Wednesday, February 29, 2012

அடுத்த மாதம் அஜீத்தின் 'பில்லா-2' பட டிரெய்லர்


ரஜினியின் பில்லா படம் அஜீத்தை வைத்து ரீமேக் செய்து வெளியிடப்பட்டது. வெத்தலையை போட்டேன்டி, மை நேம் இஸ் பில்லா பாடல்கள் இதில் ரீமிக்ஸ் செய்யப்பட்டன.

இப்படம் வெற்றிகரமாக ஓடியதால் அதன் இரண்டாம் பாகம் பில்லா-2 என்ற பெயரில் தற்போது தயாராகி வருகிறது. இதிலும் அஜீத் தாதா மற்றும் நடுத்தர நல்ல இளைஞன் என இரு கெட்டப்களில் தோன்றுகிறார். நாயகியாக பார்வதி ஓமனகுட்டன் நடிக்கிறார். சக்ரி டோலட்டி இப்படத்தை இயக்குகிறார்.இவர் கமலின் உன்னைப்போல் ஒருவன் படத்தை டைரக்டு செய்தவர்.

இதில் நயன்தாராவும் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் நடிக்கவில்லை என படக்குழுவினர் மறுத்துள்ளனர். முழு நீள அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகிறது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.

அடுத்த மாதம் பில்லா-2 பட டிரெய்லர் மற்றும் பாடலை வெளியிட முடிவு செய்துள்ளனர். ஹெலிகாப்டர்கள், சேசிங், அஜீத்தின் அனல் பறக்கும் துப்பாக்கி சண்டையுடன் டிரெய்லர் உருவாகிறது.

கோடையில் படத்தை ரிலீஸ் செய்கின்றனர்.


ஆன்-லைனில் புதுப்பிக்கவும் ஏற்பாடு: ரேஷன் கார்டை புதுப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு


ரேஷன் கார்டை புதுப்பிக்க மேலும் ஒருமாத காலம் அவகாசம் அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடைக்கு வர இயலாதவர்கள் வீடுகளில் இருந்தபடியே ஆன்-லைனில் புதுப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலத்தை இந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதியில் இருந்து வரும் டிசம்பர் 31-ந் தேதி வரை ஓராண்டிற்கு நீட்டிக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். மேற்படி உத்தரவின்படி புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளில் வருடம் குறிப்பிடாமல் உள்ள கூடுதல் தாளின் மேற்பகுதியில் 2012 என்று முத்திரையிட்டு செல்லத்தக்கதாக அறிவிக்கப்பட்டது.

புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று வரை அளிக்கப்பட்டது. மொத்தம் உள்ள ஒரு கோடியே 97 லட்சத்து 70 ஆயிரத்து 682 ரேஷன் கார்டுகளில் இதுவரை ஒரு கோடியே 86 லட்சத்து 58 ஆயிரத்து 768 ரேஷன் கார்டுகள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன.

ரேஷன் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இதனை கனிவுடன் பரிசீலித்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ரேஷன் கார்டை புதுப்பிக்க மேலும் ஒரு மாத காலத்திற்கு அதாவது மார்ச் 31-ந் தேதி வரை அவகாசம் அளிக்க உத்தரவிட்டுள்ளார். 

இதன்படி இருப்பிட ஆதாரமாக வழங்கப்பட்டுள்ள வெள்ளை மற்றும் மஞ்சள் நிற தட்கல் ரேஷன் கார்டு வைத்திருப்போர் மற்றும் அரிசி, சர்க்கரை விருப்ப ரேஷன் கார்டுகள் வைத்துள்ள உடல்நல குறைவு காரணமாக நடக்க இயலாதோர், வயது முதிர்வு காரணமாக ரேஷன் கடைக்கு வர இயலாத குடும்ப அட்டைதாரர்கள், புனிதப்பயணம் மற்றும் மதம் சார்ந்த உள்ளிருப்பு விரதம் மேற்கொண்டுள்ளோர் மற்றும் புதுப்பித்தல் நடைபெற்ற காலத்தில் தற்காலிகமாக வெளிïர் சென்றவர்கள் ஆகியோர் பயனடையும் வகையில் அவர்களது ரேஷன் கார்டுகளை ஆன்-லைன் முறையில் புதுப்பித்துக் கொள்ள இணையதள வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

அதன்படி http://210.212.62.90:8080/newfcp/cardvalidity.doஎன்ற இணையதள முகவரிக்கு சென்று புதுப்பித்து கொள்ளலாம். இதில் ரேஷன் பொருள் வேண்டுவோர் 2012-ம் ஆண்டிற்கான கால நீட்டிப்பு தாளின் இரண்டு நகல்களை எடுத்துக்கொண்டு ஒரு நகலை குடும்ப அட்டையில் ஒட்டிக் கொண்டும், மற்றொரு நகலை உரிய கடைக்காரரிடம் அளித்து ரேஷன் பொருட்களை தொடர்ந்து பெற்றுக் கொள்ளலாம்.

ரேஷன் பொருள் வேண்டாதவர்கள் மற்றும் இருப்பிட சான்றாக மட்டுமே வைத்துக் கொண்டுள்ளவர்கள் இணையதளத்தில் உள்ள 2012-ம் ஆண்டுக்கான கால நீட்டிப்பு தாளின் ஒரு நகலை அவர்களுடைய குடும்ப அட்டையில் ஒட்டிக் கொண்டால் மட்டும் போதுமானது. இந்த வசதி 31-ந் தேதி வரை மட்டுமே இந்த இணையதள வசதி நாளை (மார்ச் 1) முதல் 31-ந் தேதி வரையில் நடைமுறையில் இருக்கும். மேற்படி இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


ஆசிய கோப்பை அணி: சச்சின் உள்ளே ...ஷேவாக் வெளியே ...


டாக்காவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆசியக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இன்று பிசிசிஐ அறிவித்தது. பார்மில் இல்லாதவரும், ஆஸ்திரேலிய தொடரின்போது கேப்டன் டோணியுடன்மோதல் போக்கில் ஈடுபட்டவருமான வீரேந்திர ஷேவாக்கை நீக்கி விட்டனர். அதேசமயம் பார்மில் இல்லாத இன்னொரு சீனியரான சச்சினுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஜாகிர்கானுக்கும் இடம் கிடைக்கவில்லை.

பங்காளதேஷ் தலைநகர் டாக்காவில் மார்ச் 12ம் தேதி ஆசியக் கோப்பை தொடர் துவங்க உள்ளது. இதில் விளையாடும் இந்திய வீரர்களின் தேர்வு இன்று மும்பையில் நடைபெற்றது. இந்திய அணித் தேர்வாளர் குழுத் தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தலைமையிலான குழு நீண்ட ஆலோசனைக்கு பிறகு ஆசியக் கோப்பைக்கான 15 பேர் அடங்கிய இந்திய அணியை அறிவித்தது.

இதில் ஆஸ்திரேலியாவில் மோசமாக ஆடிய துவக்க வீரர் ஷேவாக் அணியி்ல் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனால் இப்பவாச்சும் 100வது சதம் அடிக்கட்டுமநே என்ற எண்ணத்தில் பார்மில் இல்லாவிட்டாலும் கூட சச்சினுக்கு அணியி்ல் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வேகபந்துவீச்சாளர் ஜாகிர் கான் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

வழக்கம் போல கேப்டன் டோணி அணியை வழிநடத்தி செல்வார். அவருக்கு உறுதுணையாக விராத் கோஹ்லி துணைக் கேப்டனாக செயல்படுவார். மேலும் சுழல்பந்து வீரர் அஸ்வின், சுரேஷ் ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, வினய் குமார் ஆகிய இளம்வீரர்கள் அணியில் நீடிக்கின்றனர். இந்திய அணியில் புதுமுகமாக வேகபந்துவீச்சாளர் அசோக் டின்டா சேர்க்கப்பட்டுள்ளார்.

மீண்டும் பதான் சகோதரர்கள்

இந்திய அணியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பதான் சகோதரர்களான இர்பான் பதான் மற்றும் யூசுப் பதான் ஆகிய இருவரும் இடம் பிடித்துள்ளனர்.

15 பேர் கொண்ட இந்திய அணியின் விபரம்:

டோணி (கேப்டன்), விராத் கோஹ்லி(துணைக் கேப்டன்), சச்சின் டெண்டுல்கர், கெளதம் கம்பீர், ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், பிரவீன் குமார், வினய் குமார், ராகுல் சர்மா, யூசுப் பதான், இர்பான் பதான், அசோக் டின்டா


'எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்'!! சூர்யாவின் புத்திசாலித்தனமான கேள்விகள் ?!!


கேள்வி 1:

இவற்றில் ஒருவர் செய்வதைப் பார்த்து மற்றவர் அப்படியே செய்வதை எப்படிக் குறிப்பிடுவீர்கள்?

நாய் அடிச்சான் காப்பி
கொசு அடிச்சான் காப்பி
ஈயடிச்சான் காப்பி
பேய் அடிச்சான் காப்பி

கேள்வி 2:

ஒரு உணவின் பெயர் கொண்ட பண்டிகை எது?

ஏகாதசி
பொங்கல்
விநாயக சதுர்த்தி
மெதுவடை

-இந்தக் கேள்வி பதில்களைப் படித்ததும், என்னய்யா கிண்டலா என கடுப்பாக உங்களுக்குள் கேள்வி எழுந்தால்... அதை அப்படியே கேம்ஷோ நடத்தும் தனியார் தொலைக்காட்சிகள் பக்கம் திருப்பிவிடுங்கள்!.

'எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்' என்று மயிலாசாமியிடம் விவேக் நடத்திய கேம்ஷோவை விட 'மகா அறிவாளித்தனமான' கேள்விகள் கேட்கப்படுவது தான் கோபத்தை வரவழைக்கிறது. மக்களை முன்னேறவே விட மாட்டார்கள் போலிருக்கிறது.

கேள்விகள் கேனத்தனமாக இருக்கிறதே என்று நக்கலடித்தபடி, அடுத்த வேலைக்கு போய்விட்டால், நாம் முட்டாள்கள். அதற்குள் உள்ள மோசடியைப் புரிந்து கொண்டால், இந்த மாதிரி நிகழ்ச்சி நடத்துபவர்களை முட்டாளாக்க ஒரு வாய்ப்பாவது உண்டாகும்.

இது போன்ற கேள்வி- பதில் நிகழ்ச்சியின் பின்னால் விளையாடுகிறது பல கோடி ரூபாய் மக்கள் பணம்.

எப்படி... எல்லாம் பார்வையாளர்கள் மற்றும் ஆர்வக் கோளாறு நேயர்கள் மூலம்தான்.

இந்த கேம் ஷோவில் கலந்து கொள்ள ஒரு எஸ்எம்எஸ் போட்டி வைத்தார்கள். அந்த போட்டிக்கு இங்கே நீங்கள் படித்ததை விட கேவலமான ஏழு கேள்விகளை, ஏழு நாள் கேட்டிருந்தனர். ஒவ்வொரு நாளும் பல லட்சம் எஸ்எம்எஸ்கள். அதாவது ஒருவர் ஒரு எஸ்எம்எஸ் அனுப்பினால் போதாது... இரண்டு அனுப்ப வேண்டும்.

அப்படி அனுப்பியதில் கிட்டத்தட்ட 5 கோடி எஸ்எம்எஸ் குவிந்ததாகச் சொல்கிறார்கள். ஒரு எஸ்எம்எஸ்ஸுக்கு குறைந்தது ரூ 6 முதல் 9 வரை சார்ஜ் பண்ணுகின்றன மொபைல் நிறுவனங்கள்.

இப்போது கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். சராசரியாக ரூ 6 என்று வைத்துக் கொண்டால்கூட, எஸ்எம்எஸ் மூலம் மட்டுமே ரூ 30 கோடியை சம்பாதித்திருக்க முடியும். இது தவிர, ஸ்பான்ஸர்கள், விளம்பரதாரர்கள் தரும் பல கோடி ரூபாய்கள்...

ஒரு டிவி இந்த நிகழ்ச்சியை அறிவித்து கல்லா கட்டியதைக் கண்டதும், இன்னொரு முன்னணி டிவியும் ஒரு கோடி என்ற மயக்க பிஸ்கட்டை மக்கள் முன் நீட்ட ஆரம்பித்துள்ளது.

இது வர்த்தகம்தான் என்றாலும்... மிக சாமர்த்தியமாக மக்களைச் சுரண்டும் தந்திரம் என்பதே பல சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியை அனுமதிக்கும் அரசு, ஆன்லைன் லாட்டரிகள், ஒரு நம்பர் லாட்டரி, லாட்டரிச் சீட்டுகள், மூணு சீட்டு என பல்வேறு வகை சூதாட்டங்களையும் தாராளமாக அனுமதிக்கலாமே. பணம் சம்பாதிக்கும் குறுக்கு வழிகளில் இவையும் அடங்கும்தானே, என கோபக் கேள்விகள் எழுந்துள்ளன.

அரசின் 'கொர்ர்' தொடருமா, கலையுமா?


இன்று லீப் தினம்-குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாதா?


நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அரிய தினம் பிப்ரவரி 29. லீப் ஆண்டில் வரும் நாள் என்பதால் பெரும்பாலான தாய்மார்கள் தங்களின் குழந்தை பிறப்பை ஒரு நாள் தள்ளிவைத்திருக்கின்றனர். இன்றைக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்று நினைத்தும், பிப்ரவரி 29 அதிர்ஷ்டமற்ற தினம் என்று எண்ணியும் சிசேரியன் செய்ய மறுத்துள்ளனர்.

லீப் ஆண்டில் வரும் பிப்ரவரி 29-ந்தேதியை உலகம் முழுவதிலும் அரிதான நாளாக கருதப்படுகிறது. பூமியானது சூரியனை சுற்றிவர 365 நாட்களையும், 5 மணிநேரம், 49 நிமிடங்கள், 19 விநாடிகளை எடுத்துக்கொள்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அது கணக்கிடப்பட்டு லீப் வருடமாக ஒரு வருடத்திற்கு 366 நாட்களாக கணக்கிடப் படுகிறது. லீப் வருடத்தில் பிப்ரவரிக்கு 29 நாட்கள் வரும். இந்த நாள் உலகம் முழுவதும் அரிய நாளாக கொண்டாடப்படுகிறது.

துரதிர்ஷ்ட தினம்

இந்நாள் 4 ஆண்டுக்கு ஒருமுறையே வரும் என்பதால் சிசேரியன் ஆபரேசன் மூலம் குழந்தை பெறும் பெண்கள் இந்த நாளில் குழந்தை பெற்றுக் கொள்வதை விரும்புவதில்லை. காரணம் இந்நாளில் தங்களுக்கு பிறக்கும் குழந்தையின் பிறந்தநாளை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் கொண்டாட முடியும் என்பதுதான்.

சென்னையில் உள்ள பிரபல தனியார் மகப்பேறு மருத்துவமனைகளில் இன்று ஏராளமான பெண்களுக்கு குழந்தை பிறக்க இருந்தது. ஆனால் பாதிக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் இன்று பிப்ரவரி 29 என்பதால் நாளைக்கு குழந்தை பிறப்பை தள்ளி வைத்துவிட்டனர். அதற்குக் காரணம் பல கர்ப்பிணிகள் பிப்ரவரி 29-ந்தேதியை அதிர்ஷ்டம் இல்லாத நாளாகவும் கருதியதுதான்.

இவர்களில் சிலருக்கு குழந்தையின் வளர்ச்சி நன்றாக இருந்ததால் ஒருநாள் முன்னதாகவே அதாவது பிப்ரவரி 28 ம் தேதி அன்றே சிசேரியன் ஆபரேசன் செய்யப்பட்டது. இந்த விஷயத்தில் கிறிஸ்தவர், இந்துக்கள் என்ற பேதமே இல்லை. அனைத்து மதத்தை சேர்ந்த பெண்களும் பிப்ரவரி 29-ந்தேதியை அதிர்ஷ்டம் இல்லாத நாளாகவே கருதுகிறார்கள். இதனால் நாங்கள் வேறு வழியில்லாமல் இன்று நடக்க இருந்த சிசேரியன் ஆபரேஷன் நாளைக்கு தள்ளி வைத்தோம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

வெறிச்சோடிய மண்டபங்கள்

பிப்ரவரி 29-ந்தேதி அன்று திருமணம் செய்தால் 4 ஆண்டுக்கு ஒருமுறைதான் திருமண நாள் கொண்டாட முடியும் என்பதால் நிறைய ஜோடிகள் இன்று நடக்க இருந்த திருமணத்தை வேறு தேதிகளுக்கு தள்ளி வைத் தனர். இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திருமண மண்டபங்கள் இன்று வெறிச்சோடி காணப்பட்டன. ஆனால் இது தவறான கருத்து என்று பெரும்பாலோனோர் தெரிவித்துள்ளனர்.

கின்னஸ் சாதனை

ஆனால் அயர்லாந்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மூன்று தலைமுறைகளாக பிப்ரவரி 29 ம் தேதி பிறந்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர். 1940 பிப்ரவரி 29 ல் தாத்தா பீட்டர் அந்தோனி பிறந்தார். அவரது மகன் பீட்டர் எரிக் பிறந்தது 1964 பிப்ரவரி 29. அதேபோல் பீட்டர் எரிக்கின் மகள் பெத்தானி வெல்த் பிறந்தது 1996 பிப்ரவரி 29ம் தேதி. இந்த சாதனைக்காக இவர்களின் குடும்பம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்தியாவில் பிப்ரவரி 29ம் தேதி பிறந்த மொராய்ஜி தேசாய் நாட்டின் பிரதமராக உயர்ந்தார். எனவே பிப்ரவரி 29 என்பது துரதிர்ஷ்ட தினம் அல்ல அதிர்ஷ்ட தினமே என்பது பெரும்பாலோனோரின் கருத்து.


புத்திசாலித்தனத்தில் 'சூப்பர் காப்'...மீண்டும் நிரூபித்த தமிழ்நாடு போலீஸ்!


யாருக்குமே வராத யோசனை, சிந்தனை போலீஸுக்கு மட்டும் வரும் என்பார்கள். அப்படி இருப்பவர்களால் மட்டுமே நல்ல போலீஸாக இருக்க முடியும். அதை தமிழ்நாடு போலீஸ், குறிப்பாக சென்னை போலீஸ் மீண்டும் நிரூபித்துள்ளது.

2 வங்கிகளில் கொள்ளை போய் விட்டது. இரண்டுமே ஒரே மாதிரியான திருட்டு. பட்டப் பகலில், படு சாவகாசமாக வந்து கொள்ளையடித்து விட்டு படு கேஷுவலாக நடந்தே போயுள்ளனர் கொள்ளையர்கள். இரு வங்கிகளிலும் அடிக்கப்பட்ட பணம், ஆயிரம், ரெண்டாயிரம் அல்ல, கிட்டத்தட்ட 39 லட்சம். சாதாரணர்களுக்கே எவ்வளவு கோபம் வரும், அப்படி இருக்கும்போது போலீஸாருக்கு எப்படி இருந்திருக்கும்.

அப்படித்தான் சென்னை போலீஸாரும் இருந்தனர். ஒரு துப்பும் கிடைக்கவில்லை, யார் என்ற அடையாளம் தெரியவில்லை, ஆனால் கைக்கு எட்டும் தூரத்தில்தான் கொள்ளையர்கள் இருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது. கிட்டத்தட்ட மாயாவியிடம் சண்டை போடும் நிலையில் சென்னை போலீஸார் இருந்தனர்.

இந்த இரு வழக்குகளையும் சவாலாக எடுத்துக் கொண்டு தனிப்படைகளை வரலாறு காணாத அளவுக்கு அமைத்து விசாரணையை முடுக்கி விட்டார் கமிஷனர் திரிபாதி. இதுவரை எந்த ஒரு சம்பவத்திற்கும் இந்த அளவுக்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டதில்லை என்று கூறும் அளவுக்கு கிட்டத்தட்ட 40 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. நாலாபுறமும் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டன.

இரு வங்கிகளிலும் நடந்த கொள்ளைச் சம்பவங்களின் மோடஸ் ஆப்பரன்டி ஒன்றுதான். ஆள் நடமாட்டம் குறைந்திருந்த நேரத்தில், கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத வங்கிகளில், மதிய உணவு நேர வாக்கில்தான் கொள்ளையடித்துள்ளனர்.

கண்காணிப்பு கேமரா இல்லாமல் போய் விட்டதே என்று அத்தனை பேரும் புலம்பிக் கொண்டிருந்த நேரத்தில்தான் அந்த வித்தியாசமான ஐடியா போலீஸாருக்கு உதித்துள்ளது. கண்காணிப்பு கேமரா இல்லாத வங்கியாக பார்த்துத்தான் கொள்ளையடித்துள்ளனர். அப்படியென்றால் எந்த வங்கிகளில் கேமரா உள்ளது, எங்கு இல்லை என்பதை அவர்கள் நிச்சயம் நோட்டம் பார்த்திருப்பார்கள். எனவே கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்ட வங்கிகளில் உள்ள பதிவுகளைப் பார்த்தால், கொள்ளையர்கள் குறித்த துப்பு கிடைக்கலாம் என்பதுதான் அந்த ஐடியா.

இந்த ஐடியாவைக் கொடுத்த அதிகாரி யார் என்பது தெரியவில்லை. ஆனால் அபாரமான யோசனை இது என்பதில் சந்தேகமில்லை. யாருக்கும் இந்த யோசனை வந்திருக்க வாய்ப்பில்லை. மிக மிக புத்திசாலித்தனமான யோசனை இது. நிச்சயம் இந்த யோசனையைக் கொடுத்துவருக்கே முதலில் பரிசைக் கொடுக்க வேண்டும்.

இந்த யோசனை கூறப்பட்டதும் சென்னை மாநகரில் உள்ள காமரா பொருத்தப்பட்ட அத்தனை வங்கிகளிலும் உள்ள வீடியோ பதிவுகளை வாங்கி பார்வையிட ஆரம்பித்தது போலீஸ் படை. மேலும், கொள்ளை போன பாங்க் ஆப் பரோடா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளின் அதிகாரிகள், ஊழியர்களையும் வரவழைத்து அவர்களுக்கும் போட்டுக் காட்டி கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த யாரேனும் இதில் உள்ளனரா என்று விசாரித்தனர்.

போலீஸாரின் நம்பிக்கை வீண் போகவில்லை. கொள்ளைக் கூட்டக் கும்பலின் தலைவனாக போலீஸாரால் கூறப்பட்டுள்ள வினோத்குமார் ஒரு வீடியோ பதிவில் சிக்கினான்.

வங்கி ஒன்றில் இருந்த அவன், பராக்கு பார்த்தபடியே இருந்துள்ளான். பணம் எடுக்கவோ, போடவோ வந்தது போல அவனது செய்கைகள் தெரியவில்லை. மாறாக, வங்கியைக் கண்காணிப்பதே அவனது முக்கிய நோக்கமாக தெரிந்தது. மேலும் ஒரே நாளில் பல வங்கிகளுக்கு அவன் போயுள்ளான். ஒரே சட்டையுடன் போயுள்ளான்.

இதையடுத்து வினோத்குமார் யார் என்ற வேட்டையை சென்னை போலீஸார் தொடங்கினர். அப்போதுதான் அவன் எஸ்.ஆர்.எம். கல்லூரியின் முன்னாள் மாணவன் என்ற தகவல் கிடைத்தது. அதன் பிறகு நடந்தது போலீஸ் பாணியில் சொல்வதானால் - வரலாறு.

எல்லாம் சரியாகத்தான் இருந்தது. ஆனால், ஏன் வினோத்குமார் படத்தை மட்டும் காட்டி விட்டு அவனத்து பேக்கிரவுண்டுக்கு கிராபிகஸ் மூலம் வெள்ளையடித்தது போலீஸ் என்பதுதான் புரியவில்லை...

அதேபோல இன்னொரு சந்தேகம் என்ன என்றால், தங்களது வங்கிக்கு வந்த ஒருவன் எந்த வேலையிலும் ஈடுபடாமல் சும்மா சுத்திச் சுத்தி வந்து கொண்டிருந்திருக்கிறானே, ஏன் என்று கேமரா வைக்கப்பட்டிருந்த அந்த வங்கியின் அதிகாரிகள் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை என்பது. ஒரு வேளை காமரா வைத்ததுடன் தங்களது பொறுப்பு முடிந்து விட்டது, அதில் என்ன பதிவானு என்பது குறித்துக் கவலை இல்லை என்று முடிவு செய்து விட்டார்களோ என்னவோ...

எப்படியோ வங்கி அதிகாரிகள் அலட்சியமாக இருந்தாலும் கூட போலீஸாரின் புத்திசாலித்தனத்தால் ஒரு கொள்ளைக் கும்பல் மாட்டிக் கொண்டு மாண்டும் போய் விட்டது.


எண்கெளன்டர் விவகாரத்தில் மாபெரும் முரண்பாடுகள்!


வேளச்சேரியில் ஐந்து கொள்ளையர்கள் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்ட விவகாரம் இன்னும் அடங்கவில்லை. பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக கொள்ளையர்களில் ஒருவன் காலில் ஷூ இறுக்கமாக அணிவித்தபடி இருந்ததைப் பலரும் சுட்டிக் காட்டி இப்படித்தான் ஷூ போட்டு, ஜீன்ஸ் போட்டு ஒருவன் தூங்கிக் கொண்டிருந்திருப்பானா என்றும் கேட்கின்றனர்.

போலீஸ் என்கவுண்டர்கள் தமிழகத்திற்குப் புதிதல்ல. அவ்வப்போது நடந்தபடிதான் இருக்கிறது - மனித உரிமை ஆர்வலர்கள் இதை தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வருகின்ற போதிலும். ஆனால் இதுவரை இல்லாத பெரும் பரபரப்பையும், பலத்த சர்ச்சைகளையும் வேளச்சேரி என்கவுண்டர் கிளப்பி விட்டு விட்டது. காரணம் ஒட்டுமொத்தமாக ஐந்து பேரை, அதுவும் வட மாநிலத்தவர்களை போலீஸார் குட்டியூண்டு வீட்டுக்குள் வைத்து என்கவுண்டர் செய்ததால்.

ஒரு சாதாரண வீட்டு வசதி வாரிய வீட்டுக்குள்தான் இந்த என்கவுண்டர் நடந்துள்ளது. அது ஒரு சிங்கிள் பெட்ரூம் வீடு. வீட்டுக்குள் நுழைந்தால் வீடு முடிந்து விடும், ஒரு ரூமிலிருந்து அடுத்த ரூமுக்கு வந்தால், தெருவே வந்து விடும். அப்படி ஒரு தக்கனூண்டு வீட்டுக்குள் இருந்த ஐந்து பேரை கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட போலீஸார் கையில் பெரிய பெரிய துப்பாக்கிகளுடன் முற்றுகையிட்டும் உயிரோடு பிடிக்க முடியாமல் போய் விட்டதா என்பதுதான் மனித உரிமை ஆர்வலர்கள் முன்வைக்கும் மிகப் பெரிய கேள்வி.

போலீஸார் தேடி வரும் வினோத் குமார் என்ற கொள்ளையன் இந்த வீட்டுக்குள்தான் இருக்கிறான் என்று போலீஸாருக்குத் தகவல் வருகிறது. இதையடுத்து போலீஸ் படை துணை கமிஷனர் சுதாகர் தலைமையில் அங்கு விரைகிறது.

நள்ளிரவில் தகவல் வந்ததாக போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார். ஆனால், 10 மணிக்கே அந்தப் பகுதியில் இருந்த வீடுகளையும் அணுகிய போலீஸார் கதவை மூடிக் கொண்டு உள்ளேயே இருக்குமாறும், வெளியே வரக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.

பின்னர் அந்த வீட்டை முற்றுகையிடுகிறது போலீஸ் படை. முன்னெச்சரிக்கையாக வீட்டின் வெளிப்புறத்தைப் பூட்டி விடுகிறார்கள். பிறகு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கதவைத் தட்டுகிறது போலீஸ். உள்ளே இருந்தவர்கள் கதவைத் திறப்பதற்குப் பதில் ஜன்னல் வழியாக பார்க்கின்றனராம். போலீஸார் இருப்பதைப் பார்த்ததும் உஷாரான அவர்கள் ஜன்னல் வழியாக போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக போலீஸ் தரப்பு கூறுகிறது.

இதையடுத்து போலீஸார் முதலில் ஜன்னல் வழியாகவும், பின்னர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து சுட்டதாகவும், இதில் ஐந்து பேரும் கொல்லப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதுவரை நடந்தது ஒரு சம்பவத்தின் தொகுப்பு. இதுதொடர்பாக தற்போது மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்பி வரும் சந்தேகங்கள், கேள்விகள் குறித்துப் பார்ப்போம்...

1. இறந்த ஐந்து பேருமே பேண்ட்-சட்டை அணிந்தபடி இருந்திருக்கிறார்கள். மேலும் கால்களில் ஷூக்களும் உள்ளன. லேஸ் கூட கழற்றப்படாமல் கட்டியபடி இருக்கிறது. இப்படி இரவில் யாரேனும் தூங்குவார்களா என்பது முதல் சந்தேகம்.

2. வீட்டின் சுவற்றில் எந்தவிதமான ரத்தக்கறையும், ரத்தச் சிதறல்களும் இல்லை. மேலும் ஜன்னல் வழியாக கொள்ளையர்கள் சுட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அப்படிச் சுட்டதற்கான எந்தவிதமான வடுவும் இல்லை. ஒரு வேளை சுட்டிருந்தாலும் போலீஸார் திருப்பிச் சுட்டிருப்பார்கள்தானே. அப்படி சுட்டிருந்தால் ஜன்னல் கம்பிகள் சேதமடையாமலா இருந்திருக்கும். ஒரு வேளை ஜன்னல் கம்பிகளுக்குள் தோட்டாக்கள் லாவகமாக புகுந்து செல்லக் கூடிய வகையில் படு திறமையாக போலீஸார் சுட்டார்களா என்பது இன்னொரு சந்தேகம். விஜயகாந்த் படத்தில்தான் இப்படிப்பட்ட காட்சிகளப் பார்க்க முடியுமே தவிர நிஜத்தில் இது சாத்தியமில்லை.

3. ஐந்து பேரும் சுட்டார்கள், பதிலுக்கு நாங்களும் சுட்டோம் என்று போலீஸார் கூறுவதை ஏற்றுக் கொண்டாலும் கூட துப்பாக்கிச் சண்டை நடந்ததற்கான எந்தவிதமான அறிகுறியும் தங்களுக்குத் தெரியவில்லை, துப்பாக்கி் சண்டை நடந்தால் சத்தம் கேட்குமே, அது கூட தங்களுக்குக் கேட்கவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். இதற்குப் போலீஸ் தரப்பு விளக்கம் என்ன?. (இதனால் வெளியில் எங்கேயோ வைத்து இவர்களை போட்டுத் தள்ளிவிட்டு இந்த வீட்டுக்குள் கொண்டு வந்து உடல்களை போட்டுவிட்டு, சம்பவம் அங்கு நடந்தது போல காட்டியிருக்கிறார்கள் என்கிறார்கள், இந்த எண்கெளன்டர் நாடகத்தை ஏற்க மறுப்போர்).

4. போலீஸார் கொள்ளையர்களை முற்றுகையிட்ட பின்னர் அப்பகுதியில் இருந்த வீடுகளை மூடிக் கொள்ளுமாறும், யாரும் எட்டிப் பார்க்கக் கூடாது என்றும் மக்களை எச்சரித்தது ஏன்?.

5. உள்ளே இருப்பது பயங்கரமான கொள்ளையர்கள் என்று போலீஸார் நம்பினால், அவர்களை உயிருடன்தானே பிடிக்க முயற்சித்திருக்க வேண்டும். அவர்களைப் பிடித்து விசாரித்தால்தானே அவர்களுக்கு எந்தெந்த குற்றத்தில் தொடர்பு உள்ளது என்பது தெரிய வரும். அப்போதுதான பல வழக்குகளுக்கு விமோச்சனம் கிடைக்கும். ஐந்து பேரும் பெரிய அளவிலான ஆயுதங்கள் வைத்திருந்ததாக தெரியவில்லை. அவர்களை, ஸ்காட்லாந்து யார்டுக்குப் பிறகு நாமதான் என்று பெருமையுடன் கூறிக் கொள்ளும் தமிழக போலீஸாரால் உயிருடன் பிடிக்க முடியாமல் போனது ஏன். அது காவல்துறைக்கே அவமானமாக இருக்கிறதே. அட, மயக்க மருந்துப் புகையை உள்ளே செலுத்தியாவது பிடித்திருக்கலாமே...

இப்படி ஏகப்பட்ட கேள்விகளையும், சந்தேகங்களையும் மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்புகிறார்கள். ஆனால் போலீஸ் தரப்பி்ல இதற்குப் பதில் இல்லை. (முதல்வர் ஜெயலலிதாவும், சம்பவம் ஏதோ குஜராத்தில் நடந்தது மாதிரி இந்த சம்பவம் குறித்து எந்தக் கருத்தையும் வெளியிடாமல் கனத்த அமைதி காத்து வருவதும் குறிப்பிடத்தக்கது)

அதேசமயம், இது திட்டமிட்ட என்கவுண்டர்தான். இன்னும் சொல்லப் போனால் போலீஸார் வேண்டும் என்றேதான் ஐவரையும் கொன்றார்கள் என்றும் ஒரு தகவல் உலவுகிறது.

அதாவது சம்பவம் நடந்த புதன்கிழமை காலையே வினோத் குமார் போலீஸில் சிக்கி விட்டான். அவனை தங்களது கஸ்டடியில் வைத்து போலீஸார் விசாரித்தபோது உண்மைகளைக் கக்கியுள்ளான். தான் தங்கியிருந்த வீட்டையும் அவன் கூறியுள்ளான். இதையடுத்து மற்ற நால்வரையும் அள்ளிக் கொண்டு வந்த போலீஸார், ஐந்து பேரையும் விசாரித்து, பணம் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் எங்கேயோ வைத்து ஐவரையும் சுட்டுக் கொன்றுள்ளனர். பிறகு உடல்களை வேளச்சேரி வீட்டில் கொண்டு வந்து போட்டு செட்டப் செய்து விட்டனர் என்பது ஒரு வாதமாக உள்ளது.

இன்னொரு வாதம் என்ன சொல்கிறது என்றால், ஐந்து பேரையும் அதே வீட்டில் வைத்து வளைத்துப் பிடித்த போலீஸார், உள்ளே நுழைந்து ஐவரிடமும் விசாரணை நடத்தி, அவர்கள்தான் கொள்ளையர்கள் என்பதை உறுதி செய்து கொண்ட பின்னர் உள்ளேயே வைத்து சுட்டு வீழ்த்தினர் என்கிறது.

தமிழக அளவில் பெரும் காவல்துறைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியதாலும், பெரும் அவமானத்தை ஏற்படுத்தி விட்டதாலும் ஆத்திரத்தில் போலீஸார் இப்படி நடந்து கொண்டார்கள் என்பது அந்த வாதமாகும்.

போலீஸ் தரப்பில் சிலர் இதுகுறித்துக் கூறுகையில், இது செட்டப்பா அல்லது இயற்கையானதா என்பது இப்போது பிரச்சனையில்லை. தயவு செய்து அதுகுறித்து யாரும் ஆய்வு செய்ய வேண்டாம். இனிமேல் இதுபோன்ற துணிகரக் கொள்ளைச் சம்பவங்களில் யாரும் ஈடுபட அஞ்ச வேண்டும். அதற்கு இது ஒரு வார்னிங் என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். மக்களை அச்சுறுத்தும் வகையிலான குற்றச் செயல்களில் ஈடுபடும் கிரிமினல்களுக்கு இது ஒரு எச்சரிக்கை என்ற அளவில் மட்டுமே பார்க்க வேண்டும். 100 கோடி பேர் இந்த நாட்டில் உள்ளனர். அவர்கள் நிம்மதியாக வாழ ஒரு ஐந்து கிரிமினல்கள் செத்துப் போவதில் தப்பில்லையே என்று 'நாயகன்' பட டயலாக் கணக்கில் கூறுகிறார்கள்!.


பிரதமருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் உதயக்குமார்


கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்திற்கு அமெரிக்காவில் உள்ள தொண்டு நிறுவனங்களிடமிருந்து நிதியுதவி வருவதாக குற்றம் சாட்டிய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் போராட்டக் குழுத் தலைவர் உதயக்குமார்.

தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பிரதமர் பேசியுள்ளதாக கூறி அந்த நோட்டீஸில் குற்றம் சாட்டியுள்ளார் உதயக்குமார்.

இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள நோட்டீஸில்,

நீங்கள் அளித்த பேட்டி, ஆங்கில நாளிதழ் ஒன்றில் கடந்த 25-ந் தேதி வெளியானது. அதில், `விவசாய உற்பத்திக்கு மரபுசார் தொழில்நுட்பத்தை பயன்படுத்த அரசு ஆர்வம் காட்டுகிறது. ஆனால், அமெரிக்காவை பின்புலமாகக் கொண்ட என்.ஜி.ஓ.க்கள் சிலர், இதை விரும்பவில்லை. இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

இந்தியாவின் சில வளர்ச்சிப் பணிகளையும் அமெரிக்கா மற்றும் போலாந்து, நார்வே உள்ளிட்ட ஸ்காண்டினேவியன் நாடுகளின் பண உதவிபெறும் என்.ஜி.ஓ.க்கள் ஆதரிப்பதில்லை. இதுபோன்ற என்.ஜி.ஓ.க்கள்தான் அணுசக்தித் திட்டங்களுக்கும் எதிராக இருப்பதால், அந்தத் திட்டங்களை செயல்படுத்துவதில் பிரச்சினை ஏற்படுகிறது.

கூடங்குளத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. சீனா போல் அல்ல. அமெரிக்காவை பின்புலமாகக் கொண்ட என்.ஜி.ஓ.க்கள், மின்சக்தி உற்பத்தியை இந்தியா அதிகரிப்பதை விரும்பவில்லை என்றே நினைக்கிறேன்.

புகுஷிமா அணு உலை வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகும்கூட, இந்தியாவைச் சேர்ந்த அறிவுசார் சமுகத்தின் பெரும்பாலானோர், அணு உலை மூலம் கிடைக்கும் மின்சாரத்தை வரவேற்கின்றனர்' என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள்.

இது, எனது கட்சிக்காரர் உதயகுமாரை மிகவும் பாதித்துவிட்டது. அணுமின் நிலையத்தை எதிர்த்து கூடங்குளத்தில் நடக்கும் போராட்டம், அமெரிக்கா மற்றும் ஸ்கேண்டினேவியா நாடுகளின் பண உதவியோடு நடைபெறுவதுபோல், மக்களிடம் நீங்கள் அந்த கருத்தை கூறியுள்ளீர்கள் என்று தெரிகிறது.

உங்களது இந்த கருத்திற்கு ஆதாரம் எதுவும் இல்லை. உங்கள் கருத்து பொய்யானது. பொய்யான கருத்தைக் கூறியதன் மூலம், மக்களிடையே உதயகுமாருக்கு இருந்த நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்திவிட்டீர்கள். இதன்மூலம் அவரது குணநலன் பற்றி மக்கள் குறைவாக எடைபோடுகிறார்கள்.

எனவே நீங்கள் தெரிவித்த அந்த கருத்துகளை திரும்பப்பெற வேண்டும். அல்லது மாற்றி கூறவேண்டும். இல்லாவிட்டால் உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார் உதயக்குமார்.


சிரியா ராணுவம் வெறிச்செயல்: ஒரே இடத்தில் 62 பிணங்கள் மீட்பு


சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் வலுவடைந்துள்ளது. அவர் பதவி விலக கோரி ஹோம்ஸ் நகரில் பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

போராட்டத்தில் திரளும் மக்கள் மீது அதிபரின் தூண்டுதலால் ராணுவம் துப்பாக்கி, பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்று ஒரே இடத்தில் 62 பேர் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அரசின் தாக்குதலுக்கு பயந்து ஊரை விட்டு சென்ற அவர்களை கடத்தி சென்ற ராணுவத்தினர், ஈவு இரக்கமின்றி 62 பேரையும் கொன்றுள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.


Tuesday, February 28, 2012

பசுபதி என்னும் நடிகன்!


வசந்தபாலன் இயக்கத்தில் அடுத்து வெளிவர இருக்கும் படம் 'அரவான்'. ஆதி, பசுபதி, தன்ஷிகா, அர்ச்சனா கவி, பரத், அஞ்சலி மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள்.

பிப்ரவரி 24ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு தற்போது மார்ச் 2ம் தேதி வெளியாகும் என  உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது.

வசந்தபாலன் - பசுபதி இருவருமே 'வெயில்' படத்தில் ஒன்றாக பணியாற்றி இருக்கிறார்கள். 'அரவான்' படத்தில் இந்த ஜோடி மீண்டும் இணைந்து இருக்கிறது.

'அரவான்' படத்தில் பசுபதியின் பங்கு குறித்து வசந்தபாலன் தனது பேஸ்புக் இணையத்தில் " பசுபதி போன்ற மாபெரும் நடிகனுக்கு தமிழ்சினிமா இன்னும் சரியான தீனி போடவில்லை.அவருடைய ஒவ்வொரு அசைவிலும் உண்மையும் ஆத்மாவும் கலந்த நடிப்பு இருக்கும்,முழுதாக தன்னை நடிப்புக்கு ஒப்புக்கொடுத்த நடிகன். நடிப்பைத் தவிர அவருக்கு எதுவும் தெரியாது.

எனக்கும் அவருக்குமான நட்பில், நான் அவர் நடிப்பின் மீது கொண்டு ஆழமான காதல் இருக்கும், அவருக்கு என் மீது முழுமையான நம்பிக்கை இருக்கும், ஒவ்வொரு டேக்குக்கும் விதவிதமான நடிப்பை வழங்குவார். அரவானில் அவர் நடிப்பு பேசப்படும் " என்று தெரிவித்துள்ளார்.