Monday, October 31, 2011

ராஜபக்சே பேச்சு: கனடா பிரதமர் புறக்கணிப்பு


பெர்த் நகரில் காமன்வெல்த் தலைவர்களின் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டின் இறுதியில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொண்டு பேசினார்.

இலங்கையில் 2013ம் ஆண்டு அடுத்த காமன்வெல்த் மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு 53 நாடுகளின் தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்து உரை நிகழ்த்தினார்.


ராஜபக்சேவை மாநாட்டில் பேச அழைக்கப்பட்டதும் கனடா பிரதமர் ஸ்ரீபன் ஹாபர், மாநாட்டு அரங்கில் இருந்து வெளியேறினார். இதன் மூலம் ராஜபக்சேவுக்கு தனது எதிர்ப்பை காட்டினார்.


கடந்த வாரம் ராஜபக்சேவுடன், ஸ்ரீபன் ஹாபர் நேரடியாக பேசியிருந்தார். இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து அவரிடம் விவாதித்தார். காமன்வெல்த் கூட்டத்திற்கு முன்பாக இதற்கு இலங்கை உரிய பதில் அளிக்க வேண்டும் என்று உறுதிப்பட கூறியிருந்தார். அவ்வாறு செய்யாவிட்டால் ராஜபக்சேவின் உரையை புறக்கணிப்போம் என்று கூறியிருந்தார். அதன்படி ஹாபர் வெளிநடப்பு செய்தார்.


கனிமொழியின் ஜாமீனை ஏன் எதிர்க்கவில்லை : சி.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் கேள்வி


ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவான பின்பு குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது. 

இதைத் தொடர்ந்து குற்றச்சாட்டு பதிவானதும் சி.பி.ஐ. கோர்ட்டில் கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார், குசேகான் நிறுவன இயக்குனர்கள் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால், பட அதிபர் கரீம் மொரானி ஆகிய 5 பேரும் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். 

இந்த மனு விசாரணையின் போது அவர்களுக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதே சமயம் ஸ்வான் டெலிகாம் அதிபர் ஷாகித் பல்வா, ராசாவின் தனிச்செயலாளர் சந்தோலியா ஆகியோருக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து வருகிற 4-ந்தேதிக்கு தீர்ப்பை தள்ளி வைத்து நீதிபதி சைனி உத்தரவிட்டார். 

இந்நிலையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி மற்றும் 4 நபர்களின் ஜாமீன் மனுவை எந்த அடிப்படையில்  எதிர்க்கவில்லை என்பதை சி.பி.ஐ. விளக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


தந்தை தந்த முழு சுதந்திரம்: ஸ்ருதி பெருமிதம்


எனது தந்தை எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளார். அதனால் என் விஷயங்களில் நான் தான் முடிவு எடுப்பேன் என்று கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி இந்தி படமான லக் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். சூர்யா ஜோடியாக அவர் நடித்த 7 ஆம் அறிவு தீபாவளிக்கு ரிலீஸானது. அதில் அவரது நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. புலிக்கு பிறந்தது பூனையாகுமா, ஸ்ருதி கமல் மகள் என்று நிரூபித்துவிட்டார் என்றெல்லாம் அவரைப் புகழ்ந்து விமர்சனங்கள் வருகின்றன.

தற்போது ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக 3 படத்தில் நடித்து வருகிறார். கையில் 2 தெலுங்கு படங்களும் வைத்துள்ளார்.

இந்நிலையில் ஸ்ருதி தனது தந்தை கமல் பற்றி கூறியதாவது,

எனது தந்தை எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளார். அதனால் எந்த விஷயமானாலும் சரி நான் சுயமாக முடுவு எடுக்கிறேன். அந்த வகையில் நான் கொடுத்து வைத்தவள். பண வசதி இருப்பதால் தன்னம்பிக்கை அதிகம் உள்ளது. கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் தான் வெற்றிக்கு வழி வகுக்கும் என்பதை தெரிந்து வைத்துள்ளேன்.

நடிப்பு, இசை, எழுத்து ஆகிய 3 விஷயங்களிலும் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுகிறேன். என் வாழ்க்கையை எனக்கு பிடித்த மாதிரி வாழ்கிறேன். ஒவ்வொரு அடியையும் என் விருப்பப்படியே எடுத்து வைக்கிறேன். எனக்கு நானே வழிகாட்டி. சில விஷயங்களில் பெற்றோரிடம் ஆலோசனை கேட்பேன். ஆனால் நான் தான் இறுதி முடிவு எடுப்பேன் என்றார்.


சிறையில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வருக்கு அடி உதை


சிறையில் சாப்பாடு சரியில்லை என்று கூறி உண்ணாவிரதம் இருந்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவை போலீசார் அடித்துள்ளனர். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ரூ. 4,000 கோடி பணத்தை சுருட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட கோடா கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ராஞ்சி சிறையில் உள்ளார். அவரும், 4 அமைச்சர்களும் சிறையில் உள்ள விஐபி அறையில் உள்ளனர்.

அங்கு கோடா இன்று சக கைதிகளால் தாக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. அங்குள்ளவர்களை கலைந்து போகச் செய்ய போலீசார் தடியடி நடத்தினர். இதில் கோடா காயம் அடைந்தார். காயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கோடா அனுமதிக்கப்பட்டதைவிட அதிகமான பார்வையாளர்களை சந்திக்க விரும்பினார். ஆனால் சிறை அதிகாரிகள் அனுமதியளிக்க மறுத்தனர். இதையடுத்து கோடா பொது வார்டுக்கு சென்று அங்குள்ளவர்களை சந்தித்தார் என்று சிறை அதிகார் பிர்சா முண்டா தெரிவித்தார்.

ஆனால் இது குறித்து கோடா கூறியதாவது,

சிறையில் வழங்கும் உணவு சரியில்லை என்று கண்டித்து நானும், பிற கைதிகளும் சேர்ந்து உண்ணாவிரதம் இருந்தோம். உணவின் தரத்தை சோதிக்கச் சென்ற என்னை சிறை ஊழியர்கள் தாக்கினர் என்றார்.


நடிகை வைஷ்ணவி தற்கொலை- டிவி நடிகருக்கு 5 ஆண்டு சிறை

 டிவி நடிகை வைஷ்ணவியை தற்கொலைக்குத் தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் சக டிவி நடிகரும், காதலருமான தேவானந்த்துக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

பல்வேறு டிவி தொடர்களில் நடித்தவர் வைஷ்ணவி. பாபா உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கும், இன்னொரு டிவி நடிகரான தேவானந்த் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த 2006 ஏப்ரல் 15ம்தேதி வைஷ்ணவியை தேவானந்த் கிழக்கு கடற்கரை சாலைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் இரவு வீடு திரும்பினார் வைஷ்ணவி. அப்போது அவரது முகத்தில் காயம் இருந்தது.

இதுகுறித்து தனது பெற்றோரிடம் அவர் கூறுகையில், தேவானந்த் இரண்டாம் தாரமாக திருமணம் செய்ய வற்புறுத்துகிறார். இல்லையென்றால் யாருடனும் வாழ முடியாமல் செய்து விடுவேன் என்றும் மிரட்டுகிறார் என்று கூறியுள்ளார்.

பின்னர் 2 நாட்கள் கழித்து அவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது பெற்றோர் அண்ணாநகர் காவல் நிலையத்தில் தேவானந்த் மீது புகார் கொடுத்தனர்.

போலீஸார் தேவானந்த் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று தேவானந்த் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக தெரிவித்த நீதிபதி அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


திமுகவை மக்கள் தோற்கடித்தது ஏன்?: ஸ்டாலின் 'கண்டுபிடிப்பு


திமுக தலைவர் கருணாநிதிக்கு ஓய்வு கொடுப்பதற்காகத் தான் கடந்த தேர்தலில் எங்களை மக்கள் தோற்கடித்தார்கள் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

வேலூரில் நடந்த திமுக பிரமுகரின் திருமண விழாவில் கலந்து கொண்டு ஸ்டாலின் பேசுகையில், 1967ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும் வெற்றி பெற்றது. அண்ணா ஆட்சி பொறுப்பு ஏற்றதும் சீர்திருத்த திருமணங்கள் சட்டபடி செல்லுபடியாகும் என்று சட்டசபையில் முதல் தீர்மானம் கொண்டு வந்தார்.

கடந்த 5 ஆண்டுகளில் திமுக தலைவர் கருணாநிதி பல நலத் திட்டங்களை கொண்டு வந்தார். அப்படிபட்ட திட்டங்களுக்கு என்ன பரிசு கிடைத்தது? சட்டமன்ற தேர்தலில் பெரும் தோல்வி அடைந்தோம்.

ஆனால், அப்படிபட்ட தோல்வியை கண்டு திமுக துவண்டுவிடவில்லை. ஆட்சி மாற்றத்தால் மக்கள் வேதனை தான் படுகிறார்கள். தோல்விக்கான காரணம் குறித்து நாங்கள் ஆலோசித்தோம். அப்போது ஒன்றை உணர முடிந்தது. கருணாநிதிக்கு ஓய்வு கொடுப்பதற்காக தான் மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள் என்பதை உணர முடிந்தது.

ஆனால், இப்போது தலைவர் கருணாநிதி கொண்டுவந்த திட்டங்கள் எங்கே என்று மக்கள் தேடி கொண்டிருக்கிறார்கள். உயர் சிகிச்சை, கான்கிரீட் வீடு கட்டும் திட்டம் உள்பட எத்தனையோ திட்டங்கள் இந்த ஆட்சியாளர்களால் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மக்களுக்குத் தான் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகம் பொய் வழக்குகளையும் தாண்டி திமுக 30 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. இதிலிருந்து என்ன தெரிகிறது.. வரும் காலம் நம்முடையது என்பது தெரிகிறது.

எப்போதுமே வெற்றி தோல்வியை சமமாக கருதி உண்மையாக உழைப்பவன் தான் திமுக தொண்டன் என்றார் ஸ்டாலின்.


அடுத்த படத்திலும் அஞ்சலிதான்... முருகதாஸ்


எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்ததிலிருந்தே அஞ்சலி மீது அத்தனை அன்பாக இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படி சொன்னவுடன் கண், காது, மூக்கு, என்று ஏகப்பட்ட எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் போட்டு யோசித்தால் ஏமாந்து போவீர்கள் மக்களே... இது அந்த மாதிரி விஷயமல்ல. நவீன சாவித்திரி என்று கொண்டாடாத குறையாக அவரை தலைமேல் வைத்து தாங்கிக் கொண்டிருக்கும் முருகதாஸ் மீண்டும் அவரையே தனது அடுத்த படத்திலும் கதாநாயகியாக்கியிருக்கிறார் என்பதுதான் விஷயம்.

ஒரு சிறந்த திரைக்கதை ஆசிரியராக இருக்கும் முருகதாஸ் 7 ஆம் அறிவு படத்தில் அதை கோட்டை விட்டு விட்டார் என்று விமர்சகர்கள் பொறிந்தாலும், அவர் மேற்பார்வையில் வெளிவந்த எங்கேயும் எப்போதும், எப்போதும் பேசப்படுகிற அளவுக்கு சிறந்த திரைக்கதையை பெற்றிருந்தது. இப்படத்தின் வெற்றி முருகதாசுக்கு மேலும் மேலும் நம்பிக்கையை கொடுக்க, ஏகபோக சந்தோஷத்தோடு தனது அடுத்த படத்தை ஆரம்பித்துவிட்டார் அவர்.

இப்படத்தில் முருகதாசிடம் 7 ஆம் அறிவு படத்தில் அசோசியேட் இயக்குனராக பணியாற்றிய திரு என்பவர் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். இந்த அறிமுகம் இதோடு நிற்கவில்லை. இப்படத்தின் ஹீரோ முருகதாசின் தம்பிதான்.


ஒஸ்தியின் விலை... ஓங்கி ஒலிக்கும் சிம்பு


காக்கைக்கும் தன் குஞ்சு ஒஸ்திதான் என்பதை ஒவ்வொரு காக்கையுமே நிரூபிக்க துடிக்கும். காக்கைக்கே அப்படியிருக்கும் போது சிம்பு மட்டும் விட்டுக் கொடுப்பாரா? இந்த தீபாவளிக்கே ஒஸ்தி வந்திருந்தால் நாமதான் ஹிட்டடிச்சிருப்போம் என்று நம்பிக்கையோடு பேசி வருகிறார். அப்படி வராமல் ஒதுங்கிய தரணியிடமே தன் வருத்தத்தை காட்டினாராம்.

இவர்தான் இப்படி என்றால், டைரக்டர் தரணி, தயாரிப்பாளர் ரமேஷ் ஆகியோரும் அதீத நம்பிக்கையோடு இருக்கிறார்களாம். அது எப்படி என்பதற்கு ஒரே ஒரு உதாரணத்தை போட்டு உதிரத்தை உறைய வைக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

மயக்கம் என்ன, ஒஸ்தி இரண்டும்தான் வருகிற சில வாரங்களில் மோதிக் கொண்டு நிற்கும் போலிருக்கிறது. விநியோகஸ்தர்களின் சாய்சில் ரெண்டுக்குமே நல்ல மரியாதை. அதிலும் ஒஸ்தி படத்தை மொத்தமாக வாங்க முன் வந்திருக்கிறதாம் ரிலையன்ஸ் நிறுவனம். படத்திற்காக செய்யப்பட்ட செலவு, சிம்புவின் மார்க்கெட் ரேட், இதையெல்லாம் மனதில் வைத்து சுமார் பதினெட்டு கோடி வரைக்கும் ஏறி வந்தார்களாம் அவர்கள்.

ரெண்டு விரலையும் நாலு விரலையும் சேர்த்து நீட்டும் தரணி அண் கோ, அதற்கு கம்மி என்றால் ஸாரி... என்கிறார்களாம் ஒரேயடியாக. ஓவர் ஹைப்பு உடம்புக்கு ஆகாதுன்னு 7 ஆம் அறிவுக்கு வேணும்னா தெரியாம இருக்கலாம். ஆறாம் அறிவுக்கு தெரிஞ்சா தப்பிச்சிக்கலாமே!


அதிக முத்தம் வாங்கியவர்கள் பட்டியலில் ரித்திக்?


லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அதிக முத்தம் பெற்ற சிலைகளில் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனுடைய சிலையும் ஒன்று என்று கூறப்படுகிறது.

லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் உலக பிரபலங்களின் மொழுகுச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. அங்கு செல்லும் மக்கள் தங்களுக்கு பிடித்த சிலைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது, கட்டியணைப்பது, முத்தமிடுவது வழக்கமாகிவிட்டது. இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் அதிக முத்தங்கள் பெற்ற சிலைகள் பெயர் வெளியிடப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டு அதிக முத்தம் பெற்ற டாப் 10 சிலைகளில் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் சிலையும் ஒன்று என்று கூறப்படுகிறது. இது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

கடந்த ஆண்டு டாப் 10 முத்தப் பட்டியலில் ஷாருக் கான் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முத்தமிடுவதில் பெண்கள்தான் ஜாஸ்தி!

மெழுகுச் சிலைகளுக்கு முத்தம் கொடுப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்தானாம். அதாவது 80 சதவீதம் பேர். வெறும் 20 சதவீதம் பேர் மட்டுமே ஆண்கள் ஆவர். அவர்களில் பெரும்பாலானோர் 30 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

மேடம் டுசாட்ஸில் ஷாருக் கான்( 45), சல்மான் கான் (45) மற்றும் அமிதாப் பச்சன்(69) ஆகியோரின் மெழுகுச் சிலைகள் உள்ளன. இதில் ரித்திக் ரோஷனுக்கு (37) தான் இளம் வயதிலேயே சிலை வைக்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டிலிருந்து சிலையாகியுள்ள ஒரு பிரபலங்களில் கரீனா கபூரும் ஒருவர் என்பது நினைவிருக்கலாம்.


அணு உலை வெடித்தால் மத்திய அரசு என்ன செய்யும்?- சீமான் கேள்வி


கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணு உலை திடீரென வெடித்தால் மத்திய அரசு என்ன செய்யும் என்று நாம்தமிழர் கட்சித் தலைவர் சீமான் கேட்டுள்ளார்.

கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து இன்று நெல்லையில் நாம்தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டார் சீமான். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் தொடர்ச்சியாக நடந்த பிறகும் மத்திய அரசு இதை கண்டு கொள்ளவே இல்லை. இந்த போராட்டத்தை திசைதிருப்ப மத்திய அரசு முயல்கிறது.

இது ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களுக்கான போராட்டம் என்றும், வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்று கொண்டு அணு உலையை எதிர்க்கிறார்கள் என்றும் வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள். இது அணு உலையை விட ஆபத்தானது.

மத்திய அரசுக்கு தமிழக மக்கள் உயிர் பற்றி கவலையில்லை. ஏற்கனவே தமிழக மீனவர்கள் கொலையில், எல்லை தாண்டுகிறார்கள் என்று கூறி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இப்படிப்பட்ட அரசு நாளை அணு உலை வெடித்தால் இந்த மக்களை எப்படி காப்பாற்றும்.

இப்போது தீவிரவாதிகளின் பார்வை கூடங்குளம் அணுமின்நிலையம் பக்கம்தான் உள்ளது. இந்த அணு உலை ஒரு பகுதி மக்களுக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழக மக்களுக்கான பேரழிவு. எனவே நாங்கள் அணுமின் நிலையத்திற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம்.

இது போன்ற அணு உலைகளை தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலாவது நிறுவ முடியுமா?. எனவே நாம் தமிழர் கட்சி இறுதி வரை மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக நிற்கும்.

அணு உலை பணிகளை நிறுத்தக்கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு அதனை கண்டுக்கவே இல்லை. அணு உலை போராட்டமானது குறிப்பிட்ட பகுதியில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்தப்படும்.

விரைவில் சென்னை,கோவை, மதுரை மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்றார் அவர்.


மனைவியுடன் சேர்ந்து நிகிதாவிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்


கன்னட நடிகர் தர்ஷனும், அவரது மனைவி விஜயலட்சுமியும் சேர்ந்து, நடிகை நிகிதாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளனர். தங்களது பிரச்சினையில் தேவையில்லாமல் நிகிதாவின் பெயரை இழுத்து விட்டதற்காக அவர்கள் மன்னிப்பு கோரியுள்ளனர்.

கன்னடத்தில் நடித்து வந்த நிகிதாவை மையமாக வைத்து சமீபத்தில் பெரும் புயல் கிளம்பியது. நடிகர் தர்ஷன், தனது மனைவி விஜயலட்சுமியுடன் கடும் சண்டையி்ல் இறங்கினார். மனைவியைத் தாக்கிய அவர் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக புகார் கூறப்பட்டது. தர்ஷன், விஜயலட்சுமி இடையிலான மோதலுக்கு நடிகை நிகிதாதான் காரணம் என்றும் கூறப்பட்டது. ஆனால் நிகிதா இதை மறுத்தார்.

இந்த விவகாரத்தில்தர்ஷன் கைது செய்யப்பட்டு சிறையி்ல் அடைக்கப்பட்டார். மேலும் நிகிதாவுக்கு கன்னட திரையுலகில் தடையும் விதித்தனர். பின்னர் அதற்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அது விலக்கிக் கொள்ளப்பட்டது.

பிறகு கோர்ட்டில் தர்ஷனுக்கும், விஜயலட்சுமிக்கும் நீதிபதி அறிவுரை கூறினார். அதையடுத்து மனைவியிடம் மன்னிப்பு கேட்டார் தர்ஷன். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் மனைவியுடன் சேர்ந்து நிகிதாவிடம் மன்னிப்பு கோரியுள்ளார் தர்ஷன்.

இதுகுறித்து விஜயலட்சுமி கூறுகையில், தேவையில்லாமல் எங்களது பிரச்சினையில் நிகிதாவின் பெயர் இழுக்கப்பட்டு விட்டது. இதற்காக வருந்துகிறேன், மன்னிப்பு கோருகிறேன். இருப்பினும் நான் ஒருமுறை கூட நிகிதாதான் எனது பிரச்சினைக்குக் காரணம் என்று நான் கூறியதே இல்லை. போலீஸில் கொடுத்த புகாரிலும் கூட அதை கூறவில்லை. வேறு எந்தப் பெண்ணின் பெயரையும் நான் குறிப்பிடவில்லை.

எங்களது பிரச்சினைக்கு நாங்கள்தான் காரணம். இதற்காக யார் மீதும் பழி போட நாங்கள் விரும்பவில்லை. நிகிதாவுக்கு ஏற்பட்ட பிரச்சினைக்காக நான் வருந்துகிறேன். அவரது வாழ்க்கை பெரும் சிக்கலாகி விட்டதற்காக நான் வேதனைப்படுகிறேன். அவருக்கு நடிக்க தடை விதித்தது குறித்து எனக்கு முதலில் தெரியாது. எல்லாம் கண்இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட்டது என்றார்.

அதேபோல தர்ஷனும் நிகிதாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கூறினார்.


2ஜி இழப்பு ரூ.1.76 லட்சம் கோடி அல்ல, ரூ.2,645 கோடியே


2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்படவில்லை, ரூ. 2,645 கோடி மட்டுமே இழப்பு ஏற்பட்டது என்று கூறியுள்ள தணிக்கைத் துறையின் தொலைத் தொடர்பு பிரிவுக்கான முன்னாள் டைரக்டர் ஜெனரல் ஆர்.பி.சிங் இன்று நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு முன் ஆஜராகி விளக்கம் அளிக்கவுள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தவறான முறையை கையாண்டதால் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை துறை கூறியது. இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டவர் தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியான வினோத் ராய்.

ஆனால், ஸ்பெக்ட்ரம் விற்பனை தொடர்பான ஆய்வை மேற்கொண்டு இந்த அறிக்கையைத் தயாரித்த ஆர்.பி.சிங் நஷ்டம் ரூ. 2,645 கோடி தான் என்று கூறியிருந்தார்.

ஆனால், நிர்பந்தம் செய்யப்பட்டு நஷ்டத்தின் அளவை ரூ. 1.76 லட்சம் கோடியாக உயர்த்திச் சொல்ல வைக்கப்பட்டார் என்ற புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ கூட 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் ரூ.30,000 கோடி மட்டுமே இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதவிர வேறு சில அமைப்புகளும், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் ஏற்பட்ட நஷ்டம் குறித்து பல்வேறு அளவுகளை கூறியுள்ளன. எனவே இந்த விஷயத்தில் சர்ச்சை நீடிக்கிறது.

இந் நிலையில் ஸ்பெக்ட்ரம் ஊழலை விசாரித்து வரும் நாடாளுமன்ற கூட்டுக்குழு முன்பு கடந்த மே மாதம் 30ம் தேதி தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியான வினோத் ராய் ஆஜரானார்.

இதையடுத்தே முன்னாள் தலைமை ஆடிட்டரான ஆர்.பி. சிங், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது என்று கூறுவது தவறு. இழப்பு தொகை ரூ.2,645 கோடி மட்டுமே என்று கூறினார்.

இந் நிலையில் சிங் இன்று பொது கணக்கு குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார்.

இதையடுத்து கூட்டுக்குழு முன் மீண்டும் ஆஜராகி, நஷ்டம் ரூ. 1.76 லட்சம் என்பது எவ்வாறு கணக்கிடப்பட்டது என்பது குறித்து விளக்கம் தர வினோத் ராய் விருப்பம் தெரிவித்துள்ளார்,

இதுபற்றி ராய் கூறுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து நாங்கள் நவீன முறையில் கணக்கிட்டு இழப்புத் தொகையை உறுதிப்படுத்தினோம். நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு முன்பு ஏற்கனவே ஆஜராகி இழப்பீடு எவ்வாறு கணக்கிடப்பட்டது என்பதை தெளிவுபடுத்தியுள்ளேன் என்றார்.

மேலும் பொதுக் கணக்குக் குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு இம்மாதம் 10ம் தேதி வினோத் ராய் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், எப்பொழுது எனது உதவி தேவைப்பட்டாலும் அதிகாரிகளுடன் ஆஜராகத் தயார். 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு இழப்பை மதிப்பீடு செய்த விதம் குறித்து விளக்கமளிக்கத் தயார் என்றும் கூறியுள்ளார்.

இதையடுத்து வினோத் ராயும் மத்திய துணைத் தலைமைத் தணிக்கையாளர் ரேகா குப்தாவும் இன்று பொதுக் கணக்குக் குழு முன் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் சில நிதித்துறை, வர்த்தகத்துறை அதிகாரிகளிடமும் இந்தக் குழு இன்று விசாரணை நடத்தவுள்ளது.


ஈழ விடுதலை நோக்கி தமிழ் சினிமாவின் பார்வை திரும்பி உள்ளது - சத்யராஜ் பேச்சு


இயக்குனர் சேரன் தயாரித்து அமுதன் இயக்கிய தொடரும் நீதிக்கொலைகள்என்ற ஆவணப் படம் வெளியிடப்பட்டது. அதில் நடிகர் சத்யராஜ் கலந்துகொண்டார். 

அப்போது பேசிய சத்யராஜ், இரண்டாம் உலகப்போருக்கு பிறகு வெளிவந்த பெரும்பாலான ஆங்கிலப் படங்கள்  அதை தழுவியே எடுக்கப்பட்டன. அதேபோல் இனி தமிழகத்தில் வெளிவரும் பெரும்பாலான தமிழ் படங்கள் ஈழ விடுதலையை சார்ந்ததாகவே இருக்கும்.சினிமா வியாபாரம் சம்பந்தப்பட்டது. ஏன்னா போட்ட பணத்தை எடுக்கத்தான் எல்லாரும் நினைப்பாங்க. எந்த விஷயத்துக்காக மக்களின் கைதட்டல் அதிகமாக கிடைக்கிறதோ அது தான் அதிகமாக படத்தில் வரும். சில்க்கின் கவர்ச்சி நடனத்துக்கு கைதட்டல் கிடைத்தால், அந்த கவர்ச்சி நடனத்தை எல்லா படத்திலும் வைப்போம்.  கவுண்டமணி, செந்தில் காமெடிக்கு கைதட்டல் அதிகமாக கிடைத்தால்,

அதை எல்லா படத்திலும் வைப்போம். எதற்கு தியேட்டடில் மக்கள் கை தட்டுகிறார்களோ அதை நோக்கி சினிமாவின் பார்வை திரும்பும். இன்று ஈழ விடுதலை நோக்கி தமிழ் சினிமாவின் பார்வை திரும்பி உள்ளது.

இப்போது வெடிஎன்ற படம் வெளியாகி இருக்கிறது. விஷால் அதில் நடித்திருக்கிறார். அது சராசரியான மசாலா படம் தான். அந்த படம் பற்றி உங்களுக்கு பல விமர்சனங்கள் இருந்தாலும், அதில் ஹீரோ விஷால், என் பெயர் பிரபாகரன், எனக்கு பயம்ன்னா என்னனு தெரியாது என்ற வசனத்தை பேசும் போது, தியேட்டர் இடிந்து போகிற மாதிரி கைத்தட்டல் கிடைத்திருக்கிறது.

அதேபோல சூர்யாவின் 7ஆம் அறிவுபடத்தில் ஈழம் விடுதலை சம்பந்தமான பல வசனங்கள் இடம் பெற்றிருக்கிறது. அந்த வசனங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதுதான் தமிழர்களின் உணர்வு.

எல்லாரும் வீதியில் இறங்கி போராடும் நிலைமை இல்லை. அதற்கு அவர்களுடைய சூழல், குடும்ப சூழல் என பல பிரச்சனைகள் இருக்கிறது. எல்லாரும் போராட வீதிக்கு வரவில்லை என்பதற்காக தமிழர்களுக்கு உணர்வு இல்லை என்று அர்த்தமாகிவிடாது.

எனவே ஈழ விடுதலைக்கு மாணவர்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் மிகப்பெரிய ஆதரவு திரண்டு வருகிறது, எனவே ஈழ விடுதலை பற்றி மேலும் பல படங்கள் வெளிவரும் என்றார்.


சென்னை வங்கிகளை சூறையாடி வரும் ஏடிஎம் கொள்ளையர்கள்- விழிபிதுங்கி நிற்கும் மக்கள்


சென்னையில் உள்ள பல்வேறு வங்கிகளில் போலி டெபிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கில் பணம் சூறையாடப்பட்டு வருகிறது. இதனால் வங்கிகளில் பணம் போட்டு வைத்திருப்போர் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

நவீன முறையில் நடந்து வரும் இந்த சைபர் குற்றச் செயலால் வங்கிகளில் போட்டு வைத்திருக்கும் பணத்திற்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் முக்கியத் தகவல்களை நூதன முறையில் திருடி அவற்றை வைத்து போலி கார்டுகள் தயாரித்து அவற்றின் மூலம் ஏடிஎம் மையங்களில், வாடிக்கையாளர்களின் பணத்தை அபகரித்து வருகிறது ஒரு கும்பல். இந்த திருட்டால் வங்கிகளில் பணம் போட்டு வைத்திருப்போர் அவற்றைப் பறி கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த கும்பலைச் சேர்ந்த 3 பேரை இதுவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதில் ஒருவர் இலங்கையைச் சேர்ந்தவர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிட்டத்தட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட வங்கிகளின் வாடிக்கையாளர்களின் போலி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்த கம்ப்யூட்டரை சோதனையிட்டபோது அதில் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களின் (இவற்றில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களின் விவரங்களும் அடக்கம்) டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து இன்டர்போல் மூலம் சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள வங்கிகளுக்கு சென்னை போலீஸார் எச்சரிக்கைச் செய்தியை அனுப்பியுள்ளனர். போலி டெபிட், கிரெடிட் கார்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளை முடக்கி பணத்தைக் காக்குமாறு அந்த வங்கிகளை அறிவுறுத்துமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் தினசரி சென்னை காவல்துறைக்கு இந்த ஏடிஎம் திருடர்களால் பணத்தைப் பறி கொடுத்து விட்டு பலரும் புகாருடன் வந்தவண்ணம் உள்ளனர். இந்த நெட்வொர்க்கில் மேலும் பலர் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து அவர்களை வளைத்துப் பிடிக்க போலீஸார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இதுவரை 150 பேர் வரை புகார் கொடுத்துள்ளனர். ஆனால் புகார்களின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருவதால் ஏடிஎம் கொள்ளைக் கும்பல் பெருமளவில் நகரில் நடமாடுவதாக போலீஸார் அஞ்சுகிறார்கள். இதையடுத்து வாடிக்கையாளர்கள் தங்களது கார்டுகளை ஏடிஎம் மையங்களில் பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்குமாறு அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தக் கும்பலின் தலைவனாக செயல்படும் நபர் இன்னும் சிக்கவில்லை. அவனைப் பிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன். சைபர் கிரைம் போலீஸார் தனிப்படை அமைத்து இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

ஏடிஎம் மையங்களில் கண்காணிப்பை அதிகரிக்குமாறு அனைத்து வங்கிகளையும் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். ஏடிஎம் மையங்களுக்கு பணம் எடுக்க வருவோரை தீவிரமாக கண்காணிக்குமாறும், ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத மையங்களில் உடனடியாக அவற்றைப் பொருத்துமாறும் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆசைகள் என்ன? ருசிகர தகவல்கள்


ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன். ஆகிய 3 பேரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கடந்த மாதம் 9-ந்தேதி தண்டனையை நிறைவேற்ற முடிவாகி இருந்தது.

ஆனால் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டு, தண்டனையை நிறைவேற்ற தடை பெறப்பட்டது.   கருணை மனு மீது முடிவு எடுக்க நீண்ட காலதாமதம் ஆகியுள்ளது. சிறையில் 20 ஆண்டுகளை கழித்து விட்டோம். எனவே எங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று இவர்கள் தரப்பில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு மீது ஐகோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். சிறையில் இருந்து வெளியேறி சமூகத்துடன் இணைந்து மகிழ்ச்சியாக வாழப்போகிறோம் என்ற நம்பிக்கையில் அவர்கள் உள்ளனர். இவர்களிடம் இப்போது எந்த சலனமும் காணப்படவில்லை. 

வேலூர் சிறையில் இவர்கள் 3 பேருக்கும் தனித்தனியே வேலைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிறை வளாகத்தில் உள்ள கோவிலில் சாந்தன் பூசாரியாக உள்ளார். மற்ற கைதிகளுக்கு யோகாவும், தியானமும் கற்றுத் தருகிறார். சிறையில் இருந்தபடியே எம்.சி.ஏ. படித்து முடித்துள்ள பேரறிவாளன், கைதிகளுக்கு கம்ப்யூட்டர் பாடம் நடத்துகிறார்.  அங்குள்ள லைப்ரரியையும் பராமரித்து வருகிறார்.

முருகன் விளையாட்டு வீரர் என்பதால், சக கைதிகளுடன் சேர்ந்து கைப்பந்து மற்றும் பிற விளையாட்டுகளை விளையாடி வருகிறார். 

சிறையில் இருந்து விடுதலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கை கொண்டுள்ள இவர்கள், ஆளுக்கொரு ஆசையை வைத்துள்ளனர்.

முருகன் கூறியதாவது:-

எங்களுக்கு செப்டம்பர் 9-ந்தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றுவதாக இருந்தது. இதற்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது. இதன் மூலம் எங்களுக்கு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. நாங்கள் மூவரும் விடுதலை ஆவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

எங்களுக்கு நிறைவேற்றப்பட இருந்த தூக்கு தண்டனைக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்ததும், சக கைதிகள் எங்களை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் படித்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நாங்கள் இப்போது உயிர் பிழைத்துள்ளோம். ஒருநாள் எங்களுக்கு விடிவு பிறக்கும். நாங்கள் சுதந்திர காற்றை சுவாசிப்போம் என்று உறுதியாக நம்புகிறோம். 

நான் இலங்கை பிரஜை என்ற போதிலும், மதுரை மீனாட்சி அம்மனின் பக்தன் ஆவேன். சிறையில் இருந்து விடுதலை ஆனதும் மனைவி நளினியுடன் மதுரை சென்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவேன். யாழ்ப்பாணத்தில் உள்ள எங்களது குல தெய்வம் கோவிலுக்கு செல்லவும் விருப்பம் உள்ளது. 

ஒரு பெண்ணுக்கு கணவனாகவும், குழந்தைக்கு தந்தையாகவும் இருப்பதால் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் நிறைய உள்ளன. கடந்த 20 வருடங்களாக பெற்றோரின் பாசமும், பராமரிப்பும் இன்றி எங்கள் மகள் வளர்கிறாள். விரைவில் நாங்கள் ஒன்றாக இணைவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு முருகன் கூறினார். 

சாந்தன் கூறியதாவது:-
 சிறையில் உள்ள கோவிலில் பூசாரியாக இருக்கும் நான், ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டுள்ளேன். விடுதலை கிடைத்ததும், நேராக இமயமலை செல்வேன். ஆன்மீக வழியை தேர்வு செய்து மக்களுக்கு ஆன்மீகப் பணியாற்றுவேன். மரண பயத்தை போக்கி மன உறுதியை எனக்கு தந்தது ஆன்மீகம்தான்.

ஷீரடி சாய்பாபாவின் பக்தன் நான். முதலில் ஷீரடிதான் செல்வேன். எனக்கு குடும்பம் என்று எதுவும் கிடையாது. எனது பெற்றோரும் எங்கு இருக்கிறார்கள்? உயிருடன் உள்ளார்களா? என்று எனக்கு உறுதியாக தெரியவில்லை. எனவே சொந்த நாட்டுக்கு (இலங்கை) செல்லும் திட்டம் எதுவும் இல்லை.

இவ்வாறு சாந்தன் தெரிவித்தார்.

பேரறிவாளன் கூறுகையில்,
நான் வீடு திரும்ப வேண்டும் என்று என்னைவிட என் அம்மாதான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்ப்புடன் உள்ளார். அவரது ஆசை நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. வெளியில் வந்த உடன் சிறையில் கற்ற கல்வியை கொண்டு ஏழைகளுக்கு உதவி செய்ய ஆசைப்படுகிறேன்.

உலகில் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும். இதற்காக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த இயக்கத்தில் இணைந்து மரண தண்டனைக்கு எதிராக நானும் போராடுவேன் என்றார்.

எங்கள் விடுதலைக்கும், மரண தண்டனை ஒழிப்புக்கும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம் என்று 3 பேரும் கூறினார்.