Sunday, May 27, 2012

ஜெகன்மோகன் ரெட்டி கைது! ஆந்திராவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு


ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன்ரெட்டி. இவர் ஏராளமான தொழில் நிறுவனங்களையும், சாக்ஷி பெயரில் தொலைக்காட்சி செய்தி நிறுவனங்களையும் நடத்தி வந்தனர். மேலும் பிணாமிகள் பெயரிலும் பல தொழில் நிறுவனங்களை நடத்தியதும், கறுப்பு பணத்தை அதில் முறையீடு செய்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வந்தது.
 
இவரது பிணாமியாக செயல்பட்ட தொழில் அதிபர் நிம்மகிட்ட பிரசாத் கைது செய்யப்பட்டார். ஜெகன்மோகன் நிறுவனத்துக்கு உடந்தையாக செயல்பட்ட ஆந்திர கலால்துறை மந்திரி மோபிதேவி வெங்கட்ரமணா ரெட்டியும் கைதானார். இவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சி.பி.ஐ. அடுத்தக்கட்டமாக ஜெகன்மோகன் ரெட்டியிடம் விசாரணையில் இறங்கியது. ஜெகன்மோகனை நேரில் விசாரணைக்கு வருமாறு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. இதை ஏற்று அவர் சி.பி.ஐ. முன் ஆஜரானார். ஐதராபாத் விருந்தினர் மாளிகையில் கடந்த 2 நாட்களாக விசாரணை நடந்தது. சொத்துக்கள் பற்றியும் கறுப்பு பணத்தை தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்ததும், பிணாமிகள் பற்றியும் சரமாரியாக கேள்விகள் கேட்டு விசரணை நடத்தினர்.
 
அவற்றுக்கு ஜெகன்மோகன் ரெட்டி உரிய பதில் அளித்தார். 2 நாள் விசாரணை முடிவடையாததால் இன்றும் விசாரணைக்கு அழைத்தனர். அதன்படி இன்று காலை மீண்டும் சி.பி.ஐ. முன் ஆஜரானார். தொடர்ந்து அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஜெகன்மோகனுடன் குற்றம்சாட்டப்பட்ட அவரது நிதி விவகார ஆலோசகர் விஜய்சாய் ரெட்டியும் சென்றார். அவரிடமும் இன்று சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
 
3 நாள் விசாரணைக்குப்பின் ஐதராபாத்தில் சி.பி.ஐ. போலீசார் ஜெகன்மோகன் ரெட்டியை கைது செய்தனர்.
 
ஐதராபாத் மற்றும் ஜெகன்மோகனின் சொந்த ஊரான கடப்பா மாவட்டத்திலும், ஆந்திராவின் முக்கிய பகுதிகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆந்திராவில் பதட்டம் நீடிக்கிறது.கருணாநிதியை சந்திக்க கோர்ட்டில் அனுமதி கேட்க்கும் ராசா...

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதான ஆ.ராசா கடந்த 15-ந்தேதி ஜாமீனில் விடுதலையானார். திகார் ஜெயிலில் 15 மாதம் சிறையில் இருந்த அவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

தற்போது டெல்லியில் இருக்கும் அவருக்கு அனுமதி இல்லாமல் சென்னை செல்லக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா 3-ந்தேதி சென்னையில் நடக்கிறது. இந்த விழாவில் கலந்து கொண்டு கருணாநிதியின் ஆசியை பெற ஆ.ராசா விரும்புகிறார். 

இதற்காக சென்னை வர அனுமதி கேட்டு அவர் மனு செய்கிறார். அனுமதி கிடைத்தவுடன் அவர் சென்னை வந்து கருணாநிதியை சந்திப்பார் என்று தெரிகிறது.
இன்னொரு ஸ்ரீதேவியாக உருவாவாரா தமன்னா?


தமிழ்நாட்டின் சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி கிராமத்தில் பிறந்து தமிழ் ரசிகர்களை மட்டுமின்றி தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் கலக்கி ஒருவழியாக இந்திப் படவுலகில் கரைசேர்ந்தவர் நம்மூர் ஸ்ரீதேவி!

இவருக்கு பாலிவுட்டில் செம பிரேக் கொடுத்த படம் 1983-ல் வெளியான ஹிம்மத்வாலா. 1981-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான படத்தோட ரீமேக்தான் இது! தெலுங்குல ஜெயபிரதாவும் கிருஷ்ணாவும் நடிச்சிருந்தாங்க! ராகவேந்திரராவ் இயக்கியிருந்தார்! இந்தியில் ஜிதேந்திராவும் ஸ்ரீதேவியும் இணைந்திருந்தாங்க..

ஸ்ரீதேவி நடித்த ஹிம்மத்வாலா அந்த காலத்துலேயே 12 கோடி ரூபாய்க்கு கல்லா கட்டிய படம்! ஸ்ரீதேவி பாடிய 'nainon mein sapna" என்ற பாடல் அந்தக் காலத்து இளசுகளிடம் ரவுசு கட்டிய பாடல்!

இப்ப இந்த படத்தை மீண்டும் இந்தியில் ரீமேக் எடுக்கப்போறாங்களாம்... ஸ்ரீதேவி நடிச்ச ரேகா கேரக்டருக்கு யார் தெரியுமில்ல.. நம்ம தமன்னாதான் செலக்ட்! அந்த புகழ்பெற்ற பாடலுக்கு இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி டான்ஸ் அமைக்கச் சொல்லி ஃபாரா கானிடம் சொல்லியிருக்கார் டைரக்டர் சஜித்கான்.

ஹிம்மத்வாலா அன்று ஸ்ரீதேவிக்கு கொடுத்த பிரேக்கை இன்னிக்கு தமன்னாவுக்கு கொடுக்குமா?


ஐபிஎல் 5 தொடரில் ஜொலித்த இளம்வீரர்கள்


ஐபிஎல் 5 தொடரின் மூலம் இந்தியாவை பல இளம்வீரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இளம்வீரர்களின் மூலம் இந்திய அணியை சர்வதேச அளவில் இன்னும் பலம் கொண்டதாக மாற்ற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் 5 தொடர் கடந்த ஏப்ரல் 3ம் தேதி பெரும் கொண்டாட்டத்துடன் துவங்கியது. ஏப்ரல் 4ம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸை எதிர்த்து ஆடியது.

மொத்தம் 9 அணிகள் பங்கேற்ற ஐபிஎல் 5 தொடரில், லீக் போட்டிகளுடன் 5 அணிகள் விடைப்பெற்றன. பிளே ஆப் சுற்றிற்கு முன்னேறிய 4 அணிகளில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் தகுதிச் சுற்றில் வெளியேறின.

இந்த ஆண்டு நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. எதிரணியாக கொல்கத்தா நைட் ரைட்ர்ஸ் அணி களமிறங்க உள்ளது.

இந்த நிலையில் ஐபிஎல் 5 தொடரின் மூலம் இந்தியாவில் உள்ள பல உள்ளூர் இளம்வீரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் பலரும் தங்களின் அக்கோரஷமான ஆட்டம் மூலம் இந்திய அணிக்கு வர தகுதி உள்ளவர்கள் என்று நிரூபித்துள்ளனர். சில வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் வீரர்களும் தங்களின் திறமையை வெளிக்காட்டி உள்ளனர்.

பேட்ஸ்மேன்கள்:

ஐபிஎல் 5 தொடரில் பேட்ஸ்மேனான களமிறங்கிய இந்திய வீரர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கம்பிர் சிறப்பாக ஆடிய ரன்களை குவித்தார். இந்திய அணியின் அனுபவ வீரரான இவர், தனது கேப்டன் பொறுப்பை சிறப்பாக வகித்தார். மொத்தம் 16 போட்டிகளில் பங்கேற்ற இவர் 6 அரைசதம் அடித்து மொத்தம் 588 ரன்களை எடுத்தார்.

அதேபோல டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் ஆடிய ஷிகார் தவான் 15 போட்டிகளில் பங்கேற்று 5 அரைசதங்களை அடித்து 569 ரன்களை குவித்தார். இடதுகை பேட்ஸ்மேனான இவர் பந்துவீசி 3 விக்கெட்களையும் வீழ்த்துள்ளார். இவருக்கு இந்திய அணியி்ல் அதிகம் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்திய அணியில் விரல் வி்ட்டு எண்ணும் எண்ணிக்கையில் வாய்ப்பு பெற்றவர் அஜின்கா ரஹானே. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க வீரராக களமிறங்கிய அவர் அதிரடியாக ஆடி, மொத்தம் 16 போட்டிகளில் 1 சதம் மற்றும் 3 அரைசதம் அடித்து 560 ரன்கள் குவித்துள்ளார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வலது கை பேட்ஸ்மேனாக களமிறங்கி அதிரடியாக ஆடியவர் மன்தீப் சிங். இவர் மொத்தம் 16 போட்டிகளில் பங்கேற்று 432 ரன்களை குவித்தார். பகுதிநேர பந்துவீச்சாளரான இவர் 1 விக்கெட் வீழ்த்தினார்.

பந்துவீச்சாளர்கள்:

இந்திய பந்துவீச்சாளர்களில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் களமிறங்கிய உமேஷ் யாதவ் சிறப்பாக பந்துவீசி 17 போட்டிகளில் 19 விக்கெட்களை வீழ்த்தினார். இந்திய அணியில் இளம்வீரராக வாய்ப்பு கிடைத்த உமேஷ் யாதவ் இன்னும் தனது பணியை தொடர வாய்ப்புள்ளது.

இந்திய அணியில் சில போட்டிகளில் பங்கேற்றுள்ள வினய் குமார், ஐபிஎல் 5 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரராக களமிறங்கினார். 15 போட்டிகளில் பங்கேற்ற வினய் குமார் 19 விக்கெட்களை வீழ்த்தினார்.

அதேபோல கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் சார்பாக களமிறங்கிய பர்விந்தர் அவானா 12 போட்டிகளில் பங்கேற்று 17 விக்கெட்களை வீழ்த்தினார். வலதுகை வேகப்பந்துவீச்சாளரான அவானா, பேட்டிங்கில் ஜொலிக்காதது அவருக்கு பின்னடைவு.

ஆல் ரவுண்டர்கள்:

இந்திய அணியில் சுழல்பந்துவீச்சாளரான அறிமுகமாகி சில போட்டிகளில் ஆடியுள்ள பியூஸ் சாவ்லா, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் விளையாடினார். மொத்தம் 16 போட்டிகளில் பங்கேற்று 16 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். வலதுகை பேட்ஸ்மேனான சாவ்லா பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு 106 ரன்களை எடுத்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இந்த ஆண்டு அறிமுகமாகி சிறந்த ஆல் ரவுண்டராக ஜொலித்தவர் ரவீந்தர ஜடேஜா. 18 போட்டிகளில் விளையாடிய ஜடேஜா 12 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இடதுகை பேட்ஸ்மேனான அவர் 191 ரன்களை குவித்துள்ளார். இந்திய அணியில் ஏற்கனவே ஆடி வரும் இவர், தனது இடத்தை மேலும் உறுதிப்படுத்தி உள்ளார்.

இந்திய அணியில் ஏற்கனவே அறிமுகமாகி தற்போது வாய்ப்பின்றி தவிக்கும் இர்பான் பதான், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஆடினார். 17 போட்டிகளில் பங்கேற்ற இர்பான் பதான் 8 விக்கெட்களை வீழ்த்தினார். இடதுகை பேட்ஸ்மேனான இவர் 176 ரன்களை சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

இந்திய அணியில் மூத்த வீரர்களுக்கு மாற்றாக யாரை களமிறக்குவது என்ற நீண்டநாள் கேள்விக்கு இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் சிறந்த பதிலை அளித்துள்ளது. இதுவரை வெளியே தெரியாமல் இருந்த பல இளம் வீரர்கள் தங்கள் திறமையின் மூலம் வெளி உலகிற்கு அறியப்பட்டுள்ளனர்.


டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிப்பது எப்படி? சுகாதாரத்துறை அதிகாரி விளக்கம்'ஏடிஸ்' தென் மாவட்ட மக்களை அதிரவைத்த அதிபயங்கர கொசு! தற்போது திருப்பூர், கோவையிலும் தனது கைவரிசையை நீட்டியிருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோரை பாரபட்சமில்லாமல் கடித்து டெங்கு காய்ச்சலால் படுக்க வைத்திருக்கும் பயங்கர 'வியாதி'க்கான காரணகர்த்தாதான் இந்த ஏடிஸ் கொசு!
ஏடிஸ் கொசு எப்படி பிறக்கிறது? இது கடித்தால் என்னவாகும்? டெங்கு ஏற்படுவதற்கான அறிகுறி என்ன? வராமல் தடுப்பது எப்படி? வந்தால் தடுப்பது எப்படி? என்பது குறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் செந்தில்குமார் நிருபரிடம் கூறியதாவது:-
வழக்கமாக கொசுக்கள் தேங்கி கிடக்கும் கழிவுநீரில் இருந்து உற்பத்தி ஆகும். ஆனால் ஏடிஸ் கொசு தேங்கி கிடக்கும் நல்ல தண்ணீரில் இருந்து உற்பத்தியாகும் ஒரு பூச்சி வகையை சேர்ந்தது. தேங்காய் சிரட்டைகள், தெருவில் வீசப்பட்ட பிளாஸ்டிக் கப்கள், பழைய பாத்திரங்கள், ஆட்டு உரல்கள் போன்றவற்றில் தேங்கி இருக்கும் மழை நீர் மூலம் இந்த கொசுக்கள் உற்பத்தி ஆகிறது. இவை பெரும்பாலும் வீட்டிற்குள்ளும் வீட்டை சுற்றியும் அதிகமாக வலம் வரும்.
இந்த வகை கொசுக்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்களையோ, குழந்தைகளையோ கடித்தால் உடனடியாக அவர்களை டெங்கு காய்ச்சல் தாக்கும் அபாயம் உள்ளது. பெரும்பாலும் இந்த கொசுக்கள் குழந்தைகளை கடிக்கும்போது எளிதில் நோய் தாக்குதலுக்கு ஆளாவர்.
ஒருவரை ஏடிஸ் கொசு கடித்தால் முதலில் காய்ச்சல் வரும். உடல் வலியுடன் எலும்புகளிலும் வலி ஏற்படும். இப்படி ஏதாவது உடல் வலிகள் தொடங்கும்பட்சத்தில் அது டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி என்று அர்த்தம். உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று உரிய சிகிச்சை மேற்கொண்டு டெங்கு காய்ச்சலில் இருந்து விடுபடலாம்.
இந்த நோய் எளிதில் குணப்படுத்த கூடிய நோய். அதே நேரத்தில் போதிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் காய்ச்சல் தொடர்ந்து நீடித்தால் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நோய் முற்றிய நிலையில் இதே கிருமிகள் ரத்தத்தில் உள்ள பிளட்லெட்களை சாப்பிடும். இதனால் மனித உடலில் உள்ள ரத்தம் உரையும். வாய், மூக்கு என உடலின் பல்வேறு பகுதிகளில் ரத்த கசிவு ஏற்படும். இதனால் விலைமதிக்க முடியாத உயிர் இழப்பும் ஏற்படும்.
அதனால் இந்த நோய்க்கான அறிகுறி தென்பட்டவுடன் உரிய சிகிச்சை மேற்கொண்டு உடல்நலத்தை காத்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் சுற்றுப்புறத்தை மழைநீர் தேங்காமல் சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் மூலமாகவும் வீட்டிற்குள் கொசுவராமல் தடுப்பாக ஜன்னலில் கொசுவலைகளை பயன்படுத்துவது, கொசு ஒழிப்பான்கள் பயன்படுத்துவ தன் மூலமும் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுவை விரட்டி நோய் வராமல் தடுக்கலாம்.
கோவை, திருப்பூரில் தென் மாவட்டங்களை போல டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது கூட இங்கு குறைவுதான். இருந்தாலும் மக்கள் நலனில் அக்கறை  கொண்ட சுகாதாரத்துறை போத்தனூர் உள்பட மாவட்டம் முழுவதும் தீவிர கொசு ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது. மாநகர பகுதியிலும் மாநகராட்சி சுகாதாரத்துறை கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. புகை மூலம் கொசுக்கள் அழிக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் பயப்பட தேவையில்லை. மாவட்ட கலெக்டரின் ஆலோசனையின் பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகளும் முழுவீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பொதுமக்கள் சகாதாரமாக, விழிப்புணர்வோடு இருந்தால் டெங்கு கொசுவை ஒழித்து காய்ச்சல் வராமல் தற்காத்து கொள்ளலாம்.
இவ்வாறு செந்தில்குமார் கூறினார்.


காம்பீர் என்னை விட ஆக்ரோஷமான கேப்டன்: டோனி சொல்கிறார்


இறுதிப் போட்டி குறித்து சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி நிருபர்களிடம் கூறியதாவது:- 
இறுதிப் போட்டி என்பதால் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். நெருக்கடியை எப்படி கையாள்வது என்பது தான் முக்கியம். சரியான முறையில் நெருக்கடியை சமாளித்தால் வெற்றி பெற்று விடலாம். 

வீரர்களின் தனிப்பட்ட முடிவுக்கு அணி நிர்வாகம் விட்டு விடுவதே வெற்றிக்கு முக்கிய காரணமாகும். லீக் போட்டியில் நாங்கள் எப்படி திட்டமிட்டு ஆடினோமோ அதுபோல்தான் இறுதிப்போட்டியிலும் ஆடுவோம். டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் முரளி விஜய் சிறப்பாக ஆடினார். பயிற்சியில் கூடுதலாக கவனம் செலுத்துமாறு அவருக்கு ஆலோசனை வழங்கினேன். 

இதற்கு நல்ல பலன் இருந்தது. விஜய் ஒரு திறமை வாய்ந்த பேட்ஸ்மேன். தொடக்கத்தில் சில ஆட்டங்களில் சரியாக ஆடாததால் ஓய்வு கொடுத்தோம். நாங்கள் அவரிடம் வழக்கமாக எப்படி ஆடுவீர்களோ அதுபோல் ஆடுங்கள் என்றோம். அவர் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் தான் டெல்லி அணிக்கு எதிராக சிறப்பாக ஆட முடிந்தது. 

கொல்கத்தா அணியில் சுனில் நரீன் சிறப்பாக பந்துவீசி வருகிறார். அவரது பந்துவீச்சை எதிர்கொள்வது மிகவும் கடினமானது. காம்பீர் என்னை விட ஆக்ரோஷமான கேப்டன் ஆவார். ஒரு அணியின் வெற்றிக்கு கேப்டனின் செயல்பாடு மிகவும் முக்கியமாகும். அவர் கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்படுகிறார். 

இவ்வாறு அவர் கூறினார்.மீண்டும் அசத்த வருகிறார் 'ஆச்சி' மனோரமா!


உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக நடிக்காமல் இருந்து வந்த ஆச்சி மனோரமா மீண்டும் புதுப் பொலிவுடன் நடிக்க வருகிறார். ஹரி இயக்கும் சிங்கம் 2 படத்தில் மனோரமா நடிக்கிறார்.

மனோரமாவுக்கு கடந்த சில மாதங்களாக நேரம் சரியில்லை. அடுத்தடுத்து உடல் நலக் குறைவில் விழுந்தார். ஹோட்டலுக்குப் போன இடத்தில் வழுக்கி விழுந்து அடிபட்டு விட்டது. இதனால் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இடையில் அவரது உடல் நிலை மோசமாகவும் செய்தது. செயற்கை சுவாசம் கொடுக்கப்படும் நிலைக்கு அவரது உடல் நிலை போனது. அதேபோல சிறுநீரகக் கோளாறு, சர்க்கரை, ரத்த அழுத்தம் என பல பிரச்சினைகளில் சிக்கித் தவித்து வந்தார் மனோரமா.

தற்போது அனைத்துப் பிரச்சினைகளிலிருந்தும் விடுபட்டுள்ளார் மனோரமா. நல்ல உடல் நலத்துடன் பூரண ஓய்வில் இருந்து வரும் மனோரமா மீண்டும் நடிக்க வரப் போகிறார்.

சிங்கம் 2 படத்தில் அவரை நடிக்க இயக்குநர் ஹரி அழைத்துள்ளார். மனோரமாவும் சந்தோஷத்துடன் ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து சிங்கம் 2 மூலம் நடிப்புக்கு மறு பிரவேசம் செய்கிறார் மனோரமா.


ஆட்டோ கட்டணம் உயர்வால் சைக்கிள் ரிக்ஷாவுக்கு மாறிய பயணிகள்


பெட்ரோல் விலை உயர்வு நடுத்தர மக்களை கடுமையாக பாதித்துள்ளது. ஆட்டோ கட்டணம் உயர்ந்து விட்ட நிலையில் அடுத்து என்னென்ன விலை உயர போகிறதோ என்ற கவலை ஒவ்வொருவர் மனதிலும் உள்ளது. 

பஸ்சில் கூட்டம் அதிகமாக இருப்பதால் வேலைக்கு செல்வோர் ஆட்டோவை நாடி செல்கின்றனர். பணம் செலவானால் பரவா இல்லை. சரியான நேரத்துக்கு செல்லவேண்டும் என்று ஆட்டோவில் ஏறுகிறார்கள். ஆனால் பெட்ரோல் விலை உயர்வால் ஆட்டோ கட்டணம் உயர்ந்து விட்டது. 

2 முதல் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடங்களுக்கு ஆட்டோவில் செல்லும் சிலர் கட்டணம் கட்டுப்படியாகாததால் மாற்று வழியை யோசிக்கிறார்கள். அவர்கள் மனதில் முதலில் தோன்றுவது சைக்கிள் ரிக்ஷாதான். சைக்கிள் ரிக்ஷா தொழில் சென்னை நகரில் சைக்கிள் ரிக்ஷாவை வால் டாக்ஸ் ரோடு, சவுகார்பேட்டை, யானைகவுனி, வடசென்னை பகுதிகளில் அதிகம் காணலாம். 

புரசை வாக்கத்திலும் சைக்கிள் ரிக்ஷாக்கள் ஓடுகின்றன. சைக்கிள் ரிக்ஷாவில் வயதானவர்கள், வடநாட்டுக் காரர்கள்தான் அதிகம் சவாரி செய்கிறார்கள். தற்போது ஆட்டோ கட்டண உயர்வால் கூடுதல் நேரமானாலும் பரவாயில்லை என்று சைக்கிள் ரிக்ஷாவுக்கு மாற தொடங்கி விட்டார்கள். 

வால்டாக்ஸ் ரோட்டில் உள்ள ஸ்டாண்டில் சவாரிக்காக காத்திருந்த ரிக்ஷா ஓட்டுபவர்களின் கருத்து வருமாறு:- 

ரிக்ஷா தொழிலாளி குணசேகரன்:- சென்னை நகரில் 12,827 ரிக்ஷாக்கள் ஓடியது. இப்போது 2,700 ரிக்ஷாக்கள் மட்டும் உள்ளது. இந்திக்காரர்கள் தான் ரிக்ஷாவில் விரும்பி செல்கிறார்கள். அவர்களை நம்பித்தான் எங்கள் பிழைப்பு உள்ளது. 

தமிழ் ஆட்கள் ரிக்ஷாவை விரும்புவதில்லை. ஆட்டோ கட்டணம் உயர்வால் சிறிது தூரத்தில் உள்ள இடங்களுக்கு செல்ல ரிக்ஷாவை அவர்கள் விரும்புவார்கள். இங்கிருந்து (வால்டாக்ஸ் ரோடு) சவுகார்பேட்டைக்கு செல்ல ரூ.30 முதல் ரூ.40 வரை கேட்போம். ஆட்டோவில் இரு மடங்கு கேட்பார்கள். குறுகலான சந்துக்கள் நிறைந்த சவுகார்பேட்டை போன்ற பகுதிகளில் ஆட்டோக்கள் செல்லாது. ஆனால் சைக்கிள் ரிக்ஷா சந்துக்களில் எளிதாக சென்று பயணியின் வீட்டு வாசலில் இறங்கி விடுவோம். 

ரிக்ஷா தொழிலாளி பெரியசாமி:- சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து வரும் வட மாநில பயணிகள் ரிக்ஷாவை விரும்புகிறார்கள். பயணிகளுக்கு மட்டும்தான் கட்டணம் வசூலிப்போம். லக்கேஜுக்களுக்கு வசூலிக்க மாட்டோம். 

வடமாநிலத்தை சேர்ந்த குப்தா:- சைக்கிள் ரிக்ஷாவில் செல்வதால் செலவு குறைவு. மேலும் வீட்டு வாசலில் இறக்கி விடுவார்கள். இதனால் நாங்கள் பெரும்பாலும் ரிக்ஷாவைதான் விரும்புவோம். சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வரும் வட மாநில பயணிகள் குடும்பத்துடன் சைக்கிள் ரிக்ஷாவில் ஏறிச் செல்கிறார்கள். தற்போது ஆட்டோ கட்டண உயர்வால் தமிழ் ஆட்களில் சிலர் அருகில் உள்ள வீட்டுக்கு  ரிக்ஷாவில் சென்றதை பார்க்க முடிந்தது. 

இதுபோல் சைக்கிள் ரிக்ஷாவில் பயணம் செய்வது அதிகரித்தால் சைக்கிள் ரிக்ஷா தொழிலாளிகளின் வாழ்க்கை முன்னேறும்.

முல்லைப் பெரியாறு அணையில் தமிழக போலீஸை நிறுத்துவோம்: ஜெயலலிதா


முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய படைகளை நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையின் ஆய்வுக்காக தோண்டப்பட்ட துளைகளை அடைக்க அண்மையில் தமிழக அதிகாரிகள் சென்றிருந்தனர். ஆனால் அவர்களை கேரள அதிகாரிகள் தடுத்து தாக்கியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த விவகாரம் குறித்து இன்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கேரளத்தின் அடாவடியை சுட்டிக்காட்டியுள்ளதுடன் அணையின் பாதுகாப்புக்கு மத்திய படைகளை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய படைகள் நிறுத்தப்படவில்லை எனில், தமிழக போலீசாரையே அங்கு நிறுத்த நேரிடும் என்றும் பிரதமருக்கு ஜெயலலிதா தமது கடிதத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


பெரம்பூரில் மங்காத்தா நடிகர் குத்திக் கொலை: 3 ஆட்டோ டிரைவர்கள் தப்பி ஓட்டம்


பெரம்பூர் நட்டாள் கார்டன் 2-வது தெருவைச் சேர்ந்தவர் குமார் (26). இவர் மங்காத்தா, வல்லக்கோட்டை உள்பட 10-க்கும் மேற்பட்ட சினிமா படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.
 
தாயம், இதயம் ஆகிய டி.வி. தொடர்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கஸ்தூரி என்ற மனைவியும், சந்தோஷ் என்ற மகன், பிரியதர்ஷினி என்ற மகள் உள்ளனர்.
 
நேற்று இரவு 10 மணி அளவில் குமார் வீட்டில் இருந்தபோது செல்போனில் அழைப்பு வந்தது. அதில் பேசியவர்கள் திரு.வி.க. தெருவுக்கு வருமாறு அழைத்தனர். உடனே மனைவியிடம் சொல்லி விட்டு மோட்டார் சைக்கிளில் சென்றார். வழியில் தனது நண்பர் வெல்டிங் ரவி என்பவரையும் ஏற்றிக் கொண்டார்.
 
திரு.வி.க. சந்திப்பில் ஆட்டோ ஸ்டேண்டு அருகில் அவரது மற்றொரு நண்பரான பைனான்சியர் ரமேஷ் நின்றிருந்தார். அங்கு குமார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அவர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார்.
 
அப்போது 3 பேர் குமாரை நோக்கி பாய்ந்து வந்தனர். அதில் ஒருவன் திடீர் என்று குமாரின் மார்பில் கத்தியால் குத்தினான். இன்னொருவன் முதுகில் குத்தினான். மற்றொருவன் கை, கழுத்து ஆகிய இடங்களில் குத்தினான்.
 
5 இடங்களில் குத்துப்பட்ட குமார் ரத்த வெள்ளத்தில் நடுரோட்டில் கீழே சாய்ந்தார். உடனே 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர். குற்றுயிராக கிடந்த குமாரை ரவியும், ரமேசும் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
 
தகவல் கிடைத்ததும் துணை கமிஷனர் கார்த்திகேயன், உதவி கமிஷனர் விஜயராகவன், செம்பியம் இன்ஸ்பெக்டர் கமீல் பாஷா ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். குமார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
 
கொலையுண்ட குமாரின் நண்பர்கள் இருவரையும் போலீசார் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது குமாரை சுற்றி வளைத்து குத்திக் கொன்றது ஆட்டோ டிரைவர்கள் தேவராஜ், ஜானி, மதுரை என தெரிய வந்தது. அவர்களைப் பிடிக்க இரவு முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். சிக்கவில்லை.
 
எதற்காக இந்த கொலை நடந்தது என்பது தெரியவில்லை. பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறா? அல்லது பெண் விவகாரமா என போலீசார் விசாரித்து வருகிறார்கள். ரமேஷ் பைனான்ஸ் தொழில் செய்து வருவதால் யாராவது பணம் கொடுக்காமல் இழுத்தடித்தால் அவர் குமாரை வைத்து பண வசூலில் ஈடுபடுவது உண்டு என்று கூறப்படுகிறது. எனவே இதில் பாதிக்கப்பட்டதால் குத்திக் கொன்றார்களா? என்றும் விசாரணை நடக்கிறது.
 
இதுபற்றி குமாரின் உறவினர் சீனிவாசன் கூறும்போது, குமார் சில சினிமா படங்களிலும் டி.வி. தொடர்களிலும் நடித்து வேகமாக முன்னேறி வந்தார். அதற்குள் அவருக்கு இந்த கதி ஏற்பட்டு விட்டது. குமாரை கும்பல் சுற்றி வளைத்து குத்திக் கொன்றபோது உடன் இருந்த நண்பர்கள் ரமேசும், ரவியும் தடுக்க முயற்சிக்காதது ஏன் என்பது எங்களுக்கு சந்தேகமாக உள்ளது இதுபற்றி அவர்களிடம் விசாரிக்க வேண்டும் என்றார்.
 
ஆள் நடமாட்டம் இருந்த இரவு நேரத்தில் நடுரோட்டில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியது. தப்பி ஓடிய 3 ஆட்டோ டிரைவர்களையும் போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.


பாஜகவுக்கு உடம்பு சரியில்லை... ராம் ஜேத்மலானி நக்கல்


பாஜவுக்குள் அலையடித்துக் கொண்டிருக்கும் கோஷ்டிப் பூசலை சமாளித்து எல்லாப் பேரும் ஒற்றுமையுடன் இருந்து கொண்டிருக்கிறோம் என்பதாகக் காட்டிக் கொள்ள கட்சித் தலைவர் நிதின் கத்காரி கடுமையாக போராடிக் கொண்டுள்ள நிலையில் பாஜகவை கடுமையாக விமர்சித்துக் கடிதம் எழுதி கத்காரிக்கு டென்ஷனைக் கொடுத்துள்ளார் ராஜ்யசபா எம்.பியும், மூத்த தலைவருமான ராம் ஜேத்மலானி.

இதுகுறித்து ராம் ஜேத்மலானி கத்காரிக்கு எழுதியுள்ள கடிதத்தில், கட்சி ரொம்ப பலவீனமாக இருக்கிறது. கட்சி இப்படி கவலைக்கிடமான நிலையில் இருப்பதை நினைத்து நீங்களும் கவலையுடன் இருப்பீர்கள் என்று கருதுகிறேன்.

இதை விட மிகப் பெரிய பலவீனத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சியைக் கண்டு, அதன் ஊழலைக் கண்டு நீங்கள் பேசாமல் இருப்பதிலிருந்தே பாஜகவும் பலவீனமாக இருப்பதாக நான் உணர்கிறேன்.

நாட்டுக்கு இப்போது விறுவிறுப்பான செயலாற்றக் கூடிய எதிர்க்கட்சியே தேவை. ஆனால் அதைச் செய்ய பாஜக தவறி வருகிறது. தலைவர்கள் எல்லாம் வாயை மூடிக் கொண்டு இருக்கிறார்கள். மேலும் ஒருவர் காலை மற்றவர் வாரி விடுவதில்தான் கவனமாக உள்ளனர். கட்சி செயலிழந்து போய் விட்டதோ என்று சந்தேகம் வருகிறது.

காங்கிரஸ் கூட்டணி அரசின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்களில் பாதிப் பேர் சிறையில் இருக்க தகுதி படைத்தவர்கள். ஆனால் அவர்களைப் பற்றி நமது கட்சி கவலைப்படுவதாகவே தெரியவில்லை. மக்கள் எதிர்பார்ப்புக்கேற்ப நாம் செயல்படுவதாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளார் ராம் ஜேத்மலானி.

மும்பையில் நடந்த பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்திலேயே கோஷ்டிப் பூசல் பெரிதாக வெடித்தது. முதலில் மோடி வர மாட்டேன் என்றார். அவரை சமாதானப்படுத்த சஞ்சய் ஜோஷியை வெளியேற்ற வேண்டிய நிலை வந்தது. இதையடுத்து அத்வானியும், அவரது கோஷ்டியைச் சேர்ந்த சுஷ்மா சுவராஜும் வெளிநடப்புச் செய்தனர்.

இந்த நிலையில் தற்போது ஜேத்மலானியின் விளாசல் கடிதம் பாஜக தலைமைக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது. இந்தக் கடிதம், தேசிய செயற்குழுக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு எழுதப்பட்டதாகும்.


வெப்சைட்டில் விபசார அழகியாக கோ பட நடிகை காஜல் !'கோ' படத்தில் பெண் நக்சலைட் தீவிரவாதியாக நடித்திருப்பவர் நடிகை காஜல். இவருக்கு தமிழ்ச் செல்வி என்ற பெயரும் உண்டு. நகைச்சுவை நடிகர் விவேக்குடன் காமெடி காட்சிகளிலும் நடித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து சினிமா நடிகையானவர் காஜல். இவரை விபசார அழகியாக சித்தரித்து ஒரு கும்பல் வெப்சைட்டில் காஜலின் போட்டோவை வெளியிட்டுள்ளது. அதில், 'கால் கேர்ள்' என குறிப்பிடப்பட்டு காஜலின் செல்போன் நம்பர் இடம் பெற்றிருந்தது. இதனை பார்த்து பலர் போன் செய்து செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளனர். பலர் காஜலின் செல்போனில் ஆபாசமாகவும் பேசி உள்ளனர்.

இதையடுத்து போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து அவர் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது செல்போனில் பேசிய ஒருவர் உங்கள் போட்டோவை வெப்சைட்டில் பார்த்தேன் என்று கூறி அசிங்கமாக பேசினார். எனது செல்போனுக்கு பலர் ஆபாச எஸ்.எம்.எஸ்.களையும் அனுப்பினர். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். செல்போனில் தொல்லை அதிகரித்ததால் எனது செல்போன் எண்ணை மாற்றும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளேன். இதன் காரணமாக நானும் எனது குடும்பத்தினரும் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம்.

எனவே எனது போட்டோவை வெப்சைட்டில் வெளியிட்டு என்னை அசிங்கப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் காஜல் கூறியுள்ளார். இது குறித்து சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காஜல் கூறியதாவது:-

இலவசமாக தகவல்களை வெளியிடும் வெப்சைட் ஒன்றில் கடந்த 23-ந்தேதி அன்று எனது போட்டோவையும், செல்போன் நம்பரையும், யாரோ வெளியிட்டுள்ளனர். இதன் பிறகு பலர் எனக்கு போன் செய்து செக்ஸ் தொல்லை கொடுத்தனர். ஒரு சிலர் அருவறுக்கத்தக்க வகையில் என்னிடம் பேசினர். இதனால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். நான் துணிச்சலான பெண் என்பதால் இதனை தாங்கிக் கொள்ளும் பக்குவம் ஏற்பட்டுள்ளது. ஒரு சில பெண்களால் இதுபோன்ற தொல்லைகளை தாங்கிக் கொள்ள முடியாது. அப்படிப்பட்டவர்களாக இருந்தால் நிச்சயம் உயிரை மாய்த்துக் கொண்டிருப்பார்கள்.

இதுபோன்ற வெப்சைட்டுகளில் பெயர், முகவரியின்றி எந்தவிதமான அவதூறுகளையும், யாரைப்பற்றியும் பரப்பலாம் என்ற நிலை உள்ளது. எந்த வெப்சைட்டாக இருந்தாலும் ஒரு தகவலை வெளியிடுபவரின் பெயர், முகவரியை கட்டாயம் வாங்கிக் கொண்டு அதுபற்றி ஆராய்ந்த பின்னர்தான் சம்பந்தப்பட்ட வெப்சைட்டுகளில் வெளியிட வேண்டும். இது குறித்து போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்துள்ளேன்.

சைபர் கிரைம் போலீசார் 2 நாட்களில் என்னிடம் விசாரணை நடத்துவார்கள் என்று தெரிவித்தனர்.பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் செயல்படும் இதுபோன்ற வக்கிர குணம் கொண்டவர்களை கடுமையாக தண்டிக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பாக யார் மீதாவது உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? என்று காஜலிடம் கேட்டபோது, நான் அதிகமாக கோபப்படுவேன். இதனால் என் மீதான கோபத்தில் யாராவது இப்படி செய்து விட்டார்களா? என்பது தெரியவில்லை என்றார்.நியூட்டன் போட்ட கணக்குக்கு தீர்வு கண்டு இந்திய மாணவன் சாதனை


கடந்த 350 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்வு காணப்படாமல் இருந்து வந்த ஒரு கணிதப் புதிருக்கு விடை கண்டு அனைவரையும் வியக்க வைத்துள்ளார் 16 வயதேயான இந்திய மாணவன். இந்தக் கணிதப் புதிரைப் போடட்வர் மறைந்த சர் ஐசக் நியூட்டன் ஆவர்.

கடந்த 350 ஆண்டுகளாக உலக கணிதவியலாளர்களை குழப்பி வந்த புதிராகும் இது. கணித மேதைகள் பலரும் கூடஇந்தப் புதிருக்கு விடை காண முடியாமல் திணறி வந்தனர். ஆனால் 'ஜஸ்ட் லைக் தட்' இதற்கு விடை கண்டுள்ளார் செளரியா ராய் என்ற இந்திய வம்சாவளி மாணவன்.

ஜெர்மனியின் டிரட்சென் பகுதியில் வசித்து வருகிறார் ராய். இவர் விடை கண்டுள்ள கணிதப் புதிர், டைனமிக்ஸ் தியரியில் வருகிறது. டிரட்சென் பல்கலைக்கழகத்திற்கு ராய் பள்ளிச் சுற்றுலாவாக சென்றபோதுதான் இந்தக் கணிதப் புதிர் குறித்து ராய்க்குத் தெரிய வந்தது. அப்போது அங்குள்ள பேராசிரியர்கள் இதுகுறித்து கூறியபோது, இதற்கு விடை காணவே முடியாது என்று கூறினர்.

ஆனால் அதை சவாலாக எடுத்துக் கொண்டார் ராய். பின்னர் அதற்கு விடை காணும் முயற்சியில்இறங்கினார், வெற்றியும் பெற்றார்.

இது மட்டுமல்லாமல் மிகக் கடினமான கணிதப் புதிர்களைக் கூட எளிதாக அவிழ்க்கும் வித்தை இவரிடம் உள்ளது. 6ம் வயதிலிருந்தே இதே வேலையாகத்தான் திரிகிறாராம் இவர்.

அதேசமயம், தன்னை மேதை என்று யாரும் அழைக்க வேண்டாம் என்றும், அந்த அளவுக்கு தான் இன்னும் வளரவில்லை என்றும் அடக்கத்துடன் கூறுகிறார்.

4வயதாகஇருந்தபோது கொல்கத்தாவிலிருந்து ஜெர்மனிக்கு வந்து செட்டிலானவர் ராய். தற்போது தனது தாய் மொழியான பெங்காலியை விட ஜெர்மனியை மிக லாவகமாக பேசுகிறார் ராய்.


இலங்கையில் தமிழர் பகுதியில் ராணுவம் குவிப்பு: இங்கிலாந்து தூதர் தகவல்


ஈழத் தமிழர்களுக்கு எதிராக கொடூரங்களை நிகழ்த்துவதாக இலங்கை அரசின் மீது ஏற்கெனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், இலங்கைக்கான இங்கிலாந்து தூதர் வெளியிட்டுள்ள தகவல் மேலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.  
 
இது தொடர்பான வீடியோவில் இங்கிலாந்து தூதர் ஜான், ’இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் ராணுவத்தினரின் நடமாட்டம் அதிகம் உள்ளது. நாட்டின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உள்ள ராணுவத்தினர் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு, நாட்டின் பிற பகுதிகளில் ராணுவத்தினர் குறைவாக உள்ளது போன்ற நிலையே தமிழர்கள் பகுதிகளில் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறோம்’ என்று கூறியுள்ளார்.  
 
தூதரின் பேச்சை இங்கிலாந்து வெளியுறவுத் துறை அதிகாரிகள் கருத்தில் கொண்டுள்ளதாக டெய்லி மிரர், ஐ லேண்ட் போன்ற பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. ’வெளிநாடுகளின் நெருக்குதல்களை ஏற்று இலங்கையில் குறிப்பிட்ட இடங்களில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற முடியாது. பாதுகாப்பு காரணங்களுக்காக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ராணுவம் நிலைகொள்ள வேண்டியுள்ளது அவசியமாகிறது' என்று இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே கடந்த சில நாட்களுக்கு முன்பு கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
அதேபோல் இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் பள்ளி மாணவர்களைக் கடத்தும் சம்பவமும் அதிகரித்துள்ளது. சமீபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபரால் அக்‌ஷய் (15) என்னும் தமிழ் மாணவர் கடத்தப்பட்டார். பின்னர் அவரை கிளிநொச்சி அருகே விடுவித்துள்ளனர்.  
 
இது தொடர்பாக பேசிய சிறுவனின் தந்தை பிரபாகரன், ’பணத்துக்காக இந்த சம்பவம் நடந்ததாகத் தெரியவில்லை. இதில் வேறு உள்நோக்கம் உள்ளது' என்று கூறியுள்ளார். முன்னதாக மே 19-ம் தேதி இதே பகுதியில் வேறொரு சிறுவன் கடத்தப்பட்டுள்ளார். ஆனால் இதுவரை அவர் மீட்கப்படவில்லை. கடந்த ஆண்டிலும் இதே போன்ற கடத்தல் சம்பவங்கள் நிகழ்ந்துள்இலங்கைக்கு விசிட் அடித்த தேமுதிக எம்.எல்ஏ. அருண்பாண்டியன் - அதிர்ச்சியில் உளவுத்துறை!


தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் இலங்கை விவகாரத்தை வைத்து அரசியல் செய்து வரும் நிலையில், தேமுதிக தனது சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான அருண்பாண்டியனை இலங்கைக்கு சத்தம் போடாமல் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கைக்கு பயணம் செய்யும் தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் போன்றவர்கள், மத்திய அரசு அனுமதி பெற்று தூதுக்குழுக்களில் இணைந்து செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், தேமுதிகவைச் சேர்ந்த பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினரும், நடிகருமான அருண் பாண்டியன், கடந்த சில தினங்களுக்கு முன்பு மிக ரகசியமாக இலங்கை சென்று அங்கு யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தாக கூறப்படுகின்றது.

இது குறித்து கொழும்பில் உள்ள பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது,

தேமுதிக வைச் சேர்ந்த பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினரும், நடிகருமான அருண் பாண்டியன், யாழ்ப்பாணம் வந்துள்ளது உண்மை.

ஆனால், அருண் பாண்டியன் தனிப்பட்ட முறையில் ஒரு மாத விசிட் விசாவில், வந்துள்ளதாக தெரிய வருகிறது. குறிப்பாக, திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஐங்கரன் இன்டர்நேஷனல் தலைவர் கருணாமூர்த்தியுடன் யாழ்ப்பாணம் வந்துள்ளார். கருணாமூர்த்தி ஈழத் தமிழர் ஆவார் என்பது நினைவிருக்கலாம். பல சூப்பர் ஹிட் தமிழ்ப் படங்களைத் தயாரித்துள்ளவர் கருணாமூர்த்தி.

யாழ்ப்பாணம் வந்த, அருண் பாண்டியன், இணுவில் என்ற கிராமத்தில் தங்கியிருந்தார். அப்போது, பொது மக்கள் பலரையும் அவர் சந்தித்துப் பேசினார்.

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் மிக முக்கியமான புகைப்படங்களை அவர் எடுத்துள்ளார். தமிழ் அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் இருவர், அவரைச் சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகின்றது என்கின்றனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இலங்கை விவகாரத்தில் மிக ஆர்வமாக உள்ளதாகவும், அதனால் தான் தனது நம்பிக்கைகுரிய நட்சத்திரம் அருண்பாண்டியன் மூலம் சில தகவல்களை பெற்று வர பணித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அருண் பாண்டியன் தமிழகம் வந்த பின்பு, இலங்கையில் ஈழ தமிழர்களின் நிலையை புதுக்கோட்டை இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் புட்டுவைக்கப் போவதாகவும் ஒரு தகவல் உலா வருகின்றது.

இதை லேட்டாக மோப்பம் பிடித்த தமிழக உளவுத்துறை , கடும் அதிர்ச்சி அடைந்து அது குறித்த தகவல்களை விரைவாக சேகரித்து வருகின்றது.


பிறந்த நாள் ஸ்பெஷல் : மனோரமா


'மாலையிட்ட மங்கை' படத்தில் கவிஞர் கண்ணதாசனால் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார் மனோரமா.

காமெடியா ஓகே.. குணசித்திர நடிப்பா ஓகே.. பாட்டு பாடணுமா.. வில்லன்களோட சண்டை போடணுமா.. பக்கம் பக்கமா வசனம் பேசணுமா.. ஒரு வார்த்தை  கூட பேசாம நடிக்கணுமா.. எதுவாயிருந்தாலும் ஆச்சி 'ஆல்வேஸ் ரெடி!'

நடிகன், சின்னக் கவுண்டர், சம்சாரம் அது மின்சாரம், பாட்டி சொல்லைத் தட்டாதே 'தில்லானா மோகனாம்பாள்' ஜில் ஜில் ரமாமணி எவர்கிரீன் ஹிட்.

நடித்த படங்களின் எண்ணிக்கை 1,500-ஐத் தாண்டும். எம்.ஜி.ஆர், சிவாஜி, அவரது மகன் பிரபு,   ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ஆர், முத்துராமன், அவர் மகன் கார்த்திக், ரஜினி, கமல், சத்யராஜ், அஜீத், விஜய் என தலைமுறைகள் தாண்டி நடித்துக் கொண்டிருக்கும் ஆச்சிக்கு 'கின்னஸ்' பட்டியலில் பெயர் என்பது, மேலும் ஒரு மகுடம்.

அவர் பாடிய ' வா வாத்யாரே ஊட்டாண்டே..' அந்த காலத்தில் பட்டிதொட்டி எங்கும் சூப்பர் டூப்பர் ஹிட்.

அண்ணா, எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா 5 மாநில முதல்வர்களோடு நடித்த ஒரே சினிமா பிரபலம் மனோரமா தான்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் என ஆறு மொழிகளில்  நடித்திருக்கிறார்.

ஆச்சிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது கலிஃபோர்னியா யூனிவர்சிட்டி. நாம் வழங்கி மகிழ்ந்தது 'கலைமாமணி'.


எதிரி விமானங்களை தாக்கும் இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி


எதிரிநாட்டு விமானங்களை தாக்கி அழிக்கும் திறனுடைய ஆகாஷ் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஆகாஷ் ஏவுகணை ஒரிசாவின் பலசோர் பகுதியை அடுத்த சந்திபூர் சோதனை தளத்தில் இருந்து இன்று காலை 11 மணி அளவில் ஏவப்பட்டது.
 
வாகனத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை விண்ணில் நிறுவப்பட்டிருந்த மாதிரி விமானத்தை வெற்றிகரமாக தாக்கியதாக ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. 25 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள இலக்கை வீழ்த்தும் ஆகாஷ் ஏவுகணை, 60 கிலோ எடையுள்ள ஆயுதங்களை சுமந்துசெல்லும் திறன் கொண்டது.
 
மேலும் எதிரிநாட்டு விமானங்கள் இந்தியாவுக்குள் நுழைந்தால் ரேடாரின் உதவியுடன் உடனே தாக்கும் வகையில், இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டிருப்பதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்‌. இதே ஆகாஷ் ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் நேற்று முன்தினமும் சோதனை செய்தது.