மெல்லிசை
மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி என்றழைக்கப்பட்ட இரட்டை இசையமைப்பாளர்களில் ஒருவரான
டிகே ராமமூர்த்தி இன்று மரணமடைந்தார். அவருக்கு
வயது 91.
1922-ம் ஆண்டு திருச்சியில்
ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர்
டி கே ராமமூர்த்தி. இவரது
குடும்பத்தினரும் இசைக் கலைஞர்கள் என்பதால்,
பிறவியிலேயே இசையில் அதீத ஆர்வம்
கொண்டவராக இருந்தார். சிறுவயதிலேயே பல மேடை கச்சேரிகளில்
வயலின் வாசித்திருக்கிறார். இவரது திறமையைப் பார்த்து,
தன்னிடம் உதவியாளராகச் சேர்த்துக் கொண்டார் அன்றைய முன்னணி இசையமைப்பாளர்
சி ஆர் சுப்புராமன். பின்னர்
ஆர் சுதர்ஸனம் மற்றும் டிஜி லிங்கப்பா
ஆகிய இசையமைப்பாளர்களிடம் உதவியாளராகப் பணியாற்றிய ராமமூர்த்தி, பின்னர் எம் எஸ்
விஸ்வநாதனுடன் இணைந்தார்.
மெல்லிசை மன்னர்கள்
1950 மற்றும் 60களில் இருவரும் இணைந்து
பணியாற்றிய படங்களில் பாடல்கள் சாகா வரம் பெற்றவையாக
இன்றும் தமிழர் உதடுகளில் வீற்றிருக்கின்றன.
கிட்டத்தட்ட 700 படங்களுக்கு இந்த இருவரும் இசையமைத்தனர்.
இருபது ஆண்டுகள் இணைந்து இசைக் கோலம்
தீட்டிய இந்த இரட்டையர்கள் கடந்த
1965-ம் ஆண்டு பிரிந்தனர்.
எம்ஜிஆரின்
ஆயிரத்தில் ஒருவனுக்குப் பிறகு இருவரும் தனித்தனியாக
இசையமைக்க ஆரம்பித்தனர். ஆனால் அதில் எம்எஸ்வி
அடைந்த வெற்றியை ராமமூர்த்தியால் அடைய முடியவில்லை. எம்எஸ்வியைப்
பிரிந்த பிறகு 19 படங்களுக்கு ராமமூர்த்தி இசையமைத்தார். இதில் முக்கியமான படம்
'மறக்க முடியுமா?'
கிட்டத்தட்ட 29 ஆண்டுகளுக்குப் பிறகு விஸ்வநாதனும் ராமமூர்த்தியும்
மீண்டும் இணைந்தனர். சத்யராஜ் நடித்த எங்கிருந்தோ வந்தான்
படத்துக்கு இசையமைத்தனர். ஆனால் படம் ஓடவில்லை.
அதனால் இவர்களின் இசைக் கூட்டணியும் பெரிதாக
எடுபடவில்லை.
ஆனாலும் எம்எஸ் விஸ்வநாதன்
எந்த நிகழ்ச்சியில் அல்லது பாராட்டு விழாவில்
கலந்து கொண்டாலும் தவறாமல் டி கே
ராமமூர்த்தியையும் அழைத்துச் செலவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
2006-ம் ஆண்டு இருவருக்கும் கவுரவ
டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது
சத்யபாமா பல்கலைக் கழகம்.
கடந்த ஆண்டு
ஜெயா டிவி சார்பில் நடந்த
பாராட்டு விழாவில் எம்எஸ் விஸ்வநாதன் - ராமமூர்த்தியை
வெகுவாகப் பாராட்டிய முதல்வர் ஜெயலலிதா, இருவருக்கும் திரையிசை சக்கரவர்த்திகள் என்ற பட்டத்தைக் கொடுத்து,
கார் மற்றும் தங்கக் காசுகளை
பரிசாக அளித்தார்.
உடல் நலம் குன்றியிருந்த
டி கே ராமமூர்த்தி, இன்று
காலை அவரது இல்லத்தில் மரணமடைந்தார்.
அவரது மறைவுக்கு திரையுலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்தி
வருகிறது. இறுதி அஞ்சலி குறித்து
இன்று பிற்பகல் அறிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment