Thursday, May 2, 2013

சரப்ஜித் கைது முதல் இறப்பு வரை


தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பாகிஸ்தான் சிறையில் கடந்த 22 ஆண்டுகளாக தவித்து வந்த இந்தியர் சரப்ஜித் சிங், இன்று அதிகாலை உயிரிழந்தார்.

கடந்த 1990ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் சிறையில் தவித்த சரப்ஜித் சிங், 22 ஆண்டுகளாக சந்தித்த சவால்களும், ஏமாற்றங்களும் ஏராளம்.

இந்தியாவின் அமிர்தசரஸ் நகரைச் சேர்ந்தவர் சரப்ஜித் சிங். கடந்த 1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கசூர் எல்லைப் பகுதிக்கு அருகே, இந்திய - பாகிஸ்தான் எல்லையை சட்ட விரோதமாக கடக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு, பாகிஸ்தான் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

பின்னர், அந்நாட்டின் லாகூர் மற்றும் பைசல்பாத் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு சரப்ஜித் சிங் காரணம் எனக் கூறி, 1991ம் ஆண்டு அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்த நீதிமன்றம், அவருக்கான தண்டனையை உறுதி செய்தது.

பின்னர் 2006ம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததுடன், தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

தொடர்ந்து 2008ம் ஆண்டு மார்ச் மாதம், சரப்ஜித் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுவை, அப்போதைய அதிபர் பர்வேஸ் முஷாரஃப் நிராகரித்தார்.

எனினும், அவருக்கு கருணை வழங்க வேண்டும் என சரப்ஜித் குடும்பத்தினர் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, அவரைத் தூக்கிலிடுவதை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. பின்னர் 2009ம் ஆண்டு இறுதியில், இங்கிலந்து வழக்கறிஞர் ஒருவர், சரப்ஜித் சிங்கை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை தொடங்கினார்.

பின்னர் மே 2012ம் ஆண்டு அதிபர் அசிஃப் அலி சர்தாரியிடம் சரப்ஜித் சிங் கருணை மனுத்தாக்கல் செய்தார்.

ஜூன் 2012ல், அந்த மனு மீதான விசாரணைக்குப் பின்னர், அவருக்கான மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதாகவும், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க இருப்பதாகவும் பாகிஸ்தான் தெரிவித்தது. ஆனால், ஒரு சில தினங்களுக்குப் பின்னர், சரப்ஜித் சிங்கிற்கு பதிலாக மற்றொரு இந்திய கைதியை விடுதலை செய்யப் போவதாக பாகிஸ்தான் அறிவித்தது, அதிருப்தியை ஏற்படுத்தியது.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் ஒரு கருணை மனுவை, ஆசிஃப் அலி சர்தாரியிடம், சரப்ஜித் தாக்கல் செய்தார். கடந்த மாதம் 26ம் தேதி, சிறைக்குள் நடந்த மோதலில், சரப்ஜித் சிங் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்றார்.

இன்று அதிகாலை ஒன்றரை மணியளவில் அவர் உயிரி பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு இருண்ட பயணம்....

22 ஆண்டு காலமாக பாகிஸ்தான் சிறையில் இருந்த சரப்ஜித் கடந்த 26ம் தேதி நடந்த சம்பவம் அவரை நீங்கா இருளில் தள்ளியது.

கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சரப்ஜித் சிங்கை சக கைதிகள் கடந்த 26ம் தேதியன்று கடுமயைாக தாக்கினர்.

ஏப்ரல் 27ம் தேதியன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரப்ஜித் சிங்கை இந்திய தூதரக அதிகாரிகள் சென்று பார்த்தனர். அன்றைய தினமே சரப்ஜித் கோமா நிலைக்கும் சென்றார். சரப்ஜித் சிங் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரிக்க பாகிஸ்தான் அரசு குழு ஒன்றை அமைத்தது. மேலும், தாக்குதல் சம்பவம் நடந்த சிறை கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர் ஆகியோரை அந்நாட்டு அரசு இடை நீக்கம் செய்தது.

பாகிஸ்தான் சிறையில் சரப்ஜித் கொலைவெறி தாக்குதலுக்கு ஆளானதற்கு இந்தியாவில் எதிர்கட்சிகள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தன. சரப்ஜித் சிங் தாக்கப்பட்டதும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் பாகிஸ்தானின் திட்டமிட்ட செயல்கள் போலவே தோன்றுகின்றன. சரப்ஜித் சிங் ஏதும் அறியாதவர். இந்தியர்களுக்கு பாகிஸ்தான் சிறைகளில் பாதுகாப்பு கிடையாது என பா.. செய்தித் தொடர்பாளர், ராஜிவ் பிரதாப் ரூடி தெரிவித்தார்.

குடும்பத்தினர் சந்திப்பு: தலையில் பலத்த காயங்களுடன் லாகூர் ஜின்னா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரப்ஜித் சிங்கை அவரது மனைவி, மகள்கள் உள்ளிட்டோர் 29ம் தேியன்று நேரில் சந்தித்தனர்.

வெளிநாட்டு சிகிச்சை! பாகிஸ்தான் மருத்துவமனையில் ஆழ்ந்த கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த இந்தியர் சரப்ஜித்சிங்கை மேல்சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அனுப்புவது குறித்து ஆராய வல்லுநர்கள் குழு ஒன்றை அந்நாட்டு அரசு கடந்த 29ம் தேதியன்று அமைத்தது.

தொடர்ந்து 30ம் தேதியும் சரப்ஜித் உடல்நிலை குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வந்தன. அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் அந்த தகவல் மறுக்கப்பட்டது.

ஆனால் மே1 இரவு 1 மணியளவில் சிறையிருளில் இருந்து நிரந்தர இருளுக்குள் சென்றார் சரப்ஜித் சிங்.No comments:

Post a Comment