Saturday, March 31, 2012

இல்லாத மின்சாரத்துக்கு கட்டண உயர்வா? - விஜயகாந்த் கண்டனம்


மாநிலத்தில் மின்சாரமே இல்லை. இதில் மின் கட்டண உயர்வை அறிவித்திருப்பது என்ன நியாயம்? கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும், என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

மின் கட்டண உயர்வு குறித்து தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டை தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற்றுவேன் என்று சொன்ன முதலமைச்சர் கடந்த காலத்தில் மூன்று மணிநேரம் மின்வெட்டு என்பதற்கே ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று நடத்தினார்.

ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் மின்வெட்டு நேரம் என்பதுபோய், மின்சாரமே இல்லை என்ற நிலைதான் உள்ளது. மின்சாரத்தை கொடுத்துவிட்டு, சம்பாதிக்க வழி ஏற்படுத்தி தந்து மின்சாரக் கட்டணத்தை ஓரளவுக்கு உயர்த்தினால் கூட சமாளிக்கலாம். ஆனால் இன்று சம்பாதிக்க வழியும் இல்லை. அதே நேரத்தில் கொஞ்சம், நஞ்சம் தரும் மின்சாரத்திற்கு இருமடங்கு கூடுதல் கட்டணம் கட்டுங்கள் என்று கேட்பது என்ன நியாயம்?

விவசாயத்தையும், தொழில் துறையையும் இந்த மின் கட்டண உயர்வு அதலபாதாளத்திற்கு இட்டு செல்லக் கூடிய நிலையையே உருவாக்கியுள்ளது.

ஏழை, எளிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் ஏற்படுகின்ற கடும் இழப்பை ஈடு செய்வதற்கு பதிலாக வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவதைப் போல், மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளனர். ஏற்கனவே விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் நொந்து போய் உள்ளனர். அத்தோடு மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ள நிலை கண்டு விவசாயத்தையே கைவிட்டு விடக்கூடிய துர்ப்பாக்கிய நிலைமைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இது தமிழக மக்களுக்கு சோதனை காலம் போலும். ஏற்கனவே உயர்ந்து வரும் விலைவாசி, வரலாறு காணாத பஸ் கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, பத்திரப் பதிவுக்கான நில வழிகாட்டி மதிப்பு கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் பல்வேறு வரி உயர்வினால் விழி பிதுங்கி இருக்கும் நிலையில் இந்த மின் கட்டண உயர்வு மக்களால் தாங்க முடியாத அளவுக்கு பெரும் சுமையாக ஏற்றப்பட்டுள்ளது.

இதைத்தான் பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும் என்றனர் போலும். இந்த அவலச் சூழ்நிலையை கருதி தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகின்றேன்," என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.


முன்னாள் திமுக அமைச்சர் கே.என். நேருவுக்கு கொலை மிரட்டல்


திமுகவின் முன்னாள் அமைச்சரான கே. என். நேருவின் தம்பி ராமஜெயம் இருதினங்களுக்கு முன் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் கே.என். நேருவுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.

திருச்சி, தில்லை நகரில் உள்ள கே.என். நேருவின் வீட்டிற்கு இன்று மதியம் ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர் ஒருவன் கே.என். நேருவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளான்.

இதனையடுத்து கே.என். நேருவின் பாதுகாவலர் திருச்சி காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் வந்தது குறித்து புகார் செய்துள்ளார்.

ராமஜெயம் கொல்லப்பட்டதற்கு காரணம் தொழில் போட்டியாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கே.என்.நேருவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட செய்தி திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆல் இன் ஆல் அழகுராஜா அஜீத்


இயக்குநர் எம்.ராஜேஷ்எஸ்எம்எஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார்.

தற்போது உதயநிதியை வைத்து ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை இயக்கியிருக்கிறார். இவர் இயக்கிய முதல் இரண்டு படங்களைப் போல் இந்தப் படத்தில் பரிச்சயமான ஹீரோக்கள் இல்லை.


தனது அடுத்தப் படமான ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தை கார்த்திக்குக்காக இயக்கப்போவதாக சொல் லிவந்த ராஜேஷ், தற்போது அந்த கதையை அஜித்திற்காக எழுதியதாக தனது நண்பர்களிடம் கூறுகிறாராம்.

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தைப் பார்த்த அஜித், ராஜேஷிடம் எனக்கு ரொமாண்டிக் வித் ஆக்ஷன் ஸ்கிரிப்ட் பண்ணமுடியுமா? என்று கேட்டாராம்.

அதனால் பில்லா-2 படப்பிடிப்பு முடித்து விட்டு வரும் அஜித்திடம் இந்த கதையை சொல்வதற்காக காத்தி ருக்கிறாராம் ராஜேஷ்.ராமஜெயம் கொலை : போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!


முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும், தொழில் அதிபருமான ராமஜெயம் நேற்று  முன்தினம் கடத்தி கொலை செய்யப்பட்டார். ராமஜெயத்தை கடத்தி கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது மர்மமாக உள்ளது.

இந்த வழக்கில் துப்பு துலக்க மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.  தனிப்படைபோலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராமஜெயத்தை ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட மோதல், பணம் விவகாரம் அல்லது தனிப்பட்ட விவகாரத்தில் சிலர் கூலிப்படையை ஏவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.4 நில அபகரிப்பு வழக்கு ராமஜெயம் மீது நிலுவையில் உள்ளது. 

திருச்சியில்  2006 நடந்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கிலும், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு ராமஜெயம் உட்படுத்தப்பட்டார். மேலும் சில விவகாரங்களால் ராமஜெயம் எதிரிகளை சம்பாதித்தார். இதனால் அவரை பழிவாங்க ஒரு கும்பல், சமயம் பார்த்து வந்தது.

கடந்த சில நாட்களாக அவரை கண்காணித்த கும்பல் நேற்று முன்தினம்  தீர்த்து கட்டியுள்ளது. ராமஜெயத்திடம்  சில மாதங்களாக தீவிரமாக  மோதிய நபர்கள் யார்? யார்? என விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

தனக்கு  உள்ள பிரச்சினைகள் பற்றி குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களிடம் ராமஜெயம் கூறியிருப்பார். எனவே ராமஜெயத்துக்கு தீவிர பிரச்சினை ஏற்படுத்திய விவகாரம் எது? அதன் பின்னணியில் உள்ள நபர் யார்என்பதை  கண்டுபிடிக்க அவரது மனைவி லதா, மகன் மற்றும் உறவினர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

கொலையாளிகள் செல்போனில் பேசிய கேர் கல்லூரி ஊழியர் கோபாலகிருஷ்ணன்உறவினர் அனுராதாவிடமும் விசாரிக்க முடிவு செய்து உள்ளனர். ராமஜெயம் கொலை செய்யப்பட்டு 2 நாட்கள் ஆகி உள்ள நிலையில் இன்று 3-வது நாள் காரியம் நடக்கிறது.

இந்த சோகத்தில் இருந்து அவரது குடும்பத்தினர் இன்னும் மீள வில்லை. எனவே இன்று மாலையில் அல்லது நாளை அவரது குடும்பத்தினரிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.  ராமஜெயம் எதிரிகள் குறித்து முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, சகோதரர்கள் மணிவண்ணன், ரவிசந்திரன் மற்றும் தொழில் நண்பர்களிடம் விசாரிக்கவும் போலீசார்  முடிவு செய்து உள்ளனர்.

ராமஜெயத்தை கொலை செய்த கூலிப்படையை பிடிக்கவும் தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த கொலையில் உள்ளூர் கூலிப்படையினரோடு, வெளிமாநில கூலிப்படையினரும் சேர்ந்து ஈடுபட்டிருப்பதாக தெரிய வந்து உள்ளது.

கூலிப்படையினர் பயன் படுத்திய கார் திருச்சி மாநகர போலீசார் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருக்கும். அந்த காரை கண்டுபிடித்து அதன் மூலம் கூலிப்படையை மடக்கி  போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

நேற்று முன்தினம் திருவாணைக்காவல், மாம்பழச்சாலை சிக்னல் காமிராவில் காலை 8 மணி முதல் 8.30 மணி வரை பதிவான கார் நெம்பர்களில் 3 கார்கள் போலீசாரின் சந்தேக வட்டத்துக்குள் வந்து உள்ளது. அந்த  கார் நம்பர்கள் மூலம் கூலிப்படை பதுங்கி உள்ள இடம் பற்றி போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர். இதில் திடுக்கிடும் பல தகவல்கள் கிடைத்து உள்ளது.

தனிப்படை போலீசாரின் விசாரணை சூடு பிடித்து உள்ளதால் விரைவில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்படுவார் என கூறப்படுகிறது.     


கூடங்குளம் மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டுக்கே வழங்க வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்


கூடங்குளம்  அணுமின் நிலையத்தில் இன்னும் இரண்டு  மாதத்தில் மின்சார  உற்பத்தி தொடங்கும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தமிழ்நாட்டில் மின்வெட்டு படிப்படியாக குறையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மன் மோகன்சிங்குக்கு இன்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தற்போது 2 பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த 2 பிரிவுகளிலும் தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்பது தாங்கள் அறிந்ததே. இரு பிரிவுகளிலும் உற்பத்தி செய்யப்படும் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தில், தமிழ்நாட்டுக்கு வெறும் 925 மெகாவாட் மின்சாரமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்தியத் தொகுப்பில் இருந்து ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தருமாறு கடந்த ஆண்டே நான் கோரிக்கை  விடுத்திருந்தேன். ஆனால் மத்தியத் தொகுப்பில் இருந்து தமிழ்நாட்டுக்கு வெறும் 100 மெகாவாட் மின்சாரமே தரப்படுகிறது என்பதை உங்கள் மேலான கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

தமிழ் நாட்டில் தற்போது மிக கடுமையான மின் தட்டுப்பாடு உள்ளது. எனவே கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தையும் தமிழ்நாட்டுக்கு தருவதே சரியானதும், நியாய மானதும் ஆகும்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கொண்டு செல்வதற்கான பாதையில் இன்னமும் பிரச்சினைகள் நீடிக்கிறது. எனவே  கூடங்குளத்தில் தயாரிக்கப்படும் மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டுக்கே தருவது தவிர்க்க முடியாதது. இதையும் நான் தங்களது மேலான கவனத்துக்கு கொண்டு வருகிறேன். எனது  மேற்கண்ட கோரிக்கையை  நீங்கள் பரிசீலித்து சாதகமான முடிவை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன். 

எங்களுக்கு மின்சாரம் தேவைப்படுவதால், இதை பயன்படுத்த மீண்டும் ஒரு தடவை கேட்டுக் கொள்கிறேன். மற்றபடி எனது ஒத்துழைப்பு தொடரும் என்று உறுதி கூறுகிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.    


உஷாரய்யா உஷாரு... இன்று 'வெப்சைட் வார்'


உலகம் முழுவதும் இண்டர்நெட் சேவையை இன்று முடக்க இருப்பதாக சமூக விரோதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளனர் என்று இண்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பின் செக்ரட்டரி ஜெனரல் ரொனால்டு கே. நோபல் எச்சரித்தார்.

சி.பி.ஐ. (மத்திய புலனாய்வுத் துறை) இயக்குநராகப் பணியாற்றிய டி.பி. கோலியின் நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சி டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக இண்டர்போல் அமைப்பின் செக்ரட்டரி ஜெனரல் ரோனால்டு கே. நோபல் கலந்து கொண்டு பேசியதாவது:

இணையதளங்களில் "அனானிமஸ்' (அநாமதேயம்) என்ற பெயருடன் ஒருவித தாக்குதலை நடத்த சர்வதேச சைபர் குற்றவாளிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக என்னை எச்சரித்தும் மின்னஞ்சல்கள் வந்துள்ளன. இண்டர்போலுக்கு சவால் விடும் வகையில் எனது தந்தை குறித்த விவரங்கள், வீட்டு தொலைபேசி எண் போன்றவற்றையும் அவர்கள் இணையம் வாயிலாக இடைமறித்து இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

அவர்களின் நோக்கம் உலகம் முழுவதும் இண்டர்நெட் சேவையை அரை நாளாவது வரையாவது முடக்க வேண்டும். அதன் மூலம் உலக நாடுகளுக்கு இழப்பு ஏற்பட வேண்டும் என்பதுதான். இதற்காக அவர்கள் இலக்கு வைத்துள்ள நாள் மார்ச் 31, 2012.

உலகம் முழுதும் 31 பேர் கைது:

யார் இந்த சதி வேலையில் ஈடுபடுகிறார்கள் என்று சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. சர்வதேச அளவில் உள்ள அனைத்து தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி குற்றவாளிகளைத் தேடி வருகிறோம்.

இந்தக் குழுக்கள் கொலம்பியா, சிலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். இதையடுத்து சந்தேகத்துக்கு இடமளிக்கும் 31 பேர் உலகம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆபரேஷன் பிளாக் அவுட்

"ஆபரேஷன் பிளாக் அவுட்' அவர்களிடம் விசாரணை நடத்தியதில், "ஆபரேஷன் பிளாக் அவுட்' என்ற பெயரில் உலகம் முழுவதும் இணையம் வாயிலாகத் தாக்குதல் நடத்தி இண்டர்நெட் சேவையை முடக்க முயற்சி மேற்கொள்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வரும் சைபர் குற்றங்களை முறியடிக்க தனியொரு நாடால் முடியாது. உலக நாடுகள் ஒன்று சேர வேண்டும்.

போலி பாஸ்போர்ட்

வெளிநாடுகளுக்குப் பயங்கரவாதிகள் போலி பாஸ்போர்ட் மூலம் சர்வ சாதாரணமாக செல்கிறார்கள். அதை முறியடிக்கும் வகையில் 150 நாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட பாஸ்போர்ட் தகவல்களை இண்டர்போல் அமைப்பு ஒருங்கிணைத்துள்ளது. அதன் உதவியுடன்தான், 2011ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைக் காண வந்த சர்வதேச பார்வையாளர்களின் பாஸ்போர்ட் சரிபார்க்கப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில் யாராவது குற்றம் செய்துவிட்டு தப்பிச்செல்ல முயன்றால் அவருக்கு எதிராக தேடுதல் வாரண்ட் பிறப்பிக்கப்படும். அந்த வாரண்ட் ஐரோப்பிய நாடுகள் முழுமைக்கும் பொதுவாக இருக்கும். அதனால், அங்கு வேறு நாட்டில் உள்ளவரைக் கைது செய்வதில் பிரச்னை இருக்காது.

ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத மற்ற நாடுகளில் இண்டர்போல் மூலம் 'ரெட் கார்னர்" நோட்டீஸ் வெளியிடப்படும். அதன்படி, சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக அவர் கருதப்படுவார். ஆனால், அவர்களைக் கண்டுபிடிப்பதும் சட்ட நடவடிக்கை எடுப்பதும் கடினம்.

இந்த நிலை மாற வேண்டுமானால், இண்டர்போல் உறுப்பு நாடுகளுக்குள் பரஸ்பர சட்ட நடைமுறைகளை எளிமையாக்கி குற்றவாளிகளைக் கைது செய்யும் வசதிகளை ஏற்படுத்தவேண்டும்," என்றார் ரொனால்டு கே. நோபல்.


போயஸ் தோட்டத்து டிராமா ஓவர்...சசிகலா மீதான நடவடிக்கையை ரத்து


உடன்பிறவா சகோதரி சசிகலா மீதான கட்சி ரீதியான ஒழுங்குநடவடிக்கைகளை அதிமுக பொதுச்செயலாலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், தவறு செய்த உறவினர்களின் தொடர்புகளை துண்டித்துக் கொள்வதாக சசிகலா அறிக்கை மூலம் தெரிவித்திருந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டு அவரை அதிமுகவிலிருந்து நீக்கிய நடவடிக்கையை ரத்து செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் சசிகலாவின் ஒரு டஜன் உறவினர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அதிமுகவிலிருந்தும் போயஸ் தோட்டத்திலிருந்தும் சசிகலா வெளியேற்றப்பட்டநிலையில் திடீரென சில நாட்களுக்கு முன்பு "அக்கா" ஜெயலலிதாவுக்காக "எதையும்" தியாகம் செய்யத் தயார் என்று அவர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் சசிகலா மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்வதாக இன்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே போயஸ் கார்டனில் சசிகலா குடியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது. அவரது உடமைகள் அனைத்தும் திரும்ப கொண்டுவரப்பட்டுவிட்டதாகக் கூறுகிறார்கள்.


Friday, March 30, 2012

'கொலை வெறி' புகழ் 3 பட வீடியோ பாடல்கள் ...
''விஜய்காந்த் 6 பேருக்கு வேட்டி-சேலை கொடுத்தார்; 6 பேருக்கு அடி-உதை விழுந்தது''!


தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேமுதிக தலைவர் விஜய்காந்த் 6 பேருக்கு வேட்டி- சேலை கொடுத்தார். 6 பேருக்கு அடி-உதை விழுந்தது. தானே புயல் நிவாரணம் பற்றி குறை சொல்ல இவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.

தேமுதிகவைச் சேர்ந்த மோகன்ராஜ் பேசுகையில், மின்வெட்டால் தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன, தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய நிவாரணம் வழங்கவில்லை என்றார். அப்போது நடந்த விவாதம்,

முதல்வர் ஜெயலலிதா (குறுக்கீட்டு): சிறு குறு தொழிற்சாலைகளுக்கு ஜெனரேட்டர் வைக்க ரூ.5 லட்சம் மானியம் அளிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறேன். மின்வெட்டு குறித்து நேற்று நீண்ட விளக்கம் அளிக்கப்பட்டது. மின் உற்பத்திக்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்து இருக்கிறோம் என்பதை தெளிவாக கூறினேன். ஜூன் மாதம் முதல் மின்வெட்டு குறையும் என்பதையும் எடுத்துக் கூறினேன்.

இவ்வளவு கூறிய பிறகும் குறை கூறினால் என்ன சொல்வது, தூங்குபவர்களை எழுப்ப முடியும், தூங்குவது போல் நடிப்பவர்களை எப்படி எழுப்ப முடியும்?

மோகன்ராஜ்: மின்சார வெட்டினால் சிறுதொழில் பாதிக்கப்பட்டதைதான் நான் கூறினேன்.

ஜெயலலிதா: மின்சார நிலைமை பற்றி நான் நேற்று 110-வது விதியின் கீழ் பேசிய பேச்சின் நகல் அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது. அதை உறுப்பினர் படிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

மோகன்ராஜ்: நான் கூறுவது வேறு பிரச்சனை.

அமைச்சர் சி.வி. சண்முகம்:- தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த அரசும் செய்ய முடியாத அளவுக்கு பல்வேறு திட்டங்களை முதல்வர் அறிவித்தார். 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்து இருக்கிறார். அதன் பிறகும் குறை சொல்வது சரியல்ல.

அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: அவரது தலைவர் (விஜய்காந்த்) 6 பேருக்கு வேட்டி- சேலை கொடுத்தார். 6 பேருக்கு அடி-உதை விழுந்தது. தானே புயல் நிவாரணம் பற்றி குறை சொல்ல இவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்றார்.

இதற்கு தேமுதிகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து கோஷமிட்டனர்.


மின் கட்டண உயர்வு இன்று அறிவிப்பு: ஏப்.1 முதல் அமல்


மின்சார கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு மின்சார வாரியம் ஒழுங்குமுறை ஆணணயத்திடம் முறையிட்டது. 2004-ம் ஆண்டுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. கடந்த தி.மு.க. ஆட்சியில் குறிப்பிட்ட சில பிரிவுகளுக்கு மட்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

மின்சார கட்டணத்தை உயர்த்தாததால் மின்வாரியம் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக ஆணையத்திடம் எடுத்து கூறியது.  அதனால் எந்தெந்த பிரிவினருக்கு எவ்வளவு கட்டணம் உயர்த்தலாம் என முடிவு செய்து மின்சார வாரியம் ஒழுங்குமுறை ஆணையத்திடம் கடந்த நவம்பர் சமர்ப்பித்தது.

அதைத்தொடர்ந்து ஆணையம் பொதுமக்களிடம் கருத்து கேட்டது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் மின்கட்டணம் உயர்த்தப்படுவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டனர்.   இதையடுத்து மின்சார கட்டணத்தை எவ்வளவு உயர்த்தலாம், வீடுகள், தொழிற்சாலைகள், உயர் அழுத்த மின்சார பயன்பாடு, கட்டணம் எவ்வளவு அதிகரிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிறு தொழில்கள், குடிசை தொழில்களுக்கு கட்டண உயர்வு எப்படி அமல்படுத்துவது குறித்து இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மாலை மின் கட்டண உயர்வுக்கான அறிவிப்பை வெளியிட மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது.

இன்று அறிவிக்கப்படும் மின்கட்டண உயர்வு ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து அமுலுக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


யாரால் கொல்லப்பட்டார் ராமஜெயம்?


திருச்சியில் நேற்று காலை கொலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயத்திற்கு ஏகப்பட்ட எதிரிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் யாராவதுதான் கொலை செய்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கே.என்.நேருவின் வலதுகரம் மற்றும் இடதுகரமாக விளங்கி வந்தவர் ராமஜெயம். மிகக் குறுகிய காலத்திலேயே கே.என்.நேருவும், ராமஜெயமும் திருச்சி மாவட்டத்தின் அசைக்க முடியாத பிரமுகர்களாக மாறியவர்கள். இருவரும் இணைந்து இரட்டைக் குழல் துப்பாக்கி போல செயல்பட்டதால் திருச்சி திமுக இவர்கள் வசமானது.

திருச்சி திமுகவில் மட்டுமின்றி, மாவட்டத்திலும் கூட இவர்களை மீறி எதுவும் நடக்காது என்ற நிலைதான் கடந்த திமுக ஆட்சியின்போது நிலவியது. குறிப்பாக ராமஜெயத்தைப் பிடித்தால் ஆகாத காரியம் இல்லை என்ற அளவுக்கு கடந்த திமுக ஆட்சியில் கொடி கட்டிப் பறந்துள்ளார் ராமஜெயம்.

நேருவுக்கு உற்ற துணையாக இருந்து அத்தனை காரியங்களையும் பார்த்து வந்தார் ராமஜெயம். தேர்தல்களின்போது இவர்தான் தி்ட்டமிடுதல், களப் பணியாற்றுதல், இன்ன பிற பணிகள் என அத்தனையையும் பார்ப்பார்.

குவாரி, ரியல் எஸ்டேட், பொறியியல் கல்லூரி என ஏகப்பட்ட தொழில்களில் ஈடுபட்டிருந்தார் ராமஜெயம். அதேபோல கட்டப் பஞ்சாயத்தும் செய்து வந்தார் என்றும் கூறப்படுகிறது. தனது அண்ணனின் அதிகாரத்தைப் பயன்படுத்தி ராமஜெயம் பல கட்டப் பஞ்சாயத்துக்கள் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் இவருக்கு எதிரிகளும் அதிகம் என்கிறார்கள். குறிப்பாக இவருக்குச் சொந்தமான என்ஜீனியரிங் கல்லூரிக்குத் தேவையான இடத்தை ஆக்கிரமித்து கட்டியதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலம் தொடர்பாக மோதல்கள், வழக்குகள் உள்ளன.

மேலும் கடந்த திமுக ஆட்சியின்போது ரியல் எஸ்டேட் அதிபரையும், அவரது தம்பியையும் காரில் வைத்து உயிருடன் தீவைத்துக் கொளுத்திக் கொலை செய்தனர் சிலர். இந்த கொலைக்குக் காரணமே ராமஜெயம்தான் என்று அப்போது பரபரப்பாக குற்றம் சாட்டப்பட்டது. இருப்பினும் நடந்தது திமுக ஆட்சி என்பதால் ராமஜெயம் மீது காவல்துறை கரங்கள் படியவில்லை.

அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் ராமஜெயம் மீதும்,நேரு மீதும் ஏகப்பட்ட வழக்குகள் பாய்ந்தன பெரும்பாலும் நில மோசடி வழக்குகளே தொடரப்பட்டன.

திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த டாக்டர் சீனிவாசன், திருச்சி கலைஞர் அறிவாலயத்தை கட்ட தனது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக கே.என்.நேரு, ராமஜெயம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதேபோல் ராமஜெயம் மீது திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே ஒரு ஓட்டலை அபகரிக்க முயற்சித்ததாக ஒரு வழக்கும், திருச்சி கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த கருணாநிதி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஒரு வழக்கும் அவர் மீது பதிவு செய்யப்பட்டது.

கே.கே.நகர் பகுதியை சேர்ந்த மொரைஸ் என்பவர் விமானநிலைய போலீசில் ஒரு புகார் கொடுத்து இருந்தார். அதில், தனது நிலத்தை ஏமாற்றி மோசடி செய்து, அங்குள்ள திருவள்ளூர் சிலையை சேதப்படுத்தியதாகவும் கே.என்.நேரு, அவருடைய தம்பி ராமஜெயம் உள்பட சிலர் மீது புகார் கொடுத்து இருந்தார்.

இந்த புகார்களின் அடிப்படையில் ராமஜெயம் மீது 4 வழக்குகளை போலீசார் பதிவு செய்து இருந்தனர். இந்த நில மோசடி புகார்களில் சிக்கிய ராமஜெயம் சில மாதங்களுக்கு முன்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன்பிறகு கோர்ட்டில் ஜாமீன் பெற்று தில்லைநகரில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார்.

இப்படி ஏகப்பட்ட எதிரிகள், எதிர்ப்புகள், தொழில் போட்டிகள், வழக்குகள் புடை சூழ வலம் வந்த ராமஜெயத்தை முன்விரோதம் காரணமாகவே யாரோ சிலர் கொலை செய்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. அதேசமயம், இது அரசியல் ரீதியான கொலையாகத் தெரியவில்லை என்றும் மக்களிடையே பேச்சு அடிபடுகிறது.

எப்படி இருப்பினும், திருச்சி மாவட்டத்தில் மிக முக்கியப் பிரமுகரமாக வலம் வந்த ஒருவரான ராமஜெயம் கை, கால்களைக் கட்டி கொலை செய்யப்பட்டிருப்பது திருச்சி மக்களை அதிர வைத்துள்ளது.


சுஷ்மா சுவராஜ் தலைமையில் இலங்கைக்கு செல்கிறது அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு


இலங்கையில் போருக்கு பின் தமிழர்களின் நிலையை நேரில் கண்டறிய அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்து இருந்தது.

கடந்த பிப்ரவரி மாதம் இந்த குழு இலங்கை செல்ல இருந்தது. ஆனால் 5 மாநில தேர்தல் காரணமாக இந்த பயணம் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், 5 மாநில தேர்தல் முடிந்து விட்டதால், அடுத்த மாதம் (ஏப்ரல்) எம்.பி.க்கள் குழுவினர் இலங்கை பயணத்தை மேற்கொள்கிறார்கள்.

இது பற்றி பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் நிருபர்களிடம் கூறியதாவது-

இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவுக்கு நான் தலைமை தாங்கி செல்கிறேன். இந்த குழுவினர் அடுத்த மாதம் 16ஆம் தேதி புறப்பட்டு செல்கிறோம். 21ஆம் தேதி திரும்புகிறோம்.

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் நடைபெற்று இருக்கும் நிவாரண பணிகளை எம்.பி.க்கள் பார்வையிடுகிறார்கள். மேலும், தமிழர்களின் வாழ்க்கை நிலையையும் நேரில் பார்க்கிறோம்.

இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறினார். 


தனது சாதனையை முறியடிக்கப்போகும் கதாநாயகன் யார்? : சொல்கிறார் சச்சின்


இந்தியாவின் மாஸ்டர் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர். தனது பதினாறாவது வயதில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடந்த 1989இல் முதன்முதலாக அனைத்துலக துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். 

டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு நாள் அனைத்துலகப் போட்டிகளிலும் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர் இவரே. வரையறுக்கப்பட்ட ஓவர் அனைத்துலகப் போட்டிகளில் முதலாவது இரட்டைச்சதம் (200* ஓட்டங்கள்) எடுத்தவர் என்ற பெருமையும் டெண்டுல்கரைச் சேரும். 

அனைத்துலகப் போட்டிகளில் மொத்தமாக நூறு நூறுகளை எட்டிய முதலாமவரும் இவரே.

நாட்டின் முன்னணி தொழிலதிபரும், மும்பை இந்தியன்ஸ் ஐ.பி.எல். அணியின் உரிமையாளருமான முகேஷ் அம்பானி சார்பில் சச்சின் தெண்டுல்கருக்கு மும்பையில் பாராட்டு விழா நடைபெற்றது.

அப்போது தனது சத சாதனையை முறியடிக்கப்போகும் கதாநாயகன் யார் என்பது குறித்து சச்சின் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது-

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்களான விராட் கோஹ்லியோ அல்லது ரோகித் சர்மாவோ தான் என்னுடைய சாதனையை முறியடிப்பார் என நான் கருதுகிறேன்.

அதற்கான உத்வேகமும் திறமையும் அவர்களிடம் உள்ளது. மேலும், அவர்கள் ஆபத்தான நேரத்தில் களத்தில் நின்று ஆடுகிறார்கள்.

இவ்வாறு சச்சின் தெரிவித்தார்.


Thursday, March 29, 2012

ஏப்ரல் 13ம் தேதி முதல் 'துப்பாக்கி'...?


விஜய் ரசிகர்கள் இப்போது ஆவலுடன் எதிர்ப்பார்த்து இருப்பது 'துப்பாக்கி' படத்தின் FIRST LOOK எப்போது என்பது தான்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'துப்பாக்கி' படத்தின் படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது.

விஜய், காஜல் அகர்வால் நடனமாடிய ஒரு பாடலை பாங்காக்கில் படமாக்கி இருக்கிறார்கள். இதுவரை 'துப்பாக்கி' படத்தின் படப்பிடிப்பு சுமார் 50% முடிந்துள்ளது.

சத்யன் காமெடியனாகவும், ஜெயராம் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்திலும், வித்யூத் ஜாம்வால் வில்லனாகவும் நடித்து வருகிறார்கள். நீண்ட நாட்கள் கழித்து தமிழ் படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார் சந்தோஷ் சிவன்.

பாதி படப்பிடிப்பு முடிந்து விட்ட காரணத்தால் படத்தின் FIRST LOOK எப்போது வெளியாகும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஏப்ரல் 13ம் தேதி படத்தின் FIRST LOOK வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்.

'துப்பாக்கி' திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி ரசிகர்களின் இதயத்தைக் குறிவைத்து வருகிறது.

 'துப்பாக்கி'ல விஜய்யோட Look-அ மாத்தியிருக்காங்களாம்..  First Look- ல விஜய்யோட புது Look-அ பாக்கலாம்! "