Friday, October 31, 2014

'நெருங்கிவா முத்தமிடாதே’ அந்த மாதிரி படம் இல்ல!

‘ஆரோகணம் என்கிற முதல் படத்திலேயே ரசிகர்களை நெருங்கியவர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். நடிகை, இயக்குனர் என்று பன்முகம் கொண்ட லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் இரண்டாவது படம் ‘நெருங்கிவா முத்தமிடாதே.

 ஏ.வீ.ஏ. நிறுவனம் சார்பில் ஏ.வீ.அனுப் தயாரிக்கிறார். புதுமுகம் ஷபீர் இதன் நாயகன். பியா நாயகி. தம்பி ராமையா, அம்பிகா, தலைவாசல் விஜய், ஒய்.ஜி.மகேந் திரன் ஆகியோரும் இருக்கிறார்கள். ஒளிப்பதிவு வினோத்பாரதி. எடிட்டிங் தேசிய விருது பெற்ற சாபு ஜோசப்.  மேட்லீ புளூஸ் இசையில் அனைத்துப் பாடல்களையும்  தேசிய விருது பெற்ற நா.முத்துக்குமார் எழுதியிருக்கிறார்.

தலைப்பைப் பார்த்துவிட்டு இது தப்பான படமாக இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். இது நூறு சதவீதம் சைவப் படம். பெட்ரோல் தட்டுப்பாடுதான் படத்தோட மையக்கரு. ஆனால் இது முழுக்க முழுக்க ஜனரஞ்சகமான படம். குடும்பத்தோடு வரும் ஆடியன்ஸை மனதில் வைத்துதான் திரைக்கதை எழுதினேன். அந்த வகையில் ஒரு டிக்கெட்ல நான்கு படம் பார்த்த திருப்தி இருக்கும்.


ஏன்னா, ஒரே படத்துல நான்கு விதமான வாழ்க்கையை சொல்லியிருக்கிறேன். அந்த நான்கு கதைகளிலும் உணர்வுகளும், உறவுகளும் பின்னிப் பிணைந்திருக்கும். என்னுடைய ஒட்டுமொத்த டீம் மெம்பர்ஸ் கொடுத்த ஒத்துழைப்பால்தான் இந்தப் படத்தை கைக்கு அடக்கமான பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் முடிக்க முடிந்தது என்கி றார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.


காப்பியடிங்க! காயப்படுத்தாதீங்க!

தமிழ் சினிமாவை தெய்வத்துக்கு நிகராகக் கொண்டாடியவர்கள் தமிழர்கள். முதல் ஷாட்டை கோவிலில் வைப்பதும், குறைந்தபட்சம் கோவில் கோபுரத்தை யாவது காட்டுவதும் பல ஆண்டுகள் வரை மரபாக இருந்தது. கடவுளை நம்பாத ஆத்திகர்கள் "வெற்றி வெற்றி", "இனி நல்லதே நடக்கும்" என்ற பாசிட்டிவான வசனங்களோடு படத்தை துவக்கினார்கள். ஆனால் சினிமாவிற்குள் டிஜிட்டல் வந்தபிறகு எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது.

 புதுமை செய்யப் போகிறேன் என்று மகத்தான சினிமா ஊடகத்தை கொச்சைப்படுத்தி வருகிறார்கள். கின்னஸ் சாதனை படைக்கப் போகிறேன், லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற வேண்டும், உலக சினிமாவில் முதன் முறையாக என்று பலபேர் கிளம்பியிருக்கிறார்கள்.

ஒரு சவப்பெட்டிக்குள் வைத்து உயிருடன் புதைக்கப்பட்ட ஒருவர் அதிலிருந்து எப்படி தப்பித்தார் என்பதைச் சொன்னது ஒரு ஆங்கிலப் படம். பாறை இடுக்கிற்குள் கால் மாட்டிக் கொண்டதால் பல மணி நேரம் போராடி ஜெயித்த ஒருவரைப் பற்றி வந்தது ஒரு ஹாலிவுட் படம். இவை வித்தியாசமான முயற்சிகள் மட்டு மல்ல, உண்மைச் சம்பவங்களும்கூட.

இதையே காப்பியடித்து இங்கு மூன்று படங்கள் இதே பாணியில் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இது தவிர ஒரே ஷாட்டில் படமெடுக்கிறார்கள். 4 மணி நேரத்துக்குள் படம் எடுக்கிறேன் என்று கிளம்பியிருக்கிறார்கள்.


ஒருவர் மட்டுமே நடித்து, இயக்கி, தயாரித்து, இருக்கிற அத்தனை வேலைகளையும் செய்து படம் எடுக்கிறேன் என்கிறார்கள். குபீர் என்று ஒரு படம் கதையே இல்லாமல் விடிய விடிய நான்கு பேர் தண்ணியடிப்பதை மட்டும் எடுத்து அதையும் காசு கொடுத்து இரண்டு மணி நேரம் உட்கார்ந்து பாருங்கள் என்கிறார்கள்.

இந்த சாதனை முயற்சிகள் எதற்காக என்பதுதான் கேள்வி. இதுபோன்ற சாதனைப் படங்கள் எதையும் ஜனங்கள் ஏற்பதில்லை என்பது வேறு விஷயம். இதன் மூலம் அவர்கள் சாதிக்கப் போவது என்ன? எங்கோ வெளி நாட்டில் 100 வார்த்தைகளில் ஒரு புத்தகத்தில் இடம்பெறும் ஒரு குறிப்பால் இவர்களுக்கு என்ன லாபம் வந்துவிடப்போகிறது? அவர்கள் படம் என்ன மாற்றத்தை கொண்டு வந்துவிடப்போகிறது? பின்பு எதற்காக பல பேருடைய உழைப்பு, பணம் இவற்றை சாதனை படைக்கப் போகிறோம் என்று வீணாக்குகிறார்கள் என்று தெரியவில்லை.


சமூகத்துக்குத் தேவையான நல்ல கருத்துக்களை விதைக்க வேண்டிய சினிமாவை, அல்லது உழைக்கும் மக்களுக்கு இரண்டரை மணி நேரம் சந்தோஷத்தை தரவேண்டிய சினிமாவை இப்படி சாதனை என்ற பெயரில் சீரழிப்பதும், கொச்சைப்படுத்து வதும் என்ன நியாயம்? இது சாதனை என்று முடிவு செய்து வைத்துக் கொண்டு செய்வது எதுவும் சாதனையாகாது. நாம் செய்கிற செயல் மற்றவர்களுக்கு சாதனையாகப் படவேண்டும். அதுதான் சாதனை.

புராணங்களைக் காட்டிக் கொண்டிருந்த சினிமாவை சமூகத்தைப் பார்க்க வைத்த 'பராசக்தி' சாதனை. ஸ்டூடியோக்களுக்குள் முடங்கிக் கிடந்த சினிமாவை கிராமத்துக்கு அழைத்துச் சென்ற '16 வயதினிலே' சாதனை. வசனங் களைக் குறைத்து காட்சியை வலிமைப்படுத்திய 'உதிரிப்பூக்கள்' சாதனை.


ஐந்தரை அடி மனிதன் மூன்றடி குள்ளனாக நடித்த 'அபூர்வ சகோதரர்கள்' சாதனை. ஒரே நடிகன் பத்து வேடங்கள் ஏற்ற 'தசாவதாரம்' சாதனை. இப்படி பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன தமிழ் சினிமாவில். அப்படியொரு சாதனையை முயற்சித்துப் பாருங்களேன்.


பார்த்திபன் கொடுத்த ஐடியா!

திருட்டு விசிடியை ஒழிப்பதற்கான நடவடிக்கை எடுக்கும் சினிமாக்காரர்களில் இயக்குனரும் நடிகருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபனுக்கு முக்கிய இடம் உண்டு. மற்றவர்களையும் அதற்கான முயற்சிகளில் முடுக்கிவிடும் வேலையிலும் ஈடுபட்டு வருகிறார். கே.கே.நகர் காமராஜர் சாலையில் இருக்கிறது கவிஞர் கிச்சன்பார்த்திபன் விரும்பிச் சாப்பிடும் உணவகங்களில் இதுவும் ஒன்று. உணவகம் நடத்தும் கவிஞர் ஜெயம்கொண்டான் சினிமாவில் பாடல்களும் எழுதிவருகிறார்.

சோக்கு சுந்தரம்படத்தில் சமீபத்தில் இவர் எழுதியபோகாத கோயிலில்ல, வேண்டாத தெய்வமில்ல..’ என்கிற தாயின் பெருமைபேசும் பாடல் படக்குழுவால் பெரிதும் பாராட்டுப்பெற்றுள்ளது. இவர், பார்த்திபனின் ஆலோசனைப்படி தனது உணவகத்தில் ஒரு அறிவிப்பு வைத்திருக்கிறார். தியேட்டரில் படம் பார்த்த டிக்கெட்டை எடுத்து வந்து, சாப்பிடுபவர்களுக்கு 10 சதவீத தள்ளுபடி என்பதே அது. நிறையபேர் வந்து சாப்பிட்டுப் போகிறார்களாம்.
செக்ஸ் டார்ச்சர் கொடுத்த மீடியேட்டரை செருப்பால் அடித்த பெண் தயாரிப்பாளர்

தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த மீடியேட்டர் சிவாவை செருப்பால் அடித்ததோடு போலீசிலும் புகார் தந்துள்ளார் 'காதலுக்கு கண்ணில்லை' படத்தின் பெண் தயாரிப்பாளர் இந்து. ஜெய் ஆகாஷ் நடித்தகாதலுக்கு கண்ணில்லை' படத்தை தயாரித்தவர் ஒய்.இந்து. இவர் அந்த படத்துக்கு கதை, வசனமும் எழுதி முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார்.

இந்த படம் இன்று வெளியாகியுள்ளது. ‘காதலுக்கு கண்ணில்லை' படத்தில் மீடியேட்டராக பணியாற்றியவர் சிவா. இவர், இந்துவுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தாராம்.

தினமும் இரவில் இந்துவை போனில் தொடர்பு கொண்டு பேசிய சிவா, இந்துவிடம் ஆபாசமாகப் பேசி, செக்ஸ் உறவுக்கு அழைத்தாராம். நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று கூறி இந்துவுக்கு, சிவா போனிலேயே பல நாட்கள் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

பொறுத்துப் பார்த்த இந்து அவர்கள் நேரில் அழைத்து சிவாவை கண்டித்து இருக்கிறார், அப்பொழுது திடீரென்று காரில் அமர்ந்திருந்த இந்துவைக் கட்டிப்பிடித்து முத்தமிட முயற்சித்திருக்கிறார் .

இதனால் மேலும் கோபம் அடைந்த இந்து செருப்பால் அடித்து சிவாவை விரட்டியிருக்கிறார். இதுபற்றி இந்து நீலாங்கரை போலீசில் இன்று புகார் அளித்தார். அதில் சிவாவால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.

அவர் என்னை தொட்டும் மானபங்கம் செய்துள்ளார். எனவே சிவா மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதுபற்றி இன்ஸ்பெக்டர் பாஸ்கர் விசாரணை நடத்தி வருகிறார்.

இதையறிந்த மீடியேட்டர் சிவா, தமிழகம் முழுவதம் ரிலீசாக வேண்டிய இந்தப் படத்திற்கு 'புக்' செய்யப்பட்ட தியேட்டர்களுக்கு போன் செய்து படத்தை இன்று 31-10-2014 ரிலீஸ் செய்ய விடாமல் தடுத்துவிட்டுத் தலைமறைவாகி விட்டாராம். தயாரிப்பாளர் சங்கம் மற்றும் மீடியேட்டர் சங்கத்திலும் சிவா மீது தயாரிப்பாளர் இந்து புகார் செய்திருக்கிறார்.முட்டாள்களுடன் பணியாற்றினேன் இசை அமைப்பாளருக்கு கடும் எதிர்ப்பு

முட்டாள்களுடன் பணியாற்றிய நாட்கள் வாழ்வில் சவாலாக இருந்தது என்றார் இசை அமைப்பாளர் கீரவாணி. அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.அழகன், நீபாதி நான் பாதி, பாசவலை. நான் உள்ளிட்ட தமிழ் மற்றும் ஏராளமான தெலுங்கு படங்களுக்கு இசை அமைப்பாளராக பணியாற்றியவர் கீரவாணி. வரும் 2016ம் ஆண்டில் திரைப்பட இசை அமைப்பாளர் பொறுப்புக்கு முழுக்குபோட முடிவு செய்திருக்கிறார். இதை சமீபத்தில் அறிவித்தார். தற்போது குறைந்த அளவிலான படங்களையே ஒப்புக்கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியின்போது,‘இசை என்னுடைய வாழ்வின் ஒரு அங்கம். வருங்காலத்தில் வேறு சில பணிகளுக்கான திட்டம் வகுத்திருக்கிறேன். சில நேரம் நாம் திட்டமிட்டபடி வாழ்க்கை செல்வதில்லை. என் வாழ்வில் கடுமையான சவால்களை நான் சந்தித்தது சில முட்டாள்தனமானவர்களுடன் பணியாற்றிய நேரத்தில்தான் என்றார். இவரது இந்த பேச்சு சர்ச்சைக்குரியதாகி இருக்கிறது. இதனால் கடும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. முட்டாள்கள் என்று யாரை அவர் குறிப்பிடுகிறார் என்பதை தெரிவிக்க வேண்டும் என திரையுலகை சேர்ந்த சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால் பதில் எதுவும் சொல்லாமல் கீரவாணி மவுனம் காத்து வருகிறார்.வீட்டைவிட்டு நான் வெளியேறவில்லை.. பிரச்சினை முடியாவிட்டால் வழக்கு!- கார்த்திக்

சொத்துப் பிரச்சினையை தனது சகோதரர் இன்னும் இரண்டு நாளில் முடிக்காவிட்டால் வழக்குத் தொடரப் போவதாக நடிகர் கார்த்திக் தெரிவித்தார். நடிகர் கார்த்திக்குக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நீண்ட நாட்களாக சொத்து தகராறு நடந்து வருகிறது.

இப்பிரச்னை தொடர்பாக நடிகர் கார்த்தி திடீரென வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், தற்போது அவர் தனியாக தங்கியிருப்பதாகவும் கூறப்பட்டது.

இதுதொடர்பாக சமீபத்தில் சென்னை, தேனாம்பேட்டை போலீசில் நடிகர் கார்த்திக் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர், ஆழ்வார்பேட்டையில் என் தந்தைக்கு சொந்தமான சொத்துக்கள் உள்ளன.

 இந்த சொத்தில் எனக்கு எதுவும் பங்கு கிடையாது என்கிறார் எனது சகோதரர் கணேசன். மேலும் என்னை வீட்டைவிட்டு வெளியேறும்படியும் கூறுகிறார். மேலும் உயிலில் எனது பெயரும் இல்லை. எனது சகோதரர் எனது சொத்தை மோசடி செய்துள்ளார். அவரிடமிருந்து என் சொத்துக்களை மீட்டு தரும்படி கேட்டுக் கொள்கிறேன். மேலும் எனக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன், என கூறி இருந்தார்.

உடனே கார்த்திக் மீது அவரது அம்மா சுலோசனாவே ஒரு புகார் கொடுத்திருந்தார். இந்த சமயத்தில், தனது குடும்ப விவகாரம் தொடர்பாக வெளியாகி வரும் செய்திகள் பற்றி செய்தியாளர்களுக்கு கார்த்திக் நேற்று பேட்டி அளித்தார்.

அப்போது கூறுகையில், "போயஸ் கார்டனில் இருக்கும் வீடு தொடர்பாக எனக்கும் என் சகோதரர் கணேசனுக்கும் இடையே பிரச்னைகள் இருந்து வருகிறது. அந்த இடத்தில் அப்பாட்மென்ட்ஸ் போல் கட்டி, இருவரும் வசிக்கலாம் என நான் கூறினேன்.

 ஆனால் அதனை ஏற்க அவர் மறுத்து விட்டார். தொடர்ந்து பிரச்னையை முடிக்கவும் அவர் தயாராக இல்லை. இன்னும் இரண்டு நாட்களில் பிரச்னையை முடிக்க அவர் முன்வராவிட்டால் சட்டப்படி வழக்குத் தொடர முடிவு செய்துள்ளேன். மற்றபடி, நான் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுவது உண்மையல்ல. நானும் அதே வீட்டில் தான் இப்போது வரை இருந்து வருகிறேன்," என்றார்.
சித்தார்த் வீட்டில் சமந்தா!

‘அஞ்சான் படத்தின் புரமோஷனுக்கான சந்திப்பில் திடீரென்று மீடியாவிடம் பேசிய சமந்தா, அப்போது சொன்ன கருத்துகள் எல்லாம் வெவ்வேறு வடிவில் பிரசுரமாகி வம்பு வளர்ந்ததால், இப்போது ‘கத்தி பட புரமோஷனில் பங்கேற்க மாட்டேன் என்று கறாராக சொல்லிவிட்டாராம். மேலும், தன் மனதுக்குப் பிடித்த ஹீரோ சித்தார்த் பற்றியே அனைவரும் கேள்வி கேட்பதால் டென்ஷனான அவர், சித்தார்த் நடித்துள்ள ‘எனக்குள் ஒருவன் ஆடியோ விழாவில் பங்கேற்றதற்கான காரணத்தை சொல்லவும் தயங்குகிறாராம்.

தெலுங்கில் அவர் பிஸியாக இருந்தாலும், தமிழில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுகிறார். தற்போது விக்ரம் ஜோடியாக ‘10 எண்றதுக்குள்ள...’ படத்தில் நடிக்கும் சமந்தா, சென்னையில் சித்தார்த் வீட்டில் தங்குகிறாராம். இதுகுறித்து சித்தார்த் கூட மீடியாவிடம் பேசத் தயங்குகிறார்.

சிம்பு ஒன்றும் கெட்டவர் இல்லை. எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து விட்டோம். இனி அவருடைய விஷயத்தில் நானும், என்னுடைய விஷயத்தில் அவரும் தலையிட மாட்டோம். இது ஜென்டில்மேன் அக்ரிமென்ட் என்று, சிம்புவைப் பிரிந்த பிறகு முதல்முறையாக அவரைப் பற்றி கருத்து சொல்லியிருக்கிறார் ஹன்சிகா.

 இதுகுறித்து சிம்பு வாய் திறக்கவில்லை என்றாலும், நெருங்கிய நண்பர்களிடம், ‘நானும், ஹன்சிகாவும் ஒருத்தரை தாக்கி ஒருத்தர் பேட்டி கொடுக்க மாட்டோம். ஏதோ கெட்ட காலம், ரெண்டுபேரும் பிரிய வேண்டியதாயிடுச்சி. வேற விஷயம் பேசுவோம் என்று சொல்லி வருகிறார். அவரும், ஹன்சிகாவும் ‘வேட்டை மன்னன், ‘வாலு படங்களில் இணைந்துள்ளனர். இப்படங்களின் ஷூட்டிங் எப்போது முடியும் என்றே சொல்ல முடியவில்லை.


சொத்துத் தகராறு: நடிகர் கார்த்திக் மீது தாயார் போலீசில் புகார்!

தன் மகன் கார்த்திக் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது சொந்த தாயாரே போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

மறைந்த பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகன் நடிகர் கார்த்திக். மிகப் பிரபலமான நடிகர். பல வெற்றிப் படங்கள் தந்தவர். கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக்கும் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

 கார்த்திக் கூட்டுக் குடும்பமாகவே வசித்து வந்தார். இப்போது அவர்கள் குடும்பத்தில் சொத்துப் பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது. கார்த்திக் தற்போது, சென்னை ஆழ்வார்பேட்டை, கஸ்தூரி ரங்கன் எஸ்டேட், 1-வது தெருவில் வசிக்கிறார். கார்த்திக் கடந்த திங்கட்கிழமை சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த புகார் மனுவில், தனது தந்தை நடிகர் முத்துராமன் வாங்கிய சொத்துக்களில் தனக்கு சேரவேண்டிய சொத்துக்களை தனது அண்ணனும், அண்ணியும் சேர்ந்து அபகரித்துக் கொண்டனர் என்றும், சொத்துக்களை கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் என்றும், தனது தாயாரை ஏமாற்றி, சொத்துக்கள் அபகரிக்கப்பட்டுள்ளது என்றும், தனக்குச் சேரவேண்டிய சொத்துக்களை மீட்டுத்தர வேண்டும் என்றும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், தனக்கு உரிய பாதுகாப்பு தரவேண்டும் என்றும் கார்த்திக் தெரிவித்திருந்தார்.

அந்த புகார் மனுவை பெற்றுக் கொண்ட தேனாம்பேட்டை போலீசார் சி.எஸ்.ஆர். ரசீது மட்டும் கொடுத்தனர். வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. அவரது மனுவை விசாரிப்பதாகச் சொன்னார்கள்.

இந்த நிலையில், நடிகர் கார்த்திக் கொடுத்த புகாருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கார்த்திக் மீது அவரது தாயார் சுலோச்சனா, ஒரு புகாரை தேனழாம்பேட்டை போலீசில் நேற்று இரவு கொடுத்தார்.

அதில், "எனது இளைய மகன் கார்த்திக் கொடுத்த புகார் மனு தவறானது. எனது பெயரில் சென்னை ஆழ்வார்பேட்டை, சி.பி. ராமசாமி ரோட்டில் சொத்துக்கள் இருந்தன. அந்த சொத்துக்களை நான்தான் எனது மூத்தமகன் கணேசன் பெயருக்கு எழுதி கொடுத்தேன்.

 என்னை ஏமாற்றி அந்த சொத்துக்களை எனது மூத்த மகன் எழுதி வாங்கிக் கொண்டதாக கார்த்திக் கூறிய புகாரில் உண்மை இல்லை. அந்த சொத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என்று கார்த்திக்கும், அவரது அடியாட்களும் என்னையும், எனது மூத்த மகன் கணேசனையும் மிரட்டுகிறார்கள். எனவே எனக்கு உரிய பாதுகாப்பு கொடுப்பதோடு, கார்த்திக் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிரச்சினை குறித்து கார்த்திக் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து தனது தரப்பு விளக்கத்தைத் தெரிவித்தார்.