன்தாரா நடிக்கும் ராஜா ராணி படத்துக்கான எதிர்மறை விளம்பரம் என்பதே உண்மை என்றார்கள். ஏற்கெனவே இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது ஆர்யாவும் நயன்தாராவும் கோவா சர்ச்சில் வைத்து மோதிரம் மாற்றிக் கொண்டதாக செய்தி வெளியானது நினைவிருக்கலாம். இப்போது நாளை இரவு திருமணம் என்று செய்தி வெளியிட்டுள்ளனர். ஆர்யா முஸ்லிம் என்பதால் இரவில் திருமணம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
Thursday, May 2, 2013

சரப்ஜித் கைது முதல் இறப்பு வரை


தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பாகிஸ்தான் சிறையில் கடந்த 22 ஆண்டுகளாக தவித்து வந்த இந்தியர் சரப்ஜித் சிங், இன்று அதிகாலை உயிரிழந்தார்.

கடந்த 1990ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் சிறையில் தவித்த சரப்ஜித் சிங், 22 ஆண்டுகளாக சந்தித்த சவால்களும், ஏமாற்றங்களும் ஏராளம்.

இந்தியாவின் அமிர்தசரஸ் நகரைச் சேர்ந்தவர் சரப்ஜித் சிங். கடந்த 1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கசூர் எல்லைப் பகுதிக்கு அருகே, இந்திய - பாகிஸ்தான் எல்லையை சட்ட விரோதமாக கடக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு, பாகிஸ்தான் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

பின்னர், அந்நாட்டின் லாகூர் மற்றும் பைசல்பாத் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு சரப்ஜித் சிங் காரணம் எனக் கூறி, 1991ம் ஆண்டு அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்த நீதிமன்றம், அவருக்கான தண்டனையை உறுதி செய்தது.

பின்னர் 2006ம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததுடன், தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

தொடர்ந்து 2008ம் ஆண்டு மார்ச் மாதம், சரப்ஜித் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுவை, அப்போதைய அதிபர் பர்வேஸ் முஷாரஃப் நிராகரித்தார்.

எனினும், அவருக்கு கருணை வழங்க வேண்டும் என சரப்ஜித் குடும்பத்தினர் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, அவரைத் தூக்கிலிடுவதை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. பின்னர் 2009ம் ஆண்டு இறுதியில், இங்கிலந்து வழக்கறிஞர் ஒருவர், சரப்ஜித் சிங்கை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை தொடங்கினார்.

பின்னர் மே 2012ம் ஆண்டு அதிபர் அசிஃப் அலி சர்தாரியிடம் சரப்ஜித் சிங் கருணை மனுத்தாக்கல் செய்தார்.

ஜூன் 2012ல், அந்த மனு மீதான விசாரணைக்குப் பின்னர், அவருக்கான மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதாகவும், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க இருப்பதாகவும் பாகிஸ்தான் தெரிவித்தது. ஆனால், ஒரு சில தினங்களுக்குப் பின்னர், சரப்ஜித் சிங்கிற்கு பதிலாக மற்றொரு இந்திய கைதியை விடுதலை செய்யப் போவதாக பாகிஸ்தான் அறிவித்தது, அதிருப்தியை ஏற்படுத்தியது.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் ஒரு கருணை மனுவை, ஆசிஃப் அலி சர்தாரியிடம், சரப்ஜித் தாக்கல் செய்தார். கடந்த மாதம் 26ம் தேதி, சிறைக்குள் நடந்த மோதலில், சரப்ஜித் சிங் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்றார்.

இன்று அதிகாலை ஒன்றரை மணியளவில் அவர் உயிரி பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு இருண்ட பயணம்....

22 ஆண்டு காலமாக பாகிஸ்தான் சிறையில் இருந்த சரப்ஜித் கடந்த 26ம் தேதி நடந்த சம்பவம் அவரை நீங்கா இருளில் தள்ளியது.

கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சரப்ஜித் சிங்கை சக கைதிகள் கடந்த 26ம் தேதியன்று கடுமயைாக தாக்கினர்.

ஏப்ரல் 27ம் தேதியன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரப்ஜித் சிங்கை இந்திய தூதரக அதிகாரிகள் சென்று பார்த்தனர். அன்றைய தினமே சரப்ஜித் கோமா நிலைக்கும் சென்றார். சரப்ஜித் சிங் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரிக்க பாகிஸ்தான் அரசு குழு ஒன்றை அமைத்தது. மேலும், தாக்குதல் சம்பவம் நடந்த சிறை கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர் ஆகியோரை அந்நாட்டு அரசு இடை நீக்கம் செய்தது.

பாகிஸ்தான் சிறையில் சரப்ஜித் கொலைவெறி தாக்குதலுக்கு ஆளானதற்கு இந்தியாவில் எதிர்கட்சிகள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தன. சரப்ஜித் சிங் தாக்கப்பட்டதும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் பாகிஸ்தானின் திட்டமிட்ட செயல்கள் போலவே தோன்றுகின்றன. சரப்ஜித் சிங் ஏதும் அறியாதவர். இந்தியர்களுக்கு பாகிஸ்தான் சிறைகளில் பாதுகாப்பு கிடையாது என பா.. செய்தித் தொடர்பாளர், ராஜிவ் பிரதாப் ரூடி தெரிவித்தார்.

குடும்பத்தினர் சந்திப்பு: தலையில் பலத்த காயங்களுடன் லாகூர் ஜின்னா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரப்ஜித் சிங்கை அவரது மனைவி, மகள்கள் உள்ளிட்டோர் 29ம் தேியன்று நேரில் சந்தித்தனர்.

வெளிநாட்டு சிகிச்சை! பாகிஸ்தான் மருத்துவமனையில் ஆழ்ந்த கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த இந்தியர் சரப்ஜித்சிங்கை மேல்சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அனுப்புவது குறித்து ஆராய வல்லுநர்கள் குழு ஒன்றை அந்நாட்டு அரசு கடந்த 29ம் தேதியன்று அமைத்தது.

தொடர்ந்து 30ம் தேதியும் சரப்ஜித் உடல்நிலை குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வந்தன. அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் அந்த தகவல் மறுக்கப்பட்டது.

ஆனால் மே1 இரவு 1 மணியளவில் சிறையிருளில் இருந்து நிரந்தர இருளுக்குள் சென்றார் சரப்ஜித் சிங்.கய்யாலாகாத இந்திய அரசால் சரப்ஜித்சிங் மரணம்


பாகிஸ்தான் சிறைச்சாலையில் கைதிகளால் தாக்கப்பட்ட இந்தியர் சரப்ஜித் சிங், லாகூர்மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் உயிரிழந்தார். அவரது உடலை இந்தியா கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 1990ம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக கூறி கைது செய்யப்பட்ட சரப்ஜித் சிங்கிற்கு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

பாகிஸ்தானின் கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சரப்ஜித் சிங்கை சக கைதிகள் சிலர் கடந்த 26ம் தேதி கொடூரமாக தாக்கினர். இதில், தலையில் பலத்த காயம் அடைந்த அவர், லாகூர் ஜின்னா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து சரப்ஜித் சகோதரி, மனைவி மற்றும் 2 மகள்கள், லாகூர் சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரப்ஜித் சிங்கை சந்தித்தனர்.

சரப்ஜித், நேற்று, மீள முடியாத கோமா நிலைக்குச் சென்று விட்டதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். அவருக்கு உயரிய சிகிச்சை அளிக்க இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரிடம், இந்தியத் தூதர் வலியுறுத்தியதாக, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நேற்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று அதிகாலை ஒரு மணியளவில், சரப்ஜித் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவக் குழுவின் தலைவர் சௌகத் தெரிவித்தார். இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கும், சரப்ஜித் உயிரிழந்த தகவலை ஜின்னா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

சரப்ஜித் சிங்கை சந்தித்து விட்டு நேற்றுதான் அவரது குடும்பத்தினர் இந்தியா திரும்பினர் இந்த நிலையில் அதிர்ச்சிகரமான தகவல் அவர்களை தாக்கியுள்ளது. கடந்த 6 நாட்களாக கோமா நிலையில் உயிருக்குப் போராடிய சரப்ஜித் சிங் உயிரிழந்தது, அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சரப்ஜித் சிங் உடலை இந்தியா கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் இரங்கல்.....

பாகிஸ்தான் சிறையில் தாக்கப்பட்ட இந்தியர் சரப்ஜித்சிங் மறைவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

முன்னதாக கோமா நிலையில் இருந்த சரப்ஜித் சிங்- சிகிச்சைக்காக மனித நேய அடிப்படையில் இந்தியாவுக்கு அனுப்ப பாகிஸ்தான் மறுத்தது தமக்கு வருத்தமளித்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

சரப்ஜித்சிங்கின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவரத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு மேற்கொள்ளும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

உள்துறை அமைச்சர் ஆறுதல்.....

சரப்ஜித் சிங்கின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, சரப்ஜித்-ன் உடலை பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

அவர் உயிரோடு இருக்கும் பொது அவரை காப்பற்ற போதிய நடவடிக்கை எடுக்காத இந்திய அரசு இப்போது உயிரற்ற அவரது உடலை துரித நடவடிக்கை எடுப்பது வேடிக்கையாக உள்ளது .