2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்படவில்லை, ரூ. 2,645 கோடி மட்டுமே இழப்பு ஏற்பட்டது என்று கூறியுள்ள தணிக்கைத் துறையின் தொலைத் தொடர்பு பிரிவுக்கான முன்னாள் டைரக்டர் ஜெனரல் ஆர்.பி.சிங் இன்று நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு முன் ஆஜராகி விளக்கம் அளிக்கவுள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தவறான முறையை கையாண்டதால் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை துறை கூறியது. இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டவர் தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியான வினோத் ராய்.
ஆனால், ஸ்பெக்ட்ரம் விற்பனை தொடர்பான ஆய்வை மேற்கொண்டு இந்த அறிக்கையைத் தயாரித்த ஆர்.பி.சிங் நஷ்டம் ரூ. 2,645 கோடி தான் என்று கூறியிருந்தார்.
ஆனால், நிர்பந்தம் செய்யப்பட்டு நஷ்டத்தின் அளவை ரூ. 1.76 லட்சம் கோடியாக உயர்த்திச் சொல்ல வைக்கப்பட்டார் என்ற புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ கூட 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் ரூ.30,000 கோடி மட்டுமே இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதவிர வேறு சில அமைப்புகளும், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் ஏற்பட்ட நஷ்டம் குறித்து பல்வேறு அளவுகளை கூறியுள்ளன. எனவே இந்த விஷயத்தில் சர்ச்சை நீடிக்கிறது.
இந் நிலையில் ஸ்பெக்ட்ரம் ஊழலை விசாரித்து வரும் நாடாளுமன்ற கூட்டுக்குழு முன்பு கடந்த மே மாதம் 30ம் தேதி தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியான வினோத் ராய் ஆஜரானார்.
இதையடுத்தே முன்னாள் தலைமை ஆடிட்டரான ஆர்.பி. சிங், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது என்று கூறுவது தவறு. இழப்பு தொகை ரூ.2,645 கோடி மட்டுமே என்று கூறினார்.
இந் நிலையில் சிங் இன்று பொது கணக்கு குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார்.
இதையடுத்து கூட்டுக்குழு முன் மீண்டும் ஆஜராகி, நஷ்டம் ரூ. 1.76 லட்சம் என்பது எவ்வாறு கணக்கிடப்பட்டது என்பது குறித்து விளக்கம் தர வினோத் ராய் விருப்பம் தெரிவித்துள்ளார்,
இதுபற்றி ராய் கூறுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து நாங்கள் நவீன முறையில் கணக்கிட்டு இழப்புத் தொகையை உறுதிப்படுத்தினோம். நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு முன்பு ஏற்கனவே ஆஜராகி இழப்பீடு எவ்வாறு கணக்கிடப்பட்டது என்பதை தெளிவுபடுத்தியுள்ளேன் என்றார்.
மேலும் பொதுக் கணக்குக் குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு இம்மாதம் 10ம் தேதி வினோத் ராய் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், எப்பொழுது எனது உதவி தேவைப்பட்டாலும் அதிகாரிகளுடன் ஆஜராகத் தயார். 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு இழப்பை மதிப்பீடு செய்த விதம் குறித்து விளக்கமளிக்கத் தயார் என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து வினோத் ராயும் மத்திய துணைத் தலைமைத் தணிக்கையாளர் ரேகா குப்தாவும் இன்று பொதுக் கணக்குக் குழு முன் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் சில நிதித்துறை, வர்த்தகத்துறை அதிகாரிகளிடமும் இந்தக் குழு இன்று விசாரணை நடத்தவுள்ளது.
No comments:
Post a Comment