Saturday, December 29, 2012

டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி மரணம்

 டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 23 வயது மாணவி, சிகிச்சை பலனின்றி சிங்கப்பூர் மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது உடல் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த மாணவியின் மூளை மற்றும் நுரையீரல் ஆகியவை மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தன. பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்ட அந்த இளம் பெண் உயிருக்குப் போராடிய நிலையில், இந்திய நேரப்படி நள்ளிரவு 2.15 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. அவர் மரணமடைந்த சமயத்தில், அவரது பெற்றோரும், இந்திய தூதரக அதிகாரிகளும் அருகில் இருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

சிங்கப்பூர் மருத்துவமனையில் ஐசியு பிரிவில் தொடர்ந்து செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த மாணவியை காப்பாற்ற, மருத்துவர்கள் குழு அருகில் இருந்தே கவனித்து வந்தும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. மரணமடைந்த மாணவியின் உடலை இந்தியாவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அவரது பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், மாணவியின் மரணத்தால் டெல்லியில் போராட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளதால், அதிகளவு பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 16ம் தேதி, டெல்லியில் ஓடும் பேருந்தில் ஆறு பேர் கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அந்த மாணவி டெல்லியில் சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்துக்கு எதிராக நாடு முழுவதும் பெரிய அளவிலான போராட்டங்கள் நடைபெற்றதை அடுத்து, மேல் சிகிச்சை அளிப்பதற்காக, கடந்த 26-ம் தேதி, சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார்.


Thursday, December 6, 2012

விஸ்வரூபம் படத்தை முதலில் டிவியில் வெளியிடும் கமல்ஹாஸன்


விஸ்வரூபம் படத்தை முதலில் டிடிஎச் மூலம் டிவியில் வெளியிடுவதில் உறுதியாக நிற்கிறார் கமல்ஹாஸன். தனது இந்த முடிவை அவர் நேற்று தயாரிப்பாளர் சங்கத்துக்கும் தெரிவித்துவிட்டு, அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கிவிட்டார்.

கமல் திட்டப்படி, விஸ்வரூபம் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பாகவே டிடிஎச்சில் உலகம் முழுவதும் வெயிடப்படும். இந்திய சினமா வரலாற்றில் ஒரு மெகா படம் தியேட்டர்களுக்கு வரும் முன்பே டிவிக்கு வருவது இதுதான் முதல் முறை!

விஸ்வரூபம் படத்தை ஒளிபரப்பும் உரிமையை முக்கியமான டிடிஎச் ஆபரேட்டருக்கு தரப்பட்டுள்ளது. இந்த பிரதான ஆபரேட்டர், மற்ற டிடிஎச் நிறுவனங்களுடன் பேசி படத்தை விற்கப் போகிறார். கிடைக்கும் வருவாயை கமலும் டிடிஎச் நிறுவனமும் பகிர்ந்து கொள்வார்கள்.

இப்படி வெளியிடுவதன் மூலம் விஸ்வரூபம் படத்துக்கு பெரிய அளவில் வருவாய் கிட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தை ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் பார்க்கும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. முக்கியமாக, திருட்டு டிவிடி பிரச்சினை ஆரம்பத்திலேயே ஒழிக்கப்பட்டுவிடும்.

டிடிஎச்சில் படம் வெளியாகி 8 மணி நேரம் கழித்து உலகம் முழுவதும் திரையரங்குகளில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளார் கமல். கிடைக்கும் தியேட்டர்களில் இதை வெளியிடப் போகிறாராம். இதில் இன்னொரு நன்மை... முதலிலேயே படம் டிவியில் காட்டப்பட்டுவிடுவதால் பிளாக் டிக்கெட் பிரச்சினையும் இருக்காது.

டிடிஎச்சில் படம் வெளியிடும் தனது முடிவைத் தெரிவிக்க நேற்று தயாரிப்பாளர் சங்கத்துக்கு வந்தார் கமல். அங்கே சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பிரபல தயாரிப்பாளர்களிடம் தனது பிரச்சினையை விளக்கினார்.

தன் படத்தை எப்படி வர்த்தகம் செய்ய வேண்டும் என்ற உரிமை அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கே உண்டு என்பதை மறைமுகமாக, ஆனால் அழுத்தமாகத் தெரிவித்துவிட்டு சென்றாராம் கமல்.


Friday, November 23, 2012

திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மரணம்


உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி்க்கப்பட்டிருந்த திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் இன்று காலை 11 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75.

சேலம் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். அவர் சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். அவருக்கு வயது 75.

கடந்த 1937ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி சேலம் மாவட்டம் பூலாவாரியில் பிறந்தவர் வீரபாண்டி ஆறுமுகம். அவர் கடந்த 1957ம் ஆண்டு திமுகவில் சேர்ந்தார். 1958ம் ஆண்டு முதல் 1970ம் ஆண்டு வரை பூலாவாரி ஊராட்சி தலைவராக இருந்தார். அதன் பிறகு அவர் 1970-76ல் பஞ்சாய்தது யூனியன் தலைவராக இருந்தார். பின்னர் 1973ம் ஆண்டு முதல் 1976ம் ஆண்டு வரை சேலம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக இருந்தார்.

அவர் 6 முறை தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962-67, 67-71, 71-76, 89-91, 96-2001, 2006-2011 ஆகிய காலங்கட்டங்களில் அவர் எம்.எல்..வாக இருந்தார். சேலம் திமுக வட்டாரத்தில் பெரிய சக்தியாக இருந்த அவர் 1989ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தார். பிறகு 1990-91, 96-2001, 2006-2011 ஆகிய காலகட்டகங்களில் வேளாண் அமைச்சராக இருந்தார். கடந்த 2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக வேட்பாளர் விஜயலக்ஷ்மியிடம் தோற்றார்.

அவரது மரணத்தையடுத்து 3 நாட்கள் துக்கம் அனுசரிக்க திமுக முடிவு செய்துள்ளது. இந்த 3 நாட்களும் கட்சி கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடவும், கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்யுமாறும் திமுக தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.