Thursday, December 6, 2012

விஸ்வரூபம் படத்தை முதலில் டிவியில் வெளியிடும் கமல்ஹாஸன்


விஸ்வரூபம் படத்தை முதலில் டிடிஎச் மூலம் டிவியில் வெளியிடுவதில் உறுதியாக நிற்கிறார் கமல்ஹாஸன். தனது இந்த முடிவை அவர் நேற்று தயாரிப்பாளர் சங்கத்துக்கும் தெரிவித்துவிட்டு, அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கிவிட்டார்.

கமல் திட்டப்படி, விஸ்வரூபம் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பாகவே டிடிஎச்சில் உலகம் முழுவதும் வெயிடப்படும். இந்திய சினமா வரலாற்றில் ஒரு மெகா படம் தியேட்டர்களுக்கு வரும் முன்பே டிவிக்கு வருவது இதுதான் முதல் முறை!

விஸ்வரூபம் படத்தை ஒளிபரப்பும் உரிமையை முக்கியமான டிடிஎச் ஆபரேட்டருக்கு தரப்பட்டுள்ளது. இந்த பிரதான ஆபரேட்டர், மற்ற டிடிஎச் நிறுவனங்களுடன் பேசி படத்தை விற்கப் போகிறார். கிடைக்கும் வருவாயை கமலும் டிடிஎச் நிறுவனமும் பகிர்ந்து கொள்வார்கள்.

இப்படி வெளியிடுவதன் மூலம் விஸ்வரூபம் படத்துக்கு பெரிய அளவில் வருவாய் கிட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தை ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் பார்க்கும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. முக்கியமாக, திருட்டு டிவிடி பிரச்சினை ஆரம்பத்திலேயே ஒழிக்கப்பட்டுவிடும்.

டிடிஎச்சில் படம் வெளியாகி 8 மணி நேரம் கழித்து உலகம் முழுவதும் திரையரங்குகளில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளார் கமல். கிடைக்கும் தியேட்டர்களில் இதை வெளியிடப் போகிறாராம். இதில் இன்னொரு நன்மை... முதலிலேயே படம் டிவியில் காட்டப்பட்டுவிடுவதால் பிளாக் டிக்கெட் பிரச்சினையும் இருக்காது.

டிடிஎச்சில் படம் வெளியிடும் தனது முடிவைத் தெரிவிக்க நேற்று தயாரிப்பாளர் சங்கத்துக்கு வந்தார் கமல். அங்கே சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பிரபல தயாரிப்பாளர்களிடம் தனது பிரச்சினையை விளக்கினார்.

தன் படத்தை எப்படி வர்த்தகம் செய்ய வேண்டும் என்ற உரிமை அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கே உண்டு என்பதை மறைமுகமாக, ஆனால் அழுத்தமாகத் தெரிவித்துவிட்டு சென்றாராம் கமல்.


Friday, November 23, 2012

திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மரணம்


உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி்க்கப்பட்டிருந்த திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் இன்று காலை 11 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75.

சேலம் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். அவர் சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். அவருக்கு வயது 75.

கடந்த 1937ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி சேலம் மாவட்டம் பூலாவாரியில் பிறந்தவர் வீரபாண்டி ஆறுமுகம். அவர் கடந்த 1957ம் ஆண்டு திமுகவில் சேர்ந்தார். 1958ம் ஆண்டு முதல் 1970ம் ஆண்டு வரை பூலாவாரி ஊராட்சி தலைவராக இருந்தார். அதன் பிறகு அவர் 1970-76ல் பஞ்சாய்தது யூனியன் தலைவராக இருந்தார். பின்னர் 1973ம் ஆண்டு முதல் 1976ம் ஆண்டு வரை சேலம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக இருந்தார்.

அவர் 6 முறை தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962-67, 67-71, 71-76, 89-91, 96-2001, 2006-2011 ஆகிய காலங்கட்டங்களில் அவர் எம்.எல்..வாக இருந்தார். சேலம் திமுக வட்டாரத்தில் பெரிய சக்தியாக இருந்த அவர் 1989ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தார். பிறகு 1990-91, 96-2001, 2006-2011 ஆகிய காலகட்டகங்களில் வேளாண் அமைச்சராக இருந்தார். கடந்த 2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக வேட்பாளர் விஜயலக்ஷ்மியிடம் தோற்றார்.

அவரது மரணத்தையடுத்து 3 நாட்கள் துக்கம் அனுசரிக்க திமுக முடிவு செய்துள்ளது. இந்த 3 நாட்களும் கட்சி கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடவும், கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்யுமாறும் திமுக தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.


Thursday, November 1, 2012

”சோனியா நினைவு நாள்” ... அழைப்பிதழ் அனுப்பிய தமிழக காங்கிரஸ் கட்சி!


தமிழகக் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி மீதான பாசத்துக்கே அளவு இல்லை போலும்! தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திரா காந்தி நினைவுநாள் தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட செய்தி அறிக்கையில், "அன்னை சோனியா காந்தியின் 28-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு" என்று அனுப்பி வைக்க அனைவருமே பதறிப் போயினர்!

அனைத்து ஊடகங்களுக்கும் மின் அஞ்சல் மூலம் "அன்னை சோனியா நினைவு நாள்" நிகழ்ச்சி அழைப்பிதழை அனுப்பிவிட்டுவிட்டனர். செய்தியாளர்கள்தான் பதறியடித்துக் கொண்டு காங்கிரஸ் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு விவரம் தெரிவிக்க "திருத்தப்பட்ட" அழைப்பிதழை அனுப்பி வைத்தனர்.

"தட்டச்சுப் பிழையால் இத்தகைய தவறு நேர்ந்துவிட்டது, திருத்திய செய்தியை வெளியிடவும்" என்று விளக்கம் வேறு!

அப்ப காங்கிரஸ் கட்சியில் அன்னை என்றால் சோனியா மட்டும்! அது எட்டானாலும் எழவானாலுமா? பெருங்கூத்தாக இருக்கிறதே!



Saturday, October 27, 2012

தேமுதிக(ஜெ. அணி)யில் நாளை மேலும் 3 தேமுதிக எம்.எல்.ஏக்கள்


தேமுதிகவின் எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து எதிர்முகாமிற்கு சென்று வரும் நிலையில் விருதுநகர் எம்.எல். மாஃபா பாண்டியராஜன் தலைமையில் நாளை மேலும் 3 எம்.எல்.ஏக்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளன.

தேமுதிகவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் சுந்தர்ராஜன், தமிழழகன் ஆகியோர் வெள்ளிக்கிழமையன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினர். அதிமுகவின் ஆட்சியைப் பற்றி பாராட்டிய அவர்கள் தொகுதியின் வளர்ச்சிக்காக சந்திப்பு நடத்தியதாக கூறினர். இதற்கே தேமுதிகவில் லேசான நிலநடுக்கம் உருவானது.

இதனிடையே இன்று காலையில் அருண்பாண்டியன், மைக்கேல் ராயப்பன் ஆகிய இரண்டு தேமுதிக எம்.எல்.ஏக்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினர். இதனால் கட்சித்தலைவர் விஜயகாந்த் கொதிநிலைக்கே போய் பத்திரிக்கையாளர்களை கடித்து குதறிவிட்டார்.

தனது எதிர்கட்சித்தலைவர் பதவியை காப்பாற்ற விஜயகாந்த் ஏதாவது நடவடிக்கை எடுப்பாரா என்று ஆர்வமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் விருதுநகர் தொகுதியைச் சேர்ந்த தேமுதிக எம்.எல். மாஃபா. பாண்டியராஜனுக்கு நாளை போயஸ் கார்டனில் அப்பாயின்மெண்ட் கிடைத்துள்ளதாம். அவருடன் மேலும் இரண்டு எம்.எல்.ஏக்கள் அதிமுக தலைமையை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே 4பேர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துள்ள நிலையில் மேலும் 3 விக்கெட்டுகள் விழும் பட்சத்தில் விஜயகாந்த் நாளை முதல் எதிர்கட்சித்தலைவராக நீடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.ii


துப்பாக்கி புதிய ட்ரைலர்


மைக்கேல் ராயப்பன் வீட்டை அடித்து நொறுக்கிய தேமுதிகவினர்!


முதல்வர் ஜெயலலிதாவை இன்று சந்தித்த தேமுதிக எம்எல்ஏ மைக்கேல் ராயப்பனின் நந்தன்குளம் வீடு அடித்து நொறுக்கப்பட்டது.

ராதாபரம் தொகுதியைச் சேர்ந்த தேமுதிக எம்எல்ஏ மைக்கேல் ராயப்பன் இன்று தமிழக முதல்வரை நேரில் சந்தித்தார். தேமுதிக தலைவர் விஜய்காந்துக்கு எதிராக பேட்டிகளும் கொடுத்து வருகிறார். இனி புதிய தலைமையில் செயல்படப் போவதாக அவரும் அருண்பாண்டியனும் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த தேமுதிக தொண்டர்கள் சிலர், திசையன்விளை பேரூராட்சிக்கு உட்பட்ட நந்தன்குளத்தில் உள்ள மைக்கேல் ராயப்பனின் வீட்டை அடித்து நொறுக்கினர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் விரைந்தனர். அதற்குள் வீட்டை முடிந்தவரை சேதப்படுத்திவிட்டு ஓடிவிட்டனர் தேமுதிகவினர்.