Friday, September 30, 2011

பாலா இயக்கத்தில் அதர்வா!


'அவன் இவன்' படத்திற்கு  பிறகு இயக்குநர் பாலா யாரை நாயகனாக வைத்து படம் இயக்க இருக்கிறார் என்ற கேள்வி தமிழ் திரையுலகில் நிலவி வருகிறது.

எப்போதுமே தனது இயக்கத்தில் ஒரு படம் வெளியான படம் அடுத்த படத்தை இயக்குவதற்கு கொஞ்சம் காலம் எடுத்து கொள்வார் பாலா. ஆனால் 'அவன் இவன்' படம் வெளியான உடனேயே தனது அடுத்த படத்திற்கான பணிகளில் இறங்கினார்.

இந்நிலையில் தனது அடுத்த படத்தின் நாயகனாக மறைந்த முரளியின் மகன் அதர்வாவை நாயகனாக ஒப்பந்தம் செய்து இருக்கிறார். இதுவரை தனது படங்களுங்கு இளையராஜா அல்லது அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்வார்.

ஆனால் இந்த படத்திற்கு இசையமைப்பாளாராக ஜி.வி.பிரகாஷை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்.  இப்படத்தின் தயாரிப்பாளர் யார், வேறு யார் எல்லாம் நடிக்கிறார்கள் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரிரு நாட்களில் தெரியலாம்.

பாலா இயக்கத்தில் நடிக்க இருப்பதால் அதர்வா மிகந்த சந்தோஷத்தில் இருக்கிறாராம். விக்ரம்,சூர்யா, ஆர்யா, விஷால் போன்ற நாயகர்களுக்கு எப்படி பாலா இயக்கத்தில் நடித்ததின் மூலம் தனி முத்திரை பதித்தார்களோ அதைப் போலவே தாமும் தனி முத்திரை பதிக்க வேண்டும் என்று முனைப்புடன் இருக்கிறார் அதர்வாஅஜித்தை இயக்குகிறார் லாரன்ஸ்


தன் வீட்டு ஹோம் தியேட்டரில் கடந்த வாரம்தான் காஞ்சனா படம் பார்த்தாராம் அஜீத். அசந்தே போய்விட்டார். லாரன்சை பார்க்கணும், பாராட்டணும். கொஞ்சம் வரச் சொல்றீங்களா? என்றாராம் உதவியாளர்களிடம்.

தேடிப்போன சாரல் மேலே வந்து விழுந்த கதையாக சிலிர்த்துப் போனராம் லாரன்ஸ். விழுந்தடித்துக் கொண்டு ஓடியிருக்கிறார் அஜீத்தை சந்திக்க. இருவரும் மணிக்கணக்காக பேசிக் கொண்டிருந்தார்களாம். இந்த படத்தின் ஸ்கீரின் ப்ளே எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்று கூறிய அஜீத், அப்படியே எனக்கும் ஒரு கதை சொல்லுங்க. சேர்ந்து பண்ணலாம் என்று கூறினாராம். அதற்கும் காரணம் இருந்தது. விஷ்ணுவர்த்தன் படத்திற்கு பிறகு வெங்கட்பிரபு இயக்கும் படத்திற்கு கால்ஷீட் தருகிற எண்ணத்தில் இருந்தாரல்லவா? சமீபத்திய சோனா-சரண் கோளாறுகளால் வெங்கட்பிரபுவுக்கு படம் பண்ணுகிற திட்டத்தை கைவிட்டு விட்டாராம்.

அவருக்கு பதிலாகதான் லாரன்சுடன் படம் பண்ணுகிற ஆசை வந்திருக்கிறது அஜீத்திற்கு. இந்த சந்திப்பில் ஏராளமாக பேசிய பின் அஜீத் கோவா சென்று விட்டார். லாரன்ஸ் ஐதராபாத் சென்று விட்டார். ஆனாலும் போனில் தொடர்கிறதாம் கதைப்பேச்சு!


ஜாதிக்கட்சி தலைவர் டாஸ்மாக் தொழிற்சங்கம் ஆரம்பித்தது ஏன்?: விஜயகாந்த் கேள்வி


இந்த உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவை நம்பி ஒரு வாய்ப்பு கொடுங்கள். மக்களே...மக்களே.... உங்களை நாங்கள் தங்கத் தாம்பாளத்தில் வைத்து தாங்குவோம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அவர் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் செய்து பேசுகையில், எனது சொந்தப் பணத்தில் இருந்த் மக்க்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளேன். இனிமேலும் அதை தொடர்ந்து செய்வேன்.

எனது காலத்திற்கு பிறகு எனது மகன்கள் இந்த பணியை தொடர்ந்து செய்வார்கள்.

தேமுதிக சார்பில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள் உங்களுக்கு உண்மையாக இருந்து செயல்படுவார்கள். யாரிடமும் லஞ்சம் வாங்கமாட்டார்கள். நேர்மையான நிர்வாகத்தை கொடுப்பார்கள். அவர்கள் தவறு செய்தால் நானே தட்டிக்கேட்பேன்.

மக்கள் விருப்பத்தின் அடிப்படையிலேயே சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தோம். இப்போது மக்கள் மீது உள்ள நம்பிக்கையால் கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணி அமைத்து உள்ளாட்சி தேர்தலை சந்திக்கிறோம்.

நான் மீண்டும் மீண்டும் சொல்வது ஒன்றே ஒன்றுதான். எங்கள் கூட்டணி எப்போதும் தெய்வத்தோடும் மக்களோடும்தான். இந்த உள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவை நம்பி ஒரு வாய்ப்பு கொடுங்கள்.

ஒரு முறை எங்களுக்கு வாய்ப்பு கொடுத்து பாருங்கள். மக்களே...மக்களே.... உங்களை நாங்கள் தங்கத் தாம்பாளத்தில் வைத்து தாங்குவோம் என்றார்.

பின்னர் பெரம்பலூரில் அவர் பேசுகையில், சேலம் மாநாட்டில் கட்சி தொண்டர்களின் கருத்தை கேட்டுத்தான் தெய்வத்தோடும், மக்களோடும் கூட்டணி அமைத்தேன். இப்போதும் மக்களோடுதான் கூட்டணி அமைத்து உள்ளேன். இப்போது தேமுதிகவை நம்பி 2 கம்யூனிஸ்டு கட்சிகளும் வந்துள்ளன.

மக்களுக்காக போராடும் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது மக்களின் கடமையாகும். தமிழகத்தில் 67 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத இடத்தில்தான் புரட்சி உருவாகும்.

ஜாதிக் கட்சிகள் இன்று திராவிடக் கட்சிகளோடு இணைந்து பணம் சம்பாதித்து விட்டு, தேசிய கட்சிகள் தேவை இல்லை என்று கூறுகின்றன.

அரசு மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்று கூறும் ஒரு ஜாதிக்கட்சி தலைவர் தனது கட்சியிலேயே டாஸ்மாக் தொழிற்சங்கம் ஆரம்பித்துள்ளார். இது மக்களை ஏமாற்றும் வேலை என்றார்.

இதையடுத்து அரியலூரில் அவர் பேசுகையில், உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் வெற்றி பெற்றால் ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும். இதில் சில இடங்களில் பிரச்சனை ஏற்பட்டால் அதை நான் பார்த்து கொள்கிறேன்.

மக்கள் மாறி மாறி குறிப்பிட்ட கட்சிகளுக்கு வாக்களித்தது போதும். மாற்றத்தை ஏற்படுத்த தேமுதிகவுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்றார்.

ஒரு பைசா கூட எடுக்கமாட்டோம்-பிரேமலதா:

இந் நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பிரசாரம் செய்த விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா திறந்தவேனில் நின்று பேசுகையில்,

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஊழலை ஒழிப்போம் என்று முழக்கமிட்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு மக்களாகிய நீங்கள் அமோக ஆதரவு அளித்தீர்கள். இதற்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

தேர்தலில் தேமுதிக கூட்டணிக்கு வாய்ப்பளித்தால் ஊழலற்ற உள்ளாட்சி நிர்வாகத்தை தருவோம், மக்களுக்கு சிறப்பான சேவை செய்வோம். அனைத்துப் பகுதிகளிலும் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவோம்.

உள்ளாட்சித் தேர்தல் என்பது சாதாரண தேர்தல் அல்ல. இந்த தேர்தலில் தகுதி உள்ளவர்களை தேர்ந்தெடுத்தால்தான் ஊழலற்ற உள்ளாட்சி நிர்வாகத்தை தர முடியும். உள்ளாட்சி அமைப்புகள் மக்களின் வரிப்பணத்தை கொண்டு செயல்படுகின்றன. இதில் ஒரு பைசா கூட வீணாக செலவழிக்கப்படக் கூடாது. தேமுதிக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் மக்கள் வரிப்பணத்தில் ஒரு பைசாவை கூட அவர்கள் எடுக்க மாட்டார்கள் என்றார்.

பரமக்குடி துப்பாக்கிச் சூடு-சிபிஐ விசாரணையை தேமுதிக ஏற்கும்:

இந் நிலையில் பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை தான் வேண்டும் என்ற கோரிக்கையை முழு மனதுடன் தேமுதிக ஏற்கும் என்று அக்கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பரமக்குடியில் துப்பாக்கி சூடு நடைபெற்றது சம்பந்தமாக நான் சட்டமன்றத்தில் பேசியதை ஒரு சில எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துகின்றன.

இன்று நீதி விசாரணை வேண்டாம், சிபிஐ விசாரணை தான் வேண்டும் என்று வைக்கப்படும் கோரிக்கை அவர்களுக்கு மன நிறைவு அளிக்குமானால் அந்த கோரிக்கையையும் முழு மனதுடன் தேமுதிக ஏற்று கொள்கிறது என்று கூறியுள்ளார்.


மதுரை மேயர் தேர்தல்: சொல்லாமல் கொள்ளாமல் 'ஓடிப் போன' பாமக!


மதுரை மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்த பாமக திடீரென பின்வாங்கிவிட்டது.

இந்தப் பதவிக்கு அதிமுக, திமுக, காங்கிரஸ், தேமுதிக, மதிமுக உள்ளிட்ட முக்கியக் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

அத் போல பாமக சார்பில் மதுரை மேயர் பதவிக்கு ரமேஷ் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்திருந்தார்.

ஆனால், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று வரை ரமேஷ் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதன்மூலம் மதுரை மேயர் போட்டியிலிருந்து பாமக சொல்லாமல் கொள்ளாமல் விலகியுள்ளது.

ஊ....... சங்கு ஊதியபடி வந்து மனு செய்த அதிமுக பிரமுகர்:

இந் நிலையில் மதுரை மாவட்டம் பனமரத்துப்பட்டி பேரூராட்சியில் 10வது வார்டு கவுன்சிலர் பதவிக்குப் அதிமுகவில் சீட் கேட்டிருந்தார் அக் கட்சியைச் சேர்ந்த கைலாசம் (58). ஆனால், அவருக்கு சீட் தராமல் இப்போதைய கவுன்சிலரான முத்துசாமியின் மனைவி அங்காயிக்கு கட்சி சீட் தந்துவிட்டது.

இதனால் கடுப்பான கைலாசம் நேற்று வெள்ளை கொடியுடன், சங்கு ஊதி, துடும்பு அடித்துக் கொண்டு மனு தாக்கல் செய்ய வந்தார்.

சிறையில் இருக்கும் பாரப்பட்டி சுரேசுக்காக மனைவி வேட்பு மனு தாக்கல்:

இந் நிலையில் சேலம் பனமரத்துப்பட்டி ஒன்றியம், 17வது வார்டு கவுன்சிலராக திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகன் சுரேஷ்குமார் உள்ளார். இவர் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவராகவும் பதவி வகிக்கிறார். தற்போது நிலஅபகரிப்பு வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் உள்ளார்.

இந் நிலையில் அவருக்கே திமுக மீண்டும் சீட் வழங்கியுள்ளது. இதையடுத்து சுரேஷ்குமார் சார்பில், அவரது மனைவி டாக்டர் ஷாலினி வேட்புமனு தாக்கல் செய்தார்.

அமைச்சர்களை முற்றுகையிட்ட அதிமுகவினர்:

இந் நிலையில் திருச்சியில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோரை அதிமுகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக மாவட்டச் செயலாளர் மனோகரன் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும், உள்ளாட்சித் தேர்தலில் தனது ஆதரவாளர்களுக்கு மட்டுமே சீட் வழங்கியுள்ளதாகவும் அதை அதிமுக தலைமை ஏற்று சீட் ஒதுக்கிவிட்டு, உண்மையான தொண்டர்களை புறக்கணித்துவிட்டதாகவும் ஆவேசமாகக் கூறினர்.


என் மீதான விசாரணை முடிந்ததா, இல்லையா?- சிபிஐக்கு ராசா கேள்வி


என் மீதான விசாரணை முடிந்து விட்டதா, இல்லையா என்பதை சிபிஐ தெளிவாகத் தெரிவிக்க வேண்டும் என்று சிபிஐக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ராசா கோரிக்கை விடுத்துள்ளார். தன் மீது சுமத்தப்பட்டுள்ள புதிய புகார்களையும் அவர் நிராகரித்துள்ளார்.

மேலும் அரசுக்கு நம்பிக்கை துரோகம் செய்ததாக தன் மீது சிபிஐ தாக்கல் செய்துள்ள புதிய குற்றச்சாட்டை தனியாக விசாரிக்குமாறும் ராசா கோரியுள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ராசா. அவர் மீது கடந்த வாரம் திடீரென புதிய புகார்களை சுமத்தியது சிபிஐ. அமைச்சர் பதவி வகித்த ராசா அரசு ஊழியர் என்ற வகையில் வருவதால் அவர் மீது நம்பி்க்கை மோசடி குற்றத்தை சாட்டியுள்ளது சிபிஐ.

இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code) பிரிவு 409-ன் கீழ் இந்த புதிய குற்றச்சாடடை சிபிஐ சுமத்தியுள்ளது. இதற்கு முன் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமே 7 ஆண்டுகள் வரைதான் சிறை தண்டனை கிடைக்கும் என்ற நிலை இருந்தது. இந் நிலையில் இப்போது கூறப்பட்டுள்ள இந்த புதிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ராசாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு ராசா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ராசாவின் ஆட்சேபனை குறித்து அவரது வழக்கறிஞர் சுஷில் குமார் கூறுகையில், டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐ கூறும்போது ராசா மற்றும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற அனைவரிடமும் விசாரணை நடத்தி முடித்து விட்டதாக கூறியது. ஆனால் தற்போது ராசா மீது புதிய புகார்களைக் கூறியுள்ளது சிபிஐ. நீதிமன்றத்தில் வாதங்கள் முடிவடைந்து விட்டன. அடுத்து குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட வேண்டியுள்ளது. இந்த நிலையில் சிபிஐ புதிய புகார்களை கூறியிருப்பது வழக்கை தாமதப்படுத்தும் நோக்கம் என்றுதான் கருதப்பட வேண்டியுள்ளது.

பழைய குற்றச்சாட்டுகளுடன் நம்பிக்கை துரோக குற்றச்சாட்டையும் இணைத்தால், பழைய வழக்குகளில் ஜாமீன் பெறுவதில் கூட காலதாமதம் ஆகும். இதனால் இந்த புதிய குற்றச்சாட்டை தனியாக பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.

மேலும் தனது விசாரணையை முடித்து விட்டதாக சிபிஐ கூறும் வரை யாருக்கும் ஜாமீன் கிடைக்க வழியில்லை. எனவே சிபிஐ தனது விசாரணை முடிந்து விட்டதா என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். அப்போதுதான் தனது தரப்பு வாதத்தை கோர்ட்டில் தெரிவிக்கப் போவதாக ராசா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் நானும் விசாரணை முடிந்த பின்னரே இந்த வழக்கில் ஆஜராகப் போகிறேன் என்றார் சுஷில் குமார்.


காங்கிரஸ் அரசியல் ரொம்பப் புதுசா இருக்கே!


எந்த ஒரு அரசியல் கட்சியிலும் இப்படி 'குப்பாங்கோ கும்மாங்கோ' வேலைகள் நடந்ததாக நமக்கு நினைவில்லை. உள்ளாட்சித் தேர்தலி்ல தனியாக போட்டியிடும் காங்கிரஸ் கட்சி, வேட்பு மனு தாக்கல் முடியும் வரை தனது வேட்பாளர் பட்டியலை முழுமையாக வெளியிடாமல் ஊத்தி மூடி, தொண்டர்களை பெரும் கடுப்பில் ஆழ்த்தி விட்டது.

உள்ளாட்சித் தேர்தலில் முக்கியக் கட்சிகள் அனைத்துமே கிட்டத்தட்ட தனியாக போட்டியிடுகின்றன. தேமுதிக ஒரு கூட்டணியை அமைத்து களம் காண்கிறது. திமுக, அதிமுக உள்ளிட்டவை தனியாக போட்டியிடுகின்றன. தனித்துப் போட்டியிடும் கட்சிகளில் ஒன்று காங்கிரஸ்.

இந்தக் கட்சி சார்பில் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய 13 பேரைக் கொண்ட பிரமாண்டக் குழுவை அமைத்தனர். அவர்களும் 2 முறை கூடி தீவிரமாக ஆலோசித்தனர். பின்னர் தங்கபாலு வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டார். ஆனால் முழுமையான வேட்பாளர் பட்டியலை தங்கபாலு வெளியிடவில்லை என்று காங்கிரஸார் குற்றம் சாட்டுகின்றனர். ஒப்புக்குச் சில பதவிகளுக்கு மட்டுமே வேட்பாளர்களை அறிவித்து விட்டு காங்கிரஸ் மேலிடம் கப்சிப் ஆகி விட்டதாம்.

இதனால் நாம் எங்கு போட்டியிடுகிறோம் என்பது தெரியாமல் காங்கிரஸார் பெரும் குழப்பமாகி விட்டனர்.

கோவை, திருப்பூர், சேலம் மாநகராட்சிகளின் மேயர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகள், மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியக் குழு வார்டுகளுக்கான வேட்பாளர்கள் புதன்கிழமை இரவு வரை வேட்பாளர் பட்டியல் வெளியாகவில்லை.

இதனால் என்ன செய்வது என்பது தெரியாமல் காங்கிரஸாரும், நிர்வாகிகளும் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தனர். இந்த நிலையில், சேலம் மாநகராட்சி மேயர் வேட்பாளராக ஆர். விஜயவர்மன், திருப்பூர் மேயர் வேட்பாளராக டி.டி.கே. சித்திக் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

அதேபோல நேற்று மத்தியானம்தான் சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. அதன் பிறகு அவர்கள் அரக்கப் பறக்க அடித்துப் பிடித்துக் கொண்டு போய் மனுத் தாக்கல் செய்தனர்.

ஆனால் கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு கடைசிவரையிலும் யாரையும் அறிவிக்கவில்லை காங்கிரஸ். இதனால் சின்னையன் மற்றும் பச்சமுத்து ஆகிய இருவரும் காங்கிரஸ் வேட்பாளர்கள் என்று கூறி மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதில் யார் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்று அவர்களுக்கும் தெரியவில்லை. கட்சியினருக்கும் புரியவில்லை.

இதுகுறித்து மாநில நிர்வாகிகளிடம் சிலர் கேட்டபோது அதெல்லாம் மாவட்டத் தலைவர்களுக்கு அனுப்பியாச்சே என்று பதில் வந்ததாம்.

ஆனால் தற்போதைய நிலவரப்படி பல முக்கிய இடங்களில் யார் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்றே தெரியாத நிலைதான் காணப்படுகிறது.

காங்கிரஸ் நிலைமையைப் பார்க்கும்போது, 'போன் வயர் அந்து போய் நாலு நாளாச்சு' என்ற கவுண்டமணி பட காமெடிதான் நினைவுக்கு வருகிறது.


அத்வானி யாத்திரை குறித்து பாஜக ஆலோசனை- மோடி வர மாட்டார் பாஜகவி


பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று டெல்லியில் தொடங்குகிறது. இதில் அத்வானி மேற்கொள்ளவுள்ள ஊழலுக்கு எதிரான யாத்திரை குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படவுள்ளது. இக்கூட்டத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார்.

இன்று தொடங்கி 2 நாட்களுக்கு நடைபெறும் இக்கூ்டடத்தில், அத்வானியின் ரத யாத்திரைதான் முக்கியப் பொருளாக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. ஊழலுக்கு எதிராக தான் தேசிய யாத்திரை மேற்கொள்ளப் போவதாக அத்வானி அறிவித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

மேலும் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் வங்கதேசத்துடன் இந்தியா செய்து கொண்ட எல்லைப் பிரச்சினை தொடர்பான ஒப்பந்தமும் முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது.

இந்த முக்கியமான கூட்டத்தில் அத்வானியின் கடும் போட்டியாளராக பார்க்கப்படும் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார். நவராத்திரி விழாவையொட்டி அவர் 9 நாட்களுக்கு விரதம் இருப்பதால் அவர் குஜராத்தை விட்டு வெளியேற மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பாஜக வட்டாரத்தில் குழப்பம் எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து பாஜக தலைவர் நிதின் கத்காரி கூறுகையில், நாங்கள் அவருடன் பேசிக் கொண்டிருக்கிறோம். இருப்பினும் நவராத்திரி உள்ளிட்டவை தொடர்பாக அவரால் வர முடியாத நிலை காணப்படுகிறது என்றார்.

உண்மையில் அத்வானி ரத யாத்திரை தொடர்பான விவாதத்தில் பங்கேற்க மோடி விரும்பவில்லை என்று கூறப்பபடுகிறது. அத்வானி ரத யாத்திரை அறிவித்த அடுத்த சில நாட்களிலேயே 3 நாள் அதிரடி உண்ணாவிரதத்தை அறிவித்து நாட்டின் மொத்தக் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து விட்டார் மோடி என்பது நினைவிருக்கலாம். அத்வானியின் யாத்திரை அறிவிபப்பை மோடியின் உண்ணாவிரதம் தூக்கிச் சாப்பிட்டு விட்டது. இதனால் அத்வானிக்கே கூட அதிருப்திதான் என்று பாஜக வட்டாரத்திலேயே பேசப்படுகிறது.

இந்த உண்ணாவிரத வெற்றியால் கவரப்பட்ட மோடி, குஜராத் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டு வருகிறார்.

குஜராத்தில் நவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்படும். 9 நாள் நவராத்திரி விழாவை அகமதாபாத்தில் 17 நாடுகளின் துணைத் தூதர்கள் முன்னிலையில் மோடி தொடங்கி வைத்தார். இந்த விழா, குஜராத்தை உலக சுற்றுலா வரைபடத்தில் இடம் பெறச் செய்யும் முக்கிய விழா என்றும் அப்போது அவர் கூறினார். எனவே பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் நிச்சயம் அவர் பங்கேற்க மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.


2ஜி கடித விவகாரம்: பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் சமரசம்!


2ஜி விவகாரம் தொடர்பான நிதியமைச்சக கடிதத்தில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் என்னுடைய கருத்தல்ல. அது பல்வேறு அமைச்சகங்களிலிருந்து தொகுக்கப்பட்ட கருத்தாகும் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். இதை ஏற்பதாகவும், பிரச்சினை முடிந்ததாகவும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

2ஜி விவகாரத்தில் ப.சிதம்பரத்தைக் குற்றம் சாட்டுவது போல ஒரு கடிதம் மத்திய நிதியமைச்சகத்திலிருந்து பிரதமர் அலுவலகத்திற்குச் சென்றது. இதையடுத்து மத்திய அமைச்சர்களுக்குள் மோதல் மூண்டது. நான் ராஜினாமா செய்ய விரும்புகிறேன் என்று சோனியாவிடம் போனார் ப.சிதம்பரம். கடிதத்துடன் தனக்குச் சம்பந்தம் இல்லை என்றார் பிரணாப் முகர்ஜி. இறுதியில் சோனியா காந்தி, இருவரையும் அழைத்துப் பேசினார். நேற்றும் சுமார் 2 மணி நேரம் பிரணாப் முகர்ஜியுடன் பேசினார்.

இதையடுத்து நேற்று மாலை ப.சிதம்பரத்துடன் செய்தியாளர்களைச் சந்தித்தார் பிரணாப். அவர்களுடன் மத்திய அமைச்சர்கள் கபில் சிபல், சல்மான் குர்ஷித் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.அப்போது பிரணாப் முகர்ஜி ஒரு அறிக்கையை வாசித்தார்.

அதில், 2011, ஜனவரி மாதத்தில் மீடியாக்களில் 2ஜி விவகாரம் தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன. நிதியமைச்சகம் தயாரித்த அறிக்கை என்பது பல்வேறு அமைச்சகங்கள் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பாகும் என்று விளக்க விரும்புகிறேன். அதில் உள்ள கருத்துக்கள் என்னுடைய கருத்துக்களைப் பிரதிபலிக்கவில்லை என்றார் பிரணாப்.

இதையடுத்து அருகில் இருந்த ப.சிதம்பரம் பேசுகையில், அமைச்சரவையில் மதிப்பு வாய்ந்த, மூத்த அமைச்சரான பிரணாப் முகர்ஜியின் அறிக்கையை நான் ஏற்கிறேன். அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விவகாரம் இத்துடன் முடிந்தது என்றார்.

நேற்று பிற்பகல் பிரணாபை அழைத்துப் பேசிய சோனியா காந்தி, இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். உங்களது தரப்பிலிருந்து பகிரங்க விளக்கம் வெளியானால்தான் ப.சிதம்பரம் சமாதானமாவார். இந்த விவகாரத்தை விட முக்கியமானதாக, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அதற்கு நாம் முக்கியத்துவம் தர வேண்டியுள்ளது. எனவே இந்தக் கடித விவகாரத்தை இன்றைக்குள் மூடி விடுங்கள் என்று கேட்டுக் கொண்டாராம். இதையடுத்தே ப.சிதம்பரத்தை சந்தித்துப் பேசிய பிரணாப் பின்னர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.


சகோதரத்துவத்தை மையப்படுத்தி ரஹ்மான் புதிய ஆல்பம்!


தமிழ் சினிமா இசையமைப்பாளர்களில் இளையராஜாவுக்குப் பிறகு தனி இசை ஆல்பம் வெளியிட்டு பெரும் புகழ் பெற்றவர் ஆர் ரஹ்மான்.

அவரது வந்தே மாதரம் செய்த சாதனை மகத்தானது. அதன் பிறகு பல புகழ்பெற்ற ஆல்பங்கள், நாடகங்களுக்கான ட்ராக்குகளை வெளியிட்டுவிட்டார் ரஹ்மான்.

இப்போது உலகில் அரிதாகி வரும் சகோதரத்துவத்தை வலியுறுத்தி ஒரு ஆல்பம் தயார் செய்து வருகிறாராம் இந்த ஆஸ்கர் நாயகன். 3 இந்தி பாடல்களும், 2 ஆங்கில பாடல்களும் கொண்ட இந்த ஆல்பத்தில், தமிழுக்கு இடமில்லை என்பது கொஞ்சம் வருத்தமான சமாச்சாரம்தான்.

இவற்றில் 2 பாடல்களை காட்சிப்படுத்த இருக்கிறார்கள். ஒரு பாடலுக்கு மட்டும் ரஹ்மான் தோன்றிப் பாடுகிறார்.

ரஹ்மானின் 'வந்தே மாதரம்' ஆல்பத்தை படமாக்கிய பரத் பாலா இதற்கான பொறுப்பை ஏற்றுள்ளாராம். இந்த ஆல்பத்தை விரைவிலேயே வெளியிட இருக்கிறார்கள்.


போயஸ் தோட்டப் பகுதி காலாளிகளின் விருப்பத்தை பூர்த்தி செய்த ரஜினி!


'ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும்' - இந்த விருப்பமோ ஆசையோ இல்லாத பொது ரசிகனையோ ரஜினி ரசிகனையோ பார்ப்பது அரிது!

ரஜினியை அரிதாகப் பார்ப்பவர்களுக்கு மட்டுமல்ல, அடிக்கடி பார்க்கும் போயஸ் தோட்டவாசிகளுக்கே இந்த ஆசை ஏகத்துக்கும் உண்டு.

சமீபத்தில் அவர்களில் சிலரை அழைத்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் ரஜினி. அவர் சிங்கப்பூர் மருத்துவமனையிலிருந்து சிகிச்சைப் பெற்ற பிறகு எடுக்கப்பட்டு வெளியாகும் முதல் போட்டோ இதுதான்.

சிங்கப்பூரிலிருந்து திரும்பிய பின், உடம்பை பழைய நிலைக்குக் கொண்டுவர உடற்பயிற்சிகள் மேற்கொள்கிறார் ரஜினி. தினமும் அதிகாலையில் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்துக்கு வந்து நடைபயிற்சி செய்கிறார்.

மண்டபத்தில் திருமணங்கள் நடக்கும் நாட்களில் தன் வீடு அமைந்துள்ள போயஸ் கார்டன் பகுதியிலேயே நடக்கிறார். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் அவர் நடப்பது இல்லை. வீட்டு அருகிலேயே ஆட்கள் வரத்து அதிகம் இல்லாத தெருக்களில் ஒரு ரவுண்ட் வருகிறாராம் அதிகாலை நேரத்தில்.

ரஜினி வருவதைப் பார்த்த அப்பகுதியில் உள்ள வீட்டு காவலாளிகள் ரஜினியுடன் போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பினர். நடந்து வந்து கொண்டிருந்த ரஜினியை நிறுத்தி தங்கள் ஆசைகளை சொன்னார்கள். உடனே ரஜினி அவர்களை தன்னுடன் நிற்க வைத்து போஸ் கொடுக்க, சந்தோஷத்துடன் போட்டோ எடுத்துக் கொண்டார்கள்.

ரஜினி சுறுசுறுப்பாகவும் தெம்பாகவும் பழைய உடல்நிலையுடனும் இருந்ததாக இந்த காவலாளிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம், ராணா மேலும் தாமதமாகும் என்று வரும் வதந்திகளுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.


Thursday, September 29, 2011

வாச்சாத்தியில் 19 ஆண்டுகளுக்கு முன்பு அரங்கேறிய வன்கொடுமை அட்டூழியம்


ஆதிவாசி கிராமமான வாச்சாத்தியில் 19 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அட்டூழிய செயலுக்கு இன்றுதான் தீர்ப்பு கிடைத்துள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவுக்கு உட்பட்டது வாச்சாத்தி கிராமம். இங்கு வசிப்பவர்களில் பெரும்பான்மையினர் மலை ஜாதியினர் .

இந்த கிராம மக்கள் காட்டுப் பகுதியில் உள்ள சந்தன மரங்களை வெட்டி, கடத்தி விற்பனை செய்வதாக 1992ம் ஆண்டு வனத்துறை வழக்குப் பதிவு செய்தது.

இதையடுத்து அந்த ஆண்டு ஜூன் 20ம் தேதி வனத்துறை 155 பேர், போலீசார் 108 பேர், வருவாய்த் துறையினர் 6 பேர் என மொத்தம் 269 பேர் ஆகியோர் அடங்கிய கூட்டு குழு இந்த கிராமத்தில் சோதனை நடத்தியது.

வாச்சாத்தி கிராமத்தில் இவர்கள் வீடு, வீடாக சோதனை நடத்தினர். பின்னர் ஏரிப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சந்தனக் கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக 15 ஆண்கள், 90 பெண்கள், 28 குழந்தைகள் மீது வழக்குப் பதிவு செய்து, 133 பேரை கைதும் செய்தனர்.

ஆனால், இந்த சோதனைகளின்போதும், சோதனைகளைத் தொடர்ந்து நடந்த கைது நடவடிக்கைகளின்போதும் ஜெயா, செல்வி, சித்ரா, காந்தி, அபரக்கா, பாப்பாத்தி, காந்தி, மாரிக்கண்ணு, லட்சுமாயி, கம்சலா, முத்துவேதி, பூங்கொடி, மல்லிகா, சுகுணா, பாப்பாத்தி, முத்துவேதி, தேன்மொழி, பழனியம்மாள் உள்ளிட்ட 18 மலை கிராம பெண்களை கூட்டு குழுவினர் கற்பழித்ததாக புகார் எழுந்தது.

விசாரிக்க மறுத்த போலீஸ்

இது தொடர்பாக கிராம மக்கள் கூட்டு குழுவினர் மீது, அரூர் போலீஸில் தந்த புகாரை போலீசார் பதிவு செய்ய மறுத்து விட்டனர்.

இதையடுத்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொது செயலாளர் சண்முகம் மற்றும் சமூக நல அமைப்புகள் வாச்சாத்தி கிராமத்தில் ஆய்வு செய்தனர். அப்போது, கூட்டு குழுவினரால் மலைவாழ் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் மற்றும் பாலியல் தொல்லைக்கு ஆளாகப்பட்டதாகவும் வீடுகள் சூறையாடப்பட்டதாகவும், இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

உச்சநீதிமன்றம் கொடுத்த சூடு

இதைத் தொடர்ந்து வாச்சாத்தி கிராமத்தில் கூட்டு குழு விசாரணையின் போது நடந்த சம்பவங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 1992ம் ஆண்டு செப்டம்பரில் உத்தரவிட்டது.

இதையடுத்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணைய தென் மண்டல ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இந்த கிராமத்தில் நேரடி விசாரணை நடத்தப்பட்டு, அந்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யுமாறு அரூர் போலீசாருக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரே, வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சிபிஐக்கு மாறிய வழக்கு

ஆனாலும் போலீசார் முறையாக இந்த விவகாரத்தை விசாரிக்காததால் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கக் கோரி 1993ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து கடந்த 1995ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி இந்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் கூட்டுக்குழுவினரின் அட்டகாசங்கள் வெளியில் வந்தன. இதையடுத்து அந்தக் குழுவைச் சேர்ந்த 269 பேரையும் சிபிஐ கைது செய்தது. மேலும் கடந்த, 1996ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி கோவை நீதிமன்றத்தில் சி.பி.ஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

2006ம் ஆண்டு இந்த வழக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. பின்னர், 2008ம் ஆண்டு பிப்ரவரி, 17ம் தேதி தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. பெரும் இழுத்தடிப்புக்குப் பின் இந்த வழக்கு நடந்து முடிந்துள்ளது.